அருணகிரிநாதர் துதி:
“அருவமொரு நான்காகி யுருவமொரு நான்காகி யறையி ரண்டும்
மருவியுள வுருவருவ மொன்றாகி முத்திறமும் வழுத்த வொண்ணாப்
பெருவெளிக்கு மப்பாலா யுள்ளபொரு ளீதெனவே பெரிதுஞ் சேயோன்
ஒருவனையே புகழ்ந்தவரு ளருணகிரி சேவடிப்போ துளத்துள் வைப்பாம்”
ஒரு கியூஆர் குறியீடு காட்டப்பட்டுள்ளது.
பொருள் :
அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும்(லிங்கம்) அதையும் தாண்டி வாக்கிற்கு எட்டாத அருட்பெருஞ்சோதியாக விளங்கும் முருகப்பெருமானை ஏகதெய்வ வழிபாட்டு முறையில் பாட்டுடைத் தலைவனாகப் பெரிதும் புகழ்ந்துபாடி அவன் அருளையடைந்த அருணகிரிநாத தேசிக மூர்த்தியுடைய செம்மை முதலிய அழகுகள் வாய்ந்த திருப்பாத மலர்களை உள்ளத்தினுள்ளே நிலைபெற வைத்துக்கொண்டு துதித்து நிற்போம்.
பாம்பன் சுவாமிகள் பற்றிய சிறு குறிப்பு:
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இராமேஸ்வரத்தில் 1848 - 1852க்கு இடைப்பட்ட ஆண்டில் பிறந்து, பாம்பன் ஊரில் செம்மையான இல்லறம் நடத்தி, 1891 இல் மகாமந்திரமான சண்முகக் கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் இயற்றி, 1895 இல் பிரப்பன்வலசை கிராமத்தில் தவம் புரிந்து முருகப்பெருமானே நேரடியாக வந்து குரு உபதேசம் செய்யப் பெற்று, புண்ணிய பாரத தேசம் எங்கும் தலயாத்திரைச் செய்து, 1895 இல் முருகப்பெருமான் கட்டளைப்படி சென்னைக்கு துறவறம் பூண்டு, 1904 – 1911 ஆண்டுகளில் சிதம்பரம் அருகே மாணிக்கவாசகப் பெருமான் ஊமைப் பெண்ணை பேசவைத்த தலமான பின்னத்தூரில் தங்கி, தில்லை சிதம்பர நடராஜ பெருமானைப் பெரிதும் இழித்துப் பேசித் திரிந்த வலிய மூடர்களாம் சிவத்துரோக கூட்டத்துக்கு எதிராக அறவழியில் சைவ சமய சரபமாக ஓன்பது ஆண்டுகள் போராடி சிவதுரோகிகளை அடக்கி, 1918 இல் குமாரஸ்தவம் எனும் மகாமந்திர துதி இயற்றி, 1923 இல் சென்னையில் ஆங்கிலேயே மருத்துவர்களாலேயே இந்த முதியவரின் முறிந்த கணைக்கால் எலும்பை ஒன்று சேர்க்க இயலாது என கைவிடப்பட்ட போது, ஞானவேல் கொண்டு தனது முறிந்த கால் எலும்பை முருகப்பெருமானின் தெய்வ சிகிச்சையால் இணைக்கப் பெற்று, 1929 இல் திருவான்மியூரில் சமாதி நிலையில் வீற்றிருந்து முருகனடியார்களுக்கு பேரருள் புரிந்து வருகின்றார்கள்.
இளமையிலேயே அருணகிரிநாதர் மேல் பக்தி:
பாம்பன் சுவாமிகள் 13 வயதில் முருகப்பெருமானிடம் தாம் துதி பாடல்கள் இயற்ற அருணகிரிநாதப் பெருமான் போலவே வாக்குப் புலமை வேண்டி நின்றார், அந்த வேண்டுதல் பாம்பன் சுவாமிகளின் வார்த்தைகளிலேயே ‘என்னாண்டவனாகிய குமார பகவானே! நின்னையே பல பாக்களானும் பாடக்கடவேன்: அருணகிரிநாதர் பெயர் வைத்தே பிரபந்தம் முடிக்கக் கடவேன்: அவர் வாக்குப் போலவும் எனக்கு வாக்குண்டாக வேண்டும்' என வேண்டியவுடனேயே முருகப்பெருமான் 'கங்கையைச் சடையிற் பரித்து‘ என்ற விசேஷ மங்கலமான முதல் அடியை பாம்பன் சுவாமிகளுக்கு எடுத்துக் கொடுத்தார், பிறகு பாம்பன் சுவாமிகளது புலமையும் ஞானமும் உச்சநிலைக்குச் சென்றது.
