அருணகிரியார் கண்ட அத்வைதம்
வழக்கறிஞர் பா.பழனிராஜ், அறக்கட்டளை உறுப்பினர், திருவண்ணாமலை.
அயில் வேல் முருகன் மயில் மேல் வந்து ஆட்கொண்டதனால் அநுபூதி பெற்ற அருளாளர் அருணகிரிப்பெருமான். மெய்ப்பொருள் உணர்த்த வல்லவர் குரு என்பதால், அவரையே திருவாகக் (இறைவனாகக்) கருதுவது மரபு. ஆனால் அருணகிரியாருக்கு திருவே (முருகனே) குருவாய் இருந்து மந்திர உபதேசம் செய்து மகத்துவம் சேர்த்தார். அப்போது தனக்கு நேர்ந்த இறை அநுபவத்தை கந்தர் அநுபூதி என 51 அருமையான, கருத்தாழமிக்கத் தெய்வீகச் செய்யுள்களால் பதிவு செய்கிறார் அருளாளர்.
“சும்மா இரு” என்பதுவே கந்தன் கருணை கூர்ந்து அளித்த மந்திரம். சும்மா இருந்தலும் மௌனமே, சொல்லற இருத்தலும் மௌனமே. “சொல்லற” என்பது உபதேசம்
செய்தக் கருணைக் கடல் கந்தன் மௌனமாய் இருந்த நிலையைக் குறிக்கும். சொல்லிப் புரிய வைக்காமல் சொல்லாமலே அருணகிரியை சும்மாயிருக்க வைத்தார் இறைவன். பேச்சு, சைகை என எதுவுமின்றி எண்ணப் பரிவர்த்தனை மூலம் உபதேசம் நடந்தேறியது. பரமாத்மா மௌனமாயிருந்து ஜீவாத்மாவை மௌனமாயிருக்க உபதேசித்த ஆன்மீக நிகழ்வு.
மௌனகுரு மந்திரத்தை உபதேசிக்க அருளாளரும் ஐம்புலன்களும், மனமும் அடங்கி சமாதியில் ஆழ்ந்தார். சமாதி நிலையே உண்மையான மௌனம். அருளாளர் தன்னை மறந்தார், தான் வாழும் சுற்றுப்புறத்தை மறந்தார், அவருக்கு உலகமே காணாமல் போய்விட்டது. “பொருள் ஒன்றும் அறியாத” சமாதி நிலைக்கு உள்ளானார் அருணகிரி. இந்த அற்புத இறை நிலையை ‘அம்மா’ என சொல்லி வியக்கிறார்.
தன்னை ஆழ்நிலை மௌனத்தில் ஆழ்த்தியது யார் எனில் அவன் ஒரு திருடன் என்பார் அருணகிரிப் பெருமான். “செம்மான் மகளைத் திருடும் திருடன்” அவன். வள்ளிக் கொடிகளின் அருகில் மான் ஈன்ற மகள் வள்ளி என்பது புராணக் கதை. வள்ளியும் ஒரு குறியீடு என்பது கற்றறிந்த சிந்தனையாளர்களுக்குப் புரியும். கந்தனை மணம் புரிய தீராத காதலுடன் தவமிருந்த மங்கையவள். வள்ளியின் அன்பு அசைக்க முடியாத அளவிலானது என்பதை அவளுக்கு ஏற்படுத்தியப் பல சோதனைகளில் அறிந்த முருகப் பெருமான், அவளைத் தேடிச் சென்று இரவில் திருடி வருவதாகச் சொல்லும் புராணக் கதை ஓர் ஒப்பற்ற ஆன்மீக உண்மையை உணர்த்துகிறது. இறையோடு ஐக்கியமாகத் துடிக்கும் ஜீவாத்மாவிற்கு சோதனைகள் உண்டாக்கி, துடிப்பு நிஜமெனத் தெரிந்தபின் தானே தேடிப் போய் பரமாத்மா களவாடிய கதையது. கனமான மெய்ப் பொருள் தத்துவங்களைப் புரிய வைக்கவே எளிதான புராணக் கதைகள் புனையப்பட்டன.
