சுகந்தத் துறைமுக நகருறை சுகந்தன் சுவாமிநாதன்
நேசமிக்க ஹாங்காங் குகநாதனாரின் வாசமிக்க கட்டுரை
சுகந்தத் துறைமுக நகருறை குருகுஹ
சுகந்தம் கமழ்கடம் பணிசிவ குருபர
சுகந்தம் திகழ்உரம் பொலியு மதிறைவ!
சுகந்தர எமதுமுன் இதுகணம் வருகவே
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரம்பொருளே முருகப்பெருமான் ஆவான். அனைத்துமாய், அனைத்திலுமாய் அவனே இருக்கின்றான். அருவாய், உருவாய், அருவுருவாய் அண்டசராச்சரங்களிலும் மேவியிருக்கும் அவனே அடியவர் உள்ளத்துமுள்ளான்; அவர்தம் இல்லத்துமுள்ளான்.
மறைகளால், வாக்கால், மனத்தால், புத்தியால் அளக்கொணாத அப்பெருமான் தன் எளிவந்தத் தன்மையினால் உலகெங்கும் அடியவர்கூடி, கட்டியெழுப்பியக் கலைநயமிக்க, தெய்வீகம் கமழும் திருக்கோவில்களிலும் வேறுவேறு கருத்துக்களை, தத்துவங்களைப் பிரதிபலிக்கும் எழில் கொஞ்சும் திருவுருவச் சிலைகளாவும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றான்.
உலகமே அவனாலயம்; உலகெங்கும் அவனுக்கான ஆலயங்கள்; அவ்வாலயங்களில் எந்த வடிவில், எந்தத் தெய்வம், எந்தத் தத்துவத்தின்படி எழுந்தருளியிருந்தாலும் அது அவனே என்ற கருத்தையே 'உலகெங்கு மேவிய தேவாலயம்தோறு பெருமாளே!' என்ற அருணகிரியாரின் திருவாக்கு நமக்குணர்த்துகின்றது
மாசிலடியார்கள் வாழ்கின்ற ஊர்களையெல்லாம் தேடியும், நாடியும் சென்று, அங்கெலாம் கோயில்கொண்டு நின்று அருளாட்சி செய்தல் அடியார்க்கு நல்லபெருமானானக் குமரேசனின் தொன்றுதொட்ட வழக்கமாகும். அதிலும் குறிப்பாக, குறிஞ்சிக்கடவுளுக்கு இருக்கும் குன்றுகள்தோறும் சென்றுநின்றுக் கோயில்கொள்ளுதலில் ஒரு தனிப்பெரும் விருப்பமுண்டு
திரைகடலோடியும் திரவியம்தேடும் பண்பாடுடையத் தமிழர் எங்கெலாம் பொருள்தேடச்சென்று அங்கேயே குடிகொண்டுக் குடியும், குலமும் பெருக்கினரோ, அவர்களுக்குக் காவலாயிருந்து, அருள்புரிந்து, காலம்காலமாய் கருத்தோடுக் காக்க வேண்டிவிரும்பி தமிழர் தெய்வமாம் முருகவேளும் அங்கே சென்று கோயில்கொண்டான்! அதனால்தான் இன்று நம் பாரததேசம் மட்டுமின்றி உலகத்தின் ஆறுகண்டங்களிலும் அப்பெருமானுக்கு எண்ணற்றத் திருக்கோவில்கள் இருக்கின்றன
உலகெங்கும் திருக்கோவில்கொண்ட முருகவேளை அனுதினமும் தன் கிரணக்கரங்களால் வணங்கித்தொழும் நற்பேறு பெற்றவன் சூரியதேவன். 108 யுகங்களுக்குப் பிறகு சூரபதுமனின் கொடுஞ்சிறையிலிருந்துக் கந்தவேள் கருணையினால் விடுதலைபெற்றபோது, நன்றியொடு அக்கடவுளை அனுதினமும் அனவரதமும் வணங்கும் வரத்தையும் ஞாயிறு வேண்டிப்பெற்றான் போலும்! ஒவ்வொரு நாளும் முதலில் நியூசிலாந்து நாட்டில் திருக்கோயில்கொண்டுள்ளக் கதிர்வேலனை வணங்கித் தன்பணியாற்றத் தொடங்கும் கதிரவன், ஒவ்வொரு நாட்டிலுமுள்ளத் திருக்கோவில்களிலெல்லாம் அப்பெருமானை வழிபட்டபடியேசென்று, இறுதியாக அமெரிக்கன் சமோவாவில் முருகப்பெருமானைத் தொழுதேத்தித் தன் நாட்பணியை முடிக்கின்றான்.