பாம்பன் சுவாமிகள் திருப்பாடல்களில் அருணகிரிநாதர் திருநாமம்:
அருணகிரிநாதர் என்ற திருநாமத்தை எளியவர்கள் உச்சரித்தாலே முருகப்பெருமான் திருச்செவிகளுக்கு பேரின்பம் தரும் என்பது உறுதி. இந்நிலையில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தான் சரவணபவனுக்கு அணிவிக்கும் ஒவ்வொரு அழகிய பாமாலைகளிலும் அருணகிரிநாதர் திருநாமத்தை மாணிக்கம் போல் பதிக்கின்றார் என்றால் இந்த பாமாலைகளை முருகப்பெருமானுக்கு எவ்வளவு நேசித்து அணிந்து இருப்பார் என்பதை முருகனடியார்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ளலாம்.
முருகப்பெருமானை துதிக்க அருணகிரிநாதர் பாடல்களே முதன்மை என நிறுவுதல் :
தகராலய ரகசியம் என்ற ஞான நூலில்,
முருகப்பெருமான் சன்னிதியில் தோத்திரமாகப் பாடத்தக்க தமிழ்ப்பாக்கள் பலவற்றுள்ளும் அருணகிரிநாதப் பெருந்தகை திருவாய்மலர்ந்தருளிய திருப்புகழ்களே முதன்மை படைத்தனவாகும். அங்ஙனம் அப்பெருந்தகையின் ஏனைய கந்தரலங்காரம், அனுபூதி, திருவகுப்பு, கந்தரந்தாதி, மயில் விருத்தம் முதலிய பிரபந்தங்களுமாம். முருகப்பெருமானுடைய திருச்செவிகளை இனிதாக துளைத்தத் துதிகள் அருணகிரிநாதர் திருப்பாடல்களே ஆகும்..
அருணகிரிநாதரை முருகப்பெருமான் எனவே வணங்குதல் :
தகராலய ரகசியம் நூலில்,
குகப்பிரமத்தின் அருளாற் சர்வஞ் சத்துவம், சுவப்பிரகாசத்துவம், வியாபகத்துவம் முதலிய திவ்விய குணங்களை அடைந்த அருணகிரிநாதப் பெருமானை முருகப்பெருமான் எனவே
வணங்குவேன் நான் என ஸ்ரீமத் பாம்பன் உரைக்கின்றார்கள்.
அருணகிரிநாதர் திருவடியை வணங்கினாலே முக்தி:
சமாதான சங்கீதம் எனும் பதிகத்தில், முத்திதரும் குகப்பிரமத்தை வாழ்த்திய முத்தன் அண்ணாமலையான் - இரு பத்ம அடிக்கு அன்பு பண்ணிடு தாசர் பரகதி எய்துவரே.
அருணகிரிநாதருடைய தாமரைத் திருவடிகளை வணங்கும் அடியவர்கள் மேலான சிவ கதியை அடைவர் என புகழ்கின்றனர்.
ஸ்ரீமத் அருணகிரிநாதர் புராணத்தில் புனையப்பட்ட பிழைகள்:
கற்றுணர்ந்த ஆன்றோர்களும் சான்றோர்களும்கூட அருணகிரிநாதரைப் பெண் இன்பத்தில் திளைத்து நோய் எய்தப் பெற்றார் என உண்மையில்லாத வரலாற்றை வழி வழியாக உரைப்பதை கண்டு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பெரிதும் மனத்துன்பம் அடைந்தார்.
இதன் காரணம் ஆய்ந்து பார்த்தால் காலம் காலமாக காசுக்காக வாழ்ந்த புலவர்கள் தமது சம காலத்தில் வாழ்ந்த அருளாளர்களை போற்றாமலும், வரலாற்றை எழுதாமலும் தவிர்த்தனர். இதன் விளைவாக பிற்காலத்தில் உண்மைக்கு மாறான வரலாறுகள் அகச்சான்று என இயற்றப்பட்டன என பாம்பன் சுவாமிகள் நிறுவுகிறார்கள்.
