பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப்

பாடல்கள் சந்தப்பாடல் வரிசையில் முன்னணியில் நிற்பவை. தென்னிந்திய இசையின் தனித் தன்மை வெளிப்பாடு உடையவை.

தும்பியின் ஓசையிலிருந்து குழலும், வண்டினங்கள் ஓசையிலிருந்து யாழும், குயிலோசையிலிருந்து பாடலும், அருவியின் ஓசையிலிருந்து முழவுமாகத் தமிழிசை வளர்ச்சி கொண்டது எனலாம்.

சங்க காலத்தில் பரிபாடல், இசையமைப்புடன் கூடிய நூலாகும். பெண்பாற் புலவரான காரைக்காலம்மையார் (5ஆம் நூற்றாண்டு) வழங்கிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் அம்மையார் நட்டபாடை, இந்தளம் ஆகிய இரு பண்களில் பாடியுள்ளார். பின்னர் வந்த தேவார மூவரும் பதிக மரபில் பாடல்கள் பாடித் தமிழிசையை வளர்த்தெடுத்தனர். அதே போல் ஆழ்வார்களில் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களும் இறைவனைப் போற்றிப்பாடி இசைத்தமிழை வளர்த்துள்ளனர். சோழர் காலத்தில் கோயில்களில் பதிகங்கள் பாடிட நிவந்தங்கள் அளிக்கப்பட்டன என்ற செய்தியைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. எனவே, தொன்று தொட்டு வந்த தமிழிசை காலந்தோறும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதை உணர முடிகிறது. இவ்வித இசைப் பின்னணியில் 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் சந்தப்பாடல்களாக தொல்காப்பிய வண்ணங்களின் அடிப்படையிலமைந்த பாடல்களாக எழுந்தன எனலாம்.

சந்தங்கள் : நூலிற்கு அழகு இவை இவை என்ற பத்துள் ஓசையுடைமையும் ஒன்றாகும் அதனைப் பற்றிக் கூறுவது சந்தம். “பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை” என்றார் திருநாவுக்காரசர். (திருவேங்கம்பம் பா.8) ‘பண்ணும் பதம் ஏழும் பல ஓசைத் தமிழிவையும்’ என்றார் திருஞான சம்பந்தர், (திருவீழிமிழலை பா.4) ‘ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' (திருவையாறு – பா.1) என்று நாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் போற்றுகின்றார்.

சந்தம் என்பது ஓசைகளை அளக்கின்ற இலக்கணக் கருவி ; ஒலிப்பண்புகளை வரையறுத்துக் காட்டுவது ; எழுத்தினுடைய வன்மை மென்மைகளை நெறிப்படுத்துவது ; ஓசைகளைக் கூறுபடுத்தி இயல் துறையிலும், இசைத் துறையிலும், நாடகத் துறையிலும் உயிர்நிலையாக நின்று உணர்ச்சிகளைப் பெருக்கிக் காட்டுவது ; மொழியினுடைய வளத்தையும் புலவனுடைய ஆற்றலையும் ஒரே நேரத்தில் எடுத்துக் காட்டி நிற்பது ; ஓசை நயம் வழங்கும் சந்தம் ஓசைகளின் சந்திப்பு, ஒலிகள் ஆடுகின்ற அரங்கம் என்று டாக்டர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் சந்தம் என்பதற்கு விளக்கம் தருகிறார்.

சந்தம், பாட்டிற்குத் தனி அழகு தருவதால் சந்தம் என்ற சொல்லிற்கே அழகு என்று பொருள் கொள்ளலாம். “சந்தம்” என்ற தமிழ்ச்சொல், சொல்லகராதியில் “அழகு” “கவியின் வண்ணம்” என்னும் பொருள்களில் குறிக்கப் பெற்றுள்ளது. வண்ணம் என்ற சொல் இதற்கு ஒரு சிறப்புப் பெயராகும்.

