முருகா சரணம்! குருநாதர் அருணகிரிநாதப் பெருமானின் திருவடிகளே சரணம் சரணம்! எம்பெருமானின் கருணை முழுவதும் ஒரு சேரப்பெற்ற, அருளாளர்களில் தலையாயவரான, கருணைக்கு மற்றும் வாக்கிற்கு அருணகிரி என்று புவனம் முழுதும் போற்றிக் கொண்டாடப்பெறும், நம் குருநாதரான அருணகிரிநாத சுவாமிகளின் மணிமண்டபத் திருக்குடமுழுக்கு விழாவின் சிறப்பு மலரில் இந்தச் சிறியேனின் இந்தக் கட்டுரையும் இடம் பெறுவது, நான் நித்தமும் வணங்கும், கருணாசலமூர்த்தி, கருணாசாகரம், பழநியில் உறையும் ஞான தண்டாயுதபாணிப் பெருமானின் பெருங்கருணை மட்டுமே! எல்லாம் வல்ல பழனிப் பெருமானின் பெருங்கருணையாலும் பேரருளாலும் வெளிவருகின்ற
இந்தக் கட்டுரையை நம் குருநாதரின் பொன்னார் கமலப் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இதை நம் குருநாதர் இன்னும் மெருகு ஏற்றி, அதை எல்லாம் வல்ல எம்பெருமான் பழனிப் பெருமானின் திருவடிகளில் சமர்பிப்பாராக
அருணகிரிப் பெருமானின் திருப்புகழில் வள்ளித் தாயாருக்குப் பல்வேறு திருப்பெயர்கள் வழங்கப் பெறுகின்றன. அந்தப் பெயர்களில் சிலவற்றை மட்டும் எடுத்து ஆராய்ந்து அதை அடியார் பெருமக்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. அருணகிரிப் பெருமானின் திருப்புகழில் பல தெய்வங்களுக்கு வழங்கப் பெறும் பல்வேறு திருப்பெயர்கள் எல்லாவற்றையும் எடுத்து ஒவ்வொன்றாக ஆராய்ந்து, கட்டுரைகளாக எழுத வேண்டும் என்பது எம்பெருமானின் கட்டளை. இந்த நீண்டப் பட்டியலில் ஏன் வள்ளித் தாயார் முதன் முதலில், அதுவும் இந்தக் கட்டுரைக்கு ஏன் இந்தத் தலைப்பு என்றால், இதுவும் பழனிப் பெருமானின் எண்ணத்தில் உதித்த வண்ணமே! என் சிற்றறிவில் எட்டிய வரை, வள்ளித் தாயார், அடியார்களான நம் சொரூபம் அல்லவா? மேலும், தீராத, உண்மையான, அசராத, நிலைத்த பக்தி எம் பெருமான் மீது கொண்டால் அவனே நம்மைத் தேடி வருவான், சிவ குமர அன்பு ஈண்டில் பெயரான் என்பதற்கு வள்ளிப் பிராட்டியார் தான் நமக்கு முதல் சான்று. இப்படி வள்ளித் தாயாரின் சிறப்புகள் எழுதிக் குவித்துக் கொண்டே செல்லலாம். இத்துணைக் கணக்கில் அடங்காப் பெருமை கொண்ட வள்ளித் தாயாரை முதலில் எடுத்துக் கொள்ளச் சொல்லி எம் பெருமான் இட்ட ஆணை தான் என்னே பொருத்தம் !
திருப்புகழ் மகா மந்திரத்தில், வள்ளித் தாயாருக்கு மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மிகப் புதுமையான (ஆங்கிலத்தில் innovative, unconventional என்று குறிப்பிடும்), பிரத்யேகமாகக் காணப்பெறும் திருப்பெயர்கள் வழங்கப் பெறுகின்றன. அந்த நீண்ட வரிசையில் சில பெயர்களை மட்டும் நாம் இந்தக் கட்டுரைக்கு கருப்பொருளாக எடுத்துக் கொண்டு ஆராயலாம்.
1. ஆயாள்:
ஆயாள் என்ற பெயர்ச்சொல் தாய் அல்லது தாதி என்ற பொருளை உணர்த்தும். ஆயாள் என்ற சொல் தாய் என்றும் பாட்டி அல்லது அம்மாவின் அம்மா என்றும் பொருள்படும். பல்வேறு இடங்களில் வள்ளிப் பிராட்டியாரை அருணகிரிப் பெருமான் தாய் என்று உருகுகிறார். குருநாதர் வள்ளிப் பிராட்டியாரை, 'பாலோ தேனோ பாகோ என்று தொடங்கும் திருவாரூர்த் திருப்புகழில் ஆயாள் என்ற திருப்பெயரிட்டு வழங்கித் தனது தாய் என்று உரிமை கொண்டாடுகிறார். இதோ அந்த அடிகள்:
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப் ...... புகுவோனே (பாலோ தேனோ பாகோ (திருவாரூர்)
- இன்பரசச் சத்தி:
- அடுத்தது, வள்ளிப் பிராட்டியாரை இச்சா சத்தி மயமானவள் என்று கொண்டாட, 'இன்பரசச் சத்தி' என்றுத்
- திருப்பெயரிட்டு வழங்குகிறார். கட்டி முண்டக என்ற சிதம்பரத் திருப்புகழில்,
- ‘செட்டி யென்றுவன மேவி யின்பரச
- சத்தி யின்செயலி னாளை யன்புருக
- தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே' என்கிறார்.