அந்தத் திருக்கோவில்களிலெல்லாம் முறையாக, நிறைவாகப் பூசனைகளும், வழிபாடுகளும் அன்றாடம் வெகுசிறப்பாக நடந்துவருகின்றன. கந்தப்பெருமான் அவ்வாறு திருக்கோயில்கொண்ட இடங்களிலெல்லாம் அப்பெருமானின் இன்னருளால் தமிழ்மக்கள் தங்கள் தனிப்பண்பாட்டு அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டு, சுகமாக, சுபிட்சமாக வாழ்ந்துவருகின்றனர்; அங்கு வாழும் தமிழரல்லாத அடியர்களும் அவன் கருணைக்கும், அருளாட்சிக்கும் ஆளாகிவருகின்றனர்.
தூரக்கிழக்கு நாடுகளில் கடைசியாக முருகப்பெருமான் திருக்கோயில்கொண்டுள்ளப் பகுதியே 'ஹாங் காங்' எனப் பெயர்கொண்டத் தென்சீனத் துறைமுக நகரம் ஆகும். ஆறுகண்டங்களிலும் உள்ள முருகப்பெருமான் திருக்கோவில்களை எல்லாம் ஓர் அறுகோண வடிவில் வரைபடமாக அமைத்து வரிசைப்படுத்தினால், வடகிழக்குக்கோண முடிவென ஹாங் காங் இருப்பது புலப்படும். தென்சீனத்தில் வழங்கும் சீனமொழியில் 'ஹாங் காங்' என்றால் ‘மணம் கமழும் சுகந்தத் துறைமுகம்' என்று பொருள். பண்டு அதிக அளவில் வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்ட துறைமுகமாக இந்நகரம் இருந்ததால் இப்பெயர் ஆகிவந்தது என்கின்றார்கள். சுகந்தப்பிரியனானக் கந்தன் இந்நகரைத் தேடிவந்துக் கோயில்கொண்டது இது ஒரு சுகந்தநகர் என்பதாலும்கூட? இருக்கலாம்! சுகந்தம் கமழ அவன் வந்தேறியபின் இந்நகரின் சுகந்தம் மேலும் பன்மடங்கு பெருகிப் பரிமளிக்கின்றது என்று சொல்லின் அது மிகையன்று
'முத்து நதி' என்ற ஒரு வற்றாப் பெருநதி தென்சீனக் கடலில் கலக்கும் மலைப்பாங்கானச் சூழலில் அமைந்துள்ள எழில்கொஞ்சும் இயற்கைத் துறைமுகமான ஹாங்காங் நகரில் சுமார் 120,000 இந்துமக்கள் வசிக்கின்றனர். இது ஹாங் காங்கின் மொத்த மக்கட்தொகையில் சுமார் 1.6% ஆகும். இதில், சுமார் 3,000 தமிழ் இந்துக்களும் அடக்கம். மாற்று சமயங்களைப் பின்பற்றும் தமிழ்மக்களும் கனிசமான எண்ணிக்கையில் இங்குண்டு. இங்கு 'ஹாப்பி வேலி' என்னும் இடத்தில், 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கிவருவதுவே இந்துத் திருக்கோவில். வடஇந்தியப் பாணியில் அமைந்துள்ள இக்கோவிலே இங்குள்ள கோவில்களில் பெரியதும், பழமையானதுமாகும்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தமிழர்கள் இந்தியாவிலிருந்தும், மற்ற தென்னாசிய நாடுகளிலிருந்தும் இங்குவந்துக் குடியேறிவிட்டாலும்கூட, முறையானக் கூட்டு முருகவழிபாடு என்பது ஒன்று தொடங்கியது என்னவோ 1970-ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில்தான்! பணிநிமித்தம் இங்குவந்துக் குடியேறி வாழ்ந்தவரும், தெய்வத்திரு 'குருஜி' இராகவனின் நேரடி சீடருமான ஒரு பெருந்தகையால் திருப்புகழ் கூட்டு இசைவழிபாடு இங்கே 1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, முதலில் அடியர்களின் இல்லங்களில் மாதம்தோறும் நடத்தப்பட்டுவந்தது. பின்பு, இங்குள்ள ஹாப்பி வேலி இந்துக் கோவிலில், கந்தவேளின் திருவுருப்படத்தின்முன் திருப்புகழ் கூட்டு இசைவழிபாடு முறையாக 1972-ஆம் ஆண்டு பிற்பகுதியில் நடக்கத் துவங்கி, இன்றுவரை அப்பொருமானின் திருவருளால் சிறப்பாக நடந்துவருகின்றது. இந்த ஆண்டு (2022) ஹாங்காங்கின் திருப்புகழ் இசைவழிபாட்டிற்கானப் பொன்விழா ஆண்டாகும்! தெய்வத்திரு 'குருஜி' இராகவன் அவர்கள் அமைத்துத்தந்தத் திருப்புகழ் வழிபாட்டுமுறைகளே பெரும்பாலும் இங்கும் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இப்பொழுது நடக்கும் திருப்புகழ் இசைவழிபாடுகளில், தமிழ்மொழியை முறைப்படிக் கற்றறியாத நான்காம் தலைமுறையினரும்கூட, திருப்புகழ் இசைத்துப்பாடி உவப்போடு பங்கேற்றுவருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பாகும்
