முருகப் பெருமானைப் போற்றும் புகழுரைகளின் தொகுப்பு, அருணகிரிநாதரின் திருப்புகழாக 16000 பாடல்கள் கொண்டது என்றும் அவற்றில் நமக்குக் கிடைத்திருப்பவை 1325 மட்டுமே என்றும் கேள்விப்படுகிறோம். இதனால், பன்னிரண்டில் ஒரு பங்குதான் நமக்குத் துய்க்கக் கிடைக்கிறது என்ற ஆதங்கம் ஏற்படத்தான் செய்கிறது. இவற்றில் 160 பாடல்களில் இராமாயணப் புராணம் சித்திரிக்கப்படுகிறது. சம்பவக் கோர்வையில் முன்னுக்குப் பின்னாக இருந்தாலும், ராமாயணக் கதையை அருணகிரியார் குறிப்பால் உணர்த்தியிருக்கும் நயம் பிரமிப்பூட்டுகிறது.
புராண காலத்திலேயே ஒரு கதையைப் பலவாறாக எழுதும் உத்தி கையாளப்பட்டு வந்திருக்கிறது. உதாரணமாக வேத வியாசரின் ஸ்ரீகிருஷ்ண சரித்திரமான பாகவதத்தை நாராயண பட்டத்திரி, குருவாயூரப்பனை முன்னிருத்தி, ‘நாராயணீயம்’ என்று புது கண்ணோட்டத்தில் வழங்கியிருக்கிறார்.
இந்தவகையில் வால்மீகி இராமாயணம், அத்யாத்ம இராமாயணம், வசிஷ்ட இராமாயணம், துளசி இராமாயணம், ஆனந்த இராமாயணம், அகஸ்திய இராமாயணம், கம்ப இராமாயணம், எழுத்தச்சனின் மலையாள இராமாயணம், கீர்த்திவாச இராமாயணம், ரங்கநாத தெலுங்கு இராமாயணம்... என்று பலவாறாக பல கவிஞர்கள் தத்தமது பாணியில் மறுபடைப்பு செய்தது போலவே முருகனை முன்னிருத்தி அருணகிரிநாதரும் தம் திருப்புகழில் தம் பாணியில் இராமாயணத்தை அருளியிருக்கிறார் என்றே சொல்லலாம்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிய நேரும்போது புராண இதிகாசங்களை எப்படி இவரால் இவ்வளவு அநாயசமாகத் தொட்டுச் செல்ல முடிகிறது என்ற வியப்பு எழுவது இயற்கையே.
அருணகிரியாரது விடலைப் பருவத்து சிற்றின்ப மோகத்தை மிகையாக வர்ணித்த வரலாற்று ஆசிரியர்கள், பால்ய பருவத்தில் அவர் ஆன்மிக, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்த நேர்த்தியைப் பற்றி விரிவாகச் சொல்லாமல் விட்டதால்தானோ என்றும் சந்தேகம் எழுகிறது.
'இளமையில் கல்‘ என்ற அறிவாற்றலின் அடித்தளத்தை அருணகிரியார் அற்புதமாக அமைத்துக் கொண்டிருந்திருக்கிறார் என்றும் எண்ண ஏதுவாகிறது. சிறு வயதிலேயே தந்தையாரை இழந்த அவர், தமக்கையின் ஆதரவால் வளர்ந்தார் என்றும், தாயாக மதிக்கப்பட வேண்டிய அந்த தமக்கை, இளமைக் கோளாறால் தனக்கு தாரமாகத் தன்னைத் தர முன்வந்தக் கொடுமைக்கு அவரை ஆளாக்கி விட்டோமே என்ற வேதனையில் தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் அந்தத் தமக்கை தன் தம்பியை அவனுடைய பால வயதில் கல்வியில் நாட்டம் கொள்ள வைத்தார் என்ற உண்மை ஏன் பரவலாக வெளிப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. திருப்புகழ் பாடல்கள் பலவற்றில் சமஸ்கிருத சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் சில நடைமுறை பேச்சு வழக்கில் புழங்கியவை என்றாலும், அவர் அந்த மொழியையும் அறிந்தவராக இருந்திருக்க வேண்டும் என்பதும், மிகப் பொருத்தமான இடங்களில் அந்தப் பதங்களை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறார் என்பதும் புரிய வருகிறது. ஒரு பாடலில் உழை என்று தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தி தமிழ் மொழி மீதான தன் மேதமையை நிரூபிக்கிறார். உழை என்றால் ஆண்மான்.
