இராமாயணத்தைப் பலரும், பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். அவற்றில் சில, மக்களிடையே பரவியிருக்கின்றன. பரவாதவை பல. அப்படிப்பட்டவைகளில் அருணகிரிநாதரின் இராமாயணமும் அடங்கும். ஆம்! அருணகிரிநாதர் இராமாயணத்தைப் பல பாடல்களில், மிகவும் அற்புதமான முறையில் பாடியிருக்கிறார்.

அருணகிரிநாதர் இராமனைப் பாடியிருக்கிறாரா? என்ற எண்ணம் வேண்டாம்; இராமரைப் பற்றிய தகவலைப்பாடி, அப்படிப்பட்ட 'இராமனின் மருமகனே' எனப் பற்பல பாடல்களில் பாடியிருக்கிறார்.

முதல் திருப்புகழான 'முத்தைத்தரு' எனும் பாடலிலேயே, 'பத்துத்தலை தத்தக்கணை தொடு' என இராவணனின் பத்துத்தலைகளும் வீழ்ந்த தகவலைச் சொல்லியிருக்கிறார்.

அருணகிரிநாதர், இராமரையும் இராமாயணத்தையும்

அனுபவிக்கும் அழகே 'தனி'.

ஆம்! இராமாயணம் முழுவதையும் ஒரே பாடலில் சொல்வார்; தனித்தனி நிகழ்வுகளாகவும் சொல்வார்; தத்துவார்த்தமாகவும் சொல்வார்; நுணுக்கமாகவும் சொல்வார்.

இதோ! இராமாயணம் முழுவதையும் ஒரே பாடலில் சொல்லியிருக்கும் அருணகிரிநாதரின் ‘பாத்திரம்’.

"மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு னிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு அடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள் விடுத்தப னவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன் மருகோனே!”

(ஆலகாலப் படப்பை - திருப்புகழ்)

இப்பாடலில் இராவண சங்காரத்திற்காகத் தேவர்கள் வேண்டியது, இராமர் தசரதருக்கு மகனாக அவதரித்தது, விஸ்வாமித்திர முனிவரின் யாகத்தைக்காத்தது, கல்லாயிருந்த அகலிகைக்குத் தன் திருவடியால் சாப விமோசனம் அளித்தது, மிதிலைக்குப்போய் வில் முறித்தது, சீதா தேவியை மணம் புரிந்து அயோத்திக்குத் திரும்பியது, கைகேயி இராமனை காட்டிற்கு அனுப்பியது, இலக்குவணனோடும் பூமாதேவியின் மகளான சீதாதேவியுடனும் இராமர் காடு சென்றது, வாலியை வீழ்த்தியது, இராவணனை சங்கரித்தது என அனைத்தும் அடங்கியிருப்பதைக் காணலாம்.

இவ்வாறு பாடிய அருணகிரிநாதர், இராமரின் பாலபருவத்தை மிகமிக அழகாகவும் ஆழமாகவும் வர்ணித்திருக்கிறார். வால்மீகியோ, கம்பரோ சொல்லாதத் தகவல்கள் அவை.

“எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர் சூடிவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல வருமாயன்” (தொந்தி சரிய - திருப்புகழ்)

கோசலை, இராமரைப் பால்குடிக்க அழைப்பதாக உள்ள வர்ணனை இது. அருணகிரிநாதரின் அருந்தமிழ் வண்மையும் ஆன்மிக ஆழமும் அறிய விரும்புபவர்கள், அனுபவிக்கவேண்டிய பகுதியிது.

முதலில், இப்பாடலில் 'வருக' எனும் சொல் 'பத்து' இடங்களில் இடம் பெற்றிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

தெய்வங்களைக் குழந்தைகளாகப் பாவித்துப்பாடும் பிள்ளைத்தமிழ் நூல்களில், 'பத்து' பருவங்கள் உண்டு. அவற்றில் 'வருகைப்பருவம்' என்பது ஒன்று. அதிலும் 'பத்து' பாடல்கள் இடம் பெற்றிருக்கும். பாடல்கள் ஒவ்வொன்றும், 'வருக வருகவே' என முடியும்.

அந்த முறைப்படி, 'வருக' என்பதைப் பத்து முறைகள் அமைத்த அருணகிரிநாதரின் இப்பாடல், ஒரு வருகைப்பருவமாகவே அமையும். சில பிள்ளைத்தமிழ் நூல்களில், பருவத்திற்கு ஒரு பாடலாக அமைத்து, பத்து பாடல்களுடன் முடித்திருப்பார்கள். அந்த முறைப்படிப் பார்த்தால், இப்பாடல் ஒரு பிள்ளைத்தமிழ் நூலாகவும் கருதப்படும்.

