திருப்புகழில் மதுரபக்திப் பாடல்கள்
முனைவர் சண்முக செல்வகணபதி, தஞ்சாவூர்
ஞானம் பெறலாம், நலம் பெறலாம், எந்நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனவீ
டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேஇக் கூறு.
இசையோடு கூடிய இசைத்தமிழ் தெய்வத் தமிழ்ப் பேசும் பாடல்களாக அமைந்துள்ளன. சைவத் திருமுறைகளும் வைணவ திவ்விய பிரபந்தங்களும், சிற்றிலக்கியங்களும், கீர்த்தனைகளும், காட்டியப் பதங்களும், பதவர்ணங்களும், காவடிச் சிந்து, தென்பாங்கு, அம்மானை, ஊசல், கந்துகம், வள்ளைப் பாடல்கள், வரிப் பாடல்கள், கூத்துப் பாடல்கள் போன்ற தெய்வத்தமிழ் போற்றும் பாக்கள் இசைப் பாக்களாக உள்ளன.
இவ்வகை இசைப் பாக்களில் திருவண்ணாமலையில் விசயநகர சாம்ராஜ்ய காலத்தில் திருவண்ணாமலையை ஆண்ட இரண்டாம் பிரபுடதேவராயர் (கி.பி.1424-1447) காலத்தில் வாழ்ந்தவராகத் திருப்புகழ்ப் பாடல்கள் தந்த அருணகிரியார் விளங்குகிறார். முருகப் பெருமானால் திருவண்ணாமலையில் ஆட்கொள்ளப் பெற்றார். முருகப் பெருமான் “முத்தைத்தரு பத்தித் திருநகை” எனத் தொடங்கும் சந்தப் பாவிற்கு அடியெடுத்துக் கொடுக்க அருணகிரியார் சந்தமிகு பாமாலைகளைத் தொடர்ந்து தந்தார். திருமுறைவாணர்களைப் போலத் தலங்கள் தோறும் சென்று பாடியவை. முருகப் புகழ் பாடும் திருப்புகழ்ப் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
இப்பாடல்கள் இசைப்பாக்களாக அமைந்துள்ளன. சந்தப் பாக்களாகவும், வண்ணப் பாக்களாகவும், தொங்கல் பாக்களாகவும் பண்டைய தூக்குப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு பாடலும் பெருமாளே என்ற மகுட முத்திரையுடன் முடிந்துள்ளன. நாலடிப் பாக்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடியிலும் மடக்கு நிலையில் சீர்கள் அமைந்த இசையமைதிப் பாக்களாக உள்ளன. முதல் அரை அடியில் அமையும் சந்தம் ஏனைய அடிகளிலும் தொடர்ந்துள்ளன. கட்டுக்கோப்பான யாப்பமைதியுடன் கூடிய தாளஇலக்கியப் பாக்களாக இவை அமைந்துள்ளன. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் பாடிய மார்க்கசகாய தேவர் அருணகிரியார் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள் 16,000 என்கிறார். ஆனால் இன்று வரை 1362 பாடல்கள் கிடைத்துள்ளன. இத்திருப்புகழ்ப் பாடல்களைத் திருத்தணி முருகனைத் தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த வ.த.சுப்பிரமணிய பிள்ளை 24 ஆண்டுகள் தேடித் தொகுத்து 1895ஆம் ஆண்டு தந்தார். 1895இல் திருப்புகழ் 603 பாடல்கள் வெளிவந்தன. 16.04.1909 அன்று சில திருத்தங்களும் முதல்பாகத்தின் இரண்டாம் பதிப்பு வந்தது. இப்பதிப்புக் கண்ட பிள்ளையவர்கள் இரவு உறங்கச் சென்று அப்படியே தணிகேசன் பாதம் அடைந்துவிட்டார். இவர் விட்ட பணியை இவரது திருமகனார் தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை தொடர்ந்தார். சென்னை சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் தணிகைமணி உரை மற்றும் ஆராய்ச்சிக்குறிப்புரையுடன் வெளியிட்டுள்ளது.