சந்தத்தின் தோற்றம் : உள்ளத்தில் பொருள் வைத்துப் பாடும் புலவன் புறத்தே அப்பொருளுக்கு வடிவம் கொடுக்கின்றான். அந்த வடிவம் ஓசை அடைந்த சொற்களால் ஆக்கப்படுகின்றது. ஒழுங்கான, வரையறை செய்யப் பெற்ற செம்மையும், சீர்மையும் நிரம்பப் பெற்ற ஓசை, பாட்டிற்கு வடிவம் தருகிறது. ஆகவேதான் தொல்காப்பியச் செய்யுளியலில் முதல் நூற்பாவிற்கு உரை கூறிய பேராசிரியர்,

'பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுதும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்வதற்கு ஏதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை' என்கிறார்.

சந்தத்திற்கு அடிப்படையாக அமைவன அசைகளாகும். மென்மையுள்ள அசையும் ஒரே அளவாக திரும்பத் திரும்ப வரும்போது ஒரே அளவின கால இடைவெளி விட்டு வரும்போதும் ஒரே தன்மையில் வரும்போதும் சந்தம் பிறக்கிறது. இந்த அளவு முறைகள் மாறி வருமானால் ஓசையிலே முரண்பாடு தோன்றும்.

சந்தம் என்பது “சந்தஸ்” என்ற வடமொழிச் சொல்லின் திரிபு.

‘சந்தம் வண்ணமாமே’ - என்பது ஆசிரிய நிகண்டு.

‘மருவிய வண்ணம் சந்தம்’ - என்பது சூடாமணி நிகண்டு.

சந்து + அம் என்று பிரித்து சந்து என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்த தமிழ்ச்சொல் என்கிறார். வீ.பா.க. சுந்தரனார் சந்தி, சந்திப்பு, சந்தித்தல் என்பன சந்து என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்து. சேர்தல் என்ற பொருண்மை பெறும். சந்தம் என்பது ஓசைகளின் சந்திப்பதாகவும் ஓசை ஓர் ஒழுங்கான ஒலி எழுத்துக்களின் ஒட்டுதல்களாகவும் இருப்பதால் இது தமிழ்ச் சொல்லாகும் என்கிறார் வீ.பா.க.சுந்தரனார்.

சந்தக் குழிப்புகள் : இசைத் தமிழில் ஆளத்தி செய்யுமிடத்து “தென்னாவென்றும்” தெனா என்றும் அல்லது தென்னாதெனா என்று காட்டியும் செய்யப்படும் இவ்வகைச் சொற்களின் திரிபுகளாகத் தன, தானா என்ற சொற்கள் தற்போது வழக்கில் வந்துள்ளன. இச்சொற்கள் இசைப்பாக்களின் சந்த அமைப்பினை அறிதற்கு உரிய கருவியாக, இசைத்தமிழ்ப் பாடல்களுக்குரிய சந்தக் குழிப்புச் சொற்களாக இசையாசிரியர்களால் எடுத்தாளப் பெற்றுள்ளன.

சந்தமும் - வண்ணமும் வேறுபாடு : திருப்புகழ் முதலான இசைப்பாக்கள் சந்தக் குழிப்புகளால் அமைவன. எனவே, வண்ணச் சந்தக்குழிப்புகள் என்று கூறி, அவற்றை வண்ணப் பாடல்கள் வகையில் சேர்த்தனர் சான்றோர். “பிற்கால இசைப்பாக்களில் வண்ணச் சந்தக் குழிப்புகள் பல உண்டு என்று கூறி” அவை புதிய வளர்ச்சிக்கு வித்திட்டதைக் கூறுகின்றார் தமிழண்ணல்.

சந்தங்களையும் வண்ணங்களையும் தனித்தனியே எண்ணிப் பார்ப்போரும் உள்ளனர். சந்தப் பாடல்கள் பிற்காலத்தில் ஐந்து வகையாக வளர்ந்தன. அவற்றுள் ஒன்று வண்ணப் பாடல் வண்ண விருத்தங்கள் என்றும், திருப்புகழ்ப் பாடல்கள் என்றும் பெயர் பெற்று அவை சந்தக்குழிப்புகளால் அமைந்து தொங்கல், தாழிசை சேர்ந்து சந்த இலக்கணத்தின்படி அமைவன ஆகும். இதில் சந்தக் குழிப்பு இல்லை என்றால், வண்ணப் பாடலே இல்லை. சந்தமே அடிப்படையாக நின்று வகைகளை வளர்த்தவை வண்ணவிருத்தத்தில் தொங்கல் உண்டு ; சந்தவிருத்தத்தில் தொங்கல் இல்லை.

