திருப்புகழில் எங்கெல்லாம் முருகன் என்று தேடும் பொழுது, முருகனைப் பற்றி சொல்லாத இடங்களே இல்லையென்று சொல்லுமளவிற்கு அருள்மிகு அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழை மீண்டும் ஒரு முறை பார்க்கக்கூடிய வாய்ப்பு பிறந்ததற்கு எல்லாம் வல்ல அந்த முருகனை வணங்கி இந்தக் கட்டுரையில் என்னுடைய சிற்றறிவிற்கு எட்டிய வகையில் தொட்டுக்காண்பிக்கலாம் என்று எண்ணுகிறேன். பொதுவாக அவரவர் எழுதிய நூலுக்கு எழுதிய பிறகு தலைப்பு பிறப்பு வழக்கம். ஆனால் 12 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் யோக நிலையில் இருந்த ஜீவனை சிவமாக்கிய தோடு மட்டுமல்லாமல் அந்த ஜீவனே தங்க நிறம் பெற்று சுவாமிகளின் சரீரமும் தங்க மேனியாக ஆனது, இந்த நிலையில்தான் சுவாமிகளை முருகப்பெருமான் வயலூருக்கு வா என்று

சொன்னதாகவும். வயலூருக்கு வந்த இடத்தில் “திருப்புகழ்பாடு” என்று முருகனே சொல்ல, அருணகிரியார் எவ்விதக் கல்வியறிவும் இல்லாத நான் எப்படி பாடுவேன் என்று சொல்ல அதற்கு முருகப் பெருமான். “அருணகிரி வாயைத் திற” என்று சொல்லி தன்னுடைய ஞானவேலால் ஓம் எனும் பிரணவத்தை எழுதிய மாத்திரத்தில் முத்து முத்தாகப் பாட ஆரம்பித்தார். அப்படி பாடிய முதல் பாடல் தான் முத்தைத்தரு பத்தித் திருநகை என்ற திருப்புகழாகும். இந்த சம்பவத்தைத் தான்

“செய்ப்பதியும் வைத்து உயர்திருப்புகழ்
விருப்பமொடு செப்புஎன அருள்கை மறவேனே”

என்று நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறார். மேலும் அருணகிரியார். இந்தத் திருப்புகழ் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லுகிறார்.

“இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு மெனவோதும்”

அதனால், அதனை, ஓதுஎன்று நமக்குப் பரிந்துரை செய்கிறார். மேலும்

“விரித்த அருணகிரிநாதன் உரைத்த தமிழ்எனும் மாலை மிகுந்த பலமுடன் ஓதமகிழ்வோனே” என்று முருகனை அறிமுகப்படுத்துகிறார். மேலும் “அறியபத்தனின் அருவியின் இருப்பிடம் அமையும் எனக்கிட உனது பதச் சரண் மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே”

அதாவது சிந்தனை அருவியைப் போல வரக்கூடிய திருப்புகழை எனக்கு இனிமேல் நீ அருளவேணும் என்று அந்த முருகனிடம் கேட்கிறார். மேலும் திருத்தணித் திருப்புகழில் திருப்புகழின் பெருமையைச் சொல்கிறார்.

“இரவொடு பகலற திருப் பதியப்புகழ் அமுது
இயல்கவி செலுவிதித்தன் எழுத்தினை மெலிதர
வொருபொருள் அருள்வாயே”

என்கிறார். அதாவது இந்த திருப்புகழில் முருகனுடைய திருப்புகழ்களைப் பாடிய மாத்திரத்தில் பிரம்மன் எழுதிய தலையெழுத்து மெலிந்து விடுமாம். மேலும் திருத்தணியைப் பற்றிச் சொல்லும்போது,

“திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவு பெருமாளே”

என்கிறார். திருவிடைக்கழித் திருப்புகழில்,

“புலனகற்றிடப் பல வித்தினைப்
புகழ் பலத்தினைத் தரவேணும்” என்றும்
“சித்திரகவித்துவ சத்தமிகுத்த
திருப்புகழைச் சிறிது அடியேனும்
செப்பென வைத்து உலகில் பரவத் தெரிசித்த
அனுகிரகம் மறவேனே” என்றும்
“திருப்புகழ் உரைப்பவர்கள்
படிப்பவர்கள் மிடிப்பகைமை”
“செயித்தருளும் மிசைப்பிரிய
திருத்தமாதவர் புகழ் குருநாதா”

என்று கூறிய அதே வேளையில் முருகப் பெருமான் தன்னுடைய மதிமண்டலத்தில் ஞானத்தைப் பதித்த அனுபவத்தை கூறுகிறார். அதாவது அருணகிரிப்பெருமான் தலையில் முருகப்பெருமான் திருவடி சூட்டிய சம்பவத்தை.

