திருப்புகழ் இசையால் உயர்ந்த அருளாளரின் மணிமண்டபம்
ஒரு கியூ ஆர் குறியீடு காட்டப்பட்டுள்ளது.
திரு. இரா மூர்த்தி, BT HM, (பணி நிறைவு), தேசிய நல்லாசிரியர், திருவண்ணாமலை
ஒரு கியூ ஆர் குறியீடு காட்டப்பட்டுள்ளது.
பரம்பொருளான இறைவனுக்கு தமிழ் இசை மீது அளப்பரிய பற்று உண்டு. தன் தமிழ் பசியைத் தீர்த்துக் கொள்ள அவ்வப்போது மனிதனை நாடியது உண்டு. சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட் கொண்ட போது 'சுந்தரா எம்மை
சொற்றமிழால் பாடுக' என வேண்டினார். அதேபோல் அவரது தவப் புதல்வனான முருகப்பெருமானும் தமிழ் மீது அளவற்ற பற்று கொண்டிருந்தார். அவர் அருணகிரிநாதப் பெருமானைத் தடுத்தாட் கொண்ட போது 'முத்து முத்தாக' பாடுக என்று கூறினார்கள்.
முருகப்பெருமானின் வேண்டுகோளுக்கு இசைந்து அருணகிரிநாதர் 206 க்கும் மேற்பட்ட தலங்களுக்குச் சென்று 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார்.
முருகனுக்கு பாடல் பாடுவது மிகவும் பிடிக்கும் என்று அறிந்து கொண்ட அருணகிரிநாதப் பெருமான் ‘பாடும் பணியே பணியாய் அருள்வாய்‘ என்று பாடினார்கள். அதேபோல் மற்றொரு திருப்புகழில்‘ பாடல் காதல் புரிவோனே பாலைத் தேன் ஒக்க அருள்வோனே‘ என்று பாடியுள்ளார்.
ஒளவையார் தமிழிசைப் பாடலால் முருகப் பெருமானின் கோபத்தை நீக்கினார்.
இசையால் நாம் பல அதிசயங்களை சாதிக்க முடியும் காரணம் இறைவனை அடைவதற்கு சுலபமான வழி இசைதான்.
அன்று திருமறைக் காட்டில் பல நாட்களாக மூடி இருந்த திருக்கோயில் கதவைத் திறப்பதற்கு அப்பர் பெருமானும் மீண்டும் அந்த கதவை மூடுவதற்கு சம்பந்தப் பெருமானும் பதிகங்களைப் பாடிக் கதவைத் திறந்தும் மூடினார்கள்.
மதுரையை ஆண்ட கூன் பாண்டியனின் உடல் பிணி தீர சம்பந்தர் ‘மந்திரமாவது நீறு ‘என்ற பதிகத்தைப் பாடி அவரைக் குணப்படுத்தினார்.
அபிராமிபட்டர் தீக்கனல் மேல் அமர்ந்து உயிருக்காகப் போராடிய காலத்தில் அவர் உருக்கத்துடன் அபிராமி அந்தாதி பாடியபோது பார்வதிதேவி அமாவாசை தினத்தை பௌர்ணமியாக மாற்றினார்கள்.
சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் பொருட்டு ‘மட்டிட்ட புன்னையங் கானல்’ பதிகத்தைப் பாடி மாண்டவரை உயிர் பெறச்செய்தார்.
இசையால் இத்தகைய பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.
இசையால் ஒரு கோவில் உயர்ந்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?நிச்சயமாக நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்! காரணம் சரித்திரத்தில் அத்தகைய நிகழ்வுக்கான சான்று எதுவும் இல்லை. ஆனால் தற்போது திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் மணி மண்டபம் பாடி உயர்ந்த கோயில் என்ற பெருமையைப் பெறுகிறது. மணி மண்டபத்திற்கான இடம் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து அவ்விடத்தில் திருப்புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அடியேனும் எனது சகாக்களான திரு. சங்கர், திரு. முருகன், திரு. இராஜேந்திரன், திரு. இராமசாமி, திருக்குறள், திரு. அம்பி, திரு. நடராஜன், திரு. கார்த்தி ஆகியோர்களும் மணிமண்டப இடம் வெறும் மண்ணாக இருந்த போது தினமும் சென்று ஒரு மணி நேரம் திருப்புகழ்ப் பாடி பணியைத் துவக்குவோம்.
மணிமண்டபத் தலைவர் மா. சின்னராஜ், பொருளாளர் வ. தனுசு, செயலாளர் ப. அமரேசன் மற்றும் மணிமண்டப மேலாளர் மணிக்குமார் அவர்களும் எங்களை பாராட்டி உற்சாகப் படுத்துவார்கள்.