திருவாசகத்தில் பல பாடல்களில் பெண்ணாசை பற்றி உள்ளது, உதாரணத்திற்கு கொள் ஏர் பிளவு அகலாத் தடம்
கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்?
என நீத்தல் விண்ணப்பத்திலும்,
இடர்க்கடல்வாய்ச் சுழியென்று மாதர் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின்ற னன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
என அடைக்கலப்பத்திலும் பெண்ணாசை குறிப்பிடப்பட்டுள்ளது
இப்பாடல்களை வைத்து மாணிக்கவாசகரை பெண்ணாசை போகத்தில் இருந்து மீண்டவர் என உரைத்தால் மடமையன்றோ!!
சேக்கிழார் பெருமான் போல் வந்த பாம்பன் சுவாமிகள்:
திருமுறை ஆசிரியர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் முதலிய பெரியோர்களின் வரலாற்றை சமகாலப் புலவர்கள் இயற்றவில்லை, பிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமானே சிவனருளால் பெரியபுராணம் இயற்றினார். இதன் காரணமாகவே உண்மை வரலாறு பெற்று கேட்டு சிவனடியார்கள் பிழைத்தோம்.
சேக்கிழார் என்ற மாமணி பெரியபுராணம் இயற்றாது இந்த வரலாறுகள் கற்பனைப் புலவர்களால் இயற்றப்பட்டிருந்தால் அந்தோ !! நினைக்கவே நெஞ்சம் அஞ்சுகிறது.
சேக்கிழார் பெருமான் போல பாம்பனடிகள் முருகனருளால் அருணகிரிநாதர் உண்மை வரலாறும், அவர் பரகதியடைந்த நன்னாளும் அறிவிக்கப் பெற்று அதனை நமக்கும் அருளியுள்ளார்கள்.
அருணகிரிநாதருக்குக் குருபூசை ஏற்படுத்துதல்:
சந்தமுனிவராம் ஸ்ரீமத்-அருணகிரிநாதருக்கொரு குருபூஜை அவர் வீடுபேறெய்திய காலந் தொடக்கமாக எக்காலத்திலும் எவராலும் செய்யப்படாதிருத்தல் கருதிய பாம்பன் சுவாமிகள், இறைவன்றிருவருளிருந்தவாறு அவ்வித குருபூஜையை உத்தராயணத்து ஆறாவது பௌர்ணமி தோறும் நடத்தும்படி சீடர்களுக்குப் போதித்தார். பாம்பன் சுவாமிகள் அப்படியே அதனை நடைபெறச் செய்தனர். குருபூஜை போதித்த காலமும் அருணகிரிநாதர் சரித்திரத்தை எடுத்துரைத்த காலமும் கிபி. 1918ஆம் வருடம்.
மேலும் பல அரிய நன்மையான விவரங்கள் விரும்பினால் பாம்பன் சுவாமிகள் அருளிய ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் எனும் சொற்பொழிவு நூலின்வழி அறிந்து கொள்ளலாம்.
இக்கட்டுரையின் பெரும் பகுதி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாக்கைக் கொண்டே இயற்றப்பட்டது ஆகும்.
★★★
கைகளில் தாளம் போட்டுக்கொண்டே இறைவனின் திருநாமத்தைப் பாடு. அப்போது உனக்கு ஒருமுகப்பட்ட பக்தி உண்டாகும். மரத்தின் அடியில் இருந்து கை தட்டினால் மரக்கிளைகளில் இருக்கும் பறவைகள் எல்லாம் நாலாப் பக்கங்களிலும் பறந்து போய்விடும். இறைவன் நாமத்தைப் பாடிக்கொண்டு கைதட்டினால் மனதில் உள்ள தீய சக்திகள் எல்லாம் அகன்று விடும்' என்பது பகவான் இராமகிருஷ்ணர் அமுதமொழி. அப்படிப் பாடுவதற்கு என்றே அமைந்தவை அருணகிரிநாதரின் அருந்தமிழ்ப் பாக்கள்.
— நாரை ச. நெல்லையப்பன்

