உலகம் உய்ய உதித்தவன் நம் முருகன் அவன் நம் தமிழர்களின் கடவுளாவான் 'முருகு' என்ற வார்த்தைக்கு அழகு என்று பொருள் அழகை ரசிக்கும் நம் தமிழர்கள், தம் கடவுளையும் அழகனாய்க் கண்டு மகிழ்ந்தனர்

★★★

இயற்கை நிலங்களை நான்காய் வகுத்தனர் நம் தமிழ்ச் சான்றோர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என, அந்த நான்கு நிலங்களுக்கும் அவர்கள் பெயரிட்டனர். குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாம். முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமுமாம். மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமுமாம். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்(பு) இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்பது இலக்கணச்சூத்திரம் மழை பொய்த்தபுதுப் போக முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும். வளம் இழந்து பாலை நிலமாய் மாறும் என்கிறது இச் சூத்திரம். செயற்கை நிலமாகிய இப்பாலை நிலம் என்பது, மணலும் மணல் சார்ந்த இடமுமாம்.

★★★

மேகங்கள் சூழ்ந்து மழைப்பொழிய மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் காடு வழியாக வழிந்தோடி வயல் நிலங்களுக்குப் பயன் செய்து, இறுதியில் கடலில் கலப்பது இயற்கை. இயற்கையில் அமைந்ததான, இவ் ஆற்றின் வழித்தடத்தை நோக்கியே, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும், நிலவரிசை அமைக்கப்பட்டதென்பர்.

★★★ குறிஞ்சிக்கு முருகனையும், முல்லைக்கு திருமாலையும், மருதத்திற்கு இந்திரனையும், நெய்தலுக்கு வருணனையும், பாலைக்கு கொற்றவையையும் தெய்வங்களாக்கி, நம் சங்கச் சான்றோர் இலக்கியம் செய்தனர்.

இந் நாநிலங்களில் குறிஞ்சியே உயர்ந்த நிலமாம் மேகங்கள் சூழ்ந்து எப்போதும் மழைபொழியும் இந் நிலத்தில், குளிர்மையும் அழகும் என்றென்றும் கொட்டிக் கிடக்கும். அத்தகைய அழகும் இனிமையும் பொருந்திய இந் நிலத்தை, தம் இறைவனாகிய முருகனுக்காக்கி தமிழர்கள் மகிழ்ந்தனர். அதனால் நம் முருகனுக்கு 'குறிஞ்சிக்கிழவன்' எனும் பெயர் உண்டாயிற்று.

★★★

நிலங்களில் உயர்ந்த நிலத்தை, அழகனான முருகனுக்கு ஆக்கியதோடு, மொழிகளில் உயர்ந்ததான தமிழையும் முருகனின் உரிமையாக்கி, நம் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி, முருகனின் வடிவில், தமிழின் வடிவத்தைப் பொருத்திக் கண்டு நிறைவுற்றனர் அவர்கள்

★★★

★★★

ஆறு தலைகளும், பன்னிரண்டு கைகளும், பதினெட்டு விழிகளும் கொண்டும், வேலாயுதத்தைக் கையிலேந்தியும் நிற்பவன் நம் முருகன். முருகனின் அவ்வடிவத்தில் அமைந்த ஆறு தலைகளில், ஆறு ஆறாய் அமைந்த தமிழின் இன எழுத்துகளையும், பன்னிரண்டு கைகளில், தமிழின் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களையும், பதினெட்டு விழிகளில், தமிழின் பதினெட்டு மெய்யெழுத்தக்களையும், அவனது கையில் உள்ள ஆயுதத்தில், தமிழின் ஆய்த எழுத்தையும் பொருத்திக்கொண்டு, முருகனைத் தமிழின் வடிவமாகவே கொண்டு, மகிழ்ந்தனர் நம் தமிழர்கள்

★★★

முருகன் ஆணாகிய சிவனிலிருந்து மட்டும் தோன்றியதால், இவ்வுலகில் முருகன் ஒருவனே ஆண்பிள்ளை என்று, நயமுரைத்து மகிழ்வர் நம் சமயப் பெரியோர். கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார், முருகனின் தோற்றத்தை அழகுற எடுத்துரைக்கிறார் அருவமும் உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய. முருகன் தோன்றியதை உரைக்கும் இப் பாடலில், நம் சைவசித்தாந்தத் தத்துவங்கள் அனைத்தையும், உள்ளடக்கி விடுகிறார் கச்சியப்பர்.