ஒவ்வொரு பாடலிலும் அதனதன் சந்தக்குழிப்பின் முற்பகுதி அமைப்பிலிருந்து மாறுபட்டு அடிகளின் ஈற்றில் 'தன தான' என்றோ 'தந்ததான' என்பது போன்றோ ஓர் அழகிய தனியான சீர் அமையப் பெற்றுள்ளது. இது தங்கப் பதக்கத்திற்கு ஒரு மதாணியைப் போல விளங்குகிறது. இசைமரபில் இது 'தொங்கல்' என வழங்கப்படுகிறது. திருப்புகழ்ப் பாடல்களின் தனிப்பட்ட சிறப்பிற்குத் 'தொங்கல்' என்னும் இவ்வமைப்பே காரணமாகும்.

சந்தங்களின் தொன்மை : சந்த இலக்கணத்திற்கு ஆதாரமாக இருக்கும் தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய ஆகிய சந்த மூலச் சொற்கள் தேவாரத்தில் நமக்குத் தெரிகின்றன.

“தென்னாத் தெனாத் தெத்தெனா வென்று பாடி”
“தெத்தென இசைமுரல் சரிதையர்.”
“தென்தென்ன இசைமுரல் சரிதைன்யர்”
“தந்த திந்தத் தட மென்டியிவித்திரன்”

என்பன சான்றுகள்,

நம்மாழ்வாரும் “தன்னா வெண்ணுமென் னம்மான் திருமாலிருஞ் சோலையானே” தென்னாவென்று வண்டின்னிசை முரல்தரு” என்று பாடியுள்ளார்.

“தேவாரத்திற்கும் திருப்புகழிற்கும் சிலப்பதிகாரம் மூலம். அந்தச் சிலப்பதிகாரத்தின் வழியாகப் பாடல்கள் அமைகின்றன. பண்கள் அமைகின்றன. இசைவடிவங்கள் அமைகின்றன என்று இசைப் பேரறிஞர்கள் எண்ணுகின்றனர்” என்கின்றார் ஆலந்தூர் மோகனரங்கன்.

சிலப்பதிகாரப் பாடல் ஓசை திருமழிசை ஆழ்வாரை ஈர்த்திருக்கிறது. “திருச்சந்தப் பொழிலத்ழுவு தரணியின் துயர் தீரத் திருச்சந்த விருத்தம்” என்று திருக்கச்சி நம்பிகள் போற்றுகின்ற வகையில் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் பாடினார். இந்நூலில் நூற்றிரபது எழுசீர் விருத்தங்கள் அமைந்துள்ளன. பிற்காலச் சந்தவிருத்தங்களுக்கு எல்லாம் இளங்கோவடிகள் தலைமை ஏற்கிறார் என்பதற்குத் திருமழிசை ஆழ்வார் சான்று. எனவே, சந்தப் பாடல்களுக்கு மூலம் இளங்கோவடிகளே ஆவர்.

அந்தாதி யாப்பு முறையைப் பின்பற்றி அற்புதத் திருவந்தாதியைப் படைத்தளித்தவர் காரைக்கால் அம்மையார். பத்துப் பாடல்கள் தோறும் ஒரு சந்தம் அமைத்து நூறு பாடல்களில் பலசந்தங் கண்டொலிக்கச் செய்து பாடுமுறை தோன்றலாயிற்று. இதனைப் பல்சந்தமாலை என்று குறிப்பிடுகின்றனர்.

