திரு. T.V.S. ராஜாராம், அறங்காவலர் குழு உறுப்பினர், அ/மி அண்ணாமலையார் திருக்கோவில், திருவண்ணாமலை.
இன்று அருணகிரிநாதப் பெருமான் இயற்றிய திருப்புகழ் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது என்றால் அதற்கு காரணமாக இருப்பவர் வள்ளிமலை சச்திதானந்த சுவாமிகள்.வள்ளிமலை சுவாமிகளின் இயற்பெயர் அர்த்தநாரி. அவர் 1870 ஆம் ஆண்டு பவானியில் சிதம்பரம் - லட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. ஆகையால் அவரது பெற்றோர்கள் அவரை கல்வி பயில பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவில்லை. பிறகு அவர் தனது தாய் மாமனுடன் மைசூர் அரண்மனைக்கு சென்று அங்கு அவருடன் சமையல் பணியில் ஈடுபட்டார்.இன்பமயமாக ஓடிக் கொண்டிருந்த அவர் வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசியது.அவர் தனது நாற்பதாவது வயதில் மனைவியை பறிக் கொடுத்தார். ‘பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் ‘ என்று
சொல்வார்கள். அவரது வாழ்வில் அந்த பழமொழியை மெய்ப்பித்து விட்டது. உடன் அவரது இளம் மகளும் மரணிக்கின்றார்.இந்த சோதனையில் இருந்து மீண்டு வருவதற்குள் அவருக்கு திடீரென்று கடுமையான வயிற்று வலியும் உண்டாகிறது.
அரண்மனை வைத்தியர்கள் மருத்துவம் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை. அப்போது ஒரு பெரியவர் அர்த்தநாரியிடம் பழனி சென்று முருகனை தரிசித்து அபிஷேகப் பாலை அருந்தும்படி அறிவுரைக் கூறினார். அர்த்தநாரியும் உடனே பழனிக்குச் சென்று அங்கு தங்கி முருகனை தினமும் தரிசித்து அபிஷேகம் செய்யப்பட்ட பாலைப் பருகினார். அவரது வயிற்று வலி படிப்படியாக நீங்கி பூரண குணமடைந்தார். எப்படி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரரின் வயிற்று வலியை முருகப் பெருமான் போக்கினாரோ அவ்வாறே முருகப் பெருமான் அர்த்தநாரிக்கு அருள்பாலித்து அவரது நோயையும் குணமடையச் செய்தார். அர்த்தநாரி தினமும் காலை கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பதும் தொண்டு செய்வதுமாக இருந்தார். ஒருநாள் அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யும் பொருட்டு கருவறை திரை மூடப்பட்டது. அப்பொழுது அங்கு ஒரு அம்மையார் சுவாமியை நினைந்து, மனமுருகி வங்கார மார்பிலணி தாரொடுயர் ‘என்று துவங்கும் திருப்புகழைப் பாடலை பாடினார்கள். பாடலைக் கேட்டதும் அர்த்தநாரி மெய்மறந்து பாடலில் மனதை பறிகொடுத்தார்.
திரை திறக்கப்பட்டு முருகனுக்கு ஆராதனை செய்யப்பட்டது. ஆனால் அர்த்தனாரிக்கு முருகன் மீது முழு கவனம் செலுத்த முடியவில்லை. அவரது காதில் அந்த பாடல் வரிகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. கிருஷ்ணனின் குழலுக்கு கோபியர்கள் மயங்கியது போல் அர்த்தநாரி அந்த அம்மையாரின் பாடலுக்கு மயங்கினார்.அன்று இரவு முழுவதும் அவர் உறங்கவில்லை. பாடல் வரிகள் அவர்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
பொழுது விடிந்தவுடன் அம்மையின் வீட்டிற்குச் சென்று அவர் பாடிய பாடல் என்னவென்று சொல்லும்படி வேண்டினார். அம்மையார் தாம் பாடியது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் என்று கூறியதும் அதனை எழுதி வாங்கி சிலர் உதவியுடன் மனப்பாடம் செய்து கொண்டார். உடனே சில அன்பர்கள் உதவிட தமிழ் எழுதப் படிக்க கற்றுக் கொண்டார். அப்பொழுது வடக்குப்பட்டு சுப்பிரமணியப் பிள்ளை தொகுத்த திருப்புகழ் புத்தகம் வெளிவந்திருந்தது. அவர் அதனை வாங்கி சில பாடல்களைப் பாடி மனப்பாடம் செய்து கொண்டார். பிறகு அவருக்கு வடநாட்டு யாத்திரைச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. அவர் காசி, ஹரித்துவார்,பத்ரிநாத், கேதார்நாத்,அமர்நாத் போன்ற தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டார்கள். அப்பொழுது இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு சாது அவர்களுக்கு தீட்சை அளித்து சச்சிதானந்தம் என்ற பெயரையும் சூட்டினார்.அன்று முதல் அர்த்தனாரி, சச்சிதானந்த சுவாமிகள் என்றும் பலராலும் அழைக்கப்பட்டார்.
