"விழிக்கு துணை திருமென் மலர்பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே” (71)

என்னும் அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாடலில் இடம்பெறும் ‘மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’ என்பது பற்றி சிறிது விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

மொழி என்றால் என்ன? மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் ஒரு கருவியே ஆகும். கருத்துப் பரிமாற்றம் என்பது ஒலி வடிவத்தாலும் வரி வடிவத்தாலும் நிகழ்கிறது. மனிதனுக்கு மட்டுமே மாபெரும் உடைமையாகத் திகழ்வது மொழியே. மனிதனையும் மற்ற உயிரினத்தையும் வேறுபடுத்தி காட்டுவதும் மொழியே. மொழி இல்லாவிட்டால் மனித நாகரீகமே இல்லை. நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற அறிவுக் கருவூலத்தை நாம் இன்று கண்டு துய்ப்பதற்கும், நாம் இன்று பெற்றுள்ள அறிவுச் செல்வத்தை நமது வழித் தோன்றல்களுக்கு வழங்குவதற்கும் மொழியே துணையாக உள்ளது. மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்திவரும் அரிய கலையே மொழி.

இத்தகைய மொழிகளில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி பழமைக்கும் பழமையாகவும் புதுமைக்கும் புதுமையாகவும் திகழும் சிறப்புடையது. இலக்கண இலக்கிய வளம் மிக்க ஒன்றாகவும் விளங்குகிறது. திராவிட மொழிக் குடும்பத்தில் தொன்மையான மொழி தமிழ். கன்னடமும், தெலுங்கும், கவின் மலையாளமும் கிளைத்தெழக் காரணமாக இருந்தும் சீரிளமைத் திறம் குன்றாத மொழி செம்மொழியான நம் செந்தமிழ் மொழி. எனவே மெய்ம்மை குன்றா மொழி நம் மேன்மைத் தமிழே ஆகும்.

தமிழில் மொழி என்னும் சொல் பெயர் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் இருக்கும் இயல்பினது. பெயர்ச்சொல்லாக இருந்தால் பேசும் மொழியை (Language) குறிக்கும் வினைச் சொல்லாக இருந்தால் மொழிதல் பேசுதல் என்னும் பொருள் தரும். எனவே மொழி என்பது பெயர் வினை பாகுபாடு தோன்றுவதற்கு முன்னமே தோன்றிய பழமை வாய்ந்த சொல்லாகும். இத்தகைய மொழிக்குத் துணையாக முருகா எனும் நாமங்கள் இருப்பதைப் பார்ப்போம்.

மொழிக்கு அடிப்படை ஒலி. 'மொழி முதல் காரணமாம் அணுத்திறள் ஒலி எழுத்து' என்று நன்னூல் இலக்கணமும் கூறுகிறது. ஒலியே மொழியாகிறது. மண்ணே குடமாவது போல என்பது கருத்து. மொழியைப் பேச வேண்டுமானால் ஒருவர் வாயைத் திறக்க வேண்டும். வாயைத் திறந்தவுடன் வருவது அகர ஒலியே. எனவேதான் திருவள்ளுவர் கடவுள் உண்மையை ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்னும் முதற் குறள் வாயிலாகக் கூறுகிறார். உலகத்திலுள்ள எல்லா மொழிக்கும் அடிப்படை அகர ஒலியே. அருணகிரிப் பெருமான் திருப்புகழில் பழமுதிர்சோலையைப் பாடும் போது ‘அகரமுகமாகி அதிபனுமாகி’ முருகன் இருப்பதைக் குறிப்பிடுகிறார். மொழிக்குத் துணையாக முருகன் இருப்பதை நாம் பொது நிலையில் உணர முடிகிறது.

ஒலிகளை உயிரொலிகள் என்றும், மெய்யொலிகள் என்றும் பாகுபடுத்திப் பார்ப்பது உலக மொழிகளுக்கெல்லாம் ஒரு பொதுமைப் பண்பாகும். அந்த அடிப்படையில் தமிழில் உயிரெழுத்துக்கள் 12 என்றும், மெய்யெழுத்துக்கள் 18 என்றும், ஆய்த எழுத்து ஒன்று என்றும் கூறுகிறோம். அந்த நோக்கில் முருகப்பெருமானின் 12 கைகளும் தமிழின் 12 உயிரெழுத்துகளாகவும், 18 கண்களும் 18 மெய்யெழுத்துகளாகவும், ஆயுதம் அவனது வேலாகவும் கருதப்படுகின்றன. இந்த வகையிலும் தமிழ் மொழியின் இயக்கத்திற்கு உறுதுணையாக முருகப்பெருமான் அமைகிறான் எனலாம்.

முருகா என்னும் சொல்லைப் பார்ப்போம். எழுத்துக்கள் தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரும்போது சொல்லாகிறது. 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பியம். முதலில் முருகா என்னும் சொல்லுக்கு அடிப்படையாக உள்ள முருகு என்னும் சொல்லமைப்பைப் பாருங்கள்.

