சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகளாக வெளிவந்து ஆறுகுழந்தைகளாக சரவணப்பொய்கையில் தவழ்ந்து, உமாதேவியார் எடுத்தணைக்க ஆறுமுகப் பரமன் வடிவம் பெற்றான். அவன் அக்னி சொரூபன்.

முருகப் பெருமானிடம் மூன்று சக்திகளாக உள்ளன.

  1. இச்சா சக்தி - வள்ளி (விழைவாற்றல்) - இகத்தை அளிப்பவள்.
  2. கிரியா சக்தி - தெய்வானை (செயலாற்றல்) பரத்தை கொடுப்பவள்.
  3. ஞானசக்தி - வேல் (அறிவாற்றல்) வீடுபேறளித்தல்.

வள்ளி : முருகபிரானின் வலப் பக்கத்தில் வீற்றிருப்பவள். கையில் தாமரை மலர் ஏந்தியிருப்பாள். (கவர்ச்சிகரமான) வாழைப்பூவின் நிறத்தையுடையவள். ('கவர் பூ வடிவாள்' என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடுவார்)

தெய்வானை : முருகபிரானின் இடது பாகத்தில் வீற்றிருப்பவள் செந்நிறம் வாய்ந்தவர். கையில் கருங்குவளை (நீலோத்பல) மலரை ஏந்தியிருப்பாள்.

சிவபெருமானின் ஆனந்த நடனத்தை ஒருநாள் லயித்து இன்புற்ற திருமாலின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வெளிவந்தது. திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர் துளிகள் இரு பெண்களாக வடிவு கொண்டனர். விஷ்ணுவும், லஷ்மியும் அவர்களைதம் குமாரத்திகளாக ஏற்று அமுதவல்லி, சுந்தரவல்லி என்று பெயர் சூட்டி வளர்த்துவந்தனர்.

தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி திருமுருகனை நோக்கித் தவம் செய்தனர் அப்பெண்கள். அவர்களது தவத்தால் மகிழ்ந்த முருகபிரான் அவர்கள் முன்னே தோன்றி ஆசியளித்து அவர்களது விருப்பப்படி அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக வரமளித்தார். அமுதவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை மண்ணுலகிலும் பிறக்கும்படி கூறினார். அதன்படி அமுதவல்லி தேவஉலகில் நீலோற்பல மலர்ப் பொய்கையில் குழந்தையாய்த் தோன்றினாள். தேவேந்திரனும் இந்திராணியும் அக்குழந்தையைக் கண்டெடுத்து மகளாக வளர்த்தனர். தேவலோகத்து ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப் பெற்றதால் தெய்வயானை, தேவயானை எனும் பெயர் பெற்றாள். தேவ + ஆன் + ஐ = தேவயானை. தெய்வ நலன் பொருத்திய சிறப்புகளைப் பெற்ற பெண் என்று பொருள். தேவர் குலத்தில் சிறந்த பெண்மணியாகத் தோன்றியவள் தெய்வானை.

தேவர்களுக்கு சூர பத்மன் தொல்லையளித்து தேவ உலகை அவர்களிடமிருந்து பறித்தான். தேவர்கள் வேண்டுகோளின்படி சிவபெருமான் தமது நெற்றிக்கண்ணால் முருகனைத் தோற்றுவித்தார். கந்தவேள் தேவர்களின் சேனைக்குத் தலைவராகி சூரபத்மனோடு பெரும்போர் புரிந்தார். மாயையில் வல்ல சூரன் கடலின் நடுவே ஒரு மாமரமாக நிற்க. அவனைத் தமது கைவேலால் இருகூறாகப் பிளந்தார் முருகப்பெருமான். அவை மயிலும் சேவலும் ஆயின. மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக்கொண்ட முருகன் தேவர்களை சிறைவிடுத்தார். தேவேந்திரன் மிக மகிழ்ச்சியடைந்து தமது தேவேந்திரப் பட்டணத்தைத் திரும்ப அளித்த தேவசேனாபதியாகிய முருகப் பெருமானுக்குத் தமது மகள் தெய்வயானை பிராட்டியாரைத் திருமணம் செய்து கொடுத்தார்.