அந்த பிஞ்சு வயதில் மனதில் ஊன்றிய ஆன்மிக-இலக்கிய வித்துதான், திருப்புகழாய், கந்தர் அந்தாதியாய், கந்தர் அலங்காரமாய், கந்தர் அனுபூதியாய், திருவகுப்பாய், சேவல்/மயில்/வேல் விருத்தங்களாய், திருவெழுக்கூற்றிருக்கையாய், ஆலங்காடோ என்று வியக்கும் வண்ணம், அகன்று படர்ந்து விழுதுகள் ஆயிரமாயிரம் விட்டுத் தழைத்தோங்கியது.
பசுமரத்தாணியாய் அருணகிரியார் மனதில் பதிந்த அந்த ஆன்மிகக் கருவூலத்தில் இராமாயணம் முன்னிற்கிறதோ என்று எண்ண வைக்கும் வகையில் இவரது ‘முத்தைத்தரு பத்தித் திருநகை...‘ என்று ஆரம்பிக்கும் முதல் பாடலே ‘பத்து தலை தத்தக் கணைதொடு‘ என்ற வரியினைக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு தலை அரக்கனின் கொடுமையே உலக வேதனை என்னும்போது பத்துத் தலை அரக்கனின் அக்கிரமத்தை அகிலம் தாங்குமா, அதனால்தான் இராவணனுடைய பத்துத் தலைகளையும் கொய்து அரக்கத் தன்மைக்கு முடிவு கட்டினான் இராமன் என்று சொல்வது போல அமைத்திருக்கிறார் அருணகிரியார். அத்தகைய இராமனின் மருகனே என்று முருகனை விளித்து, அவனுடனான இராம (திருமால்) உறவைச் சுட்டிக் காட்டி மகிழ்கிறார்.
ஏற்கெனவே சொன்னதுபோல, ராமாயணச் சம்பவங்களில் பின்னது முன்னாலும், முன்னது பின்னாலும் கொண்டு அமைந்தது திருப்புகழ் என்றாலும், வால்மீகியாரின் பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரையிலான முழு ராமாயணத்தையும் அருணகிரியார் மணமிக்க மென் மலராய் ஆங்காங்கே தூவிச் சென்றிருக்கிறார்.
'ஆலகால படப்பை...' என்று தொடங்கும் பாடலில் 'மேலை வானொருரைத் தசரற்கொரு பாலனாகியுதித்து' என்ற வரியால் இராம அவதாரத்தை சுருக்கமாக வர்ணிக்கிறார்.
இதே பாடலில் ஆரம்பத்தில் விலை மகளிரின் வேசித்தனத்தையும் விவரிக்கிறார். இது மட்டுமல்லாமல் பல்வேறு பாடல்களில் பெண்கள் மற்றும் அவர்களின் கவர்ச்சி பற்றியும், அதனால் தான் வீட்டில் பூச்சியாக சிறகொடிந்து வீழ்ந்து விட்டதையும், அவர்களால் தான் அடைந்த அவமானம், அவலங்கள் பற்றியும், ஆண்களின் மனதை மயக்கும் அவர்களுடைய அங்க லட்சணங்களைப் பற்றியும் பலவாறாகப் பாடுகிறார். இதனாலேயே கல்வி பயின்ற அவரது பால்ய காலத்தைவிட கல்வி பயின்ற அவரது இளமைக் காலமே அனைவர் மனதிலும் பெரிய அளவில் இடம் பெற்றுவிட்டது என்றும் ஊகிக்கலாம்.
தன் சிற்றின்ப மோகத்தால் உன்னைப் பணியும் நல்வாழ்வைப் பெரிதும் சுருக்கிக் கொண்டேனே என்று முருகனிடம் பரிதாபமாக ஓலமிடவும் செய்கிறார்.
‘தொந்தி சரிய’ என்று தொடங்கும் பாடலில், ‘எந்தை வருக, ரகுநாயக வருக, மைந்த வருக, மகனே இனி வருக என்கண் வருக எனதாருயிர் வருக இங்கு வருக அரசே வருக முலை யுண்க வருக மலர்கூடிட வருக என்று பரிவினொடு கோசலை புகல...‘
என்று தாயார் கோசலை தன் மைந்தன் இராமனை பாலருந்த வரச் சொல்லி தாய்மைக் கொஞ்சலாய் அழைப்பதை விவரிக்கிறார்.