ஆனாலும், முறையான முருகப்பெருமானின் திருவுருவச்சிலை வழிபாடும், ஆராதனையும் ஹாங் காங்கில் தொடங்கப்பட்டது 1978-ஆம் ஆண்டுதான்! சுவாமிமலையிலிருந்துச் சுவாமிநாதசுவாமியின் ஐம்பொன்னாலானத் திருவுருவச்சிலை தருவிக்கப்பட்டு, இந்துத் திருக்கோவிலில் முறையாகப் பிரதிட்டைசெய்யப்பட்டது அந்த ஆண்டில்தான்
சுவாமிமலையிலிருந்து அழகானப் பரிமள சுகந்த மயமென அடியரொடு இரண்டற இணைய மகிழ்ந்து, தேவர் பணிய, விண்மடந்தையர் பாதமலர் தூவப், பரிவுகொடு அநந்தகோடி முநிவர்கள் புகழ்ந்துபாட, அடியவர் உவகையிலாட, பருமயிலுடன் குலாவி, சுகந்தப்பிரியன் சுவாமிநாதசுவாமி இங்கே எழுந்தருளித் திருக்கோயில்கொண்டான். சுகந்தத் துறைமுகநகரின் சுகந்தன் சுவாமிநாதனாகவும் அப்பெருமான் ஆனான்! 'ஹாப்பி வேலி' என்ற மகிழ்ச்சிவெளியில் சுகந்தன் சுவாமிநாதன் திருக்கோயில்கொண்டபின், அப்பெருமானை வணங்கும் அடியார்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்கு ஒரு குறைவுமில்லை! அப்பெருமானோடு அண்ணன் ஆனைமுகனாரும் உடன்வந்து, 'சித்திவிநாயகர்' என்ற திருநாமத்தோடு இங்கே எழுந்தருளி அருளாட்சி புரிந்துவருகின்றார்.
சுவாமிமலைபோன்றே ஹாங் காங் ஹாப்பி வேலி திருக்கோவிலும் ஒரு மாடக்கோவில் அமைப்பிலேயே இருப்பதும், இக்கோவிலிலும் மேற்தளத்தில் அருட்காட்சி நல்கும் சுவாமிநாதனை அடியார்கள் சுமார் அறுபது படிகளேறித்தான் தரிசிக்கமுடியும் என்பதும், அப்பெருமானின் சித்தத்தினால் இயல்பாகவே அமைந்துவிட்ட ஓர் அதிசயம் எனலாம்
ஆடுமயிலினில் ஏறி அமரர்கள் சூழ, இளையோனாக முதலில் இங்கேவந்து திருக்கோயில்கொண்டச் சுவாமிநாதப்பெருமானோடுக் கனவனமானும், தினைவனமானுமானத் தேவியர் இருவர் புடைசூழ, கல்யாண சிவசுப்ரமண்யசுவாமி ஐம்பொன் சிலாவுருவில் 2015-ஆம் ஆண்டு இங்கே எழுந்தருளி, முறையாகப் பிரதிட்டைசெய்யப்பட்டு இணைந்துகொண்டார். இத்தெய்வத் திருவுருவங்களும் சுவாமிமலையில் உருவானவையே
மாதம் ஒருமுறை அடியார்களின் திருப்புகழ் கூட்டு இசைவழிபாடு, ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, வைகாசி விசாகத் திருவிழா முதலியவை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டுவருகின்றன. தைப்பூசத்தின்போது காவடி எடுத்தல், பங்குனியில் வள்ளித் திருமணம், கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம், தேவயானைத் திருமணம் போன்ற விழாக்களும் முறையாக நடத்தப்பட்டுவருகின்றன. 2020-ஆம் ஆண்டு முதன்முறையாக இங்கே திருஎழுகூற்றிருக்கைத் தேர் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் சுகந்தன் சுவாமிநாதசுவாமியை ஆரோகணிக்கச்செய்து, ஆலயத்தின் உள்வளாகத்திலேயே அடியார்களால் அத்தேர் இழுக்கப்பட்டது. முத்தமிழாய் விளங்கி, முத்தமிழை உலகிற்கு அளித்தருளிய முத்தமிழ்க்கடவுளாம் முருகவேளை இங்கே அடியார்கள் முத்தமிழாலும் வழிபட்டுவருகின்றனர்.