அவர் மீண்டும் பழனி தலத்திற்கு வந்து திருக்கோவிலில் தொண்டாற்றினார். ஒருநாள் அவருக்கு திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று. ஞானத் தபோதனர்களை வா என்று அழைக்கும் மலை அல்லவா திருவண்ணாமலை. எப்படி திருச்சுழியில் இருந்து ரமணரும், வழுவுரில் இருந்து சேஷாத்திரி சுவாமிகளும் திருவண்ணாமலையின்பால் ஈர்க்கப்பட்டார்களோ அதே போல் அர்த்தநாரியும் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டார்.அருணைக்கு வந்த சச்சிதானந்த சுவாமிகள் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்து பிறகு ரமணரை சந்திக்கச் சென்றார். ரமணரை கோவணத்துடனும், தடியுடனும் கண்டதும் அவரை முருகப்பெருமானின் அவதாரமாகவே கருதினார். ஆசிரமத்திற்கு அருகே தங்கி தினமும் ரமணரை தரிசித்து திருப்புகழ் பாடுவார். ரமணரும் திருப்புகழை விரும்பி ஆனந்தமாகக் கேட்பார். சச்சிதானந்த சுவாமிகள் அருள்மிகு அண்ணாமலையார் ஆலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் கம்பத்திளையனார் சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசித்து திருப்புகழ் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒரு நாள் மலையடிவாரத்தில் உள்ள கந்தாசிரமத்தில் இருந்த ரமணரை தரிசிக்க சச்சிதானந்த சுவாமிகள் சென்றார்கள். அப்பொழுது சச்சிதானந்த சுவாமிகள் கண்ட ரமணர் ‘நீ கீழே போ! உடனே போ‘ என்று விரட்டினார்கள். சச்சிதானந்த சுவாமிகளுக்கு தூக்கிவாரிப்போட்டது. எப்போதும் வாஞ்சையுடன் வரவேற்கும் ரமணர் நம்மை இப்போது கீழே போகச் சொல்கிறாரே என்று வருத்தப்பட்டார். சற்று யோசித்தார். அவர் அப்படி சொல்வதில் ஏதோ காரணம் இருக்கும் என்று எண்ணி பதில் பேசாமல் கீழே இறங்கி சென்றார். கீழே இறங்கி வந்த சச்சிதானந்த சுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் சாலையின் எதிர் திசையிலிருந்து சேஷாத்ரி சுவாமிகள் தன்னை நோக்கி வருவதை கண்டார்.சேஷாத்ரி சுவாமிகள் அவரைப் பார்த்ததும் ‘நீதானே திருப்புகழ் பாடும் பக்தர்‘ என்று வினவினார்.அதற்கு பணிவுடன் சச்சிதானந்த சுவாமிகள் ‘ஆமாம் சாமிகள்‘ என்று கூறினார். மகான் சேஷாத்ரி சச்சிதானந்த சுவாமிகளைப் பார்த்து ‘ஆதிசங்கரரின் அத்வைத கருத்துக்கள் உள்ள திருப்புகழ் உள்ளதா என கேட்டார். அதற்கு சச்சிதானந்த சுவாமிகள் ‘ஆம் ‘என்று கூறி
‘அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான மேமூல ...... அனல்மூள ‘
என்று துவங்கும் திருப்புகழைப் பாடி அதன் பொருளையும் விளக்கினார்.பாடலின் விளக்கத்தைக் கேட்ட சேஷாத்ரி சுவாமிகள் ‘திருப்புகழ் ஒரு மகா மந்திரம். வேதத்துள்ள அரிய கருத்துக்கள் எல்லாம் எளிய முறையில் பாடல் வழியில் திருப்புகழில் சொல்லப்பட்டுள்ளன. உனது ஆன்மீகப் பயணம் தொடர இதுவே போதுமானது. நீ உடனே வள்ளி மலைக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கி திருப்புகழின் பெருமையை உச்சத்திற்கு எடுத்துச் செல்' என்று பணித்தார்.
