அருணகிரிநாத சுவாமிகள் பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றி, திருப்புழ் எனும் சந்தம் மிகுந்த பாடல்களை இயற்றி, ஒரு சிறந்த இறை வழிபாட்டு முறையை நமக்கு தந்தார். அவரது பாடல்கள் மிக அற்புதமாக இருந்தாலும் அவை மக்களைச் சென்று சேரவில்லை. திருப்புகழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஆவலில் இருந்தது ஒரு குடும்பம். அந்த குடும்பத்தின் தலைவருக்கு பெயர், முருகனுக்குரிய பெயர், அதுவே வடக்குப்பட்டைச் சேர்ந்த சுப்ரமணியன். 'சுருதி முடி மோனஞ்சொல் சிற்பரம ஞான சிவ சமயவடி வாய் வந்த' என்ற பாடலில் 'பழனிமலை மேனின்ற சுப்ரமண்யா, என்று அருணகிரிநாதர் பாடினர். சுப்பிரமணியர் குடும்பம், அது போல 108 திருப்புகழ்ப் பாடல்கள் தேர்ந்தெடுத்து அதன் புகழை உலகம் முழுதும் சென்று சேர பெரும் முயற்சி எடுத்தார்.
“உலகெங்கும் தேவாலயம் மேவிய பெருமாளே” என்று அருணகிரிநாதர் பாடின மாதிரி, பல நாடுகளுக்கும் ஒருவரை அனுப்பி திருப்புகழின் சிறப்பை எடுத்துரைக்கச் செய்தார். சுப்ரமண்யன் அவர்கள். துபாயில் ஆடிட்டர் மெய்யப்பன் போல, அமெரிக்கா ரிசமண்ட் விர்ஜினியா பகுதியில் பெரியகருப்பனைப் போல பல இடங்களுக்கு பக்தர்களை அனுப்பியிருக்கிறார். எங்கெல்லாம் தமிழர்கள் கூடி இருக்கிறார்களோ அங்கெல்லாம் திருப்புகழ் ஒலிக்கச் செய்தார். யாரெல்லாம் முருகப்பெருமானின் புகழ் பாடும் திருப்புகழை பாடுகிறார்களோ, கேட்கிறார்களோ அவர்கள் இல்லத்தில் வந்து அவர்கள் கூட இருந்து அருள்புரிவான் முருகன் என்று வலியுறுத்தி வந்தார்.
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முன்பு தேவாரம், திருவாசகம் எல்லாம் அதிகம் படித்தார்கள். இப்போது அவர்கள் திருப்புகழ் சிறப்பையும் உணர்ந்து திருப்புகழ் பாடல்களையும் பாடி வருகிறார்கள். சின்ன குழந்தைகள் அழகாக திருப்புகழ் பாடிவருகிறார்கள். அவர்களின் ஆற்றலைக் கண்டு அடியேன் மதி மயங்கி போனதுண்டு. அடியேனும் ஒருநாள் பழனி சென்று முருகப்பெருமான் முன் இருந்து பாடி இருக்கிறேன். அதன் பின்னணியை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
1960 வது வருடம்; நான் பி.காம் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு செய்தி என் காதில் விழுந்தது. 100 திருப்புகழ் ஒவ்வொன்றாக எவர் பாடுகிறார்களோ அவர்களுக்கு ஆயிரும் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று பழனி தேவஸ்தானம் ஒரு அறிக்கை விட்டிருந்தது. நான் மகிழ்ச்சி அடைத்தேன். ஒருபக்கம் என்னைக் கவர்ந்த திருப்புகழ். மற்றொரு பக்கம் ஆயிரம் ரூபாய் பரிசு. நானும் எனது தம்பியும் சேர்ந்து இருந்து திருப்புகழ் கற்க துவங்கினோம். பகல் இரவு பார்க்காமல் திருப்புகழ் பாடல்களைப் பாடி வந்து ஓரளவுக்கு தேர்ச்சி பெற்றோம். 'பக்கரவி சித்ர மணி பொற்கலனை இட்டநடை' என்று தொடங்கி, ஆறு படை வீடு பாடல்கள் எல்லாம் ஒன்று விடாமல் பாட கற்றுக்கொண்டோம். போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரம் இருக்கும்போது, நாங்கள் தீவிரமாகத் திருப்புகழ் பாடம் பண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று வந்த ஒரு செய்தி எங்களை அதிர்ச்சிக்குளாக்கியது. ‘போதுமான அளவு, பங்கேற்பாளர்கள் வராததால், போட்டி, குறிப்பிடாத வேறொரு நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது’ என்ற செய்திதான் எங்களை அதிர்ச்சியிலும் சிறிது கோபத்திலும் ஆழ்த்தியது. அப்பொழுது அடியேனுக்கு 18 வயது ஆகியிருந்தது. நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு மாதம் கழிந்து, பழனிக்குச் சென்று, பழனி ஆண்டவன் முன் உட்கார்ந்து, சாதகம் பண்ணின 150 பாடல்களையும் பாடினோம் . திருப்புகழும், “படிக்குந் திருப்புகழ் போற்றுவன்” போன்ற கந்தரலங்கார பாடல்களும் பாடி ஒரு மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.
