சிவபெருமானை எண்ணும்போது நம் மனக்கண் முன் வருவன அப்பெருமானுடைய அட்ட வீரட்டச் செயல்கள் தாம் இவை நிகழ்ந்த திருத்தலங்கள் அட்ட வீரட்டானங்கள் எனப்படுகின்ற மூலம் + தானம் என்பது மூலட்டானம் என்று ஆனது போல். வீரம் + தானம் = வீரட்டானம் என்று ஆனது. இவ் வீரச் செயல்களைப் பெருமான் எட்டுத் தலங்களில் நிகழ்த்தியிருப்பதால் அவை அட்ட வீரட்டானம் எனப்படுகின்றன. பழம்பாடல் ஒன்று தலங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

“பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவால் புரம் அதிகை
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மா வழூவூர்
காமன் குறுக்கை, யமன் கடவூர், இந்தக் காசினியில்
தே மன்னு கொன்றையும் திங்களும் சூடி தன் சேவகமே”
  1. திருக்கண்டியூர் - சிவபெருமான், பிரமனின் ஐந்தாவது தலையைக் கொய்த திருத்தலம்.
  2. திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதம் செய்த தலம்.
  3. திருவதிகை - திரிபுரங்களை எரித்த தலம்.
  4. திருப்பறியலூர் - தக்கன் தலையை வெட்டி, யாகத் தீயில் இட்ட இடம்.
  5. திருவிற்குடி - சலந்தராசுரனை அழித்த தலம்.
  6. திருவழுவூர் - கஜாசுரனின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்ட தலம்.
  7. திருக்குறுக்கை - மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த தலம்.
  8. திருக்கடவூர் - யமனை உதைத்து மார்க்கண்டேயனைக் காத்த தலம்.

சிவபெருமான், முப்புரங்களை எரித்த திருவதிகைத் திருத்தலம். பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் பாதையில் இரண்டு கி.மீ. தொலைவிலுள்ளது. இறைவன் வீரட்டேசுவரர் என்றும் அதிகை நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி அம்மை சித்ரமேரு பர்வதம் எனப்படும் வீரட்டேசர் லிங்க வடிவிலுள்ளார்.

கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு உள்ளது வீரட்டேசர் சபை திரிபுராந்தகர் எனும் பெயருடைய இறைவன் இங்கு, மழுவும் வில்லும் அம்பும் ஏந்திக் காட்சி தருகிறார். இறைவி திரிபுராந்தகி என்றும் திரிபுரசுந்தரி என்றும் குறிப்பிடப்படுகிறாள். முப்பத்து அசுரர்களுக்கு எமனாக வரும் சிவனார் திரிபுராசுந்தகர் எனப்படுகிறார்.

திருவாஞ்சியம் திருப்புகழில் திரிபுராசுந்தகர்க்கு வர கதி என்றும் முருகனை அழைக்கிறார் அருணகிரியார் திரிபுராந்தகனை திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி தன் பாலகனே என்கிறார் கந்தர் அலங்காரச் செய்யுளில் த்ரிபுராந்தகர் என்று பெருமான் அழைக்கப்படுவதற்கான காரணத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் எனும் மூன்று அசுரர்கள், வெயிலிலும் கடும் குளிரிலும் நின்று தவம் செய்து வந்தனர். பிரம்மலோகத்தையே அவர்களின் தவ ஜ்வாலைகள் தகித்ததால், பரமன் அவர்கள் முன் தோன்றி, அவர்கள் வேண்டும் வரங்சகளைத் தருவதாகக் கூறினான். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் நாங்கள் பறக்கும் நகரங்களில் வசிக்க விரும்புகிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் ஒன்று சேரும் போது, தேவர்களனைவரின் மொத்த பலத்தில் பாதியைத் தாங்கும் சக்தி உடைய ஒருவர் ஒரே அம்பினால் எங்களை வீழ்த்தினால் மட்டுமே எங்களுக்கு மரணம் உண்டாகும் இத்தகைய வரத்தைத் தர வேண்டும்” என்று வேண்டினர்.