ம்உ+ர்உ+க்உ இந்த ஆறு எழுத்துக்களின் கூட்டமைப்பே முருகு என்பது. முருகப் பெருமானின் ஆறு முகங்களையும் ஆறு படை வீடுகளையும் ஆறெழுத்து மந்திரங்களையும் இச்சொல்லமைப்பு ஆறு எழுத்துக்களின் எண்ணிக்கை உணர்த்தவில்லையா?

மேலும் தமிழில் மெய்யெழுத்தை வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பகுப்பர். க், ச், ட், த், ப், ற் - வல்லினம், ங், ஞ், ண், ந், ம், ன் – மெல்லினம், ய், ர், ல், வ், ழ், ள் – இடையினம். ம் என்பது மெல்லினம். ர் என்பது இடையினம், க் என்பது வல்லினம். இம்மூன்றுடன் உ என்பது சேர முருகு என்பது உருவாகியுள்ளது. ஓம் என்னும் பிரணவ மந்திரம் அஉம் என்னும் மூன்றெழுத்தின் கூட்டமைப்பு என்றும் இதிலுள்ள உ காக்கும் மொழியைக் காட்டுவது என்றும் கிருபானந்த வாரியார் கூறுவார்.

முருகு என்னும் சொல்லுக்குரிய பொருளைத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் 'மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி' என்னும் தொடர்வழி விளக்குகிறார். அதாவது மாறா மனம், இளமைத் தன்மை, என்றும் நிற்கும் இறைமை, அழியா அழகு என்பது முருகு என்பதன் பொருள் எனத் திரு. வி. கல்யாண சுந்தரனார் ‘முருகன் அல்லது அழகு' என்னும் நூலில் விளக்குகிறார். திவாகரம், பிங்கலந்தை, நாமதீப நிகண்டு முதலியவைகளைப் புரட்டினால் முருகு என்னும் சொல்லுக்கு அழகு, பூந்தட்டு, கல், தேன், எலுமிச்சை, எழுச்சி, அகில், முதுகு என்னும் வாத்தியம் எனப் பல பொருள் கிடைக்கும். 'கண்ணுக்கு அழகாக, காதிற்கு நாதமாக, நாவிற்கு அமுதமாக, மூக்கிற்கு மணமாக, உடலுக்கு இனிய பரிசமாக, கருத்திற்கு விருந்தாக, உயிருக்கு உணர்வாக இப்படி எல்லாமாக இருந்து துணை புரிபவன் முருகன்' என்று அறிஞர் கூறுவார்.

தமிழ் மொழியில் தேர்ந்த புலமை பெற்றோரை புலவர் என அழைத்துப் போற்றுவர். திருமுருகாற்றுப்படை முருகனை 'பலர் புகழ் நன்மொழி புலவர் ஏறே' என்று அழைக்கிறது. முருகப்பெருமான் புலவர் தலைவனாய்ச் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்ததாக இறையனார் களவியல் உரை கூறுகிறது மேலும் இறையனார் களவியலுக்கு உரை தொடர்ந்தவன் முருகன் என்பதும் ஆன்மீகக் கருத்து திருமுருகாற்றுப்படையை உழவர் ஆற்றுப்படை என்றும் அழைப்பர். பத்துப்பாட்டில் உள்ள நூல்களை பட்டியலிடும் பழைய பாட்டு திருமுருகாற்றுப்படையை முருகு என்ற பெயரிட்டு அழைக்கிறது.

தமிழ் மொழியின் தொன்மை இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். இது பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாகும். பத்துப்பாட்டின் முதல் பாட்டு திருமுருருகாற்றுப்படை இதை இயற்றியவர் தமிழ்ச் சங்க தலைவர் நக்கீரர் முருகன். இடத்தில் அடியார்களை சென்று அருள் பெற வழி காட்டுவதே முருகாற்றுப்படை. எட்டுத்தொகை நூலாகிய பரிபாடலில் முருகனைப் பற்றி பாடல்கள் உள்ளன. பரிபாடல் என்பது பண்புடன் பாடக்கூடிய இசைப் பாடலாகும்

சங்க இலக்கியத்தின் பாடுபொருள் அகம் - புறம் என பாகுபடுத்துதல். அகம் என்பது காதலியும் புறம் என்பது போர் வீரம், கொடை முதலியவற்றையும் பற்றி பேசும். அகம், புறம் பாகுபாடு தமிழில் சிறப்பு என்பர் அக நூலாசிரியர்கள். நற்றிணையில் முருகோடு உணர்ந்த வள்ளி போல என்னும் தொடர் வருகின்றது புறநூல் ஆகிய புறநானூற்றில் முதுகு ஒத்தியே முண்ணியது முடித்தலின் என்று கருதியதை நிறைவேற்றும் கந்தப் பெருமாளின் இயல்பை பேசுகிறது. இவை அனைத்தும் முருகு என்னும் நாமம் தமிழ் இலக்கியத்திற்கு துணையாவதை காட்டும் சான்றுகள் ஆகும்.