எந்தெந்த இடத்தில் பொருந்தி வருமோ அந்தந்த இடத்தில் இராமாயணச் சம்பவங்களை மிகச் சரியாகப் பொருத்தி, தன் நாயகன் முருகனுடன், சக்கரவர்த்தித் திருமகனை (திருமாலை) இணைத்து நயம் மிக்க நற்பாக்களை இயற்றி நம்மை இறும்பூதெய்த வைக்கிறார்.
தாடகையை இராமன் வதைத்த சம்பவத்தை கம்பனின் உணர்வோட்டத்தை ஒட்டியே அருணகிரியாரும் பதிவு செய்கிறார்: ‘வெடுத்த தாடகை சினத்தையோர்கணை
விடுத்து யாகமும் நடத்தியேயொரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் மருகோனே’
கோபம் மிகுந்த தாடகையை தன் ஒரு கணையால் மாய்த்து, விஸ்வாமித்திர முனிவரின் யாகத்தைக் கெடுக்க வந்த அந்த முதல் தடையை வீழ்த்தினான் இராமன். அரக்க கோபத்தை கணையால் வீழ்த்தியவன், சிவதனுசை மென்மையாகப் பற்றி, முறித்து சீதையின் கரம் பிடித்தான் என்று நயம்பட உரைக்கிறார் அருணகிரியார்.
இராமனை திசை திருப்பிவிட்டால், எளிதாக தான் சீதையைக் கவர முடியும் என்று கருதிய இராவணன், தன் மாமனான மாரீசனைப் பொன்மானாகச் சென்று சீதையின் ஆவலைத் தூண்டச் செய்தான். இந்நிகழ்ச்சியை அருணகிரியார் சுருக்கமாகப் பகர்கிறார்.
வரவச் சங்கொடு வந்திடு முழையுடல் சிதற..‘
‘திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
என்பது அவரது வர்ணனை. திருவாகிய சீதை ஆண்மான் என்று பொருள் தரும் உழையைப் பார்த்து, அதன்பால் கவரப்பட்டு அதனை அடையவேண்டும் என்று இராமனிடம் தன் ஏக்கத்தைத் தெரிவிக்கிறாள். தன் கதி என்னவாகப் போகிறதோ என்ற அச்சத்துடன் வந்த மாரீசன் தான் எண்ணியபடியே இராமனது பாணத்தால் உடல் சிதறி மாண்டான். இராவணனது பொருந்தா மோகத்துக்குத் தான் பலியாவதில் தனக்கு விருப்பமே என்றும் அவன் நினைத்துக் கொள்கிறான்.
அனுமனை வர்ணிக்கும்போது, 'பரிதி மகன் வாசல் மந்த்ரி அநுமனோடு நேர் பணிந்து பரிதகழை யாமுன் வந்தும்' என்று குறிப்பிடுகிறார் அருணகிரியார். சூரியனின் மகனாகிய சுக்ரீவனுக்கு நல்வழி காட்டும் அமைச்சனாகப் பொறுப்பேற்றிருப்பவன் அனுமன்; அவன் சூரியனிடமிருந்து நவ வியாகரணங்களைக் கற்றவன் என்ற முறையில் ஒரு மந்திரியாகப் பணியேற்றிருப்பது பொருத்தமானதே என்ற அவனுடைய தகுதி தரத்தை உறுதி செய்வது போல இப்பாடல் அமைந்திருக்கிறது. இங்கும் கல்வியின் மேன்மைக்கு மறைமுகமாகத் தன் ஆதரவைத் தெரிவிக்கிறார் அருணகிரி அண்ணல். அத்தகைய ஞானம் பெற்ற அனுமன் எத்தகையவனாக இருந்தான்?
‘குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித் தெற்கொரு தூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ’
தன் முதல் சந்திப்பிலேயே அனுமனின் பராக்கிரமத்தை இராமனால் அனுமானிக்க முடிந்தது. அவன் காட்டிய விநயம், தேர்ந்தெடுத்து விளம்பிய சொல்லில் தெளிவு, நேரான தீர்க்கமான பார்வை - இவை மூலம் அவன் எதையும் சாதிக்க வல்லவன் என்ற நம்பிக்கை பிறந்தது ராமனுக்கு. அதனால்தான் சீதையைத் தேடச் சென்ற வானரர்களில் அவனை மட்டும் தேர்ந்தெடுத்து அவனிடம் தன் அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டான். தான் அனுப்பிய தூதன் இவன் என்று சீதை நம்ப வேண்டுமானால் இந்தத் தகவல்களை அனுமன் எடுத்து இயம்புதல் அவசியம் என்பதை இராமன் உணர்ந்திருந்தான். அத்தகைய விசுவாசி அனுமன்
யுத்த காண்ட நிகழ்ச்சியை வர்ணிக்கும்போது,
‘பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்றமராடி
பாவியிராவணனார் தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கினியோனே’
என்று குறிப்பிடுகிறார், அருணை தந்த அற்புதனான அருணகிரியார்.
