அருணகிரிநாதர் கூறும் ஆசாரங்கள்
முனைவர் மு. துர்க்கா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை அறிவியல் கல்லூரி, சேலம்.
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் அருணகிரிநாதர். சந்தப்பாவிற்குச் சொந்தக்காரர். இயற்றமிழில் நாற்கவி ராஜராகவும் இசைத்தமிழில் இசைஞானியாகவும் திகழ்ந்தவர். அவர் திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலான நூல்களில் வாழ்வியல் உண்மைகளையும் அருளியல் அனுபவங்களையும் நிரல்பட எடுத்துரைத்தவர். அத்தகைய நூல்களில் மனித வாழ்க்கைக்குத் தேவையான ஆசாரங்களைச் செறிவுடன் பாடியுள்ளார். வாழ்வியலுக்கு அடிப்படையான ஒழுக்கநெறிகளைப் பின்பற்றினால் வாழ்வு செம்மையாகும் உயர்ந்த வாழ்வினைப்பெறுவர். பண்பு நலன்களால் மனிதத்தன்மை மேம்படும். மனித வாழ்வு சிறப்பதற்கு அடிப்படையாகத் திகழும் ஆசாரங்களில் ஒருசில கருத்துக்களை இங்கு காணலாம்.
இங்கு செவியின் உயர்வு, நெற்றியில் திருநீறு அணிதல், பிறவி நீக்கம், வீண்பேச்சு வேண்டாம். ஆசாரத்தின் சிறப்பு முதலான செய்திகளைக் கீழே காணலாம்.
செவியின் உயர்வு
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்கள். இப்புலன்கள் வழியே பெறுகின்ற அறிவின் வழியும் செயல்படுவழியுமே ஒரு மனிதனின் பண்பை விளக்கப்படுத்தும். குறிப்பாக, ஐம்புலன்களில் கட்புலனே சிறந்த புலனாகும். இருப்பினும் செவிப்புலனைப் பற்றிக் கூறுவதன் காரணத்தை நோக்கலாம். திருவள்ளுவர் ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்கிறார். கற்றிலனாயினும் கேட்க என்று கூறுவதனால் நுண்ணிய பல நூல்கள் கற்கா விட்டாலும் செவிவழியாக அதனைக் கேட்டுப் பயன்பெறுக என்றார்கள். இதன்வழி கேள்விச் செல்வத்தின் இன்றியமையாமையை உணரலாம்.
அருணகிரிநாதர், பரகதி செல்வோர்க்குத் துணை செய்து, நல்வழிப்படுத்துவது செவியே யாகும் என்கிறார். கடவுளுடைய அருள் திறங்களைக் கேட்பதும் நாவிற்கு அருங்கலமாகத் திகழும் மகா மந்திரங்களாகிய 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தையும், 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும் குருநாதரின் மூலமாகக்கேட்டுப் பயன் பெறும் கருவி செவியேயாம். தித்திக்கும் தீந்தமிழ் வேதமாகிய தேவாரப்பாடலின் முதல்அடியே செவியை முதலில் கூறுகிறது. தோடுடைய செவியன் என்று திருஞான சம்பந்தர் தம் தேவாரத்திருப்பதிகத்தில் பாடுகின்றார். செவியின் வடிவம் ஓங்கார வடிவத்தை ஒத்திருக்கிறது. அதனால் தான் குழந்தைபிறந்த பிறகு முதலில் காதுகுத்துதல் என்னும் நிகழ்வில் செவிக்கு ஆபரணம் சூட்டி “கர்ணபூஷணம்“ என்ற வைதீகச் சடங்கினைச் செய்கின்றனர். இதனால்தான் அருணகிரிநாதர் மனிதப்பிறவியில் செவிடு வேண்டாம் என்று வேண்டுகின்றார். இதனோடு பிறவித்துன்பம், குருடு, செவிடு, வடிவு குறைவு, வறுமையும் வேண்டாம் என்று பழநிதிருப்புகழில் பாடுகின்றார்.