திருப்புகழ் பாடினாலும் புண்ணியம், கேட்டாலும் புண்ணியம். முருகப்பெருமான் என் முன்னே தோன்றி, ‘அன்பரே, நீ ஆசைப்பட்ட 1000 ரூபாய் ஒரு நொடியில் செலவழிந்து போய்விடும். ஆனால் நீ இப்போது பாடிய திருப்புகழ் உனக்கு கிடைத்த பெரும் சொத்து. நீ ஒவ்வொரு பாடலை பாடும்போதும் நான் உன் அருகில் வந்து இருந்தேன். நீ எங்கே போனாலும் நான் உன் கூடவே இருப்பேன்' என்று சொன்னது போல இருந்தது. அதற்கு பிறகு திருப்புகழே எனக்கு எல்லாம் என்று உணர்ந்து திருப்புகழ் பாடுவதிலேயே மன நிறைவு அடைந்து இருந்தேன். நான் திருப்புகழுக்கு வாழ்க்கை பட்டவன். பழனிக்கு திருப்புகழ் பாத யாத்திரையாக போகும்போது, திருப்புகழ் பாடிக்கொண்டு போனால், ஐந்து கிலோ மீட்டர் தூரம் முன்னால் போனதே தெரியாது.
“இருண்ட கடல் போன்றதும், நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு இறப்பு என்ற சக்ரத்தில் விழாமல் பாதுகாத்து உனது அருளைத் தருவாயாக என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள், ‘திமிர வுததி யனைய நரக‘ என்று தொடங்கும் பாடலில். நாம் அனைவரும் பிறவி யான ஒரு பெரும் கடலில் இருந்து தவித்துக்கொண்டிருக்கிறோம். ஏழு கடல் மணலை எண்ண முடிந்தாலும் எண்ணலாம், ஆனால், நாம் எடுக்கும் பிறவியை எண்ண இயலாது. யாரெல்லாம் திருப்புகழ் பாடுகிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு மறு பிறவி கிடையாது. “ஒருவேளை தப்பி தவறி என்னை பிறக்க வைத்தாய் எனில் என்னை நீ காது உள்ளவனாக படைப்பாயாக” என்று கேட்க்கிறார் அருணை புலவர். செவிடாக பிறக்கக் கூடாது; ஏன் என்றால் திருப்புகழைக் கேட்க காது வேண்டும். (செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு ...... மணுகாதே”) எவர் ஒருவர் இப்பாடலை மனம் உருகி பாடுகிறாரோ, முருகன் ஒடி வந்து அவர் மடியில் அமர்வார். கண்ணால் காண முடியா விட்டாலும், உணர முடியும்.
