தலைவர், அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம், புதுச்சேரி.
“அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையில்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே”
அருணகிரிநாதரை நினைத்த நொடிப்பொழுதிலேயே நம் உள்ளத்திலே முருகப்பெருமான் வந்து குடிகொண்டுவிடுகின்றார். அது மட்டுமா? அவருடைய சந்தப்பாக்கள், தமிழ் உணர்வையும், பய பத்தியுடன் கூடிய ஆன்மிக உணர்வையும், ஞானத்தையும் ஊட்டி அதனால் பேரானந்த நிலைக்குச் செல்லக்கூடிய மெய் அறிவை புகட்டுகின்றது. முதற்கண், நமது குருநாதர் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை
ஏட்டிலிருந்து அச்சு வாகனத்தில் ஏற்றிய திரு.வ.த.சுப்ரமணியபிள்ளை அவர்களுக்கும் திருப்புகழுக்கு உரை மற்றும் ஆராய்ச்சி உரை எழுதி முருகவேள் பன்னிரு திருமுறையாகத் தொகுத்து வழங்கிய அவரது மகன் திரு.வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்களுக்கும் நாம் காலமெல்லாம் நன்றிக் கடன் பட்டவராக உள்ளோம். இந்த உரை மற்றும் ஆராய்ச்சி உரை தவிர, அருணகிரிநாதரின் படைப்புகள் மற்றும் அருணகிரிநாதருக்குப் பின்வந்த அருளாளர்கள் அருணகிரிநாதரைப்பற்றிக் கூறியுள்ள விடயங்களை வைத்துதான் நாம் அருணகிரிநாதரின் வரலாற்றை ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. அடியேனுக்கு திருப்புகழில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அருணகிரிநாதர் காட்டியுள்ள முத்தி இன்பத்தை எடுத்துரைத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் புதுச்சேரியில் இயங்கிவரும் அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் தலைவராகவும் ஆக்கிய அதன் நிறுவனரும், அடியேனின் குருநாதருமாகிய திரு.சேது முருகபூபதி (நீதிபதி -ஓய்வு) அவர்களை வணங்கி அவரின் ஆசியுடன் இக்கட்டுரையை வழங்குவதில் அகமகிழ்கின்றேன். தனித்துவத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் அருணகிரிநாதரின் மணிமண்டபம் அவரது சந்தப்பாக்களை பன்மடங்கு உயர்த்திப் பிடித்து மனித சமுதாயம் உய்வுபெற வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையையும், தாய் மொழியான தமிழையும் மறந்து, மக்கள் ஆசாபாசங்களில் அதிகம் ஈடுபட்டு நன்றி மறந்திருந்த காலம். இதனால், உயிரை மேவி இருக்கக்கூடிய மும்மலங்களினால் (ஆணவம்,கன்மம்,மாயை) ஆன்மா வினை வசப்பட்டு மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் நிலை. பிறப்பு, இறப்பு என்பது ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு இடமாற்றம் செய்யப்படுவதைப் போன்றதே. பரகதிமுத்தி என்பது, ஆன்மா மீண்டும் பிறவாமல் சிறையிலிருந்து முழுமையான விடுதலை பெற்று இறைவனிடம் ஒடுங்குவதாகும்.ஆன்மா முழுமையான விடுதலைபெற்று முத்தி இன்பம் பெற முருகப்பெருமானின் அருளைவேண்டி, ஞானத் தமிழில் சந்தத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்டதுதான் திருப்புகழ். நமக்கு கிடைத்துள்ள 1300 க்கும் மேற்பட்ட பாடல்களில் 1008 சந்த பேதங்கள் கொண்ட பாடல்கள் உள்ளன. அறம்,பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என நான்கையும் உள்ளடக்கி அற்புதமான சந்தத் தமிழில் திருப்புகழ் என்னும் ஞான சுவாசத்தை நாமெல்லாம் சுவாசித்து இறைவனிடம் தொடர்புகொள்ள 5g தொழில்நுட்பத்தில் unlimited package at free of cost இல் அன்றே பாடி நம்மிடையே பந்தத்தை ஏற்படுத்தி நம் அனைவரையும் சொந்தம் ஆக்கிக் கொண்டவர்தான் அருணகிரிநாதர். கி.பி.1450 ஆம் ஆண்டில் இருந்த பிரபுடதேவமாராஜர் ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர் தான் அருணகிரிநாதர். அவர் வாழ்ந்த காலத்திலேயே நான்கு திசைகளிலும் இருந்த அடியவர்கள் திருப்புகழை மெச்சி ஓதினார்கள் என்று, “பூர்வ பச்சிம தட்சிண வுத்திர திக்குள பத்தர்க ளற்புத மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்த திருப்புக ழைச்சிறி தடியேனுஞ்.... என “பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு............என்கின்ற திருச்செங்கோட்டு திருப்புகழில் பாடியுள்ளார். அருணகிரிநாதர் அருளியுள்ள நூல்கள் “திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரந்தாதி, கந்தரநுபூதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் மற்றும் திருவெழுகூற் றிருக்கை முதலியவைகளாகும். புலவர் புராணம் மிக அதிக அளவில் பாடப்பட்டது திருவள்ளுவருக்குத்தான். அதற்கு அடுத்தபடியாக புலவர் புராணம் அதிகமாக பாடப்பட்டது அருணகிரிநாதருக்குத்தான்
அருணகிரிநாதரைப் போற்றியவர்கள்:-
திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், தாயுமான சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், மதுரை திருப்புகழ்சாமி, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குருஜி ஏ.எஸ்.ராகவன் என தவசீலர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கின்றன.