“திமிர வுததி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும ணுகாதே” (பழநி.திருப்.20)
நெற்றியில் திருநீறு அணிதல்
ஒரு மனிதனின் தோற்றத்தைக்கண்டு அவன் இன்ன சமயத்தைச்சார்ந்தவன் என்பதைப் பார்த்தவுடன் கூறிவிடலாம். நெற்றியில் திருநீறு அணிந்தால் சைவன் என்பதைப் பார்த்தவுடன் கூற முடியும். திருநீறு அணிதல் சைவன் என்பதை அடையாளப்படுத்துவது மட்டுமல்ல. தன்னை மேம்படுத்தக் கூடியது. திருநீறு திரு - தெய்வத்தன்மை, நீறு - வினைகளை நீறாக்குவது என்பதாம். வினைகளை எரித்து நீறாக்கித் தெய்வத்தன்மையைக் கொடுக்கவல்லது. திருநீறு மேலான ஐஸ்வர்யத்தைத் தருவதால் விபூதி என்றும் கூறுவர். அடியார்களுக்குரிய சாதனங்களில் திருநீறு இம்மையில் பெருஞ்செல்வத்தையும் மறுமையில் முத்தியையும் கொடுக்கும். அத்தகைய முத்தியைத் தரும் ஆண்டவனின் அருளைப் பெறுவதற்கு பக்தியே சாலச் சிறந்த வழியென்பதும், திருநீறு அணிகின்ற பெருந்தவர்களின் அடியாட்களுடைய திருவடியே எந்நாளும் பற்றுக்கோடாக கொள்வதையுமே மனவுறுதியாகக் கொண்டு அப்பூதியடிகள், பெருமிழலைக்குறும்பர், கலிசைச்சேவகனார், பத்திரகிரியார் ஆகியோர் வாழ்ந்து சிறந்தனர் என்பதனை வரலாற்றுச் சுவடுகளின் மூலம் அறிந்துணரலாம்.
திருநீற்றை நெற்றியில் அணிந்து கொள்ளும்போது ஆறுமுகம் என்று அன்புடன் ஆறுமுறை கூறுதல் வேண்டும். அப்படி அணிந்தால் உடம்புக்குற்ற பிணிகள் நீங்குதல், பேய்களால் ஏற்பட்ட கலக்கம் நீங்குதல், உயிருக்குற்ற பிறவி நோய் விரைவில் நீங்குதல் முதலான நல்ல பலன்களை அடையலாம் என்கிறார் அருணகிரிநாதர்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய தென்றுநாளும் (பழநி.திருப்.53)
திருநீறு அணிவதால் இம்மை, மறுமை நலன்கள் சிறப்புடன் எய்தலாம் என்பதனை அறிய முடிகிறது.
உலகில் உடலைப்பெற்ற உயிர் அடையக்கூடியது பிறவி. அவரவர் செய்த ஊழ்வினையின் காரணமாக ஏதேனும் ஒரு வடிவைப்பெற்றுப் பிறவி அல்லது பிறப்பினைப் பெறும். பிறப்படைந்த உயிரும் உடலும் அதனதன் வினை காரணமாக உலகில் வாழ்ந்து சிறந்து இம்மைஇன்பத்தையும் மறுமை இன்பத்தையும் பெறும். நல்வினையால் சொர்க்கமும் தீவினையால் நரகமும் பெற்று பலவகையான பிறவிகளையடையும்.
