பாரத தேசத்தின் தொன்மையான வழிபாடுகளில் முருகப்பெருமான் வழிபாடும் சிறந்து விளங்கியிருந்தது.
பாரத தேசத்தின் தொன்மையான வழிபாடுகளில் முருகப்பெருமான் வழிபாடும் சிற தமிழகத்தில் சங்க காலம் தொடங்கி சேயோனின் செவ்விய வழிபாடு தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு காலத்தும் முருகன் அடியார்கள் அவதரித்து முருக வழிபாட்டை முறைப்படுத்தி மக்களுக்கு வழிகாட்டி வந்துள்ளனர். பல்வேறு நூல்களில் முருகன் தொன்மையும் வழிபாடும் விளக்கப்பட்டுள்ளன.
சிவபரம் பொருளைப் பாடியும் தலந்தொறும் சென்று வழிபட்டும் சிவவழிபாட்டின் பெருமையையும் உயர்வையும் நமக்கு உணர்த்தியவர்கள் தேவார மூவர் ஆவார். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இன்றைக்கு ஏறக்குறைய 650 ஆண்டுகளுக்கு முன் திருவருணையில் அவதரித்த அருணகிரிநாதர், பல தலங்களுக்கும் சென்று முருகன் திருவருளைப் பெற்று அந்த அனுபவப் புதையல்களை நமக்கு “திருப்புகழ்” என்னும்
ஒப்பற்ற பாமாலையாக அளித்துச் சென்றுள்ளார். அவர் சென்று தரிசித்துப் பாடிய பல தலப்பாடல்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் இன்று நமக்கு வ.த.சுப்ரமணிய பிள்ளை, தணிகைமணி, வ.சு. செங்கல்வராயப்பிள்ளை ஆகியோர் முயற்சியால் கிடைத்தவை 1331 திருப்புகழ்ப் பாடல்களாகும். அதில் 216 தனித் தலங்களும் 24 வைப்புத் தலங்களும் அடங்கும்.
இனி திருப்புகழ்த் தலங்களில் திருமுருகன் திருவடிவங்களை விரிவாகக் காண்போம்.
தமிழகத் திருக்கோயில்களில் திருமுருகன் வடிவங்களை பல்லவர், சோழர், பாண்டியர், விஜய நகர அரசர்கள் காலம் என்று வகைப்படுத்தலாம். பல்லவர்கள் காலத்தில் பெரும்பாலும் “பிரம்ம சாஸ்தவர்” என்ற வடிவம் அவர்களால் வழிபடப் பெற்று வந்துள்ளது. அதாவது பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரமனை தண்டித்து சிறையில் அடைத்து அவரது சிருஷ்டித் தொழிலை மேற்கொண்ட முருகனது வடிவமே பிரம்ம சாத்தன் வடிவமாகும். (சாத்தன் – தண்டித்தவன்) பின் இருகரங்களில் பிரமனுக்குரிய கமண்டலம் மற்றும் ஜபமாலையை ஏந்தியிருப்பார்.
தொண்டை மண்டலத்தில் பெரும்பாலான பழைய திருக்கோயில்களில் பிரம்ம சாஸ்தாவடிவமே காணப்படுகிறது. திருப்புகழ்ப் பாடல் பெற்ற தலங்கள் சிறுவாபுரி, பாகசாலை, காஞ்சி குமரக்கோட்டம், திருப்போரூர், ஞானமலை ஆகியவையாகும்.
சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்கள் காலத்து கோயில்களில் ஒருமுகம் - இருகரங்கள், ஒருமுகம் - நான்கு கரங்கள், ஆறுமுகம் - பன்னிரு கரங்கள் (மயில் மீது அமர்ந்து அல்லது நின்ற கோலம்) என்று பல்வேறு நிலைகளில் காணப்பெறுகின்றன.
ஒரு முகம் - இரு கரங்கள்
வடவிஜயபுரம் (ஆந்திரமாநிலம்), திருத்தணிகை (வலக்கரம் சக்திவேல், இடக்கரம் தொடையில்), வள்ளிமலை, அத்திப்பட்டு (வில்லுடையான்பட்டு - வில்லும் அம்பும்) திருவிடைக்கழி, திருநள்ளாறு (இடது கரத்தில் பழம்), மருத்துவக்குடி, பெரியமடம், திருப்பராய்த்துறை, கொடுங்கிரி ஆகிய தலங்கள் சுவாமிமலை, சென்னிமலை, சிவன்மலை, ஊதிமலை, மருதமலை, பேரூர், பழநி, பூம்பறை முதலான திருப்புகழ்த் தலங்களில் தண்டபாணி திருக்கோலம் அதாவது சிற்பநூல்களில் காணப்படும் 'கந்தசுவாமி' வடிவமாகும்.
