உயர்ந்த புகழில் உள்ளம் வைத்தோர் :

“புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்” (புறநானூறு)

என்பதே பண்டைத் தமிழர் மாண்பு. இம்மாண்பு உடையவர்களாலேயே உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது மன்னர் இளம்பெருவழுதியின் கூற்று (புறம்.182). உலகப்பொதுமறை வழங்கிய திருவள்ளுவப் பேராசானும்,

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.” (குறள்)

என்றே “புகழை” வரையறை செய்துள்ளார். அதனாலேயே தமிழர்தம் புறவாழ்க்கையை எடுத்துக் கூறும் புறநானூறு,

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே.” (புறம். 165).

எனத் தெளிவாக “ஏ”காரம் இட்டு, நிலையற்ற இவ்வுலகத்தில் நிலைக்கும் தன்மையது “புகழ்” ஒன்றே எனத் தெளிவுபடுத்துவார். அறம் வெல்லவே குறள் தந்த திருவள்ளுவர் தம்குறட்பாவில் வெறும் புகழ் எனச் சுட்டாமல், “உயர்ந்த புகழ்” என்றே குறித்துக் காட்டுவார். உயர்ந்த புகழ் எது? திருப்புகழே ஆகும்.

தெருப்புகழா? திருப்புகழா?: சங்க காலம்வரை படை வீரத்தாலும், மன ஈரத்தாலும் புகழ் விளைந்தது. சாதியோ மதமோ, மேல் கீழ் என்ற வருண வேறுபாடோ, சாத்திரச் சண்டையோ கோத்திரச் சண்டையோ அன்று இல்லை. மக்களைக் காக்கும் கடமை கொண்ட வேந்தர்கள், பகைவென்று பகைவர்களின் பொருள்களைக் கைப்பற்றி, அவற்றை வீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் பங்கிட்டுத் தருவர். இதனைப் “பாதீடு” என்று புறப்பொருள் பேசுகிறது. அதனால், அன்று ஈதலும் இசைபட (புகழ்பட) வாழ்தலுமே வாழ்வின் நோக்கமாகக் கருதினர் தொல்புகழ்த் தமிழ்ச் சமூகத்தினர். எனவே, அன்று வீரத்தால் ஈரம் சுரந்தது. ஈரத்தால் புகழ் வாழ்க்கை தானே அரும்பியது.

நாவலந்தீவு என்று வழங்கப்பட்ட அன்றைய “பாரதம்” இமயம்முதல் தென்குமரிவரை தமிழர்தம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அவர்கள் வழிபடும் கடவுள் “குமரக் கடவுளே!” மாந்தர் இனம் முகிழ்த்த இடம் குன்றும், அதில் இயற்கையாய் அமைந்த குகைகளுமே ஆகும். எனவே, அவர்தம் கடவுள் குன்றுதோறாடும் குமரக் கடவுளான “திருமுருகப் பெருமானே.” இதனை இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரம், “குன்றக் குரவையில்” அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த வழிபாட்டைத் திருமுருகாற்றுப்படை நல்கிய நக்கீரர், முன்னமே பதிந்து, பரவிப் பிறவா நிலையைப் பெற்றார் என்று அறிகிறோம்.

பல்சமயப் பத்திமை : அவனே அவனே எனாது சிவனே எனப் பாடிப்பரவும் சிவனியம் - சைவம், சிவனின் மறுபாதியாகிய உமையவளைப் பரவும் “சாக்தம்”, கணபதியைப் பரவும் “காணாபத்தியம்”, சூரியனை வழிபடும் “சௌரம்”, திருமாலை வழிபடும் “திருமாலியம் - வைணவம்” என்ற வழிபாட்டு நெறிகள் சமயம் என்ற நிலையைவிட்டு அவற்றை “மதம்” பிடித்துக் கொண்டபோது, அவை தெருச்சமயங்களாகிவிட்டன. இந்த நிலை கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தலைவிரித்தாடியது. அன்று தமிழகத்தை ஆண்ட மன்னர்களை அவை பிடித்துக் கொண்டபோது மாயங்கள், மந்திரங்கள் தந்திரங்கள், என் சமயம் உன் சமயம் என்ற கற்பனைக் களியாட்டங்கள் மிகுந்து, தமிழகமே தடுமாறி நின்ற காலத்தில் தோன்றிய அருளாளரே “அருணகிரியார்”.