முருகன் என்னும் சொல் விளி வேற்றுமைப் பொருளில் அவனை அழைக்கும் நிலையில் முருகா என வரும் சோழன் சோழா பாண்டியன், பாண்டியா என்பது போல இது அமையும் இது முருகா என்று மந்திரச் சொல்லாக மாறும்.

“அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமறில் அஞ்சல் எனவேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்”

என்னும் திருமுருகாற்று படையிலுள்ள வெண்பா வழி முருகா என்று காதலாகிக் கசிந்து ஓதுவார் பெறும் நன்மைகளை நாம் அறிய முடிகிறது. இது கருதி அருணகிரிப்பெருமானும் நம் கந்தர் அனுபூதியில் ‘முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்'

எனக் கேட்கிறார் கந்தரலங்காரத்தில் நெஞ்சமே! முருகா என்கிலை! தஞ்சம் ஏது நமக்கு என்கிறார்.

முருகா! முருகா! என்று பலமுறை உருகினால் முருகன் அருள் கிடைக்கும் என்பதைத்தான் முருகா எனும் நாமங்கள் எனும் பன்மைச் சொல் உணர்த்துகிறது. மேலும் ஒரு நாமம் ஒருவரும் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் ஆடி நாம் தெள்ளேணம் கொட்டோமோ என்னும் திருவாசகத் தொடருக்கு ஏற்ப முருகப் பெருமானுக்குரிய பல திருப்பெயர்களை சொல்லி உருகும் செயலையும் நாமங்கள் என்னும் பன்மைச் சொல் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

முருகப்பெருமான் குருவாய் வந்து அருள் புரியும் தன்மையுடன் அருணகிரிநாதருக்கு அவன் குருவாய் வந்து சும்மா இரு என சொல்லிச் சென்றான் இச்செய்தியை சொல்லும் இடத்தில் அருணகிரி யார் முருகனிடம் திருப்பெயரை குறிப்பிடுகிறார் இதற்கு பின்வரும் கந்தரனுபூதி பாடலே சான்று.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே”

நாம் இறையருள்பெற கடைசி நிலையிலும் உதவுகிறது முருகனருள்.

மொழியைக் கடந்து நிற்பது மௌனம். அதாவது பேசா நிலை. அதற்கும் முருகா எனும் நாமம் துணையாவதைக் கீழ்வரும் கந்தரனுபூதி பாடல் கூறுவதை காண்க.

“தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின, பின்
பேசா அனுபூதி பிறந்ததுவே”

எனவே மொழிக்கும் மொழி கடந்த நிலைக்கும் முருகா எனும் நாமங்களே துணை எனக் கொண்டு, அவனைத்தொழுது அவன் அருள்பெற்று உயிர்வோமாக.

★★★

மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத், துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி, தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும் என்னப்பா இன்னுமிந்த ஏழைக் கிரங்காயோ.

— வள்ளலார்

வண்ணச்சரவம் தண்டபாணி சுவாமிகள் பாடியுள்ள புலவர் புராணத்தில் அருணகிரிநாதர் சருக்கம் என்ற பகுதியில் திருப்புகழின் பெருமைகளை பல இடங்களில் அழகாக எடுத்துக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு செய்தி வருமாறு: திருவேரகம் என்னும் சுவாமி மலையில் ஒருவன் வயிற்று வலியால் மிகவும் துன்புற்றான். வைத்தியம் பல செய்தும் அவனது வலி தீரவில்லை. அருணகிரிநாதரின் திருப்புகழைத் தினமும் பாராயணம் செய்தால் வயிற்று வலி நீங்கும் என்று அன்பர் கூறிய மொழியை நம்பி பாராயணம் செய்தான். படிப்பறிவு அதிகம் இல்லாத அவன் திருப்புகழைப் பிழையுடன் சந்தம் கெட படித்து வந்தான். இப்படி பிழையுடன் பாராயணம் செய்வதைக் கண்ட திருவேரகப்பெருமான் அவன் கண்ணெதிரில் காட்சியளித்து 'என் நண்பன் ஆகிய அருணகிரியின் திருப்புகழை இப்படி பிழையுடன் சந்தம் தவறி படித்திடாதே! உன் விருப்பப்படி உனக்கு ஏற்பட்ட வயிற்று வலி இன்றுடன் தீரும்' என்று அருளினார். பிழையுடன் படித்தவனுக்கு விரைவில் கண்முன் தோன்றி காட்சியளித்தான் என்றால் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து திருப்புகழைப் படிப்பவருக்கு எத்தகையபெரும் பயன் தருவான் என்று வியக்கிறார்.