"இரவு பகலருகி நெஞ்சம் அறிவழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டையணி பாதம் எனது தலைமிசை அணிந்து அழுது அழுது உனது அருள் விளங்க இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய்” என்றும் “உனைப்பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தன் குளிமேவி” என்றும் உணர்த்திய போதம் தனைப் பிரியதொண் பொலச் சரணானுந் தொழுவேனோ” என்றும் “இடக்கடக்கும் மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பளித்து எழிற்றினைக் கிரிப்புறத்து உறைவோவே” என்றும் “எடுத்த பொய்க்கடத்தினைப் பொறுக்கும் பிறப்பறுத்து எனக்கு நித்தமுத்தியைத் தர வேணும்” என்றும்

வேண்டிய அருணகிரிநாதர் இந்த திருப்புகழ் எப்படிப்பட்டது என்பதை

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம்யாம்”

என்கிறார். அதே வேகத்தில் திருத்தணி முருகனிடம்

“பலகாலம் உனைத் தொழுவோர்கள், மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்து உடன் வாழ அருள்வேனே”

என்ற, அதே வேளையில், இந்த பூவுலகில் என்னை இந்த உலகமறிய ஆட்கொண்டது நீதானே என்பதை திருச்செங்கோட்டுத் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

“சயிலம் எறிந்த கைவேற்கொடு
மயிலினில் வந்து எனை ஆட்கொளல்
செகம் அறியும்படி காட்டிய குருநாதா” என்கிறார்

மேலும் ரத்தினகிரி என்ற வாட்போகித் திருப்புகழில்,

“பத்தியால் யான் உனைப் பலகாலும்
பத்தியே மாதிருப்புகழ் பாடி
முத்தெனா மாறனை பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு அருள்வாயே” என்கிறார்

விராலிமலைத் திருப்புகழில்,

“மயிலொடு மயலற மலமற அரிய பெரிய திருப்புகழ்” என்றும், “திருப்புகழ் விளம்புமென் முனற்புதமெழுந்தருள் குகவிராலி மலையுறை குரவற லிறைனவ வருகலை பலதெரி விதரண முருகசரவண உற்சவ கிரவுஞ்ச கிதிநிக்ரக” என்றும் “விராலி மாமலையில் நிற்ப நீ கருதி யுற்று வாவென அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து ஞான அமுதளித்து வாரம் இனி நித்தம் மறவேனே” என்றும் தனிச்சியத் திருப்புகழில் “பொற்பதி பாடும் குறித்தனற் திருப்புகழ் ப்ரபுத்துவம் கவித்துவம் குருத்துவித்து எனைப் பணித்தருள்வேனே” என்றும் “கலக்குண்டாகும் இப்புவிதனில் எனக்குண்டாகும் பணிவிடை கணக்குண்டாதல் திருவுள்ளம் அறியாதே”

என்று முருகனிடம் சொல்லும் அருணகிரியார் அதே வேளையில் தமிழ்ப் புலவர்களுக்காக மதுரைத் திருப்புகழில்

“வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ
வரங்களும் அருள்வாயே”

எனப் பரிந்துரை செய்கிறார். மேலும் திருஉத்திரகோச மங்கை திருப்புகழில்

“பொற்புகழ் பாடியச் சிவபதமும் பெற்று
பொருள் ஞானப் பெருவெளியும் பெற்று
புகலாகத் தமுதையும் உண்டிட்டிடுவேனோ”

என்றெல்லாம் தனக்கும் முருகனுக்கும் இருந்தத்தொடர்புகளைச் சுட்டிக் காண்பித்த அருணகிரிப் பெருமான், தானனுபவித்த முருகனை எப்படியெல்லாம் அடையாளம் காண்பிக்கிறார்.