இராவணன் தன்னுடைய தேரின் மீதேறி வந்து இராமனுடன் போர் புரிகிறான். பல சௌகரியங்கள் கொண்ட அந்தத் தேரை, இராவணனுடைய போர்த் திறனுக்கேற்ப முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் நகர்த்தி அவன் எளிதாகப் போர் தொடுக்க வசதி செய்து கொடுத்தான் தேர்ப்பாகன். ஆனால் அப்படி ஒரு வசதி இல்லாததால் தரையில் காலூன்றியபடியே இராமன் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தினான். அது கண்டு பொறுக்காத அனுமன், இராமனைத் தன் தோள்மீது சுமந்து கொண்டான். போர்க்களத் தேர் எவ்வாறெல்லாம் நகருமோ அதுபோலவே நகர்ந்து இராமன் லாவகமாகப் போரிட, அவனுடைய வில்வீச்சுக்கு அனுசரணையாக இயங்கினான். இராவணனிடமிருந்து பாயும் கணைகள் இராமனைத் தாக்கிவிடாதபடி குனிந்தும், நிமிர்ந்தும், விலகியும், நெருங்கியும் அந்த அசுரக் கணைகளைத் தவிர்த்தான்.
இப்படி அனுமனையே ரதமாகக் கொண்டு போரிட்ட இராமன், இராவணனை வீழ்த்தினான் என்ற இந்த நேர்க் குறிப்பில், இராவணனுக்கு 'அர்' என்ற மரியாதை விகுதியை அருணகிரியார் எதற்காக அளித்திருக்கிறார்?
இங்குதான் அவர் பயின்ற பால்ய வயது கல்வியின் மதிப்பு வெளிப்படுகிறது எனலாம். 'எத்தனை சிரேஷ்டன் இந்த இராவணன்!', ‘அவன் வீரம் மிக்கவன்', 'மாட்சிமை பொருந்தியவன்' என்றெல்லாம் கம்பரும் புகழ்கிறார். ஏன், அவன் மரணத் தறுவாயில் இருக்கும்போது அவனிடம் நல்லுபதேசம் பெற்று வருமாறு இராமனே, தன் தம்பி இலட்சுமணனை அனுப்பி வைப்பதாகவும் கம்பர் சொல்லி இராவணனின் மதிப்பை உயர்த்தி வைக்கிறாரே
இலக்கியம், இலக்கணம் கற்றதால், தான் பெற்றிருந்த நற்பண்புகளெல்லாம் பெண் மோகத்தால் புண்ணாய்ப் புரையோடி மறைந்துவிட்ட வேதனையை உணர்ந்ததால்தான் 'இராவணனாரே, இப்படி தாழ்நிலை கொண்டீரே' என்று மறைமுகமாக அருணகிரியார் விசனப்படுகிறார் போலிருக்கிறது
திருப்புகழில் இராமாயண சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போக நேரம் போதாது, எழுதிக்கொண்டே போக பக்கங்கள் போதாது என்பதுதான் உண்மை. ஆகவே, இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.
★★★
தேவார வழியில் திருப்புகழ்
சிவ பெருமான் திரிபுரத்தைச் சிரித்து எரித்தார் என்பதும், மன்மதனை விழித்து எரித்தார் என்பதும் புராணம். இதை மாற்றித் திரிபுரத்தை விழித்து எரித்தார் என்றும், மன்மதனைச் சிரித்து எரித்தார் என்றும் அருணகிரியார் பாடுகிறார்.
“அரிய திரிப்புரம் எரிய விழித்தவன்” (285) என்றும்
“மாரோன் இறக்க நகை தாதா” (288) என்றும்
திருத்தணியில் பாடுகிறார். இதற்குத் தேவாரத்தில் ஆதாரமுள்ளது.
"வாலிய புரத்திலவர் வேவ விழசெய்த ஒருத்தர்” என்பது சம்பந்தர் பாடல். இது திருப்பழுவூர்ப் பாடல் (இரண்டாம் திருமுறை 46ஆம் பதிகம்)
"கொம்புநல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும்" என்பது அப்பர் பாடிய திருவாரூர்ப் பாடல் (நான்காம் திருமுறை 4ஆம் பதிகம்)