பரமனும் பொன், வெள்ளி, இரும்பு இவற்றினாலான பறக்கும் கோட்டைகளை முறையே தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகியோருக்கு அளித்தான். அசுரர்கள் அவற்றில் பறந்து சென்று. ஆங்காங்கே இறங்கினர். அதனால் பல ஜீவராசிகள் அழிந்தன. பட்டினங்கள் தரைமட்டமாயின. நட்சத்திரங்கள் உதிர்ந்தன. எனவே தேவர்கள், முப்புரங்களை அழித்துத் தம்மைக் காக்குமாறு பரமனை வேண்டினர். ஆனால் பரமனோ, வரங்களைக் கொடுத்த நானே அவர்களை அழிப்பது முறையல்ல என்றான். தேவர்கள் சிவபெருமானைத் தஞ்சமடைந்தனர். ஆனால், அவரோ ‘என் மீது பக்தி கொண்டு தவசீலர்களாக விளங்கும் முப்புரத்து அசுரர்களைத் தான் எதுவும் செய்ய விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.

சிவனார் கூறியதைக் கேட்ட திருமால் 'அரக்கர்களைச் சிவ பூஜையினின்றும் மனம் நழுவித் தவறான வழியில் செல்லும்படி செய்துவிட்டால், சிவனாரே அவர்களை சம்ஹாரம் செய்துவிடுவார்' என்றெண்ணித் தன்னிடமிருந்து ஒரு மாயாவாதியைத் தோற்றுவித்தார்.

மாயாவாதி, அசுரர்களிடம் பலவாறாகப் பேசி, அவர்களைச் சிவ பூஜையினின்றும் விலகச் செய்தான். சிவ வழிபாடு அற்றுவிட்டதாலும், தர்ம காரியங்கள் நின்றுவிட்டதாலும் முப்புரங்களில் வாழ்ந்த அசுரர்களின் ஒளிமங்கியது. இதுவே அவர்களை அழிக்க உகந்த நேரம் என்றெண்ணிய தேவர்கள் மீண்டும் சிவபெருமானிடம் சென்றனர். அவரோ ‘தேவர்களின் மொத்த பலத்தில் பாதியைப் பெற்ற வீரன் ஒருவன். மூன்று கோட்டைகளும் ஒன்று சேரும் நாளில் எய்யும் ஒரே அம்பினால் மட்டுமே மரணம் உண்டாகும் என்றல்லவா அவர்கள் வரம் பெற்றிருக்கிறார்கள்' என்று கூறிவிட்டார்.

திருமாலும் பிரம்மனும் தேவர்களின் பாதி பலத்தைப் பெற முயற்சி செய்து தாங்கமுடியாமல் தோல்வியுற்றனர். மீண்டும் சிவனிடமே தஞ்சமடைந்தனர் “எங்களனைவரின் பாதி பலத்தை ஏற்றுக் கொள்ளும் சக்தி உங்கள் ஒருவரிடமே உள்ளது என்று தோன்றுகிறது. பசுபதியாகிய நீரே எங்கள் பாதி பலத்தை ஏற்றுக் கொண்டு முப்புரங்களையும் தகனம் செய்வீராக” என்று கேட்டுக்கொண்டனர்.

இதற்கு ஒத்துக்கொண்ட சிவபெருமானும், விசுவகர்மாவால் ஒரு அதிசயத் தேரை உருவாக்கச் செய்தார். அதன்படி, வேதங்கள் குதிரைகளாக, சூரியசந்திரர் தேர்ச் சக்கரங்களாக, மேரு மலை வில்லாக, வாசுகி நாணாக, திருமால் அம்பாக, பரமன் தேர் ஓட்டும் சாரதியாக அமர, தேர் புறப்பட்டது. கங்கை முதலான நதிப் பெண்கள் சாமரம் வீசினர். விந்திய மலை குடையானது சிவபெருமான் மேரு மலையை வில்லாக வளைத்து வாசுகியை நாணாக வைத்துக் கட்டினார். அக்னியைக் கூர்த்த நுனியாகவும், திருமாலை தண்டாகவும், வாயுவைச் சிறகாகவும் கொண்ட அம்பை எடுத்தார்.