“மேதினியோர் தழைக்கவே யருணாச்சலத்து வீதியின் மேவி நிற்கும் முருகனாம்” மேலும் “அகழியும் மதிள்களும் முழுது முடைய தொரருணையில் உறைதரு யிளையோனாம்” என்றும் "சிவனார் தம்மதலை புனத்திற் புகுந்து விளையாடி நரவடிவுற்றுத் திரிந்து மறமயிலைச் சுற்றி வந்த பெருமாளாம். அடியவர் அச்சத் தழுங்கிடும் துயர் தலைபொழிவித்துப் ப்ரியங்கள் தந்திடும் அருணகிரிக்குட் சிறந்தமர் பெருமாளே." என்றும் “சூடான தொருஜோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே". என்றும் “மரணமில் பொருளதனை யருளுவதொரு நாளே” என்றும் “இளநகை பரப்பி மயில்மிசை நடித்து அழல்கிரிப் பதிக்குள் மருவிய பெருமாளே" என்றும் “கௌதம புனித முனிதொழு அருணையில், அறம் வளர் கருணையுமை தரு சரவண சுரபதி பெருமாளே", என்றும் “சிவனார் படிக்க மவுனமறை ஓது வித்த குருநாதர்”, என்றும் “அறுவர் முலையுணும் அறுமுகன் இவன் என அரிநடமிடு மடியவர் அவரடி தொழ அருணை நகர் தனில் அழகுடன் மருவிய பெருமாளே”, என்றும், “காண அருணையில் நிற்கும் கதிர்வாலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே”, என்றும்,

பல்வகை முருக அனுபவங்களை அருணகிரிப் பெருமான் பறைசாற்றுகிறார், மேலும்

"சித்ரவடி வேல்முனிரு கைக்கார
பத்திரிபுரி வோர்கள் பனு வற்கார
திக்கினுந டாவுபுர விக்கார குறமாது
தித்தஅநுராககல விக்கார
துட்ட அசு ரேசர் கல கக்கார
சிட்டர்பரி பாலலளி தக்கார
முத்திபெற வேசொல்வச னக்கார
தத்தைநிகர் தூயவநி தைக்கார
முச்சகர்ப ராவுசர ணக்கார
முத்தமிழை யாயும்வரி சைக்கார
பச்சைமுகில் தாவுபுரிசைக்கார
முத்துலவு வேலைநகர் முத்தேவர் பெருமாளே", என்றும்,
"இந்தரபுரி காவல்முதன் மைக்கார
சம்ப்ரமம யூரதுர கக்கார
என்று மக லாதஇள மைக்கார குறமாதின்
இன்ப அநு போகசுர சக்கார
வந்தஅசு ரேசர்தல தக்கார
எங்களுமை சேயெனரு மைக்கார மிகுபாவின்
செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
குன்றெறியும் வேலின்வலி மைக்கார
செஞ்சொலடி யார்களெளி மைக்கார எழில்மேவும்

திங்கள்முடி நாதர்சம யக்கார மந்த்ரவுப் தேசமகி மைக்கார செந்தினகர் வாழுமரு மைத்தேவர் பெருமாளே”

என்றும் பலவாறாக அருணகிரிப்பெருமான் முருகப்பெருமானை தாம் எழுதிய திருச்செந்தூர் திருப்புகழில் எளிய வர்க்கத்தினரும் புரிந்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்துகிறார்.