ஒரு முகம் - நான்கு கரங்கள்
இவ்வமைப்பை பல திருப்புகழ்த் தலங்களில் தரிசிக்கலாம். கொடும்பு (கேரள மாநிலம்), திருவொற்றியூர், திருவான்மியூர், திருவலிதாயம், திருவேற்காடு, கோசைநகர் (கோயம்பேடு), வட திருமுல்லைவாயில், பாக்கம், நெடியமலை, வெள்ளிகரம், மாடம்பாக்கம், கோடைநகர் (வல்லக் கோட்டை), இளையனார் வேலூர், உத்திரமேரூர், விசுவை, மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் (புலிப்பரக்கோயில்), சேயூர், வேப்பூர், திருவலம், ஒடுக்கத்தூர், சோம நாதன்மடம் (12 புத்தூர்), திருவண்ணாமலை கோபுரத்து இளையனார், தேவனூர், மயிலம், துறையூர், திருநாவலூர், திருவாமூர், வேப்பஞ்சந்தி (வேப்பூர்), திருவரத்துறை, யாழ்ப்பாணாயன் பட்டினம் (எருக்கத்தம் புலியூர்), திருநெல்வாயில், சீர்காழி, மாதானை, மயேந்திரம், வாகைமாநகர், திருப்படிக்கரை, கரியவனகர், சிகண்டியூர் (மயிலாடுதுறை), திருவாவடுதுறை, வழுவூர், தான்தோன்றி (ஆக்கூர்), திருக்கடவூர், வலிவலம், விற்குடி,
திருச்செங்காட்டங்குடி, இஞ்சிக்குடி, மாகாளம், அம்பர், கந்தன்குடி, கீரனூர், திருவீழிமிழலை, கூந்தலூர், திலதைப்பதி, திரியம்பகபுரம், குடவாயில், திருப்பனந்தாள், திரிபுவனம், திருநாகேச்சுரம், சிவபுரம், கொட்டையூர், பழையாறை, நல்லூர், குருங்காடுதுறை, சக்கரப்பள்ளி, காவளூர், பெரும்புலியூர், திருவையாறு (வில்லேந்திய கோலம்), திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், பழுவூர், திருநெடுங்களம், திருவானைக்காவல், திருகற்குடி, வயலூர், திருமாந்துரை, திருப்பெருந்துறை, திருப்புனவாயில், புகழிமலை, அலையாமலை, சேலம், தீர்த்தமலை, கொங்கணகிரி (வட்டமலை), திருவாவினன்குடி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருப்புத்தூர், விநாயகமலை, திருவாடானை, இராமேசுவரம், திருச்செந்தூர், ஆய்க்குடி, இலஞ்சி, குற்றாலம், செப்புவெற்பு (பொதியமலை), ஸ்ரீபுருட மங்கை, வள்ளியூர், திருக்கோணமலை (இலங்கை) ஆகிய தலங்கள்.
ஆறுமுகம் - பன்னிருகரங்கள்
ஆறுமுகப் பெருமானை பல தலங்களில் மயில் மீது அமர்ந்த கோலத்திலும் சில தலங்களில் நின்ற திருக்கோலத்திலும் காணமுடிகிறது. வட இந்தியாவில் காசி,
ஆந்திரப்பிரதேசத்தில், திருமலை (ஸ்ரீசைலம்), திருப்பதி, திருக்காளத்தி ஆகிய தலங்களில் ஆறுமுக வடிவத்தைத் தரிசிக்கலாம். திருவாலங்காடு, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், பேறை நகர் (பெரும்பேறு-தெற்கு நோக்கிய அமைப்பு), காரபுரம் (திருப்பாற்கடல்), வள்ளிமலை அடிவாரக்கோயில், விரிஞ்சிபுரம், குறட்டி, காமத்தூர் (காமக்கூர்), திருவோத்தூர், தமனியப்பதி (பொன்னூர்), கனககிரி (தேவிகாபுரம்), சோமீசர் கோயில் (படவேடு), திருவண்ணாமலை, திருவக்கரை, திருவாமாத்தூர், திருக்கோவலூர், திருவெண்ணெய்நல்லூர், வடுகூர், திருவதிகை, திருப்பாதிரிப்புலியூர், திருமானிக்குழி, விருத்தாசலம், கடம்பூர், திருமுட்டம் (ஸ்ரீ முஷ்ணம்), கூடலையாற்றூர், திருவேட்களம், சிதம்பரம் (பாண்டியநாயகம்), வேளூர், திருத்துருத்தி, நாகப்பட்டினம், சிக்கல் (பொரவச்சேரி), எட்டிகுடி, வேதவனம் (வேதாரண்யம்), திருவாரூர், திருவாஞ்சியம், எண்கண், பந்தனைநல்லூர், திருவிடைமருதூர் (ஒருகரத்தில் பழம்), குடந்தை கீழ்க்கோட்டம், குடந்தைக்காரோணம் திருவலஞ்சுழி, திருச்சத்திமுத்தம், தஞ்சாவூர், வாலிகொண்டபுரம், திரிசிராப்பள்ளி, திருத்தவத்துறை, பூவாளூர், விராலிமலை, தெனடகடம்பந்துறை, ரத்னகிரி கருவூர், நெரூர், வெஞ்சமாக்கூடல், ராசிபுரம், திருச்செங்கோடு மலை அடிவாரம், கொல்லிமலை, தீர்த்தமலை, அடிவாரம், திருவானிகூடல், விஜயமங்கலம், திருப்பாண்டிக் கொடுமுடி, பட்டாலியூர், கன்னபுரம், அவிநாசி, திருப்புக்கொளியூர், திருமுருகன் பூண்டி, தென்சேரிகிரி, குடந்தை மாநகர், மதுரை, திருஉத்திரகோசமங்கை, செங்குன்றாபுரம் ஆகிய தலங்கள்.