தேவர்களனைவரும் துதிக்க பார்வதியுடன் ரதத்தில் ஏறினார் முப்புரங்களும் ஒன்று சேர்ந்த அதே நேரத்தில் அம்பை நாணேற்றினார். ‘நமது உதவியின்றிச் சிவனால் முப்புரங்களை எரிக்க முடியாது' என்றெண்ணித் தேவர்கள் இறுமாப்பு எய்தினர் அதை உணர்ந்து கொண்ட பெருமான். தேர்த்தட்டில் காலைச் சற்று ஊன்றினார். அதன் அச்சு, மளமள என்று முறிந்தது.

‘தச்சு விடுத்தாலும் தாம் அடியிட்டாலும்
அச்சு முறிந்ததென்று உந்தீபற’

என்பார் மணிவாசகர்.

உடனே, திருமால் வேகமாக ரிஷபமாகச் சிவனைத் தாங்கினார்.

‘நவநீதத் திருட்டுப்பாணி இடப முதுகிடை
சமுக்கிட்டேறி அதிர வருபவர்’ (திருப்புத்தூர் திருப்புகழ்)

'காமபாண மட்டநந்த கோடி மாதரைப் புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை' (வைத்தீஸ்வரன் கோவில் திருப்புகழ்) 'த்ரியம்பகனார் சே' - கந்தர் அந்தாதி செய்யுள் 68 (மூன்று கண்களை உடைய சிவபெருமானது ரிஷப வாகனமாம் விஷ்ணு) 'குழலூதும் கையன் மிசை ஏறும்பன் நொய்ய ஜடையோன் எந்தை' - (கொல்லிமலைத் திருப்புகழ்)

சிவபெருமான் நாணேற்றிய அம்பை விடாமல், முப்புரங்களை நோக்கிப் புன்னகைத்தார். உடனே அவை தீப்பற்றி எரிந்தன. தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்ட அரக்கர்களின் அத்துமீறல் கண்டும் கூட பொறுமை காத்து அவர்கள் திருந்த அவகாசமளித்தார் பெருமான் ஆனால் அரக்கர்கள் வருந்தவோ திருந்தவோ இல்லை. உலகை ரட்சிக்கும் பொருட்டு நெற்றிக் கண்ணைத் திறந்து நெருப்புமிழ்ந்து திரிபுரங்களை எரித்தார். அருணகிரியார் பாடுகிறார்.

“புரத்தார் வரத்தார், சரச் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வரும்போது பொறுத்தார் பரிந்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதற் பார்வையிலே” (சரத்தே உதித்தாய் - கதிர்காமத் திருப்புகழ்)

பொருள் : வரம் நிரம்பப் பெற்றிருந்தவர்களும் அம்புகளைச் சேகரித்து வைத்திருந்தவர்களுமான முப்புர அசுரர்கள், போருக்குத் தயாராக எதிர்த்து வந்தபோது, சிவனார் பொறுமையுடன் இருந்தார். போர்க்கோலத்தைத் தாங்கினார். பின்பு சிரித்தார் திரிபுரங்களை எரித்தார். நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த நெருப்பால் அவற்றைப் பொடிபடச் செய்தார். மேலும் பலவாறாகப் பாடுகிறார் அருணகிரியார்.

“அரிய திரிபுரம் எரிய விழித்தவன்” (கண்ணை விழித்தும் எரித்தார்) “சிரித்தார் புரமணும் தவிடாக” “செறுத்தெறுத் தெதிர்த்த முப்புரத்துரத்துரக்கரை சிரித்தெரித்த நித்தர்” “புரமுந் திரி வென்றிட இன்புடன் அழலுந்த நகுந்திறல் கொண்டவர்” “முக்கோட்டைக் கொருகிரி இருகாலும் விற்போலக் கோட்டிப் பிறகொரு சற்றே பற்காட்டித் தழலெழுவித்தார்”

(திரிபுரத் தலைவர்களின் மூன்று கோட்டைகளுக்கும், ஒப்பற்ற மேருமலையின் இரண்டு பக்கங்களையும் வில்லை வளைப்பது போல வளைத்து, பின்பு ஒரு சிறிது புன்னகை செய்து (பற்காட்டி) நெருப்பை மூளவைத்தவர்)

முப்புரங்களில் மேல், அம்பு விடாமலே அவை தீப்பற்றியது கண்டு அதிசயத்த தேவர்கள் சிவபெருமானிடம், “எங்களைப் பெருமைப் படுத்தவே நீங்கள் எங்கள் உதவியை ஏற்றீர்கள், இது உங்கள் லீலைகளுள் ஒன்று, இருப்பினும் தொடுத்தக் கணையை விடுங்கள்” என்று வேண்டினர். சிவபெருமான் அம்பினை எய்ய, அது திரிபுரங்களை மேலும் எரித்துச் சாம்பலாக்கியது.