“செம்மான் மகளைத் திருடும் திருடன்” என அந்தக் கதையை இந்த நேரத்தில் சொல்வது எப்படிப் பொருந்தும்? தன்னையும் அவ்வாறே புறவெளிகளை இருட்டாக்கி திருடனைப் போல் களவாடிய உள்ளங்கவர் கள்வன் தான் கந்தன் என்பதை உணர்த்த ஒப்பீடாக திருடன் கதையை இங்கு வைத்தது எத்தனைப் பொருத்தம் பாருங்கள். தன்னை ஆட்கொண்டு உய்வித்த பெருமைமிக்கப் பெருமான் என்றுமே “பிறவான், இறவான்.” பிறப்பும், இறப்பும் அவரவர் கர்மத்தின் விளைவாய் நேர்வன. கந்தனோ ஆதியும், அந்தமுமில்லா அருட்பெரும்ஜோதி. அவனுக்கு பிறப்புமில்லை இறப்புமில்லை. இப்போது அருட்செல்வர் அருணகிரிநாதரின் அற்புதச் செய்யுளைப் பார்ப்போம்.
“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாஇரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே”
(செய்யுள் 12)
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே” (செய்யுள் 12)
பொருள் ஒன்றும் அறிந்திடாத அருளாளர் பெருநிதியாய் பெற்ற அநுபூதி என்னவென்பதை அடுத்தத் செய்யுளில் வடித்து வைக்கிறார். அவர் கண்டது எதுவெனில் அதற்கு உருவமில்லை. அது அருவமுமில்லை; உள்ளதல்ல, இல்லாததுமில்லை; இருளில்லை, ஒளியுமில்லை; இப்படியாக “நின்ற அது” என்கிறார். “அது” என்பது விவரிக்க முடியாத மெய்பொருள் ; “அது” தூய உணர்வு. “அது” என தமிழிலும். “தத்” என வடமொழியிலும், “That” என ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிற மெய்ப் பொருள். முருகன், தனிவேல் முனிவன், குரு ஆகிய மூன்றும் ஒன்றான அதுவே மெய்ப்பொருள் எனும் தெளிவு இறையருளால் அவருக்கு சித்தித்தது. சராசரி மனிதனுக்கு இந்தப் புரிதலும், தெளிவும் வராது. இறையருள் இருந்தால் தான் முருகன் வேறல்ல, தனிவேல் தாங்கிய முனிவன் வேறல்ல, குரு வேறல்ல எல்லாம் ஒரே மெய்ப் பொருள்தான் என்ற உண்மை புரியும். அவன் அருள் இருந்தால்தான் அவன் தாள் வணங்க முடியும் என்றார் மாணிக்க வாசகப் பெருமான்.
"முருகன் தனிவேல் முனி நம்குருவென்று
அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே
(செய்யுள் 13)
இருளன்று ஒளியன்று என நின்றதுவே! (செய்யுள் 13)
'இது அல்ல', 'அது அல்ல' என்று 13- வது செய்யுளில் எதிர்மறையாய்ச் சொல்லி வந்த அருணகிரிநாதர், இறுதிச் செய்யுளில் எல்லாம் உள்ளத்தில் உறையும் குகனே என்ற நேர் மறையில் சொல்லி அத்வைதக் கோட்பாட்டுடன் கந்தர் அநுபூதியை நிறைவு செய்கிறார்.
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
(செய்யுள் 51)
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” (செய்யுள் 51)
உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ளவராகவும், இல்லாதவராகவும், மலராகவும் அதன் நறுமணமாகவும், மாணிக்கமாகவும், அது வீசும் ஒளியாகவும், உடலாகவும், உயிராகவும், நற்கதியாகவும், அதை அடையும் விதியாகவும் (மார்க்கமாகவும்) மற்றும் குருவாகவும் வந்து எல்லார்க்கும் அருள்புரிவாய் குகனே என்று கந்தர் அநுபூதியை நிறைவு செய்யும் அற்புதம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
பிரம்மம் எல்லாவற்றிலும் இருக்கிறது; எல்லாமுமாக இருக்கிறது. குருவாய் வந்தவன் தன் இதயக் குகையில் உறையும் குகனே என்றும் தானும் பிரம்மமும் வேறல்ல - இரண்டல்ல ஒன்றே - என்னும் அத்வைதக் கோட்பாட்டை உறுதி செய்கிறார், அருளாளர் அருணகிரிநாதர்.
பொன்னாலான ஆபரணங்கள் சங்கிலி, கைவளை, காதணி எனப் பல வடிவங்களைப் பெற்றாலும் அனைத்தும் அடிப்படையில் பொன்னே
அனைத்தும் பிரம்மம் என்கிற அத்வைதக் கோட்பாட்டின்படி வடிவங்கள் பலவாயினும் எல்லாம் அடிப்படையில் பிரம்மமே
கந்தர் அநுபூதி என்றால் இறை அனுபவம் என்று பொருள். அருட்செல்வர் அருணகிரிநாதர் இறை அனுபவமாக வெளிப்படுத்தும் நெறி அத்வைதமே
★★★