1871 ஆம் ஆண்டு, கடலூர் நீதிமன்றத்திலே ஒரு வழக்கு வந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் 3000 அந்தணர்கள் தீக்ஷிதர்களாகப் பணிபுரிந்து வந்தார்கள். நடராஜ பெருமாள் நமது சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு அடி எடுத்து கொடுக்கும் போது, 'திருவாரூரில் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன்' என்று அடி எடுத்துக் கொடுத்தார் என்று சொல்வார்கள். 400 வருடங்களாக தில்லை வாழ் அந்தணர்களே பூஜை செய்கிறார்கள் என்று சொல்ல “அதக்கு ஆதாரம் இருக்கிறதா" என்று கனம் கோர்ட்டார் அவர்கள் கேட்டார். 'ஆம், அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல்களில் ஒன்றான 'தாது மாமலர் முடியாலே' என்ற பாடலே ஆதாரம் என்றார்கள். நீதிபதி அவர்கள் அருணகிரிநாத சுவாமிகள் எப்பொழுது வாழ்ந்தார் என்று கேட்க, சுவாமிகள் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று சொன்னார்கள். 400 வருடங்களுக்கு முன்னாலேயே வாழ்ந்த ஒரு முனிவர் தெரிந்து பாடியிருக்கிறார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்கும் என்று சொல்லி, அந்தணர்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி னார் நீதிபதி அவர்கள். நீதிமன்றத்தில் எழுத்தாளராக பணி புரிந்து வந்த திரு வடக்குப்பட்டு சுப்ரமண்யம் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பெரிய தாக்கத்தை உண்டாக்கின. திருப்புகழில் ஒரு தனி சக்தி இருப்பதை உணர்ந்தார். திருப்புகழைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டு, திருப்புகழ் பாடல் எங்கே கிடைக்கும் என்று பார்த்து, அப்பணியில் தன்னை ஈடுபடுத்திகொண்டார். கிடைத்த பாடல்கள் எல்லாம் பாடி வர அதில் ஒரு பெரிய சக்தி இருப்பதை உணர்ந்தார். திருப்புகழ் தேடும் படலம் தொடர்ந்தது. திருவண்ணாமலை மற்றும், திருவாடுதுறை ஆதீனம், தர்மபுரம் ஆதீனம் போன்ற திருத்தலங்கள் சென்றார். 1902 அன்று அவர் தொடங்கிய பணி வெற்றிகரமாக முடிந்தது. 500 பாடல்கள் கிடைத்தபிறகு, 1902 அன்று புத்தக வடிவில் அமைத்து பிரசுரித்தார். 1909 அன்று அவர் உயிர் மறைந்தது. அவர் விருப்பப்படி, திருத்தணி மலைக்கு பின்புறம், இறுதிச் சடங்குகள் செய்து திருப்புகழ் பதிப்பாசிரியர் வடக்குப்பட்டு தா சுப்பிரமணிய பிள்ளை என்று பெயர் எழுதி நினைவகம் எழுப்பப்பட்டது.
அவரது மகன் திரு செங்கல்வராயப் பிள்ளை தன் தந்தை தொடங்கிய திருப்பணியை பூர்த்தி செய்ய தன்னை அர்பணித்துக்கொண்டார். திருப்புகழுக்காக 87 வருடங்கள் தொண்டு செய்தார் செங்கல்வராய பிள்ளை அவர்கள். பல தலங்கள் சென்று பல நபர்களைச் சந்தித்து 1310 திருப்புகழ்ப் பாடல்களைக் கண்டெடுத்து புத்தகமாக வெளியிட்டார். தமிழ்த் தாத்தா என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு. உ.வே.சா.சாமிநாத ஐயர், சங்க இலக்கியங்களை எல்லாம் கண்டெடுத்து பெரிய தொண்டுசெய்தவர். உடல்நலக் குறைவால் படுக்கையில் இருந்தபோது செங்கல்வராயப் பிள்ளை அவரைப் பார்த்து நலம் விசாரிக்கச் சென்றார். அய்யர் அவர்களின் காலைத் தொட்டு கும்பிட்டார். காலைத் தொட்டு கும்பிட வேண்டாம் என்று அய்யர் சொல்ல, செங்கல்வராயன் அவர்கள் சொன்னார் 'காடு மேடெல்லாம் நடந்து தமிழ் இலக்கியங்களை, மணிமேகலையை, சீவகசிந்தாமணியை எல்லாம் தேடிய பொற்பாதங்களாயிற்றே இவை' என்றார். அய்யர் அவர்களும் திரு செங்கல்வராயரின் கைகளை பற்றிக்கொண்டு, ‘திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கைகள் ஆயிற்றே இவை' என்றாராம்.
சிறு குழந்தைகள் திருப்புகழ் பாடும் முன்னே, விநாயகப் பெருமானை வணங்கி 'கைத்தல நிறை கனி அப்பமோடவல் பொறி, கப்பிய கரிமுகன் அடிபேணி' என்று பாடுவதைக் கேட்டு மதி மயங்கி நின்றிருக்கிறேன். விநாயகரைத் துதிக்கும் போது 'அக்கண மணமருள் பெருமாளே' என்ற சொல், வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் செய்து வைத்த விநாயகரை குறிக்கிறது. வள்ளியை நினைக்கும் போது அவர் குடிகொள்ளும் வள்ளிமலை நினைவுக்கு வருகிறது. இங்கு தான் திருப்புகழை உலகெங்கும் பரப்பிய வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அவரது இறுதி நாட்களைக் கழித்தார்.