புராணங்களில் சிவபெருமானே தனது திருவடியை ஊன்றித் தேவர்கள் அமைத்த விநோதமான தேரின் அச்சை முறித்தார் என்று வருகிறது. விநாயகரை வணங்காமல் தேர் புறப்பட்ட காரணத்தால், விநாயகரே அதன் அச்சை முறித்துவிட்டார் என்று அச்சிறுபாக்கம் தலபுராணம் கூறுகிறது. 'கைத்தல நிறைகனி' எனத் தொடங்கும் திருப்புகழில் அருணகிரியாரும் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

“முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம்

அச்சது பொடி செய்த அதிதீரா”

என்று விநாயகரைத் துதிக்கிறார்.

விநாயகரைப் போற்றாமல் எந்தச் செயலையும் செய்வது கூடாது என்பதை உலகோருக்கு உணர்த்த வேண்டி சிவனார், மஞ்சளில் விநாயகர் உருவை அமைத்துப் பூசித்தப்பின் தேரைச் செலுத்தினார். இந்நிகழ்ச்சி நடந்த தலம் அச்சிறுபாக்கம் (சென்னையை அடுத்துள்ளது) என்று அழைக்கப்படுகிறது.

திரிபுரத்து அரக்கர் தலைவர்களான தாரகாட்சன், விருத்யுன்மாலி, கமலாட்சன் ஆகிய மூவரின் ஆன்மாக்கள் சிவபூஜையைக் கைவிடவேயில்லை. அவர்கள் மீது கருணை கொண்ட சிவபெருமான், அவர்களுக்குப் பெரும் பதவிகளை அளித்தார். தாரகாட்சன், விருத்யுன்மாலி, ஆகிய இருவரையும் சிவ சந்நிதியின் வாயிற்காவலர்களாகவும் கமலாட்சனை, பெருமான் சந்நதியில் பஞ்சமுக வாத்தியமான குடமுழவினை முழக்குபவனாகவும் நியமித்தார்.

அருணகிரியார்.

“அரணமதிள் சூழ் புரத்திலிருந்து
கருதுமொரு மூவருக்கிரங்கி
அருளுமொரு நாயகர்” (இரவினிடை - பொது திருப்புகழ்)

என்று பாடியுள்ளார்.

“பறவை யென்கிற கூடார் மூவரண்
முறையிடும் தமர் வானோர் தேர் அரி
பகழி குன்ற விலாலே நீறெழு ஒரு மூவர்
பத நினைத்து விடாதே தாள் பெற
அருள் புரிந்த பரனார்” (உறவு சிங்கிகள் - திருப்புகழ்)

பறக்கும் தன்மையுள்ள பகைவர்களின் முப்புரங்கள், அவற்றின் கொடுமை குறித்து முறையிட்ட தமக்கு வேண்டியவர்களான தேவர்கள் அனைவரும் ஒரு தேராகவும், திருமால் அம்பாகவும் அமைய மலையாகிய மேருவை வில்லாகவும் கொண்டு, அம் முப்புரங்கள் சாம்பலாகும் படியும். அதிலிருந்த ஒப்பற்ற மூவர் மாத்திரம் தமது திருவடித் தியானத்தை விடாதிருந்த காரணத்தால் தமது திருவடி நிழலைப் பெறவும் அருள் பாலித்த முதல்வரும் சிறந்த தலைவரும் ஆகிய சிவபிரான்.

“மாநாக நாண் துவக்கி, ஓர்
மாமேரு பூதரத் தனுப் படித்தொரு
மாலாய வாளியைத் தொடுத்த அரக்கரில் ஒரு மூவர்

“மாளாது பாதகப் புரத்ரயத்தவர்

தூளாகவே முதற்சிரித்த வித்தகர்” - (ஆனாத ஞான)

“அருவமிடையென” எனத் தொடங்கும் திருவருணைத் திருப்புகழில் திரிபுர தகனம் பற்றி விரிவாகப் பாடுகிறார் அருணகிரியார்.