திருப்புகழின் தனித்துவம்:-
பல்பொருள் அங்காடி மற்றும் வணிக வளாகங்களில் நமக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். அதுபோல, திருப்புகழில், வேதங்கள் / இராமாயணம் / மகாபாரதம் / திருமுறைகள் / அறுசமய கோட்பாடுகள் என அனைத்தையும் சந்த நயத்துடன் அருளியுள்ளார் நமது குருநாதர். இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சான்றோர் பெருமக்களால் பாடப்பட்ட திருப்புகழ் சிறப்புப் பாயிரங்கள் ஒன்றில் கூறியுள்ளதைப் பார்ப்போம்:-
“வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம் ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன்தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம்”
இதற்கு வேதம் வேண்டாம், கீதை வேண்டாம் என்று பொருள் அல்ல. வேதத்திலும், கீதையிலும் இருப்பதெல்லாம் திருப்புகழிலேயே இருக்கின்றது என்று அர்த்தம்.
ஏன் சந்தத்தில் பாடினார்? என்றென்றும் புதுமையாக இருக்கும் வகையிலும், படிப்போர் / துதிப்போர் / கேட்போர் செவி வழிச்சென்று, உள்ளத்திலே உற்சாக அதிர்வலையை ஏற்படுத்தி, பின் எவ்வித சலனமுமின்றி தெளிந்து, உண்மைப்பொருளை அறிந்து, இறைவனின் திருவடிகளில் சரணடைய எளிதாக இருக்கும் என்பதற்காகத்தான். அதுமட்டுமல்லாமல், சந்தப்பாடல்கள் இறைவனுக்கு உகந்ததாகும். அதனால்தான், சந்தக்கவியாக “முத்தைத்தரு” என்னும் முதலெடுத்து முருகப்பெருமான் அருணகிரிநாதரை பாடச் சொன்னர் என்று தெரியவருகிறது (“சிந்துற்றெழு மாமதி........ எனத்தொடங்கும் சீர்காழித் திருப்புகழில் “சந்தக்கவி நூலினர் தஞ்சொற் கினியோனே..... என வருவதைக் காண்க).மேலும், எமன் வந்தபோது மார்க்கண்டேயர் வடநூல் சந்தக்கவியால் இறைவனை வணங்கிக்கொண்டிருந்தார் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
திருப்புகழின் முதல் பாதியில், தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மெய் அறிவைப்பெறாத பொய்யான வாழ்க்கையைப்பற்றி கூறுகிறார். இரண்டாம் பாதியில், மெய் அறிவைப்பெற்று மீண்டும் பிறவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார். இவ்வுலகில், நாம் மீண்டும் மீண்டும் வந்து பிறவாமல், பரகதி முத்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்று நமக்கெல்லாம் ஞானத் தமிழில் ஞான சுவாசத்தை ஏற்படுத்திக்கொடுத்த நமது குருநாதர் கூறுவதை ஒரு சில பாடல்களிலிருந்து நாம் பார்ப்போம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலக வாழ்க்கை மின்னல் தோன்றி உடனே மறைவது போன்று நிலையில்லாத வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார்.
“மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்....... (கந்தரநுபூதி-27)
“அல்லில் நேருமி னதுதானும்
அல்ல தாகிய உடல்மாயை................................(வள்ளியூர் திருப்புகழ்)
இப்படி மின்னல் போன்று தோன்றி மறையும் வழக்கையின் கதி என்ன
“முட்டுப் பட்டுக் கதிதோறும்
முற்றச் சுற்றிப் பலநாளும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் கருதாதோ -------
(காஞ்சிபுரம் திருப்புகழ்)
பொருள்:-சங்கடப்பட்டு தேவ, மனித, நரக, விலங்கு என்னும் நான்கு கதிகளிலும் (வினைப்பயனால் கட்டப்பட்ட உயிர்கள் ஒரு பிறவியிலிருந்து வேறு பிறவியில் மாறி மாறி பிறப்பது கதி என்பதாகும்) பிறந்து, இறந்து, அலைந்து, பலகாலமாகத் தடைபட்டுச் சுழல்கின்ற அடியேனை சிறிது திருவருள் கொண்டு ஆண்டுகொள்ள நினைக்கலாகாதோ? என்று நம் குருநாதர் வேண்டுகின்றார்.
கணக்கிலடங்கா உயிர்கள் தத்தம் கர்ம வினையால் இந்த நாற்கதிகளில் சுழல்கின்றன.இந்த நாற்கதிகளில் சுழலாமல் அதிலிருந்து விடுதலை பெற்று பரகதி முத்தி அடைவது எப்படி என்று அருணகிரிநாதர் சந்தத் தமிழிலில் கூறியுள்ளதை, ஒரு சில பாடல்களின் வழியாக பார்ப்போம். முதலாவதவதாக, நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்பதை வயலூர் திருப்புகழில் முதல் நான்கு அடிகளில் இப்படி குறிப்பிடுகின்றார்:-
“என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் இங்குநானார்----------
இப்படி எதுவுமே நம் செயல் இல்லையென்றால், உலக அறிவுக்கு எட்டாத மெய் அறிவைப்பெற்று அதன் மூலம் மோட்ச கதியை அடைய இறைவன் அருள் இருந்தால் மட்டுமே முடியும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. அதனால் தான் அருணகிரிநாதர் 'உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி என்று தொடங்கும் திருப்புகழில் என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே என்று வேண்டுகின்றார்.
இறைவனின் அருளைப்பெற, மனம் ஒருமைப்பட்டு இறைவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும். இதை “சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க அறியாத...... என்று தொடங்கும் சுவாமிமலை திருப்புகழில் குறிப்பிடுகின்றார். ஆனால் மனமோ ஐம்புலன்களின் வழியாக இந்த நிலையற்ற உலகப் பொருள்களில் மயங்கி சிறுது சிறிதாக அவற்றை அனுபவிக்கத் தொடங்கி பின் அவைகளிலேயே மூழ்கி விடுகின்றது. இது உயிரானது மெய் அறிவைப்பெற (இறைவனது அறிவைப்பெற) முடியாமல் மறைத்து விடுகின்றது. அதனால்தான் இந்த நிலையை ஒழிக்கும் விதமாக மனக் கவலையை தீர்த்தருள வேண்டும் என்று கந்தரநுபூதியில் அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.
“எந்தாயும் எனக் கருத்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்....... (கந்தரநுபூதி- 46)
மனம் தான் பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகிறது. எனவே மனதை முதலில் தூர்வார வேண்டும். மனதை முன்னிலைப்படுத்தி அருணகிரிநாதர் பாடியுள்ள பாடல்கள்:-
“கெடுவாய் மனனே கதிகேள் .................... (கந்தரநுபூதி- 7)
“கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பேற்
றுய்வாய் மனனே................................... (கந்தரநுபூதி- 14)
“தடுங்கோள் மனத்தை................................(கந்தரலங்காரம்- 16)
இந்த உபதேசத்திற்குப் பின் அருணகிரிநாதர் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் உன்னை எனது உள்ளம் (மனம்) அறியும் அன்பைத் தருவாயே என்பதே
உனையெனது ளறியு மன்பைத் தருவாயே-------
(“இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி...........(திருச்செந்தூர் திருப்புகழ்)
அடுத்ததாக, எனது மனம் எந்த மாதிரி அறிய வேண்டும் என்று கருவூர் திருப்புகழில் முதல் இரண்டு அடிகளில் பாடியுள்ளதைப் பார்ப்போம்.