திருப்புகழ் என்பது பெரும் கடல். அதனை முழுமையாக விளக்கம் சொல்ல யாராலும் முடியாது. திருஞான சம்பந்தர் 16000 பாடல்களுக்கு மேல் பாடினார். திருஞான சம்பந்தரின் அடிச் சுவட்டில் வந்த அருணகிரிநாதரும் அவரைப் போல பாடல் புனையும் சக்தியை தனக்கும் அருள முருகனை வேண்டினார். “இந்தப் பூமியில் தனிப்பெரும் தலைவரும், சீர்காழியில் அவதரித்தவருமான, திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல மரணமிலா வாழ்வைத், தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு அருள்புரிவாய் என்கிறார், “புமியதனிற் பிரபுவான”, என்ற பாடலில்.
அந்த காலத்திலெல்லாம், இசை நிகழ்ச்சியில் கடைசியில் துக்கடாவாகத் திருப்புகழ் பாடுவார்கள். திருப்புகழ்ப் பாடினால் நிகழ்ச்சி முடிவடையப்போகிறது என்று தெரிந்து எல்லோரும் எழுந்துபோய்விடுவார்கள். திருப்புகழ் முதலாவதாக பாட வேண்டிய பாடல். ஏனென்றால் திருப்புகழ் நமக்கு பல விதத்திலும் நன்மை செய்கிறது. அறிவையும் அருளையும் கொடுக்கிறது. வாழ்க்கையில் நாம் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். பிரச்சனைகள் யாரையும் விட்டு வைப்பதில்லை. கவலை இல்லா மனிதன் ஒருவனும் இல்லை. இரண்டுபேர் கவலை இல்லாமல் இருப்பார்கள்; ஒருவன் கல்லறையிலும் மற்றவன் கருவறையிலும். கல்லறையில் இருப்பவனுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. கருவறையில் இருப்பவனுக்கும் ஒரு பிரச்னை கிடையாது. அம்மாவிடமிலிருந்து குழந்தை வேண்டியதை பெற்றுக்கொண்டிருக்கும். மற்ற அனைவருக்கும் பிரச்சனைகள் பல உள்ளன. ஒரு சிலருக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற பிரச்னை. “விறல்மார னைந்து” என்ற திருப்புகழில் “குளிர்மாலை யின்கணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ" என்கிறார். “முருகா, நீ அணிந்திருக்கும் மாலை போல, எங்கள் பெண் குழந்தைக்கும் ஒரு மாலை அணிவிக்கும் நேரம் வர அருள்வாய் என்கிறார். “அடியார் இடைஞ்சல் களைவோனே” என்கிறார். மனிதர்களின் பல குறைகளை நீக்கி, முருகனை அருள் வாரி வழங்கச் செய்யும் பாடல் இது.
மதுரையில் திருப்புகழ் சாமி என்று ஒரு பக்தர் இருந்தார். 1919 இல் அவர் மீனாட்சி அம்மன் கோவிலில், ‘திருப்புகழ் சபை’ என்ற அமைப்பை நிறுவினார். அந்த சிறப்பான சபைக்கு நூற்றாண்டு விழா சிறப்பாக நடந்தேறியது. திருப்புகழ்ச்சாமி என்பவருக்கு சரியான பெயர் லோகநாத அய்யர் என்பது. இந்த பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு. இவரது தந்தைக்குத் திருப்புகழில் மிக ஈடுபாடு உண்டு. திருவிடைமருதூரில் வைத்து அருணகிரிநாத சுவாமிகள் பாடிய ஒரு பாட்டு தந்தையரை மிகவும் கவர்ந்தது. ‘ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே’ என்ற அந்த பாடலைக் கேட்டு தன் மகனுக்கு லோக நாயகன் என்ற பெயர் சூட்டினார். பிறகு லோக நாயகர் மதுரையில் திருப்புகழ் சபை நிறுவினார். லோக நாயகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சுப்பலக்ஷ்மி என்று பெயர் வைத்தார்கள். குழந்தை பெரிதாகி, கல்யாண வயதினை எட்டி விட, வரன் பார்க்கத் தொடங்கினார்கள். ஆனால் வந்தவர்களெல்லாம் தேநீர் அருந்தி விட்டு ‘தெரிவிக்கிறோம்’ என்று சொல்லி போய் விட்டார்கள். ஒரு வரனும் சரியாக அமைய வில்லை. கடைசியில் தன் பெற்றோர்களுடன் ஒரு இளைஞர் வந்தான். அவன் பெயர் தியாகராஜன். பெண்ணை பார்த்துவிட்டு, கடைசியில் 'உனக்கு பாடத் தெரியுமா” என்று கேட்டான். சுப்பலக்ஷ்மியும் இசைந்து கணீர் என்ற குரலில் “நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே" என்ற பாடலை பாடினாள் . இந்த பாடலைக் கேட்ட இளைஞர் "திருமணத்திற்க்கு முழு சம்மதம்" என்று சொல்லிவிட்டான். சுப்பலக்ஷ்மி - தியாகராஜன் திருமணம் திருப்புகழின் மகிமையால் நன்றாக நடந்தேறியது.