“உப்பு கரியதொர் கணைகொடு, பணிபதி
இருகுதையுமுடி தமனிய தநுவுடன்
உருளை இருசுடர், வலவனு மயனென, மறைபூணும்
உறுதிபடு சுர ரதமிசை அடியிடு
நெறுநெறென முறிதலு, நிலை பெறுதவம் உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
சடசடென வெடி படுவன புகைவன
திகுதிகென எரிவான் அனல் நகையொடு முனிவார்.........”

“உருவம் கரிய ஒப்பற்ற திருமால் அம்பாகவும், பாம்பரசனாகிய வாசுகி வில்லின் முனைகளில் கட்டப்பட்ட கயிறாகவும். பொன்னிற மேருமலை வில்லாகவும் சூரிய சந்திரர்கள் தேரின் இரு சக்கரங்களாகவும், பரமன் தேர் சாரதியாகவும் நான்கு வேதங்களும் குதிரைகளாகவும் பூட்டப்பட்டிருந்த வலிமை மிக்க தேவர்கள் அமர்ந்திருந்த ரதத்தின் மீது மஹாதேவர் கால் வைத்தவுடன் அத் தேரின் அச்சு நெறுநெறென முறிந்தது. அசையா சிவபக்தி உடைய அசுர வேந்தர்கள் மூவர் மட்டும் உயிர் பிழைத்தனர்.

(மூவர் என்பதை ஒருவரும் இருவரும் என்கிறார். ஒருவர் குடமுழவு வாசிப்பவராகவும் மற்ற இருவர் வாயில் காப்போராகவும் நியமிக்கப்பட்டதால் இவ்வாறு பாடுகிறார்).

“எண்ணற்ற தெருக்களும் நகரங்களும், அசுரத் தலைகளும் சடசடவென வெடிக்கவும், ஒரே புகை மயமாய் எங்கும் ஜ்வாலை வீசி, தீ எழவும் அனல் வீசும் புன்னகையால் கோபித்த சிவபெருமான்”.

என்பது இத் திருவருணைப் பாடல் வரிகளின் பொருள்.

சிவபெருமான் புன்னகை புரிந்து தேரின் அச்சை முறித்தார், வெந்நகை புரிந்து திரிபுரங்களை எரித்தார்; தண்ணகை புரிந்து அரக்கர் தலைவர் மூவருக்கும் உயர் பதவிகளை அளித்தார்.

திரிபுரங்களை எரித்த பின் பெருமான் ஆனந்த நடனம் ஆடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அவரது ஆடல்கள் கொடுகொட்டி, பாண்டரங்கம் எனபடுகின்றன.

“இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்து”

“தேர் முன் நின்ற திசைமுகன் காண ஆடிய வியன் பாண்டரங்கமும்”

“திரிபுர எரியத் தேவர் கொண்ட .... ஆடிய கொடுவெட்டி ஆடலும்” சிலப்பதிகாரம்

“கற் புரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்

கத்தர் பத்தர் கூத்தர்” - (காஞ்சிபுரம் திருப்புகழ்)

(மலைபோன்ற திரிபுரங்களை அழித்து நடனம் செய்த திருநீறணிந்த பெருமான், கடவுள் கூத்தர்)

“திரிபுரங்கனல் நகையால் எரிசெய்து

பொதுநடம் புரி அரனார்” (பொதுத் திருப்புகழ்)

தமிழில் சிவனாரது இந்நடனம், 'நுதல் விழிக் கூத்து' எனப்படும். சிவபெருமானது வீரச் செயல்கள் எட்டனுள், திரிபுர தகனத்தில் மட்டுமே அவர் அம்பிகையோடு இருந்து வீரம் விளைவித்தார் என்பர். கொடுகொட்டி என்பது இறைவன் உமாதேவியை ஒரு பக்கம் கொண்டு அர்த்தநாரீசுவரராக ஆடிய கூத்து என்று கூறுவர்.