கால்கோள் விழாவின்போது திருப்புகழ் பாடியே துவக்கினோம். அச்சமயம் அன்னூர் திருப்புகழ் சுவாமிகள் தன்னுடைய காந்தக் குரலால் திருப்புகழ் பாடி அனைவரையும் கவர்ந்தார்.தினமும் திருப்புகழ் பாடப்பாட கட்டிடம், கருவறை என வேகமாக வளர்ந்தது. வாசக்கால் வைப்பு நிகழ்வு அன்றும் எங்கள் குழு பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியது. அன்று சைவச் செம்மல் சோ. முத்து ஐயா அவர்கள், பேராசிரியர் முனைவர் வெ.இராமு மற்றும் திருமுறை கழகத்தினர் என பலர் திருப்புகழ் பாடினார்கள். பாட்டுப் பாட கட்டிடம் உயர்வதை கண்கூடாகக் கண்டோம். கருவறைப் பணி முடிந்து மகாமண்டபத்தின் கடைக்கால் பணி நிறைவடைந்ததும் சென்னையை சேர்ந்த பார்வதி அம்மையாரும் அவரது பெயர்த்திகளான நிரஞ்சனா, நித்தியா ஆடல் பாடலுடன் கூடிய அருளாளரின் வாழ்க்கை சரித்திரத்தை நடித்து மகிழ்வித்தார்கள். அப்பொழுது அவர்கள் திருப்பணி விரைந்து முடிய ‘அண்டர்பதி குடியேற‘ என்ற பாடலைச் சிறப்பாக பாடினார்கள்.பிறகு மணிமண்டப மேற்கூரை அமைக்கும்போதும் எங்கள் குழு திருப்புகழ்ப் பாடி பணியைத் துவக்கியது.
மணிமண்டபம் விமானப் பணி தொடங்கப்பட்டபோது கூட எங்கள் குழுவினர் திருப்புகழ் பாடி பூஜித்த செங்கல்லை எடுத்துக் கொடுத்து பணியைத் துவக்கி வைத்தனர். சிவகாசி அருணகிரிநாதர் சபை உறுப்பினர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் உமாகாந்த் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் நாகரத்தினம் அவர்கள் தலைமையில் மூன்றிக்கும் மேற்பட்ட முறை பேருந்து நிறைய பக்தர்களுடன் மணிமண்டபத்திற்கு வருகை புரிந்து திருப்புகழ் பாடி திருப்பணி விரைந்து முடிய வேண்டினர்.
2022ஆம் ஆண்டு அருணகிரிநாதர் விழாவிற்கு வருகை புரிந்திருந்த நீதிபதி திருப்புகழ் செம்மணி ஐயா, திரு.முருகபூபதி அவர்களும், திருப்புகழ் அமுதன் திரு வலையபேட்டை கிருஷ்ணன் அவர்களும், பாண்டிச்சேரி அருணகரிநாதர் சபைத் தலைவர் திரு ரவி சங்கர் அவர்களும் கருவறை முன்பாகத்தில் திருப்புகழ் பாடினார்கள்.
இதுதவிர பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி நடைபெற்ற சமயத்தில் திரு லட்சுமி நரசிம்மன் சென்னை, திரு ஐயப்பன் தாம்பரம், திருமதி உமாமகேஸ்வரி சென்னை, கோவை தொழிலதிபரும் வயலூர் திருப்புகழ்ச் சங்கத் தலைவருமான திரு இராமசாமி அவர்களும், சென்னை நிருத்ய மயூரி இரமணி குழுவினரும், கோவை தொழிலதிபர் முருகன் அவர்களும் பாடியுள்ளனர். சென்னை திருப்புகழ் வித்தகர் பி.என் பரசுராமன் பாடியதோடு மட்டுமல்லாமல் மணிமண்டபத்தில் ஒரு பிரசங்கமும் செய்தார்கள்.உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆலயத்தில் இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் திருப்புகழைக் கேட்டு ரசித்து இருக்கும் என்று சொல்லலாம்.
மணிமண்டபத்தின் கற்கள், சிமெண்ட், நீர் மற்றும் பிற பொருட்கள் எல்லாம் திருப்புகழ் இசையில் நனைந்து மணிமண்டபமாக உயர்ந்துள்ளன.
இதுபோல் கட்டுமான பணியின் போது வேறு எந்த கோவிலிலும் இவ்வாறு பிரார்த்தனைகளும், பிரசங்கங்களும், பாட்டிசைத்தலும் நடந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே அருளாளரின் ஆலயத்தை திருப்புகழ் இசை பாடியே உயர்ந்த மணிமண்டபம் என்று மார்தட்டிச் சொல்லலாம்.
★★★