அடுத்து, இப்பாடலில் 'வருக' என்பதைப் பத்து முறைகள் சொன்னதில், மற்றொரு தகவலும் உண்டு. மகாவிஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்லும்போது, தச(பத்து)அவதாரங்கள் என்போம். இராமாவதாரமும் அந்தப் பத்து அவதாரங்களில் ஒன்றுதானே

அதனால்தான், இராமரின் தாயான கோசலை வாக்காக அமைந்த இப்பாடலில், 'ராமா! என் பிள்ளையாக நீ வந்திருந்தாலும், நீ தசாவதாரங்களில் ஒன்றாக வந்தவன். அதை நான் அறிவேன். அருகில் வந்து விடு!' எனக் கோசலை அழைப்பதாக இப்பாடலை அமைத்தார் அருணகிரிநாதர்.

அது மட்டுமல்ல! கோசலை இராமனைப் பரிவோடு அழைத்ததாகவும் பதிவு செய்கிறார். 'பரிவினொடு கோசலை' என்கிறது பாடல். பலமுறை அழைத்தும் இராமன் வராததால், கோசலை பொறுமை இழக்கவில்லை; பரிவோடு-அன்போடு அழைத்தாளாம்.

நம் காலத்தைப்போல, 'ஏய்! மரியாதையா வந்துடு! வந்துதொலையேன்டா! வரலேன்னு வெச்சுக்கோ; அவ்வளவு தான்!' என்று கோபப்பட்டுக் கத்தவில்லை. 'பரிவோடு கோசலை புகல' என்கிறார் அருணகிரிநாதர். இதன் பிறகும் இராமர் வராமல் இருப்பாரா? 'வருமாயன்' என இராமனின் வருகையையும் பதிவு செய்திருக்கிறார் சந்தக்கவி அருணகிரிநாதர்.

பரிவோடு கோசலை அழைத்ததும் அவளை நெருங்கிய இராமரை வர்ணித்த அருணகிரிநாதர், பிரம்ம தேவர் உட்பட தேவர்கள் பலரின் வருகையையும் பாடுகிறார்.ஆம்! இராமாவதாரத்தின் போது, பகவானின் ஆணைப்படித் தேவர்கள் பலரும் பூமியில்வந்து அவதரித்ததைக் கம்பர், விரிவாகவே பாடுவார்.

அத்தகவல்களை எல்லாம், ஒரே பாடலில் விவரிக்கிறார் அருணகிரிநாதர்;

“இரவி இந்திரன் வெற்றிக்கு ரங்கின்
அரச ரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவனெண் கினக்கர்த்த ரென்றும் நெடுநீலன்
எரிய தென்றும் ருத்ரற் சிறந்த அனும னென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரு மிந்த வர்க்கத்தில்வந்து புனமேவ
அரிய தன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற அரி முகுந்தன்”

(கருவடைந்து - திருப்புகழ்)

சூரியபகவான் சுக்ரீவனாகவும் இந்திரன் வாலியாகவும் தோன்றி, வானர அரசர்களாக இருந்தார்கள். பகவானின் நாபிக்கமலத்தில் அவதரித்த பிரம்மதேவர், கரடி முகம் கொண்ட ஜாம்பவானாக வந்தார். அக்கினி பகவான், நீலனாக வந்தார். ருத்திரன், சிறப்பு வாய்ந்த அனுமனாக வந்தார். ஒப்பில்லாத தேவர்கள் எல்லோரும்,இப்படிப் பூமிக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவராக வந்த இராமன், அசுரர்களை அழித்தார் என்பது இப்பாடலின் கருத்து.

இராமரின் வருகையையும் ஜாம்பவான் முதலானவர்களின் வருகையையும் இராவணாதி அரக்கர்களின் முடிவையும் பாடிய அருணகிரிநாதர், விசுவாமித்திர முனிவர் இருந்த ஆசிரமத்தையும் தாடகை வதத்தையும் பாடுகிறார்.

“காலைக்கே முழுகிக்குண திக்கினில்

ஆதித்யா யெனப்பகர் தர்ப்பண

காயத்ரீ செபஅர்ச்சனை யைச்செயு முனிவோர்கள்

கானத்தா சிரமத்தினி லுத்தம

வேள்விச்சா லையளித்தல்பொ ருட்டெதிர்

காதத்தா டகையைக்கொல் க்ருபைக்கடல்” (வேலைப்போல் - திருப்புகழ்)

விசுவாமித்திர முனிவரின் ஆசிரமத்தில் உள்ள முனிவர்களின் செயல்களைப்பற்றிப் பாடி, தாடகை வதத்தையும் பாடி, இராமரைக் கருணைக்கடல் என்றும் பாடியிருக்கும் பாடலிது.

விசுவாமித்திர முனிவர் இருக்கும் அக்கானகத்தில் உள்ள முனிவர்கள், அதிகாலையிலேயே எழுந்து நீராடி முடிக்கிறார்கள்; கிழக்குத்திசை நோக்கி, சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்; காயத்ரி ஜபமும் செய்கிறார்கள். உத்தமமான அவர்களுக்கும், அவர்கள் இருக்கும் யாக சாலைக்கும் தீங்குசெய்து வரும் தாடகையை, கருணைக்கடலான இராமர் வதம் செய்தார் என்பதை விவரிக்கும் பாடற் பகுதி இது.