இடி, குலிசாயுதம், ஐராவதம் (வெள்ளையானை) பொன்னுலகம் இவைகளுக்குச் சொந்தக் காரியானவள் தேவசேனை. இவள் 'முத்திமாது' - முத்தியைத் தருகின்ற அம்மை. இவளுக்கு 'கேவலி' என்றும் பெயர். கேவலம் என்றால் கைவல்யத்தைத் தருபவள். அதாவது மேலான மோட்சத்தைத் தருபவள் என்று பெயர். முத்தியை அளிக்கவல்ல தெய்வயானைக்கு முத்துமாலையும் இச்சையை நிறைவேற்றும் வள்ளிக்கு கடப்ப மாலையும் அளிக்கிறான் என்று அருணகிரியார் போற்றுவார்.

கிரியா சக்தியின் வடிவமானவள் தெய்வானை. செயலாற்றும் திறன் மிக்கவர்கள் புகழ் விரும்பாது பெரிதும் அடக்கமாக இருத்தல் போல தெய்வானையின் சிறப்பு சான்றோர்களால் தனியாக நூல்களில் எடுத்துக் கூறப்பெறவில்லை. தெய்வத்தன்மை கொண்ட ஆனையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்டவள். வடமொழியில் தேவசேனா என்றழைப்பர். சேனா என்ற சொல்லுக்குக் காப்பது என்பது பொருள். தேவர் குலத்தைக் காக்க வந்தவள். ஆதலால் தேவசேனா என்று பெயர் பெற்றாள்.

வள்ளி : முருகப்பிரானின் ஆணைப்படி மண்ணுலகம் வந்த சுந்தரவல்லி ஒருமலைக் குகையில் தவம் மேற்கொண்டாள். அப்பகுதியை ஆண்ட நம்பிராஜன் என்ற குறவர் குலத்தலைவனுக்கு பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மேலிட தமது குலதெய்வமான முருகனிடம் வேண்டி வழிபட்டான். அதே மலைச்சாரலில் திருமால் யோகத்தில் எழுந்தருளியிருந்தார். அங்கு பெண்மான் வடிவில் வந்த மகாலஷ்மி அவர் முன்னே துள்ளிக் கொண்டிருந்தாள்.

திருமால் அம்மானை இச்சையுடன் நோக்க, அதனைத் தனது யோகத்தால் உணர்ந்த சுந்தரவல்லி திருமாலின் கண் வழியாகப் புகுந்துமான் வயிற்றிலுள்ள கருவை அடைந்தாள். மான்கருவுற்று குட்டியாக பெண் குழந்தையை ஈன்றது. தான் பெற்ற குட்டி மான் வடிவில் இல்லாமல் மனிதவடிவில் இருப்பதைக் கண்ட அப்பெண் மான் அஞ்சி அக்குழந்தையை வள்ளிக்கிழங்கை அகழ்ந்த குழியில் விட்டது. அதே சமயம் யோகநிலைவிட்டு திருமால் அங்குவர, மான்வடிவில் இருந்த மகாலஷ்மி, வடிவம் நீங்கி ஈன்ற குழந்தையைத் தழுவி மகிழ்ந்து இருவரும் வாழ்த்தினர்.

வள்ளிக் கிழங்கை அகழ்ந்த குழியில் அவர்கள் விட்டுச் சென்ற அப்பெண் குழந்தையின் அழுகை ஒலிகேட்டு அங்கு வந்த நம்பிரானும் அவனது புதல்வர்களும் மிகவும் மகிழ்ந்தனர். முருகனிடம் தாம் வேண்டியவாறே தமக்கு அவர் அளித்த அப்பெண்குழந்தையை எடுத்துக் கொண்டு தமது இல்லத்திற்குச் சென்றனர். நம்பிராஜன், அவன் மனைவி இருவரும் அக்குழந்தைக்கு 'வள்ளி' என்று பெயர் சூட்டி அன்புடன் வளர்த்தனர். வேடர்கள் குல வழக்கப்படி அவளைத் தினப்புனம் காக்க தோழியரோடு அனுப்பிவைத்தனர். வள்ளியும் தோழியருடன் திணைப்புனத்திற்குச் சென்று அங்கு தினைக் கதிர்களைக் கொத்தித் தின்ன வரும் கிளி, குருவி, மைனா முதலிய பறவைகளைக் கவண் கல் எறிந்து துரத்தி ஆடிப்பாடி மகிழ்ந்திருந்திருந்தனர். அதே சமயம் அவள் முருகனைத் தம் மனத்திற்குள் எண்ணித்தவம் இருந்தாள்.