“மதியால்வித் தகனாகி மனதாலுத் தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே
இதன் பொருள் :- என் புத்தியைக் கொண்டு ஒரு பேரறிவாளனாாகி, மனதால் உத்தமனாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் என் மனம் சிவஞானத்தில் பதியவேண்டும். அது எப்படி என்றால், மனம் என்னும் முத்திரை (Rubber Stamp) சிவஞானம் என்னும் பதிவுப் புத்தகத்தில் (Register) பதிந்து, அதனால் பெறக்கூடிய மேலான யோக வாழ்க்கையை நான் பற்றும் படி அருள்வாயே என்று வேண்டுகிறார்.
பின் வரும் இரண்டடியில் அவர் வேண்டும் முருகன் அவருக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்று சொல்வதில் இருந்தே நாம் முருகனை எப்படி நினைந்து வணங்க வேண்டும் என்றும் சொல்லிவிடுகிறார்.
“நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் பெருமாளே”.
இதன் பொருள்:- என் செல்வமே! அழிவிலாப் பொருளே! என் தியானப் பொருளே! சிறந்த பேரின்பப் பொருளானவனே! என் புகலிடமே! எல்லோராலும் புகழப்படும் மேலான செவ்வேளே! கருவூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே
இதேபோல் “சரணகம லாலயத்தை எனத் தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில்
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீ கொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
என்று, மீண்டும் பிறவா மோட்ச வாழ்வான பரகதி முத்தியினை அருள வேண்டுகின்றார்.
எனவே, நம் மனதைத் தூர்வாரி , பின் உள்ளத்தால் முருகனை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து, அவனை நித்தியப் பொருளாக நினைத்து அருணகிரிநாதரின் திருப்புகழை உளமார படித்தால் முத்தி நிச்சயம் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சான்றோர் பெருமக்களால் பாடப்பட்ட கீழ்வரும் மற்றொரு சிறப்புப் பாயிரத்தின் வாயிலாக நாம் அறியலாம்.
“திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று
தெர்ச்சித்த லாமே கெடீ”.
(கூற்றைவென்று - யமனை வென்று, கெர்ச்சிக்க லாமே - வெற்றி முழக்கம் செய்யலாமே, கெடீ - நிச்சயம்)
முருகப்பெருமானின் அருளைப் பெற்று அவரால் திருப்புகழ் பாடுக என அடி எடுத்துக் கொடுத்தபிறகு பாடப்பட்டதுதான் திருப்புகழ். உயிர்கள், உண்மை அறிவைப் பெற்று முத்தி இன்பம் பெற, முருகப்பெருமானால் ஏவப்பட்ட சந்தவேல் தான் அருணகிரிநாதர். எனவே நமது குருநாதரின் கருணையால் திருப்புகழ் என்னும் ஞான சுவாசத்தின் மூலமாக முருகப்பெருமானின் அருளைப்பெற்று முத்திப் பேற்றினை அடைவோமாக.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
★★★
Skanda is another form of Shiva and His philosophy is purely the essence of Supreme bliss. Muruga is the personification of Ananda. In this faith one can realise the symbolic essence of sat -chit and Ananda(Bliss )“The three to- gether constitute Brahman who is existence- knowledge- bliss absolute. He is the embodiment of spiritual perfection. His six faces represent the five sense organs and the mind, which co-ordinates their activities. By the control, refine- ment and sublimation the concept of highest level of perfection is achieved.“Lord Muruga grants boon of all wealth, health and peace to all the persons who worship him with due devotion on the 6th day (ie sashti Thiti) of the bright half of every month and also on the days of Krithigai and Vishakha stars, enjoying spiritual bliss and material prosperity.“Arunagirinathar when concluding the “kandhar Anubhuti” ecstatically rejoices by praying Guga underlining the value of the devotion.“you manifest in forms and in the ab- sence of form ;by your presence and by your absence.“You manifest in the flowers as their fragrance; in the ringing sound of the Golden beads; in the brilliance of the light; you are also the origin of life and you are the core of all lives.You are the final goal of all life and you are the means to that goal.Oh Guha, come as my Guru, enlighten me and lead me to the path of realisation” “courtesy :” “Muruga The Embodiment of Beauty and Valour”
— Valayapettai RA.Krishnan