- உழை தரு வனிதை:
- உழை தரு வனிதை என்ற மிக அற்புதமான சொற்றொடரால் வள்ளித் தாயாரை விளிக்கிறார் நம் குருநாதர்.
- உழை என்றால் மான். மான் வயிற்றில் உதித்த மங்கை என்பதற்கு உழை தரு வனிதை என்று அணி சேர்க்கிறார்
- குருநாதர். உழை என்ற இந்த அற்புதச் சொல்லுக்கு சில மேற்கோள்கள்-உழைதரு நோக்கியர் கொங்கைப்
- பலாப்பழத் தீயினொப்பாய் என்று திருவாசக நீத்தல் விண்ணப்பப் பாடல் (பாடல் எண் 46) மற்றும் விடை உடையான்
- வேங்கை அதன் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த - தேவா-அப்:3055/2. நம்
- குருநாதர் அருணகிரிப் பெருந்தகை தகர நறுமலர் எனத் துவங்கும் அதிசயம், அநேகம் உற்ற அற்புதமான
- பழனியம்பதித் திருப்புகழில்,
- ‘பகர புகார்முக மதகரி யுழைதரு
- வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
- பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே
- பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
- நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
- பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே’
- என்று உழை தரு வனிதை வெருவ முன் வர அருள் புரிந்துக என்று எம் பழனிப் பெருமானிடம் உருகிறார்.
- எயினச்சி/எயின் மாது:
- வள்ளி மாதைக் குறிக்க நம் குருநாதர் திருப்புகழில் கையாண்டிருக்கும் மற்றோர் அற்புதச் சொல் இது. எயின்
- என்றால் வேடச்சாதி. எயினிடு கடனிது(சிலப். 12, பாடல், 18, சூஅணிமுடி.’). கச்சியப்பர் கந்த புராணத்தில்
- வள்ளியம்மை திருமணப் படலத்தில் (தக்ஷ காண்டம்) எயினர் போற்றும் வள்ளியை என்று குறிப்பிடுகிறார்.
- வெள்ளியங் கிரியி னோர்சார் விளங்கிய கந்த வெற்பின்
- நள்ளுறு நகரந் தன்னில் நங்கையோ டினிது மேவும்
- அள்ளிலை வேற்கை நம்பி அம்புவி எயினர் போற்றும்
- வள்ளியை வதுவை செய்த மரபினை வழாது சொல்வாம்.
- (வள்ளியம்மை திருமணப் படலம், தக்ஷ காண்டம், கந்தபுராணம்)
- மேலும், எயினச்சி வள்ளியை மணந்தாய் என்று தணிகை நாயகன் மாலை என்ற நூலில் வருகின்றது.
- இதோ அந்த முழுப் பாடல்: கணக்கிலை குலமே கணக்கிலை பிறப்பே கணக்கெனக் கன்புதான் என்னுங் கணக்கினைக் காட்டக் குலம்பிறப் புயர்ந்த கன்னிகை தெய்வநா யகியோ டிணக்கம தாகக் குறவர்கூட் டத்தாள் எயினச்சி வள்ளியை மணந்தாய் குணக்கொடு நான்கு திசையடி யார்கள் கும்பிடுந் தணிகை நாயகனே
நம் அருணகிரிப் பெருமான் கரம் கமலம் மின் என்று துவங்கும் இலஞ்சித் தலத்துத் திருப்புகழ் பாடலில், எயின் மாதோடு அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க என்று வள்ளி நாயகிக்கு இத்திருப்பெயரால் சந்தக் கவி புனைகிறார். இதோ இந்தத் திருப்புகழ் அடிகள்:
கரங்க மலமின தரம்ப வளம்வளை
களம்ப கழிவிழி ...... மொழிபாகு
கரும்ப முதுமலை குரும்பை குருகுப
கரும்பி டியினடை ...... யெயின்மாதோ
டரங்க நககன தனங்கு தலையிசை
யலங்க நியமுற ...... மயில்மீதே
அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
யவந்த கனகல ...... வருவாயே
மேலும், பாரவித முத்த எனத் துவங்கும் கதிர்காமத்துத் திருப்புகழில், வள்ளி அம்மையை எயினச்சி (வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு) என்கிறார். இந்தத் திருப்புகழில் இருந்து எயினச்சி வாழும் திருவரிகள்:
கதிர்காம
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
மேகலையி டைக்கொத்தி ...... னிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களில் கப்பட்ட ...... பெருமாளே.