☆☆☆

இப் பாடலில் வரும்

‘அருவமும் உருவமாகி’ என்ற தொடரால், ‘தடத்த நிலையில்’ இறைவன் கொள்ளும், அருவம், அருவருவம், உருவம் எனும், மூன்று நிலைகளையும் குறிப்பதனால் சுட்டுகிறார் அவர்.

★★★

'அனாதியாய்' என்னும் சொல்லில், இறைவன் தொடக்கறமற்றவன் என்பதையும், தொடக்கமற்றவன் என்பதால், முடிவும் அற்றவன் என்பதையும், இவ்விரு உண்மைகளாலும், 'இறை' என்றும் உள் பொருளாம் என்பதையும், அவர் சுட்டும் அழகே அழகாம்.

★★★

‘பலவாய் ஒன்றாய்’ எனும் தொடரால், இறைவன் இவ்வுலகுடன், ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கும் செய்தி உரைக்கப்படுகிறது.

★★★

'பிரம்மமாய் நின்ற' எனும் தொடரால், நம் முருகன் அருவம், அருவருவம், உருவம் என்கின்ற இறையின் 'தடத்தநிலை' யாய் மட்டுமன்றி, 'பிரம்மம்' என்கின்ற 'சொரூபநிலை' யாகவும் நிற்பவன் என்பதையும், உணர்த்தி விடுகிறார் அவர்.

★★★

'சோதிப் பிழம்பதோர் மேனியாகி' எனும் தொடரால், முருகன் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த, தீப்பொறிகளில் இருந்து தோன்றியவன் எனும், வரலாறு உரைக்கப்படுகிறது

★★★ 'கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே' என அவன் எடுத்த வடிவழகை எமக்கு உணர்த்தி, முருகனது ஆறு முகங்களும், அடியார்களைக் கருணைகொண்டு நோக்குவன என்பதனையும், அக் கருணையால் அவனது பன்னிரண்டு கரங்களும், அவர்களைக் காக்க வல்லன என்பதனையும், குறிப்பால் சுட்டுகிறார் சிவாச்சாரியார்.

நிறைவாக

★★★

'ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய' என்று பாடலை நிறைவு செய்கிறார் அவர். முருகனது ஆறு முகங்களும், அடியார்களைக் கருணைகொண்டு நோக்குவன என்பதனையும், அக் கருணையால் அவனது பன்னிரண்டு கரங்களும், அவர்களைக் காக்க வல்லன என்பதனையும், குறிப்பால் சுட்டுகிறார் சிவாச்சாரியார்.

★★★

ஆண்டவன் அருள் இல்லாமல் திருப்புகழ் போன்ற நூலை எழுத முடியாது. உலகில் யாராலும் எழுத முடியாத சந்தங்களை எழுதியவர்தான் அருணகிரிநாதர். அவர் முருகரின் அருளைப் பெற்று எழுதியிருக்கிறார். இந்த மண்ணிலே பிறந்து, இங்கேயே வாழ்ந்து , இங்கே திருப்புகழ்ப்பாடி இருக்கிறார் என்றால் இந்த மண்ணுக்கு எவ்வளவு பெரிய மகிமை உண்டு. அதைக் காட்டிலும் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு நான் சொல்ல வேண்டும். அமெரிக்காவிலே மருத்துவமனையிலே நியூரோ சயின்ஸ் துறையிலே மூளை அறுவை

சிகிச்சை செய்துகொண்ட அல்லது நியூரோ நோயாளிகளுக்கு ஸ்பீச் தெரபி கொடுத்து மறுபடியும் பேச்சு வருவதற்கு அங்கு என்ன சொல்லித் தராங்க தெரியுமா?

‘முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்’

போன்ற பல திருப்புகழ்ப் பாடல்களை எல்லாம் நோயாளிகளைச் சொல்ல வைக்கின்றார்கள். ஏனென்றால் அப்போதுதான் அந்த நாக்கு மடியும். மீண்டும் அவருக்கு பேச்சு கிடைக்கும். பேச வேண்டும் என்று அவர்கள் நினைப்பதற்கு மூளைக்கும் உண்டான அந்த கனெக்சன் கொடுக்கின்றது. பேச்சுத் திறமையை வளர்க்கின்றது. அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தை நிகழ்த்தியவர் தான் இந்த மண்ணிலே பிறந்த அருணகிரிநாதர்.

— நடிகர் விவேக், திருவண்ணாமலையில் நடைபெற்ற தூய்மை அருணை விழாவில் பேசியது