அவரே எல்லாச் சமயங்களையும் ஒருங்கிணைக்கும் “முருக” வழிபாட்டுக்கும், முருகனை வழிபட வகுத்த திருப்புகழுக்கும் கால்கோளிட்டார். திருமுருகப் பெருமானே, “முத்தைத்தரு” என்ற அடியெடுத்துக் கொடுத்துத் தன் வேலினை எழுதுகோலாக்கி, அருணகிரியார் நாவில் “சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரத்தை எழுதவே, பண்ணிசைத் திருப்புகழ்ப் பாடல்கள் சந்தமொடு வந்து அருவிபோல் கொட்டின. இவற்றின் உறுதிப்பொருண்மையை உணர்ந்த சான்றோர்,

“எல்லாரும் ஞானத் தெளிஞரே! கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ - பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கான மயில்வீரன்
திருப்புகழைக் கேட்கும் செவி”

என்று எடுத்துக் கூறினர்.

சமயப் பொதுமை இழையோடும் திருப்புகழ் : கி.பி. ஆயிரத்து முந்நூறுகளில் திருவண்ணாமலைச் சீமையை ஆண்ட சிற்றரசர் பிரபுட தேவ மகராசர். அன்று செல்வாக்கோடு சக்தி உபாசகராய் அரசனையே ஆட்டிப் படைத்த சம்பந்தாண்டார் என்ற மந்திர தந்திர வல்லாளர், “நான் என் வல்லமையால் காளியை வரவழைப்பேன்! உன்னால் உன் முருகனை வரவழைக்க முடியுமா?” என்று அருணகிரி முன்னால் கொக்கரித்தான். அப்போது அருணகிரியார் முருகப் பெருமானை நோக்கிப் பாடிய பாடல் :

அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட - அவளோடன்று
அதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாளம் - அவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட - மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்

என்று வேண்டியவுடன், திருமுருகன் அங்கே தோன்றி அனைவர்க்கும் அருள்புரிந்தார் என்பது வரலாறு.

அன்று சமய மாச்சரியங்களால் சிதறுண்டு கிடந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் பாடல் இது. நாகப் பாம்புகளை வணங்கும் “அதல சேடன்” அடியார்கள், மேரு மீதாடும் “காளி” உபாசகர்கள், அந்தக் காளியோடு அன்று கூத்துகந்து வாதிட்ட, விடையேறும் சிவனார்தம் சிவனியச் செல்வர்கள், பூத வேதாளங்களின் வயப்பட்டு மந்திர மாயங்களால் மருட்டும் மாயாவிகள், கலைவாணியை உபாசனை செய்வோர், வேதனாகிய பிரம்மாவை வழிபடுவோர், வானவராக வரம் வேண்டும் தவசிகள், முருகப் பெருமானின் மாமியான மகாலட்சுமியை வணங்கும் அடியார்கள், மாமனாரான திருமாலை உபாசிக்கும் வைணவர்கள் எல்லாரும் காண, “மயிலுமாடி நீயாடி வரவேணும்” என்று வேண்டிய இத்திருப்புகழ்ப் பாட்டில் சமய நல்லிணக்கத்தைப் பேணி, முருக பத்திமையை நிலைநாட்டிய சந்தக் கவியோடு சிந்துக் கவியும், இசைக் கவியோடு இன்பத் தமிழ்க் கவியும் பாடிய அருளாளர் அருணகிரியாரைத் தொழுதால், வைதாரையும் வாழவைக்கும் திருமுருகப் பெருமானின் அருளைப் பெற்று, இம்மையில் வேண்டும் இன்பத்தையும், மறுமையில் பேரின்பத்தையும் பெறலாம்! முக்தி உறலாம்

★★★