மதுரபக்தி: முருகு புகழ்பாடும் திருப்புகழ்ப் பாடல்களில் முருகனது பல்வேறு திருவிளையாடல்கள், தலச்சிறப்புகள், அருணகிரியார் முருகப் பெருமானிடம் வேண்டுவன, கந்தபுராணச் செய்திகள், மனிதனை ஆற்றுப்படுத்தும் பக்தி நெறிகள் போன்றன இடம் பெற்றுள்ளன. இவற்றில் தமிழ் இலக்கணத்திற்குப் பெருமை சேர்த்த அகமரபுப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. மானுடம் பாடிய பாடல்கள் தெய்வத்தைப் போற்றும் பாடல்களாக மலர்ந்தன. மன்னனைப் போற்றிய பாடல்கள் இறை பெருமை கூறும் பாக்களாக மலர்ந்தன. மன்னனின் பல்திறங்களைப் போற்றிய பாவலர்களின் உள் உணர்வுகள் தெய்வத்தைப் போற்றின. இவற்றுள் அகத்திணைச் சார்ந்த தலைவன் தலைவியின் காதல் உணர்வுகள் கூறும் பாக்கள் ஜீவாத்மா, பரமாத்மா உறவு பற்றிக் கூறும் பக்தி மார்க்கம் தழுவிய மதுரபக்திப் பாடல்களாயின. பண்ணோடும் தாளத்தோடும் சந்தத்தோடும் பாடப் பெற்றன. மானுடம் பாடிய அம்மானை, ஊசல், கந்துகம், வள்ளை, வரி, குரவை, இறை வாழ்த்துப் பாடல்களாக மலர்ந்தன. தன்னைக் காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் கொண்டு பாடவும் பெற்றன. சங்க அகமரபுப் பாடல்கள் விரிவடைந்தன. சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் என்ற சங்க அகமரபு சுட்டிப் பெயர் கொண்டு அழைக்கும் மதுரபக்திப் பாடல்களாக வளர்ந்தன. இம்மரபைச் சைவத்திருமுறைகளிலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலும் ஏனைய இலக்கியங்களிலும் உள்ள பாடல்கள் வாயிலாக அறிகிறோம். இம்மதுரபக்தி மரபுப் பாடல்கள் மூலமும் அருணகிரியார் முருகப் பெருமானை வழிபடுகிறார். தலைவி, தாய், தோழிக் கூற்றுப் பாடல்கள் வாயிலாகவும் வழிபடுகிறார். இவை தலப் பாடல்களாகவும், பொதுப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. தலப் பாடல்களில் அறுபடைவீட்டுப் பாடல்கள், பஞ்சபூதத் தலங்கள் ஏனைய தலங்கள் மீது பாடப்பெற்றவை. தலப்பாடல்களாக அமையாத பொதுப்பாடல்களும் உள்ளன.
நற்றாய் இரங்கல் : தனது மகள் முருகன் மீது கொண்ட காதலை அறியாததால் உடல் மெலிந்து உள்ளம் ஒடுங்கி, கைவளைகள் கழலத் துன்பப்படுவது கண்டு இது எற்றான் நிகழ்ந்தது என்ற நிலையில் இரங்கி நற்றாய் பாடும் பாடல்கள் உள்ளன.
அம்பு போன்ற கண்களையுடைய பெண்கள் பேசும் கலகச் சொல்லாகிய அலர் மொழிக்கு அஞ்சி, காமன் எய்திய தாமரைப்பூ அம்பினாலும், அன்றில் என்னும் பறவைக்கும், தீயை வீசும் தென்றல் காற்றுக்கும் இளைத்து விட்டான். அந்திப் பொழுதில் தோன்றியுள்ள நீலவானம் பொற்கோ போன்ற எம் மகட்கு துன்பத்தைச் செய்யும். அணிகலன்களை அறவே விடுத்துத் துயரம் கொண்டுள்ளாள். இவளுக்கு நல்லருள் வாய்க்குமோ என்ற நற்றாய் இரங்கும் நிலையில் பாடல்கள் உள்ளன. அன்றில் பறவை, தென்றல், நிலவு போன்றன காமத்தை வளர்ப்பனவாகும். இப்பாடல் திருச்செந்தூர் மீது பாடப்பெற்ற பாடலாகும்.
அம்பொத் தவிழ்த் தந்தக் கலகத்
தஞ்சில் கமலக் கணையாலே‘
அன்றிற் குமனற் றென்றற் குமியைத்
தந்திப் பொழுதில் பிறையாலே
எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பம் கலவித் தலரானார்
என்பெற் றுலகில் பெண்பெற் றவரும்
இன்பம் புலிவுற் றிடலாமே
பா.19
பா.எண்.145 (பழநி) 374 எண்ணுள்ள பாக்களும் இதே நிலையில் அமைந்துள்ளன.