சூரனை வென்று தெய்வயானையம்மையை மணந்தபின் திருத்தணிகை மலைக்கு வந்து யோகத்திலிருந்தார் குமரவேல். நாரதர் அவரிடம் வந்து தணிகைக்கு அருகிலுள்ள வள்ளி மலையில் வாழ்ந்து வரும் தெய்வீக மகளான வள்ளியின் அழகு, அருமை, பெருமைகளை விவரித்தார். திருமுருகன் அவளுக்கு அருள்புரிய திருவுளங்கொண்டு வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு தினைப்புனத்தில் வேடனாக மாறியும், வேங்கை மரமாகவும், விருத்தனாகவும் வேடமிட்டு லீலை பல செய்து, அவளது அன்பை யாசித்து, அவளை மணம்புரிய விரும்பி காதல் மொழிகளைப் பேசினார். அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கழைத்தார். அவர் ஆபத்சகாயனாக யானை வடிவில் அங்கு வந்து வள்ளியைத் துரத்த அதைக்கண்டு அஞ்சி வயோதிகனாக வந்த முருகனை அணைத்துக் கொண்டாள் வள்ளி.

முருகப்பெருமான் ஞானவேல் ஏந்தி மயில்மேல் ஆறுமுகப் பெருமானாகக் காட்சியளித்து ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி - முருகன் திருமணம் சிறப்பாக நடைபெற்றபின், வள்ளியை அழைத்துக் கொண்டு ஞானமலையில் சிறுதுகாலம் தங்கி, திருத்தணியை அடைந்தான் திருமுருகன். தெய்வயானையிடம் வள்ளியை அறிமுகம் செய்து வைத்தான். அவளும் தனக்கு ஒரு தோழி கிடைத்தாள் என மிகவும் மகிழ்ந்தாள்.

தமிழில் வள்ளி என்றும் வடமொழியில் வல்லி என்றும் அழைப்பர். வள்ளல் தன்மை உடையன் வள்ளல். அவனது மனைவி வள்ளி. அவளும் அடியார்களுக்கு அருளை வாரி வழங்குபவள். வள்ளம் என்பதற்கு நீர் (தண்ணீர்) என்றும் பெயர். வள்ளத்துள் வந்த தேவியாதலின் அவள் வள்ளி எனப்பட்டாள். சிவபெருமான் செந்தீயாகவும், அவரது தேவியான பார்வதி தண்ணீராகவும் இருப்பதுபோல முருகன் செந்தழற் பிழம்பு (அக்னி ஞாதன்). அவனது தேவியான வள்ளி தண்ணீராக விளங்குகின்றாள் என்பர்.

போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் இறைவன் தன்மை ஆதலின், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்பொருட்டு முருகன் தன்னுடைய ஒரு திருமுகத்தால் வள்ளியம்மையுடன் பேசி மகிழ்ந்து அமர்ந்திருக்கின்றான். இது உலகுயிர்கள் நன்மை அடைவதன் பொருட்டாகும் என்று நக்கீரர் குறிப்பிடுகின்றார்.

தினைப்புனம் என்பது உலகம். தினைக் கொல்லை ஞானப்பயிர் விளையும் இடம்; வள்ளி என்பவள் பரிபக்குவம் அடைந்த நல்லுயிர். குறவர் குலமகளாகிய வள்ளியிடம் முருகன் தானே வலிந்து சென்று நயந்து மணந்து கொண்டது இறைவனின் எளிமைத் தன்மையைக் காட்டுவதாகும். இது அடியார்களை முருகப் பெருமான் 'வா! வா!' என்று வலிந்து ஆட்கொள்ளும் பேரருள் திறத்தினைப் புலப்படுத்துகிறது.