யாகசாலை, அங்கு வாழும் முனிவர்கள், அவர்களுக்குத் தீங்குசெய்து வந்த தாடகையை வதம் செய்தது-எனும் தகவல்களைப் பாடிய அருணகிரிநாதர், மற்றொரு பாடலில் தாடகை தொடங்கி,இராமர் வில் முறித்த நிகழ்வுவரை பாடுகிறார்.

“வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை விடுத்து யாகமும் நடத்தி யேயொரு மிகுத்த வார்சிலை முறித்த மாதவன்” (தொடுத்த வாளென - திருப்புகழ்)

கடுங்கோபத்துடன் வந்த தாடகையை, ஓர் அம்பாலேயே வதம்செய்து; விசுவாமித்திர முனிவரின் யாகத்தைக்காத்து; ஒப்பற்ற,பலம்பொருந்திய வில்லை முறித்த இராமன் - என இவ்வாறு பாடிய அருணகிரிநாதர், மற்றொரு பாடலில் வில் முறிந்தபோது எழுந்த ஓசையைப் பதிவு செய்கிறார்.

அதெல்லாம் சரி! யாகத்திற்குப் பின்பும் சீதா கல்யாணத்திற்கு முன்பும் நடந்த, அகலிகை சாப விமோசனத்தைச் சொல்ல வில்லையா என்றால், சொல்லியிருக்கிறார்; தனியாகவே

“க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான

கமலபத மாயன் (குலைய - திருப்புகழ்)

சீதாகல்யாணத்தைத் தரிசிக்கலாம் வாருங்கள்! அருணகிரிநாதர் பாடுகிறார். சிலை ‘மொளுக்’கென முறிபட

மிதிலையிற் சனக மனருள்

திருவினைப் புணரரி” (திருவிடைக்கழி திருப்புகழ்)

வில் வளைத்தலே, சீதா கல்யாணத்திற்காகத்தானே? அதனால் அதை உடனேயே சொல்லிவிட வேண்டும் என்பதைப்போலப் பாடப்பட்டிருக்கும் பாடலிது.

இராமர் வில்லை வளைத்தபோது, “மொளுக்”கென்று முறிந்ததாம். ஓசையைக்கூட இவ்வாறு பதிவுசெய்த அருணகிரிநாதர், உடனே சீதாகல்யாணத்திற்குப் போய் விடுகின்றார்.

மிதிலை மன்னரான ஜனகரின் மகளாக வந்து அவதரித்த திருமகளான சீதாதேவியைத் திருமணம்செய்து கொண்ட இராமர் - என மிதிலையைச்சொல்லி, அதன் மன்னரைச் சொல்லி, அவர் பெயரையும் சொல்லி, சீதா கல்யாணத்தையும் சேர்த்து, ஒருசில வரிகளில் பாடியிருக்கும் அருணகிரிநாதரின் பாத்திறம் வியக்க வைக்கும்.

அருணகிரிநாதர் பாடிய அறுமுகனும் அயோத்தியாதிபதியான சீதாராமனும், நமக்கு எல்லாவிதமான மங்கலங்களையும் அருள வேண்டுவோம்! அருள்வார்கள்

★★★

தமிழ்நாடு மாலிக்காபூரின் படை எழுச்சியால் நிலை தளர்ந்து உரிமை இழந்து வாடி, விஜயநகரப் பேரரசர்களது நிழலில் மேலோங்கத் தொடங்கியபோது, வடமொழி மட்டுமன்றி பிற மொழிச் சொற்களும் அன்றாட வழக்காகிவிட்டன. எளிமை வேண்டுவோர் அவற்றை ஒதுக்கித் தள்ள முடியாது. ஆனால் தமிழில் பாடி அவை தமிழாய் வருவதற்கு ஒரு வழி உண்டு. சந்தக் குறிப்பில் வருவதற்கு ஏற்ப அச்சொல் அமைந்து விட்டால் தமிழ்ப் பாட்டோடு தாளத்திற்கேற்பத்

தமிழ்ச் சொல்லாய் இனிக்கக் காண்கின்றோம். 'நாத விந்து கலாதி நமோ நம' 'பிரபுட தேவ மாராயா‘ ‘கசுமாலம்’ முதலியவை சந்தக் குறிப்போடும் ஒத்து நின்று ஒலித்துத் தமிழாய்ப் போவதை காண்கின்றோம்.

இப்படி வளர்ந்து வரும் பாடல் வகையினை மேலும் பலப் பல தாளவகைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப இசைத் தமிழில் சிறப்பியல்பாக வளர்த்து இறைவனது புகழை ஒவ்வொரு அடியும் வகைவகையாய் எடுத்துரைத்துப் பாடுவதனால் அதற்கு திருப்புகழ் என்ற அழகிய பெயரையும் தந்து, அன்பர் உள்ளத்தையும், இசைவாணர் தாளத் திறமையையும், பொதுமக்கள் மெல்லிசை நயத்தையும் அடிமை கொண்டார் அருணகிரிநாதர்.

— டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்