பிறவி நீக்கம்
மனிதன் நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி. நோயினால் தினமும் வேதனைப்படுகின்றவன் உயிர் வாழ்க்கையை வெறுப்பான். உலக மக்களும் இந்த உயிர் அல்லது ஆன்மா இப்படி நோய்நொடியால் வெயிலில் கிடந்த புழுவைப்போல் வேதனைப்படுவதைக் காட்டிலும் உயிர் சாந்தியடைதலே நலம் என்பர். நோய்க்கு மூலகாரணத்தையறிந்து அந்த மூலத்தைக் களைவதுவே அறிவுடைமையாகும். உடம்பைப் பற்றி வருவது நோய். உயிரைப்பற்றி வருவது பிறவியாகும். அப்பிறவி நோய்க்கு மருந்தினைக் கண்டுபிடித்து அதனைத் தீர்ப்பது கடமையாகும். மனித வாழ்வு சிறப்பாக அமையவும் பிறவி நீக்கம் பெறுதலும் பிறந்த பிறப்பின் பயனாம். பிறவி நீக்கம் பெறவும் பிறவிப்பயன் பெறவும் பிறப்பிறப்பில்லாதவன் முருகனை நாம் வணங்க வேண்டும். அம்முருகப்பெருமானை வணங்காது பிறவியை ஒழியாது தரும் ஆசாபாசங்களைத் தேடித் திரிந்து உழல்கின்றோம். பிறவி நோயைத் தீர்க்கும் மருத்துவனாகிய முருகப்பெருமானை வணங்கிப் போற்றினால் பவப்பிணி நீங்கிடும். இதனாலே முருகப்பெருமானை வைத்தியநாதன் என்று அழைப்பர்.
| அணிபட் டணுகித் திணிபட் டமனத் தவர்விட் டவிழிக் கணையாலும் |
| அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத் தவன்விட் டமலர்க் கணையாலும் |
| பிணிபட் டுணர்வற்றவமுற் றியமற் பெறுமக் குணமுற் றுயிர்மாளும் |
| பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப் பெறுதற் கருளைத் தரவேணும் (பழநி.திருப்.13) |
'பவநோயே தேடுபரிசி' (பழநி.திருப்.93)
‘பவரோக வைத்தியநாதப் பெருமாளே’ ( நிலையாத திருப் )
பிறவியைப் பெருங்கடல் என்று ஆன்றோர் கூறுவர். பிறவிப்பெருங்கடல் என்பார் திருவள்ளுவர். பிறவியைக் கடப்பதும் அரியது. இறைவன் திருவடி ஒன்றே அதற்குரிய புணையாம்.
'உறவு முறை மனைவிமக வெனுமலையில் எனதிதய
உருவுடைய மலினபவ சலராசி யேறவிடும் உறுபுணையும்' (சீர்பாத வகுப்பு)
‘ஊசல்படும் பரிசு என்று ஒழியேன்’
மேற்காணும் பாடல்வழி பெண்ணாசை, நோய், வினை முதலானவற்றால் பிறவி தொடரும். அதனைத் தீர்ப்பதற்குப் பவப்பிணி மருத்துவன், வைத்தியநாதனை வணங்கினால் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க தெப்பமாக அவனது திருவடி அமையும் என்கிறார் அருணகிரிநாதர்.
வீண்பேச்சு வேண்டாம்
மனிதப் பண்புகளில் ஒன்றாகக் கருதுவது பயனுள்ள சொற்களைப் பேசுவதாம். வீண்பேச்சுகள் மற்றும் பயனற்ற சொற்களைப்பேசுவதனைத் தவிர்த்துப் பலரோடு பழகும்போது உலகில் வாழும் மக்களிடையே நாம் பயனுள்ள பேச்சுகளையே பேசுதல் வேண்டும். பயனற்ற மற்றும் வீண்பேச்சுகளைப் பேசக்கூடாது. நேரத்தை வீணே கழிக்கக்கூடாது. திருவள்ளுவர், பயனில்லாத சொற்களைச் சொல்லுபவன் மனிதர்களில் பதர் போன்றவன் என்கிறார்.
பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல் (குறள்)
அருணகிரிநாதர் வீண்பேச்சு பேசுபவர்களை, ஆதாளி என்று கூறுவதோடு இச்சொல்லைப் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.
அகதியை மறவனை ஆதாளிவாயனை (அவகுண.திருப்)
ஆதாளியை யொன் றறியேனை அறத்
தீதாளியை யாண்டது செப்புமதோ (கந்.அநுபூதி.38)
ஆசாரத்தின் சிறப்பு
மனித வாழ்க்கையில் மிகவும் அடிப்படையானது ஒழுக்கம். இவ்வொழுக்கம் எண்ணம், சொல், செயல் முதலான எல்லாவற்றையும் தரும் என்கிறார் அருணகிரிநாதர். நல்ல குணத்தினால் பெறுவது சீலம். சீலம் என்பது பண்பின் சிகரமாகும். ஒழுக்கத்தின் உயிராகும். திருஞானசம்பந்தர் சிவபெருமானை சீலமே என்று சிறப்பிக்கின்றார்.