5. ஏனல் மங்கை:
ஏனல் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு- கதிர், தினைப்புனம், செந்தினை கருந்தினை, இவற்றுள் தினைப்புனம் என்ற சொல்லே வள்ளி நாயகிக்குப் பொருத்தமானது. ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் (புற. 28) என்று புறநானூறு கூறுகின்றது. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர சுவாமிகள், மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும் ... ஏனற் புனங்காத்து இனிதிருந்து... மேன்மைபெறத்... என்கிறார்.
நம் அருணகிரிநாத சுவாமிகள், தேனிருந்த இதழார் என்று துவங்கும் திருப்பந்தணை நல்லூர்த் திருப்புகழில், ஏனல் மங்கை, சுசி ஞான ரம்பை என்று என் தாய் வள்ளியின் அழகுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கிறார். இதோ இந்த வரிகள்:
ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென
தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற
மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ...... லங்குமார்பா
ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி
யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்
ஈறில் பந்தணைநலூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
6. ம்ருகக் கரும்பு:
சில விசேஷ சொற்றொடர்கள் எல்லாம் திருப்புகழ் மற்றும் நம் குருநாதருக்கே பாத்தியமானவை. இந்த சிறப்புச் சொற்களை வேறு எங்கும் காண இயலாது. எம் பெருமானின் கருணை முழுதும் ஒரு சேரப்பெற்ற நம் குருநாதரின் கவித் திறனுக்கே உதித்த பல்வேறு சொற்கள் திருப்புகழிலும், அவர் தம் நூல்களில் மட்டுமே நாம் காண இயலும். அப்படி ஒரு சொல் தான் இது. ம்ருகக் கரும்பு (மிருகக் கரும்பு) (மான் ஈன்ற கரும்பு) என்று நம் வள்ளிப் பிராட்டியாரை ஒரு விசேஷச் சொல் கொண்டு கொண்டாடுகிறார் அருணகிரிப்பெருமான். பாத்தி படு வள்ளிப் படு குழியில் வந்திடலால் வாய்த்த இவள் நாமம் வள்ளி எனக் கூறினரே என்று கச்சியப்ப சுவாமிகள் வள்ளிப் பிராட்டியின் பெயருக்கு விளக்கம் கொடுக்கிறார் கந்தபுராணத்தில்.
நாத் தளர்ந்து சோர்ந்து நடுக்கம் உற்றுப் பல் கழன்று
மூத்து நரை முதிர்ந்த மூதாளர் வந்து ஈண்டிப்
பாத்தி படு வள்ளிப் படு குழியில் வந்திடலால்
வாய்த்த இவள் நாமம் வள்ளி எனக் கூறினரே.
(10120, வள்ளியம்மை திருமணப் படலம், கந்தபுராணம்)
ம்ருகக் கரும்பு புணர் மார்பா என்கிறார் நம் முருகப் பெருமானை அருணகிரிப் பெருமான். விழியால் மருட்டி என்று துவங்கும் சுவாமிமலைத் திருப்புகழில் இந்தத் திருப்பெயர் எமது வள்ளி ஆயிக்கு. இதோ திருப்புகழ் வரிகள்:
புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
என்னே பாக்கியம்! இன்று இத்தனைத் திருப்புகழ்ப் பாக்களை தங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள? என்னே அற்புதமான வரிகள்? அதுவும் நம் சொரூபமான நமது ஆயி வள்ளிப் பிராட்டியாரின் பல்வேறு திருப்பெயர்கள் கொண்டத் திருப்புகழ் பாக்களை உங்கள் அனைவருடனும் பகிர! இது, இந்த அரிய பாக்கியம், பழனிப் பெருமான் அருளாலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
பழனியம்பதிப் பெருமான் திருவடிகளே சரணம்! இந்தக் கட்டுரையும் அவன் திருவடிக்கே சமர்ப்பணம்! முருகா சரணம்! குருநாதர் அருணகிரிநாதப் பெருமானின் திருவடிகளே சரணம் சரணம்
★★★
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குள்ளாக தெலுங்கு மொழி கீர்த்தனைகள் தமிழ்நாட்டில் பெருகி இசையை வளர்த்தன.வடமொழி கீர்த்தனைகளும் மிகுந்தன. முத்துசாமி தீட்சிதர், சாமா சாஸ்திரி, தியாகையர் போன்ற பெரியோர் எண்ணற்ற இனிய கீர்த்தனைகளை இக்காலத்தில் பிற மொழிகளில் இயற்றினர். இவை தமிழை வளர்க்கவில்லை ;ஆயினும், இசையை வளர்த்தன. இசையுடன் தமிழையும் வளர்க்க விரும்பி அன்பர்கள், இத்தகு கீர்த்தனைகளை தமிழிலும் இயற்றத் தொடங்கினார்கள். இக்காலத்தில் அருணகிரியாரின் திருப்புகழ் எழுச்சி பெற்றது.
— தமிழ்க்கடல் மணி பேராசிரியர். இரா. ராதாகிருஷ்ணன் திருச்சிராப்பள்ளி