மேலும், திருப்புகழ் ஒரு, 'ஆன்மீக சூப்பர் மார்க்கெட்' என்று திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொல்வார்கள். இதற்குள் நுழைந்தால் படிப்பவருக்குத் தமிழ் தோன்றிய காலம் முதல் அருணகிரிநாதர் தமிழ் பாடிய காலம் வரை உள்ள தகவல்கள் அல்லாமல் அதையும் தாண்டி எதிர்கால நலன்களையும் ஆன்மாவுக்கு உய்வு, உணர்வு தரக்கூடிய ஒரு தகவல் களஞ்சியம் ஆகும். மொழி, இனம், விருப்பு, வெறுப்பு, ஆன்ம உய்வு, மேலும் இறையாண்மை போன்றவைகளையும், எப்பொழுது உன் உயிர் சிறக்கும் என்றும் எப்பொழுது உன் வாழ்க்கை வெற்றியடையும் என்பதையும், விந்தில் இருந்து விறகோடு இந்த ஆன்மாவின் பயணம் முடியவில்லை என்றும், விந்துவுக்கு முன்னால் இருந்தது விறகுக்கு பிறகு என்ன ஆகவேணும் இது யாரிடமும் சிக்கக் கூடாது என்றும் யாரைச் சேரவேணும் என்ற உண்மையை உணர்த்தக் கூடிய ஒரு ஆன்ம இலக்கியமாகும். எல்லாவற்றையும் சொல்லத் தெரிந்தாலும் சொல்ல முடியவில்லை.

“தயவு செய்து ஒரு நாளைக்கு ஒரு திருப்புகழைப் படியுங்கள்” என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னார்கள். உங்கள் உயிருக்கு உயிராய் விளங்கும் முருகன் தெரிவான் . இந்த உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் இந்த உயிரை விட்டுப் பிரியாதவன் என்பதால் முருகனை தம்பிரானே என்கிறார். எமன் என்ற சொல்லுக்கு தடுக்கப்பட வேண்டியவன் என்பது பொருள். ஆகவே உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் அது எமனுடைய பாசத்தில் சிக்காமல், ஜீவன் சிவமெனச் சிறக்கச் செய்து உண்மையான ஆன்ம உய்வைப் பெற்றுத் தரும் தன்மையை உடையது திருப்புகழ் என்றும் அதற்கு துணையாக உள்ளவன் முருகன் என்பதையும் உணர்ந்தவர் அருணகிரிப் பெருமான் ஆவார்.

முருகன் என்ற சொல்லுக்கு ஆன்மாவை மேவிய ஆணவம், அறியாமை போன்ற உயிர் பகைகளையும், உயிர்களையும், தன் ஞானம் என்ற வேலினால் நீக்கி அருளுபவன் முருகனே என்பதை அருணகிரிநாதர் தன் அனுபவரீதியாகச் சொன்னதே இந்த ஆன்ம இலக்கியமான திருப்புகழ் ஆகும். அருணகிரிநாதர் ஒரு ஆன்ம உய்வில் விஞ்ஞானி என்பதை மறந்து விட வேண்டாம். அதனால் அவருடைய வாக்கு உண்மையானது. அதனால் தான் தாயுமான சுவாமிகள்

“ஐயா அருணகிரி அப்பா உனைப் போல மெய்யாக ஒரு சொல் விளம்பினர் யார்” என்கிறார்.

எல்லாவற்றையும் சொல்ல வேணும் என்று தான் ஆசை ஆனால் முடியவில்லை. ஒன்றே ஒன்றைச் சொல்லி முடித்து விடுகிறேன். என்ன என்றால் அருணகிரிப் பெருமான் தான் பாடிய திருப்புகழில் எங்கெல்லாம் ஓங்காரத்தின் பெருமைகளைச் சொல்ல முடியுமோ அங்கெல்லாம் சொல்லியதோடு அல்லாமல் அந்த ஓங்காரத்தின் பொருளை மௌன மொழியாகச் சிவபெருமானுக்கு தமிழால் உணர்த்தினார் என்பதை அருணகிரிப்பெருமான் தன் தாய்மொழியான தமிழுக்குப்பெருமை சேர்க்கும் வகையில் அநேக இடங்களில் சொல்லிருக்கிறார்.

விபூதி அணிவது ஏன்?

விபூதி, பசுவின் சாணத்தை எரித்து உண்டாக்கப்படுவது, புனிதமான, கோமாதா என்று கொண்டாப்படுகிற பசுவின் சாணம் எரிந்து சாம்பலாவது போல், மனிதனின் எண்ணங்களும் முதிர்ச்சி பெற்று, ஞானம் பெறும் போது, தீய எண்ணங்கள், பஸ்பமாகி அழிவில்லாதது. அழிவில்லா சாம்பலைப் பூசிக்கொண்டு அழிவில்லாத பரம்பொருளை நாடி, பக்தியோடு வணங்கும்.