அருணகிரியார் சந்தம் : 'வாக்கிற்கு அருணகிரி' என்று புகழ்பெற்றவர் அருணகிரிநாதர். அவர் சந்தங்களை வியக்கத்தக்க அளவில் ‘வகுப்புகள்’ என்னும் பகுதியில் கையாண்டுள்ளார். பல வகுப்புகள் அவரால் பாடப் பெற்றுள்ளன. 1000க்கு மேற்பட்ட சந்தங்களைப் பாடிய அருணகிரிக்குச் சந்தம் ஒரு விந்தையாக இருந்துள்ளது. இதனைச்,

“சந்தபந்த முந்து விந்தை நெஞ் சொலின்” முருகவேள் பன்னிரு திருமுறைத் தொகுதி 6 வ.சு. செங்கல்வராயப் பிள்ளை உரை, 1952, ப.588) என்று அருணகிரிநாதர் பாடினார். சந்தம் நிறைந்த இவருடைய திருப்புகழ்ப் பாடல்கள் பிற்காலத் திருப்புகழ்ப் பாக்களுக்கு வழிகாட்டியுள்ளன.

“கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த திருப்புகழ்ப் பாடல்கள் யாவற்றுக்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களே வழிகாட்டி” என்பார் எஸ். சௌந்திரபாண்டியன்.

அருணகிரிநாதர் திருப்பரங்குன்றத்திற்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள முருகனைப் பாடும்போது,

“சந்ததந்தொணி கண்டும் புய லங்கன்சிவ னம்பன்தி
சம்புந்தொழ நின்றுந் தினம் விளையாடும்
கந்தன்குன னென் றன்குரு வென்றுந்தொழும் அன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே”

என்று பாடி மெல்லினங்களும் வல்லினங்களும் கலந்த ஒரு கலப்புச் சந்தத்தின் இனிமையை எடுத்துக் காட்டுகின்றார். இப்பாடல்,

“கரிக்கொம்பந் தனித்தங்கங்
குடத்தின்பந் தனத்தின்கண்
கருப்புந்தன் சிவப்புஞ்செம் பொறிதோள்சேர்
கணைக்கும்பண் டுழைக்கும்பங்
களிக்கும்பண் பொழிக்குங் கண்
கழுத்துஞ்சங் கெரிகிக்கும் பொன் - குழையாட”

இந்தப் பாட்டில்,

தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந்

தனத்தந்தந் தனத்தந்தந் தனதான.

என்னும் சந்தக் குழிப்பு அமைந்துள்ளது. நுட்பமான ஒலிகளை எழுப்புகின்ற வகையில் சந்தங்களை மாற்றி மாற்றி அமைக்கின்ற பெருந்திறம் அருணகிரிநாதர் பாடல் முழுவதும் காணலாம். குறிலும் நெடிலும் கலந்த ஒரு சித்திர வண்ணத்தைப் படைத்துக் காட்டும் அழகினை,

'தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் கழல் மானார்
தம்பா வன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் றடிநாயேன்'.

என்னும் பாடலில் காட்டுகின்றார். திருச்செந்தூரில் பாடிய இப்பாட்டில்,

தந்தா னந்தா தந்தா னந்தா

தந்தா னந்தா தனதான

என்னும் சந்தக்குழிப்பு அமைந்து ஒலியின்பம் ஊட்டுகிறது. மூவகைச் சீரும் ஈரசைச்சீரும் கலந்தன போன்றவொரு அமைப்பில் சந்தக்குழிப்புப் பொருந்திவரப் பாடிய திறத்தையும் அருணகிரியின் பாடலில் காண முடிகிறது.

“விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி இளையோர்தம்
விரிவான சிந்தை உருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை வினையாலே”.

என்னும் திருச்செந்தூர் பற்றிய பாடல்.

தனதான தந்த தனதான தந்த

தனதான தந்த தனதான”

என்னும் சந்தக் குழிப்பில் நின்று ஒலிக்கிறது.