வேட மங்கையாகிய வள்ளி பக்குவப்பட்ட ஆன்மாவின் வடிவம். யான், எனது என்ற செருக்கற்று இறைவன் திருவடிகளில் சரண் அடைந்தது வள்ளியின் தன்மையாகும். இதனையே 'வள்ளி சன்மார்க்கம்' என்னும் வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்று போற்றுகிறார் அருணகிரிநாத சுவாமிகள், பிரதிபலனை எதிர்பாராமல் பணி செய்கின்ற தன்மையை மகிழ்ந்த முருகன் அருள்புரிவான் என்ற வள்ளி தத்துவத்தை நினைப்பூட்டுவதாக நாம் உணரமுடிகிறது. இதுவே வள்ளி கல்யாண தத்துவமாகும். வள்ளியம்மையை மணந்து முருகன் பெற்ற ஐந்து சீதனங்களாக ஊதுகொம்பு, சேவற்கொடி, வேலாயுதம், மயில்வாகனம், மலை ஆட்சி என்று கந்தரந்தாதி எட்டாம் பாடலில் நயம்பட அருணகிரியார் பாடுகிறார்.

இனி தேவயானை, வள்ளி பற்றிய சில அரிய செய்திகள் தமிழகத் திருக்கோயில்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.

தெய்வானை :முருகன் தெய்வயானையுடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் திருப்பரங்குன்றம். இங்கு தெய்வயானைக்கு மட்டுமே உலாத்திருமேனி (உற்சவ விக்ரஹம்) உண்டு. தெய்வானைத் திருக்கல்யாணம் பங்குனி உத்திரவிழாவில் பதினோராம் நாள் நடைபெறுகின்றது. முருகனையும் தெய்வயானையையும் பீடத்தில் அமர்த்தி பட்டாபிஷேக விழா நடைபெறுவதை இத்தலத்தில் மட்டுமே காணக்கூடிய நிகழ்ச்சியாகும். இதே போல் கார்த்திகை மாதம் நடைபெறும் விழாவில் எட்டாம் நாள் பட்டாபிஷேக விழா நடைபெறுகின்றது.

திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வயானைக் கல்யாணக் காட்சி கண்டு மகிழலாம். இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார். இங்கு மாசி மாதத்தில் தெய்வயானைப் பிராட்டியாருக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் ஐந்து நாட்கள் நடத்தப்படுகின்றது.

முருகனை மணக்க திருச்செந்தூரில் தெய்வயானை வழிபட்ட சக்தி லிங்கமே பின்னாளில் ஜகந்நாதர் என்று பெயர் பெற்றது. பின்னாளில் சூரனை வெல்ல முருகன் இங்கு வந்த போது இந்த லிங்கத்தை பூசித்தார். திருச்செந்தூரில் ஐப்பசி மாத கந்தசஷ்டி விழாவில் குமரவிடங்கர் (மாப்பிள்ளை சுவாமி) தனித் தெய்வானையம்மையுடன் எழுந்தருள தெய்வீகத் திருமணம் நடைபெறுகின்றது.

பழநி திருத்தலத்தில் ஸ்கந்தசஷ்டிக்கு மறுநாள் காலையில் மலைக் கோயிலில் ஆறுமுக சுவாமிக்கும் தெய்வானை அம்மைக்கும் திருமண விழா நடைபெறுகிறது. மாலையில் ஊரில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமியுடன் தெய்வானைக் கல்யாணம் ஒரே நாளில் இரண்டு முறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருவிடைக்கழி (திருக்கடவூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள) சுப்ரமணியர் ஆலயத்தில் தெய்வானை பிராட்டியாருக்கு மட்டும் தனிச் சன்னிதி உள்ளது. அதைப் போல கந்தன் குடி (திருநள்ளாறு செல்லும் வழியில்) முருகன் கோவிலிலும் தெய்வானைக்கு முக மண்டபம், மகா மண்டபம், கருவறை ஆகிய அமைப்புகள் உள்ள தனிச் சன்னிதி காணமுடிகிறது. திருவிடைக்கழி முருகன் கோயிலில் சென்னை சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை செய்துள்ள “குஞ்சரி ரஞ்சித குமரன்” (தேவசேனையை மகிழ்விக்கும் பெருமான்) பஞ்சலோக விக்ரஹம் உலகில் வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவம்.