ஆலமே அமுதமாக உண்டுவா னவிர்க் களித்துக்
காலனை மார்க்கண் டர்க்காகக் காய்ந்தனை அடியேற்கின்று
ஞாலம்நின் புகழேயாக வேண்டும்நான் மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயிற் சிவபெருமானே (பெரியபுராணம் )
ஞால மேவிசும் பேநலந் தீமையே
கால மே கருத் தேகருத் தால் தொழும்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மே அடியேனைக் குறிக்கொளே - அப்பர்.
சீலம் உள்ள இடத்தில் தருமம் இருக்கும். தருமம் இருக்குமிடத்தில் சத்தியம் இருக்கும். சத்தியம் இருக்குமிடத்தில் ஒழுக்கம் இருக்கும். ஒழுக்கம் இருக்குமிடத்தில் பலம் இருக்கும் பலமுள்ள இடத்தில் லட்சுமி இருப்பாள். சீலம் இல்லையானால் இத்தனையும் இருக்காது. ஆகவே சீலத்தை யாவரும் கடைபிடிக்கவேண்டும். இத்தகு பண்புகளே ஒழுக்கமாகிய ஆசாரத்தின் ஆணிவேராகும். இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒழுக்கத்தைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர்.
சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும நந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிக அன்புறாதே (திருச்செந்.திருப்.29)
நிறைவாக, அளப்பில் கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே என்ற அப்பர் பெருமான் அருள்வாக்கால் இறைவனைப் புகழ்ந்து பாடினால் அருள்தருவான் என்கிறார். அதுபோல் முருகப் பெருமானுடைய திருவருளை எளிதாகப் பெறவேண்டுமானால் திருப்புகழ் முதலான நூல்களில் உள்ள அமுதமொழிகளை ஓதி உணர்ந்தாலே போதும். மனிதவாழ்வு புனிதமடையும். சிறப்பு பெறலாம். சுருங்கக் கூறின் ஒழுக்கமே உயிரினும் மேலாகக் கருதப்படும். போற்றப்படும்.ஒழுக்கத்தின் மேன்மைக்கு ஈடு இணையில்லை என்று வள்ளுவப்பெருந்தகை கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது. அறவோர் சான்றோர் அருளாளர்கள் ஆகியோர் கூறும் அறநெறிகளைப் (ஆசாரங்களைப்); பின்பற்றினால் மனித வாழ்வு சிறக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம்.
★★★
முருகவேல் நூல்கள் திருமுறை வடிவில் வெளிவரலாம் என குருகுல ஆசிரியர் திரு இளவழகனார் முதலில் விரும்பினார், நன்று என தோன்றிற்று; பின்னர் திருப்புகழ்ப் பாக்களுக்கு நீங்களே பொழிப்புரைப் பொருளும் எழுதுங்கள் என்றார். பொருள் எழுதுங்கள் என்றதும் என் நெஞ்சம் நடுக்குற்றது. என் அறிவின் சிறுமையை உணர்ந்து நான் 'என்னால் முடியாது; பொருள் விளங்காத பகுதிகள் பல உள்ளன' எனக் கூறி மறுத்தேன். எவ்வளவு மறுத்தும் இளவழகனார் என்னை விட வில்லை; திருப்புகழின் உயர்வெங்கே சிறியவன் இவன் துணி வென்னே! என்று உலகோர் நம்மை ஏசுவரே என அஞ்சினேன். பின்பு இறைவனே ஒரு துணிவைத் தந்தார் முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ என்னும் சேக்கிழார் திருவாக்கு மனதில் ஊன்றிட்டு, ஒரு ஊக்கத்தைத் தந்தது . முருகன் திருவருள் துணை நிற்குமாயின் எதுதான் முடியாது எனும் துணிவு பிறந்தது. உரை எழுதத் துணிந்தேன்.
— தணிகைமணி. வ.சு. செங்கல்வராய பிள்ளை