திருப்புகழில் ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் பாடலின் சந்தக் குழிப்பு காணப்படுகின்றது. இந்தச் சந்தங்களையும், சந்தக் குழிப்புகளையும் அருணகிரிநாதரே தம் பாடல்கள் சிலவற்றில் இயைத்தும் பாடியுள்ளார். எ.டு. 'பனியின் விந்துளி போலவே கருவினுறு' என்ற பாடலின் 5வது அடியின் முதல் வரி,

“தனன தன்தன தானனா தனதனன”

பனகப் பாடமிசைந்த என்ற பாடலின் 3ஆவது அடி, “தனனத் தனனதந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த - தனதான”

இதனை அடிப்படையாகக் கொண்டு திருப்புகழ் பதிப்பாசிரியர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் சந்தக் குழிப்பு அமைத்திருக்கலாம்.

வ.சு. செங்கல்வராயப் பிள்ளையின் ஆய்வின்படி கிடைத்திருக்கின்ற 1307 திருப்புகழ்ப் பாடல்களில் 1008 சந்தங்கள் உள்ளன. இதற்கு 24 சந்தங்கள் அடிப்படையாக உள்ளன. அருணகிரிநாதர் தாம்பாடிய பூதவேதாள வகுப்பில் பல வகையான ராகங்களையும், பண்களையும் குறிப்பிட்டுள்ளார்.

‘கொந்து வார் குழல்’ என்னும் திருப்புகழில்,

“மதுரித இந்தளாருத வசனமும்”

என்ற வரியில் இந்தளம் என்ற பண்ணையும், 'பாதாளமாதி' என்ற பாடலில் 'சாதாரி தேசி நாமக்ரியை' முதல் என்ற வரியில் பண்சாதாரியையும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தேவாரப் பாடல்களின் பண்முறையை நன்குணர்ந்தவர் அருணகிரிநாதர் என்றும் கூறலாம்.

சில திருப்புகழ்ப் பாடல்கள் நாட்டியத்திலும் இடம்பெறுகின்றன. அருணகிரிநாதர் முருகப் பெருமானை நடனமாடும் தெய்வமாகவே வருணித்துள்ளார். 'அகரமுமாகி' என்ற திருப்புகழில் “செககண சேகு தகதிமி தோதி திமியென ஆடு மயிலோனே” என்னுமிடத்தில் இதை உணரலாம். முந்து தமிழ்மாலை என்னும் பாடலில் முருகன் எழுந்தருளியிருக்கும் மயில் வரும் அழகை தாளத்தின் அழகிய கதிக்கேற்ப நடனமாடி வருவதுபோல் பாடியுள்ளார். வில்லிப்புத்தூராருடன் வாதாடி வென்ற பாடல் 54இல் (கந்தரந்தாதி) அருமையான லய சம்பந்தமான சொற்கட்டுக்களை அமைத்துள்ளனர்.

பொதுவாகத் திருப்புகழைக் காணும்போது, பெரும்பாலான திருப்புகழ்ப் பாடல்களில் ஒரு குறிப்பிட்ட சந்தம் மூன்று முறை ஒரே சீராக மடங்கி வரும் அமைப்பும், தொங்கல் என்னும் தனிச்சீர் கொண்ட அமைப்பும் பெற்று அமைந்துள்ளன எனலாம். வடமொழிக் கலப்பு மிகுதியாக உள்ளது. திருப்புகழ்க்கு இதுவே சான்றாக உள்ளது ; தமிழில் யாப்பு முறையில் இலக்கண வரையறை செய்யப்படவில்லை எனலாம்.

★★★

ஒரு கியூ ஆர் குறியீடு உள்ளது.

For many years, Thiruppugazh 's position in performances was as an add-on. For instance, in a Carnatic kutcheri , people would conclude the concert by singing a few lines from Thiruppugazh . "But my guru J

Venkatraman had this rapid desire to compose songs out of it, which his guru Alathur Venkatesa lyer had passed on to him.I too shared this desire, and, for a long time, I had wanted to make a symphonic arrangement. Thiruppugazh was good material. Also, it would be a tribute to Arunagirinathar’s compositions and so the original idea was to do a concert but it evolved into a documentary “Arunagiri Perumalae”

[^1]: - Musician Pradeep Kumar.