இங்குள்ளத் தமிழ் இந்துமக்கள் மட்டுமின்றி முருகவேள் விழாக்களில் வடஇந்திய அடியார்களும், சீனர்களும், இதர இனத்தவரும் கலந்துகொண்டு இறைவனின் திருவருளைப் பெற்றுவருகின்றனர். பெருமளவில் இங்கே நிகழ்ந்தக் கோவிட் பரவலாலும், அதையொட்டி விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகளாலும் கடந்த சில மாதங்களாக நிகழ்ச்சிகள்/விழாக்கள் நடைபெறுவதில் சற்றே தொய்வு ஏற்பட்டிருந்தாலும், இறையருளால் விரைவில் மீண்டும் அவ்விழாக்கள் முன்னிலும் சிறப்பாக நடைபெறும் என்பதில் ஐயமேதுமில்லை.
அருளாளர் அருணைமுனி அருணகிரிசுவாமிகள் மீண்டும் இப்பூவுலகில் இறையருளால் அவதரித்தால் இந்தச் சுகந்தத் துறைமுகநகருக்குச் சிறப்பு வருகைதருவார்; இங்கு எழுந்தருளியுள்ளச் சுவாமிநாதசுவாமியையும், வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்ரமண்யசுவாமியையும் வழிபட்டு, 'சகத்தில் சிறந்து குணதிசை விளங்கு, திருமகள் துலங்கு, அமரரும் விரும்பு, சுகந்தத் துறைக்குக் குடிகொள உகந்து, குருமலை அடுத்து, எழுதரு பெருமாளே!' என்பதுபோன்ற ஈற்றடி அமைந்த ஒரு திருப்புகழ்ப் பாடலையாவதுப் பாடியருளுவார்; அப்படிப் பாடியருளியத் தனித் திருப்புகழில், ஹாங்காங் நகரத்து இயற்கை எழிலைப்பாடி, அங்கு கமழும் சுகந்தத்தைக் குறிப்பிட்டு, இத்தலத்து இறைவனை வழிபடுவோரை வாழ்த்தி, அவர்கள் மேலும்மேலும் இகபர நலன்களை நிறைவாய்ப்பெற இறைவனிடம் பரிந்துரைப்பார்; ஹாங் காங் உட்பட்டத் தெற்காசிய, தூரக்கிழக்கு நாடுகளில் இருக்கும் கந்தவேள் க்ஷேத்திரங்களை மட்டுமே உள்ளடக்கி, தனியாக ஒரு க்ஷேத்திரக்கோவையைப் பாடிச் சிறப்பிப்பார் என்பது திண்ணம்
'ஆறுநோக்கி, ஆறுவோதி, ஆறுபோக்கி, ஆறுபெற்று ஆறுவாகி, ஆறுவதெந் நாள்!' - என்று வினவின், அதற்கானத் தக்க விடையளிப்பவனும்; 'பொய்காட்டி, பொய்யோட்டி, மெய்யூட்டும், மெய்யாநின் செய்பதம் நீட்டிஎன்மேல் வை!' - என வேண்டின், வேண்டியவர் வேண்டியவாறு வழங்கும் வரதனும் சுகந்தத் துறைமுகநகருறையும் எம் சுகந்தன் சுவாமிநாதனே என்று வையகம் அறிக
தனைத் தொழுதார் வினை வேரடியோடறவே வடிவேல் தொடுவேலவன், தன்பால் பெருகாதலுற்ற அடியார்க்கு மிகவும் 'கனமதுறு நீள்சவுக்கிய சகல செல்வயோகமிக்கப் பெருவாழ்வும், தகைமையும், சிவஞானமுத்தியும், பரகதியும்' கொடுக்கும் பரமதயாளன், சர்வமங்கலதாயகன், அடியவர்தம் பிழைகளையெலாம் பொறுத்தருளும் நங்களப்பன் ஹாங் காங் சுகந்தன் சுவாமிநாதசுவாமியின் திருவருளையும், அருளாளர் அருணைகுருநாதர் குருவருளையும் வையகத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும் என்பதே இங்கு வாழும் முருகவேள் அடியார்களின் பெருவிருப்பும், பிரார்த்தனையுமாகும்! அனைவர் வாழ்விலும் சுகந்தம் வீச, அனைவரும் எந்நாளும் சுகித்திருக்க, சுகந்தத் துறைமுகநகருறையும் சுகந்தன் சுவாமிநாதனின் இன்னருளும், தண்ணருளும் கூர்க, கூர்க