அம்பிகை ஐயனது இடப்பாகத்தில் அமைந்திருக்கிறாள். எனவே அவளது இடது கைதான் திரிபுர தகனத்தின்போது, மேருவை வில்லாக வளைத்துப் பிடித்து திரிபுரங்களை அழிக்க உதவியது என்பர் சாக்தர். அருணகிரிநாதரும் பல பாக்களில் இக்கருத்தைத் தெரிவிக்கிறார்.

“குலவரை தநுவென அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி”

“குவடு குனித்துப் புரம் கடும் சின வஞ்சி நீலி”

“திரிபுரம் மாண்டு நீறெழு மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி”

“சிலையுமெனப் பொற்சிலம்பை முன்கொடு
சிவமயமற்றுத் திடங்குலைந்தவர்
திரிபுரமதைச் சுடும் தினந்தரி திண்கையாளி”

(சிவ வழிபாட்டைக் கைவிட்டதனால் தமது சக்தி குறைந்த திரிபுரத்து அரக்கர்களை எரித்த அந் நாளில், மேருமலையை வில்லாக தரித்த திண்ணிய திருக்கரத்தை உடையவள்)

கந்தர் அந்தாதியிலும் அருணகிரியார், சிவனார் முப்புரங்களை அழித்தது பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

- எண் 47 - “திருகு மும்மதிள் தம்படு உக துங்க குனித்தவன்”
- (மாறுப்பட்ட முப்புரங்களும் தோற்றிய இடத்திலேயே நீறாகி விழ, உயர்ந்த மேருமலையை வில்லாக
- வளைத்த பரமசிவன்)
- எண் 60 - “சேணில் வெள்ளி, செப்பு, அத்த மதிலை வென்றார்”
- (ஆகாசத்தில் வெள்ளியும், செப்பும், பொன்னுமான மதிலை உடைய முப்புரத்தை ஜெயித்த பரமன்)
- எண் 77 - “தேரை விடப் பணி ஏறு முப்புரம் செற்ற பரமன்”
- (தேவர்கள் அனைவரும் கூடிச் செய்த தேரை அச்சு முறியும் படிச் செய்து, திருமாலாகிய ரிஷப
- வாகனத்தின் மேலமர்ந்து திரிபுரங்களை நகைத்தெரிந்த சிவனார்)
- தேவி திரிபுர தகனத்தின் போது இடக்கரத்தால் வில்லைப் பிடித்தது பற்றிய பின் வரும் குறிப்பு கந்தர்
- அந்தாதியில் தரப்பட்டுள்ளது.
- எண் 78 - “புரத்து அப்பு வி தரத் தோன்றி சிலை படிப்பத்
- திரிபுரத்து அப்புத் தலைப்பட நாண் தொடும் சேவகன்”
- (பூர நாளில் கடல் சூழ்ந்த பூவுலகைப் பெற்றாளும்படிக்கு அவதரித்த உமாதேவி தனது உள் பாகமாகிய
- இடது கரத்தால் மேருவாகிய வில்லைப் பிடிக்கச் செய்து, முப்புரத்தின் மேல் திருமாலாகிய பாணத்தைப்
- பிரயோகம் செய்யும் பொருட்டு தனது பாகமாகிய வலது கரத்தால் வாசுகியாகிய நாணை ஏற்றிய
- பரமசிவன்)

திரிபுர தகனத்தின் தத்துவார்த்தத்தை நோக்குகிறார். திருமூலர் முப்புரங்கள் என்பது மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை இவற்றைக் குறிப்பதாகவும் சிவபெருமான் ஒருவரே இம்மூன்றையும் அழிக்கவல்லார் என்கிறார்.

“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே”

பொருள் : கங்கை நீரை அணிந்துள்ள சிவந்த ஜடையைக் கொண்ட சிவபெருமான், முப்புரங்களை அழித்தான் என்று சொல்வர். மூன்று கோட்டைகளை அழித்தல் என்பது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழித்தலாகும். அவர் அவ்வாறு அழித்ததை அறிய வல்லவர் யார்?

எந்நாட்டவர்க்கும் இறைவனாம் த்ரிபுராந்தகனை வணங்கி, மும்மலங்கள் அழியப்பெற்று அனைவரும் வாழ்வில் வளம் பெறுவோமாக.

★★★