ஒருவர் சொன்னார்: “எனக்கு கல்யாணமாகி, குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால் வறுமையால் வாடுகிறேன். வேண்டிய செல்வம் இல்லாததால் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்றார். வேறொருவர் சொன்னார். “பூஜை செய்து, முருகனை வணங்கி இருக்க நினைக்கிறேன் ஆனால் மனசு எங்கெல்லாமோ அலை பாயுது. அரை நிமிடம் கூட தியானித்து இருக்க முடியவில்லை' என்று. நமது நிலைமையை பல காலம் முன்னாலேயே புரிந்துகொண்டு பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க அறியாத எனக்கு சிவ ஞான முத்தி கொடுத்து உதவி புரிய வேணும் என்கிறார்.
நாம் விரும்புவதெல்லாம் இங்கேயும் சீரும் சிறப்புமாக, பிறகு இறுதியில் சென்று சேரும் அங்கேயும் நல்லா இருக்கணும் என்று தான், முருகன் பக்தர்கள் கவலைப்பட தேவையில்லை. சரவணபவ என்று மனம் உருகி பாடினால் 'இகபர சௌபாக்கியம்' கிடைக்கும் என்கிறார், “வசனமிக வேற்றி "என்ற பாடலில். ஒரு பக்தன் நல்ல கார்யங்கள் கைகூடவேண்டும் என்று நினைப்பான். அவன் நினைத்த தெல்லாம் நடக்குமா? ‘நினைத்தது மளிக்கும்‘ என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். “சினத்தவர் முடிக்கும்” என்ற பாடலில். ஒருவன் பல துன்பங்களால் அவதிப்படுகிறேன். அவன் செய்ய நினைக்கும் காரியங்களில் பல இன்னல்களும் இடைஞ்சல்களும் வருகின்றன என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் நிற்கிறான். இடரானதெல்லாம் தொலைந்து, சிறந்த ஆன்மீக வழிக்கு வந்து மகிழ்ச்சி அடைய திருப்புகழ் ஓதினால் போதும். குன்றுதோறாடல் எனும் தலத்திலிருந்து அருணகிரிநாதர் பாடிய “அதிருங் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவதென்று நிலைகாண” என்ற பாடலைப் பாடினால் போதுமானது.
திருப்புகழ் என்பது மாபெரும் கடல். நான் அந்த கடலில் மூழ்கி, கைக்கு கிடைத்த சில முத்துக்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். ஆயிரக் கணக்கில் முத்துக்களும் ரத்னங்களும் திருப்புகழ் எனும் கடலில் இருக்கின்றன. காலையில் எழுந்த உடன் திருப்புகழ் வாய்விட்டு பாடினால் அமைதியும் ஆனந்தமும் நிலவும். முருகன் நமது வீட்டு வாசல்படியில் வந்து நின்று அருள்புரிவான். வீட்டில் தெய்வீகம் நிறைந்திருக்கும்.
நமது ஊருக்கு காவல்காரனாக வந்து, 'கவலை வேண்டாம், நான் உன்னை ரட்சிக்கிறேன்” என்பார் முருகப்பெருமான். எமன் வருகின்ற பொழுது முருகன் வந்து நம் கூட இருந்து ‘பயம் வேண்டாம், நான் இருக்கிறேன்' என்பார். அருணகிரிநாதர் பாடுகிறார்: 'காலன் எனை அணுகாமல், உனது இரு காலில் வழிபட அருள்வாய்' என்று. திருப்புகழ் எனும் இசை மந்திரம் உலகெல்லாம் ஒலித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். திருப்புகழ் இசை எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு ஒளியாக, வழிகாட்டியாக அது நமது வாழ்க்கைப் பயணத்தில் துணை நிற்கும்.
★★★
அருளாளர் அருணகிரிநாதரின் ஆறாம் நூற்றாண்டு விழா 1975 ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 17 வரை சென்னை வீனஸ் காலனியில், திருப்புகழ் அன்பர்கள் ஸ்தாபகர் திரு குருஜீ ராகவன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி அருணகிரிநாதப் பெருமானின் நினைவுத் தபால்
தலையை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு ஜெகநாத் பகாடியா
வெளியிட அதனை நாவலர் நெடுஞ்செழியன் பெற்றுக்கொண்டார்.