சற்குருவும், பரமபவித்ரமானவரும், பெருங்கருணையாளருமான அருளாளர் அருணகிரிநாதசுவாமிகள் அவதரித்த அருணைத் திருத்தலத்தில் அவருக்கென்று ஓர் அருமையான மணிமண்டபம் எழுப்பும் திருப்பணியில் முழுஅர்ப்பணிப்போடு ஈடுபட்டுள்ள அன்பர்கள் அனைவருக்கும், அவ்வன்பர்களுக்குப் பல்வகைகளிலும் அனைத்து உதவிகளையும் தந்தருளிவரும் புரவலர்களுக்கும், பெருமக்களுக்கும் மற்றும் இத்திருப்பணியில் இணைந்தும், ஈடுபட்டுமுள்ள ஏனைய அன்பர்களுக்கும் ஹாங் காங் வாழ் முருகவேள் அடியார்களின் நன்றிகலந்த வாழ்த்துகளும், பாராட்டுதல்களும் உரித்தாகுக! இறையருளால் அவர்கள் அனைவரும் இன்புற்று, சீரும் சிறப்போடும் என்றும் வாழ்க, வாழ்க! திருப்புகழ் வல்லவர், திருப்பணி வல்லவர் சீர்பாதத் துளியெம் சென்னியதே
மணிமண்டபத்தின் திறப்புவிழா குறித்தநாளில் வெற்றிகரமாக, இனிதே, செம்மையாக நடந்தேறுக! குருவருளும், இறையருளும் பெருகி எங்கும் நிறைக, நிறைக
ஓம் சரவணபவ! ஓம் சர்வம் குஹமயம்! ஓம் குஹார்ப்பணமஸ்த்து
— ப. குருநாதன், ஹாங்காங்
சுகந்தத் துறைமுகநகருறை சுகந்தன் சுவாமிநாதசுவாமி சுகந்தத் துறைமுகநகருறை கல்யாணசிவசுப்ரமண்யசுவாமி சுகந்தத் துறைமுகநகருறையில் ஓடியத் திருஎழுகூற்றிருக்கைத் தேர்.
★★★
சந்தப் பாடல்களைப் பாடுவதில் இணையற்று விளங்கியவர் அருணகிரிநாதர். அவர் பாடியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் திருப்புகழ் என்ற நூலாக உள்ளன. எல்லாம் முருகக் கடவுள் மேல் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் ஆகும். வெவ்வேறு வகையான சந்தங்களும் இசை அமைப்புகளும் உடையன அவை. இசையுலகில் லயம் என்னும் தாள வகைகள் நிறைந்த களஞ்சியமாக போற்றப்படுகின்றன. அத்தனை வகையான
வேறுபாடுகள் நிறைந்த இசைப்பாடல்கள் வேறு எங்கும் இல்லை என்று இசை அறிஞர்கள் போற்றிக் கூறுகின்றார்கள். இன்றும் தமிழிசை அரங்குகளில் திருப்புகழ்ப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. தேவாரக் காலத்திற்கு பிறகு பாடப்பட்ட பக்திப் பாடல்களுள் மிக்க புகழ் பெற்று விளங்கி வருபவை திருப்புகழ்ப் பாடல்களே ஆகும். - முனைவர் மு. வரதராசனார்