சச்சிதானந்த சுவாமிகளுக்கு சேஷாத்ரி சுவாமிகள் கூறிய அறிவுரை அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் உடனடியாக வள்ளி மலைக்குச் சென்று அங்கே இருந்த குகை ஒன்றை தனது இருப்பிடமாகக் கொண்டார். திருப்புகழ் பாடுவதை தனது முழு நேரப் பணியாக மேற்கொண்டார்கள். அங்கே சென்றதும் இசை ஞானமே இல்லாத சுவாமிகள் முருகன் அருளால் திருப்புகழைச் சந்தத்துடன் பாட ஆரம்பித்தார். திருப்புகழை முறையாக பாடும் பொருட்டு 'திருப்புகழ் பாராயண தவநெறி முறை' ஒன்றை உருவாக்கினார்.வள்ளி மலையில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அருணகிரிநாதப் பெருமானுக்கு எப்படி வள்ளி அம்மையார் ஸ்பரிச தீட்சை கொடுத்து ஆட்கொண்டாரோ அவ்வாறே வள்ளி ஒர் சிறுமியாக அவர் முன் தோன்றி ‘விரகற நோக்கியும் ‘ என்ற பாடலைப் பாடி அவருக்கு காட்சி கொடுத்தார்.
தன்னை ஆட்கொண்ட வள்ளியம்மைக்கு மலைமேல் கோயில் அமைத்து வழிபட்டார்.
திருப்புகழ் வேல்மாறல்', 'திருப்புகழ்க் கோ பூஜை', 'தின அநுட்டானத் திருப்புகழ்', ‘மார்கழிப் பாராயணத் தவநெறித் திருமுறை' முதலிய நூல்களைத் தொகுத்துள்ளார். முருக பக்தர்களால் தமிழ்நாடு மட்டுமன்றி வெளிநாட்டிலும் வேல்மாறல் பாராயணம் செய்யப்படுகிறது.
1917-18-ஆம் ஆண்டில் திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் படி விழாவைத் துவக்கி வைத்த பெருமை வள்ளிமலை சுவாமிகளையே சாரும். அன்று முதல் 100 ஆண்டுகளைக் கடந்து இன்று வரை திருப்புகழ் அன்பர்கள் ஆண்டு தோறும் ஜனவரி - 1 ம் தேதி திருத்தணி மலை ஏறும் பாதையில் உள்ள 365 படிகளிலும் தேங்காயை உடைத்து பூஜை செய்து திருப்புகழ்ப் பாடி பக்தர்கள் மேலே ஏறுவார்கள்.வாரியார் சுவாமிகள் பின்நாளில் இந்தப் படி விழாவை பிரபலப்படுத்தினார்.
சுவாமிகள் 38 ஆண்டுகள் வள்ளி மலையில் வாழ்ந்து திருப்புகழ் தொண்டாற்றி, 1950 ஆம் ஆண்டு முருகப் பெருமானின் திருவடியில் ஐக்கியமானார்.
சுவாமிகள் வள்ளிமலைக்கு சென்று சித்தி பெற்று நமக்கு திருப்புகழைத் தருவதற்கு, ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளே காரணம் என்று உறுதியோடு கூறலாம்.
★★★
ஒரு பத்தும் இருபதும் அறுபதும் என்னும் அவற்றுடன் ஆறுமாக (10+ 20+ 60 +6) சேர்ந்து உருவாகும் தொன்னூற்று ஆறு தத்துவங்களின் இயல்பை உணர்ந்து கந்தனின் கடலை வணங்கு.
1.எழுத்துக்களில் அ என்ற எழுத்தானவன்
2.எல்லா உயிர்களுக்கும் தலைவனாகி மேம்பட்டு நிற்பவன் .
3.முக்தி வீடாகி அனைவருக்கும் முக்தி அளிப்பவன்.
- நான்முகனாகி உலக உயிர்களைப் படைப்பவன். 5.திருமாலாகி உலக உயிர்களை காப்பவன். 6.ருத்ரனாகி உலக உயிர்களை அழிப்பவன். 7.மூவருக்கும் மேலான முதல்வனாகி அண்மையில் இருப்பவனாகி எல்லா பொருளுமாகி இனிமை உடையவனாகி விளங்கும் கந்தனை விளங்கிக் கொள். (அகரம்) திருப்புகழ்.
நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் - திருப்புகழ் மாமணி வெ. இராமு