தலைவி இரங்கல் : தலைவி தலைவனை அடைய இயலாத நிலையில் இரங்கும் பாடல்களும் உள. வீரனாய் மன்மதன் ஐந்து மலர்பானங்களையும் (தாமரைப்பூ, மாம்பூ, அசோகப்பூ, முல்லைப்பூ, நீலோற்பலம்பூ) செலுத்த வானத்தில் விளங்கும் தண்ணென்ற நிலவு வெயில் போலக் காய, நிதானமான தென்றல் காற்று தீப்போல வீசிட, வீண்பேச்சு மாதர்கள் வசைமொழிகள் பேசிட, குறவர்கள் வாழும் முன்றில் உறைகின்ற வள்ளி போன்ற வேலப் பெண் பேதை அடைந்த கொடிய துன்ப மயக்கம் தீர நீ அணிந்துள்ள மாலையைத் தந்து என்குறை தீர வந்து அணுகமாட்டாயா என்று தலைவி வருந்தும் நிலையில் திருச்செந்தூர் திருப்புகழ்ப் பாடலொன்று அமைந்துள்ளது. (பா.45)
“விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து - வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் - வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப - மயல்தீர
குளிர்மாலை யின்க ண்அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ (பா.45)”
இதுபோல நாயகி நாயக பாவத்திலும் பாடல்கள் அமைந்துள. தன்னை நாயகியாகவும் முருகப் பெருமானை நாயகனாகவும் கொண்டு அருணகிரியார் பாடிய பாடல்களுள் திருவேரகத் தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றைக் காண்போம்.
தெருவில் நடக்கும் பெண்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து பேசும் பழிப்புச் சொல்லாலும், சூரியனைப் போல கடலில் சிவந்த நிறத்துடன் தோன்றும் நீலவானம், வில்லை வளைத்து சோர்வு இல்லாமல் மன்மதன் செலுத்தும் பாணங்களும் புளகாங்கிதம் கொள்ளும் மார்புகளைக் கொண்ட இவள் வருத்தமும் சோர்வும் அடையலாமா?
“தெருவினில் நடவா - மடவார்
திரண்டொ றுக்கும் - வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் - மதியாலே
பொரு சிலை வளையா இளையர்
மதன்தொ டுக்குங் - கணையாலே
புளகித முலையா ளளையா
மனஞ் சலித்தும் - விடலாமோ” பா.218
காமநோய் கொண்டாரை நிலவு (சந்திரோபாலம்பனம்) மன்மதன் (மன்மதோ பாலம்பனம்) தென்றல், குயில் கூறுதல், கோழி கூவாதிருத்தல், சூரியன் உதியாமை, அன்றில் ஒலி, கடல்ஒலி, விடைகளின் மணியோசை, நாரியார் வசைமொழி குழல் ஓசை போன்றன துன்பம் தரும் என்றும் கூறும் பாடல்களும் உள்ளன. அகப்பொருள் மரபு சார் பக்திப் பாடல்களாக அமைந்துள்ளன.
மாலையை விரும்புதல் : தலைவன் தன்மீது அன்புடன் இருந்திட வேண்டி அவன் அணிந்துள்ள மாலையைத் தந்தருள வேண்டும் நிலையில் மதுரபக்தியுடன் கூடிய திருப்புகழ்ப் பாடல்களும் உள. இவ்வகையில் அமைந்த பாடல் திருத்தணிகை தலத்தின் மீது அருணகிரியார் பாடிய பாடலொன்றைக் காண்போம்.
மன்மதனின் ஐந்தாவது பாணமாகிய நீலோற்பவ பாணத்தை மன்மதன் செலுத்துகின்றான். மன்மதனது முடியின் மீது குடையாக அமைந்த குறையை உடைய திங்களின் வெப்பத்திற்கும் பழிச் சொல்லிற்கும் இனிய குரலுடன் கூவும் குயிலின் குரலுக்கும் தளராதவாறு உன்மீது காதல் கொண்ட இந்தப் பெண்ணை நீர் ஏற்றருள வேண்டும். இதற்கு உன் மார்பில் அணிந்துள்ள மாலையைத் தந்தருள்க என்று வேண்டுகின்றார்.
"குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையாய் குறைப் - பிறையாலே
குறுகுற்ற அலர்த் தெரிவைக் மொழிக்
குயிலுக் குமினித் - தளராதே
இவளைத் தவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப் -புயமீதே
இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் -தரவேணும்” (பா.250)
மேலும் பா.261 இதே நிலையில் அமைந்துள்ளது.
நல்லுணர்வு பெற : இவள் நலம் பெறுவதற்கு நீதான் அருளவேண்டும் என்கிற நிலையில் திருத்தணிகைப் பாடலொன்று அமைந்துள்ளது.
“செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
தெரிவைக் குணர்வைத் தரவேணும்” பா.251
மேலும் துயரத்தால் வருத்தும் இவளது துயரம் நீங்கிட அருளவேண்டும் என்றும் பாடியுள்ளார்.
“தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச - ழங்கலாமே”
உனது புயத்தை இவள் அணைந்தால் இவளது துன்பம் தீரும் என்ற நிலையால்
“புயமொன் றமிகத் தளர்கின் றதளிப்
புயம்வந் தணையக் - கிடையாதோ” 284
“எத்திக்கு முற்ற புகழ்கின்ற வெற்றித் திருத்தணியில்
இன்னறத்தி வைத்தில் வரவேணும்” 306
உனது அநுபூதி நிலையைப் பெறவேண்டும். முத்தி பெற வேண்டும். நெற்றியில் புருவ மத்திய தானம் ஒளி பொருந்தி அங்கு ஞான சித்தியைக் கொடுக்கும் என்றால் அதனை நான் காணவேண்டும்.பா.355, 363) என்று வேண்டுவதுடன் கதிர்காமத் திருப்புகழ்ப் பாடலொன்றில் இவள் நலம் பெற இவளை நீ அணைக்க வரவேண்டும் (429) என்றும் பாடுகிறார்.
விகட மாதைநீ யணைக்க வரவேணும் 429
இவ்வாறு பலநிலைகளில் மதுர பக்தியைப் பாடியுள்ளார். மேலும் அருணகிரிப் பெருமானின் திருப்புகழ்ப் பாடல்களில் அன்பு பெற, வீடுபேறு பெற, அருள் பெற, மெய்ஞ்ஞானம் பெற, திருவடியைப் புகழ, துதிக்க, தவநெறி பெற வேண்டும் நிலைகளிலும் அமைந்துள்ள பாடல்களிலும் மதுரபக்தியைக் காண இயலும். இறைவனிடம் அடியார் வேண்டும் நிலையில் உள்ள பாடல்களில் மறை நிலையில் இவற்றைக் காணலாம். இவையல்லாமல் நேரிடையாக அமையும் நிலையினும் 697, 747, 768 போன்ற எண்கள் உள்ள பாக்களைக் காணலாம். பிற்காலத்தில் சீர்காழி முத்துத் தாண்டவர், தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை, சீர்காழி அருணாசலக் கவிராயர், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், வைத்தீசுவரன் கோயில் சுப்புராமய்யர் போன்றோர் பாடிய பதநிலையில் அமையும் இசை நாட்டியப் பாடல்களும் இவ்வகையில் அமைந்துள்ளன. குராவடிப் பெருமானிடம் அருணகிரியார் பாடிய பாடலைப் பதப்பாடலாகக் கொண்டு நாட்டிய மங்கையர்கள் ஆடியும் வருகின்றனர்.
- தனத்த தானன தனதன - தனதான
- மருக்கு லாவிய மலரணை - கொதியாதே
- வளர்த்த தாய்தமர் வசையது - மொழியாதே
- கருக்கு லாவிய அயலவர் - பழியாதே
- கடப்ப மாலையை யினி - விடவேணும்
- தருக்கு லாவிய கொடியிடை - மணவாளா
- சமர்த்த னேமணி மரகத - மயில்வீரா
- திருக்கு ராவடி நிழல்தனி - லுறைவோனே
- திருக்கை வேல்வடி வழுகிய - பெருமாளே -பா.802.
★★★
அவனே எங் குலதெய்வம் அவனே., எம் உயிர்த்துணைவனாகும்; நாளும் அவன் கழலே வாழ்த்துவோம் அவன் அருளே நாடுவோம் அவன் பாதச்சீர் நவ நவமாய்ப் புகழ்ந்து மகிழ்ந்தாடுவோம் பாடுவோம் நாடி நாடித் தவமுதல்வா அருணகிரி யப்பா என் றழைத்திடுவோம் தவத்தை சார்வோம் - தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை