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ள திருப்போரூரில் தெய்வயானை அம்மையாருக்கு மட்டுமே தனிச் சன்னிதி உண்டு. இங்கு தெய்வானை மூலவர் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் வலக்கையில் நீலோற்பல மலரும் இடது கையில் தாமரை மலரும் ஏந்தியிருக்க வலது முன் கரம் அபய முத்திரையில் இடது கரம் இடுப்பிலும் அமைந்த கோலம். இதேபோல நான்கு கரங்கள் கொண்ட தெய்வயானை வடிவத்தை சென்னை, குயப்பேட்டை கந்தசாமிக் கோயில், கந்தகோட்டம் ஆகிய கோயில்களிலும் காணலாம். திருப்போரூரில் ஸ்கந்த சஷ்டி விழாவில் சஷ்டிக்கு மறுநாள் தெய்வானைத் திருமணம் நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் மயூர வாகன காட்சி விழாவில் தெய்வானை தங்கமயிலில் பவனிவருவாள்.

திருத்தணிகையில் சித்திரை மாத விழாவில் தெய்வானைத் திருமணம் நடைபெறுகின்றது.

வள்ளி : திருச்செந்தூரில் பங்குனி உத்திர விழாவில் குமார விடங்கரை (உற்சவர்) தனிவள்ளியம்மையுடன் எழுந்தருளச் செய்து வள்ளித் திருமணம் நடத்துவர். திருச்செந்தூரில் வள்ளியம்மையே பள்ளியறை நாச்சியராக இருந்து முருகனுடன் பள்ளியறை சேவை காண்கிறாள்.

பழநிக் கோயிலில் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாட்களிலும் மலைக் கோயிலில் வள்ளித் திருமணம் நடைபெறுகின்றது. அதே போல பெரிய நாயகி அம்மன் கோயிலிலும் மூன்று முறை நிகழ்த்துகிறார்கள். பழநி மலைக் கோவிலிலும் பள்ளியறையில் வள்ளி மட்டுமே முருகனுடன் ஏந்தருளுகிறாள். வள்ளியம்மை போக சக்தியாகவும், இச்சா சக்தியாகவும் இருக்கிறாள்.

சுவாமிமலையில் அருகில் உள்ள திருவலஞ்சுழி சிவாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெறும் விழாவில் தினை பயிரிடப்பெற்று அதன் நடுவில் வள்ளியை ஆயல் ஓட்டும் வள்ளியாக அலங்காரம் செய்திருப்பர். எதிரில் முருகன் வேங்கை மரமாகவும், வேடனாகவும், விருத்தனாகவும் அடுத்தடுத்து காட்சியளிப்பார். விடியற்காலையில் அருகிலுள்ள அரிசில் ஆற்றில் வள்ளியை யானை விரட்டுவதும் அவள் வயோதிக முருகனை மணக்க சம்மதிப்பதும் அற்புதமான காட்சிகளாகும். சுவாமிமலையில் வேடரூபவடிவில் முருகனும் கையில் கவண் ஏந்திய வள்ளியும் உற்சவ மூர்த்திகளாக உள்ளனர். வள்ளிக்கு முருகன் ஆறுமுகனாகக் காட்சியளித்ததைக் கொண்டு சுவாமிமலையில் பங்குனி உத்திரத்தன்று ஆறுமுகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடைபெறுகின்றது. இத்தலத்தில் மட்டும் ஆறுமுகனுடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தணிகையிலும் திருப்போருரிலும் மாசி மாதவிழாவில் வள்ளித் திருமணம் நடத்தப்படுகிறது. திருப்போரூர் கோயிலில் கொலு மண்டபத்தையொட்டி அமைந்துள்ள தனிச்சன்னிதியில் வள்ளி நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். இவ்வமைப்பு வேறு எங்கும் இல்லை வள்ளிமலை, வள்ளியூர், திருச்செந்தூர், பழனி முதலிய தலங்களில் வள்ளிப்பிராட்டிக்கு தனிச் சிற்றாலயங்கள் கோயிலுக்கு வெளியே உள்ளன. வள்ளி மலையில் கையில் கவண் கொண்டவளான வள்ளியின் திருவுருவம் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

கோவைக்கருகில் உள்ள குருந்தமலையில் வள்ளிமலை என்ற சிறு குன்றில் வள்ளி குகையும், வள்ளி வடிவமும் உள்ளன. நாகர்கோயில் அருகில் உள்ள வேளிமலை (குமாரக் கோயில்) சிவன் மலை (காங்கேயம் அருகில்) கேரளாவில் திருவஞ்சைக்களம் அருகில் உள்ள எளந்துருத்தி ஆகிய கோயில்களில் மூலஸ்தானத்தில் முருகனும் வள்ளியும் மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

சிறுவாபுரியில் (சென்னைக் கருகில்) உள்ள முருகன் கோயிலில் வள்ளியும் முருகனும் மணவாளக் கோலத்தில் “வள்ளி கல்யாண சுந்தரராக” கரம் பற்றிய நிலையில் பஞ்சலோக வடிவில் சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை செய்துள்ளது வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவமாகும். இதே போல சோளிங்கர் அருகில் உள்ள ஞானமலையில் “குறமகள் தழுவிய குமரன்” - உலாத் திருமேனியும் மிகமிக அற்புத அமைப்பாகும். திருப்போரூர் கந்தசாமிக் கோயிலில் வள்ளித் திருமணக் காட்சி தூணில் புடைப்புச் சிற்பமாக உள்ளது.

வள்ளி, தேவயானை - பொதுவான செய்திகள்

திருச்செந்தூரில் உள்ள முருகனின் உற்சவ மூர்த்திகளில் ஒன்றான குமாரவிடங்கன் வில்லேந்திய வேலர் வடிவமாகும். இவரை மாப்பிள்ளை சுவாமி என அழைப்பர். இத்திருக்கோயிலில் பங்குனி முதல் புரட்டாசி வரை நடைபெறும் திருவிழாக்களில் குமரவிடங்கன் பின்னால் தனிவள்ளி எழுந்தருளுவார். ஐப்பசி முதல் மாசி வரை நடைபெறும் திருவிழாக்களில் தனி தெய்வயானையம்மை குமரவிடங்கனுடன் எழுந்தருளுவார். இத்தகைய நடைமுறை திருச்செந்தூரில் மட்டுமே காணமுடியும். திருச்செந்தூரில் நடைபெறும் திருவிழாவில் அன்னபட்சி வாகனத்தில் வள்ளியும், தெய்வானையம்மை மயில் வாகனத்திலும், பவனி வருவர். முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளுவார்.

காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் நாகசுப்ரமண்யர் உற்சவ வடிவில் முருகன் திருமுடி மீது ஐந்தலைப்பாம்பு படம் விரித்தாடுவது போல் அமைந்திருக்கும். இவருடன் விளங்கும் வள்ளி, தெய்வயானை திருமுடிகளின் மீதும் முத்தலைப்பாம்பு படம் எடுத்து குடைபிடிப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களை நாகவள்ளி, நாகதேவ சேனை என அழைப்பர்.

குன்றக்குடி, திருச்சி அருகில் உள்ள திண்ணியம் ஆகிய தலங்களில் மூலஸ்தானத்தில் ஆறுமுகப் பெருமான் மயில் மீது வீற்றிருக்க வள்ளி, தெய்வானை இருவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கக் காணலாம். திருமயம் தலத்தில் தனிச்சன்னதியிலும் இவ்வமைப்பு உள்ளது.

திருமயிலை கபாலீச்சரம் ஆலயத்தில் சிங்கார வேலர் (ஆறுமுகர்) மயில் மீது அமர்ந்திருப்பார். ஆனால் வள்ளி, தெய்வானை இருவரும் தனித்தனி யானை வாகனத்தில் அமர்ந்துள்ள கோலத்தை வேறு எந்தத் தலத்திலும் காணஇயலாது.

கர்நாடக மாநலத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா, கட்டே சுப்ரமண்யா ஆகிய தலங்களில் நாகவடிவில் விளங்கும் முருகனை சுப்புராயன் என்றழைப்பர். அவரோடு காட்சியளிக்கும் வள்ளி / தெய்வானையை சுப்புலட்சுமி என்றழைப்பர்.

இலங்கையில் நல்லூர் (யாழ்ப்பாணம்) கந்தசாமிக் கோயில் தேர்த்திருவிழாவை சகோபுரக் காட்சி என்பர். அதாவது ராஜகோபுரத்தை ஒத்த வடிவுடையது. சகோபுரம் ஓலையைக் கொண்டு கண்ணைக் கவரும் வடிவில் நேர்த்தியாக வடிவமைத்திருப்பர். இந்த சகோபுரக் காட்சியில் வள்ளி, தேவயானை, முருகன் மூவரும் தனித்தனியே மூன்று ரிஷப வாகனங்களில் வீதி உலாவருவது குறிப்பிடத்தக்கது.

தெய்வானை அம்மையையும் வள்ளிப் பிராட்டியையும் திருப்புகழ் முதலான பக்தி இலக்கியங்களில் அழகான சொற்களால், குறிப்பிடுவது படித்து இன்புறத் தக்கது.

தெய்வானை வள்ளி
தேவர் குலமாது வேடர் குலமாது
வேழ மங்கை வேடமங்கை
வேழ மயில் வேடமயில்
கஜவல்லி வனவல்லி
ஞான குஞ்சரி ஞானவள்ளி
இபமங்கை குறமங்கை
வானமடந்தை கானமடந்தை
தேவக்குயில் கானக்குயில்
தேவப்பூ கானப்பூ

பெண்ணின் நல்லாளான குறமாது வள்ளியும் நற்குணம் நிறைந்த தேவப் பெண்ணாகிய தேவசேனையும் இருபுறமும் பொருந்த விளக்கமுடன் குமரேசன் காட்சியளிக்கின்றான்.

கோதை குறமாது குணதேவமடமாது இரு
பாலும் உற வீறிவரு குமரேசா (ஆரவித... திருப்புகழ்)

★★★

இந்த உலகத்தில் வாழக்கூடிய ஜீவர்களிலே இறைவனை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதர்களை பல்வேறு விதமான முயற்சிகளின் மூலமாக ஆட்படுத்துவதற்கு தினம் தினம் இறைவன் முயன்று கொண்டுதான் இருக்கிறான்.

பரிபக்குவப்பட வேண்டும் என்று நினைக்கின்ற விளைவுடைய ஆன்மாக்களும் நாள்தோறும் அதற்கான முயற்சியை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆக ஒரு இரு வழிப் பாதையைப் போல் ஒரு புறத்திலே இறைவன் ஆத்மாக்களை ஆட்கொள்வதற்கும் நாளும் நாளும் தன்னுடைய அருளிச் செயல்களால் ஆத்மாக்களை ஆட்கொள்கின்ற செயலிலே இறைவன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் பரிப்பக்குவப்பட வேண்டும் என்று ஆத்மாக்கள் தொடர்ந்து இறைவனுடைய திருவடியைப் பற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று முயற்சி செய்கிறார்கள்.

இந்த முயற்சியை மெல்ல மெல்ல செய்து முன்னேறி வெற்றி பெற்று இறைவனை அனுபவித்த பெரு மக்களின் பட்டியல் ஒரு பக்கம் இருக்கிறது.

இன்னொரு பக்கத்திலே இந்த பரிபக்குவப்பட வேண்டும் என்ற விளைவை மற்றும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கான தொடர் முயற்சியைச் செய்யாமல் இருப்பவர்களைக் கூட பிரபஞ்ச சேற்றில் இருந்து தூக்கி எடுத்து அருள் பாலிக்கின்றார் இறைவன்.

ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் எப்போதெல்லாம் பிரபஞ்ச சேர்க்கையில் மனிதன் உழலுகின்றானோ அப்பொழுது அந்த சேற்றைப் பற்றிய கவலையே இல்லாமல் அவனைத் தூக்கி எடுத்து தன் ஜடாமுடியில் வைத்திருக்கின்ற புனித கங்கையில் நீராட்டி அவனை தனியனாக்குகின்றான் இறைவன். இந்த இரண்டாவது அனுபவமானது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அருணகிரிநாதர் போன்ற ஆத்மாக்களுக்கு அப்படிப்பட்ட அனுபவம் கிடைத்திருக்கின்றது.

— இளம்பிறை மணிமாறன்