தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கணத்தில் ஒன்றாகிய யாப்பிலக்கணத்தில் செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்று வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனும் பாக்களுக்கு வரையறுத்துச் சங்கப் புலவர்கள் தமிழ்ப்பாக்கள் இயற்றினர். அதன்பின் எத்தனையோ புலவர்கள் தோன்றிப் பாக்கள் இயற்றினாலும், தனக்கே உரிய பாணியில் பழங்காலத் துள்ளலோசையை அடியொற்றி, புதுமையான ஓசையும், இசையும் வைத்துப் பாடிச் சந்தக் கவிதைகள் (பாக்கள்) எனும் வரலாற்றினைத் தொடங்கியவர் 14ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் அவதரித்த அருணையின் அருளாளர் அருணகிரியார் மட்டுமே ஆவார். திருப்புகழ்ப் பாடல்களின்
எண்ணிக்கை 16,000 என்பர். ஆனால் இன்று 1307 பாடல்களே கிடைத்துள்ளன. 1008 சுந்த வேறுபாடுகள் உள்ளன. இவருடைய பாடல்களில் வடசொற்கள் மிகுதியும் காணக்கிடக்கின்றன.
இத்தகைய சிறந்த சந்தக்கவிதைகளைத் (பாடல்களை) தந்த அருணகிரியார் அருளிய நூல்களாவன. 1) திருப்புகழ், 2) திருவகுப்பு, 3) கந்தரந்தாதி, 4) கந்தரலங்காரம், 5) கந்தரனுபூதி, 6) வேல், மயில், சேவல் விருத்தங்கள், 7) திருஎழுகூற்றிருக்கை என்பனவாம்.
மேற்கண்ட பாடல்களில், உலகப் பொதுமறை தந்த வான்புகழ் திருவள்ளுவரின் நெறிகளை ஆங்காங்கே ஊடாக அமைத்துப் பாடியுள்ள திறம் வியத்தற்குரியதாம்.
அவற்றுள் சில கீழே காண்போம்.
திருக்குறளில் அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் நிறைவாக 'மன அடக்கம்' பற்றிக் கூறுகிறார். மனஅடக்கம் என்பது சின அடக்கம் என்கிறார்.
“கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து” (குறள் 130)
(கதம் - வெகுளி - சினம் என்பதாம்)
இதற்கு உரையெழுதிய பரிமேலழகர் (பதின்ம உரையாசிரியர்களுள் சிறந்தவர்) இதனால் 'மன அடக்கம்' கூறப்பட்டது என்கிறார். அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல் என்கிறார். வெகுளி (சினம்) இல்லாதிருத்தலே அறம் என்றும் கூறுகிறார். கதம் (வெகுளி-சினம்) காத்தவன் இடத்தே அறக்கடவுள் சென்றடையும் நேரத்தை எதிர்பார்த்திருக்கும் என்கிறார்.
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்” (குறள் 834)
கதம் (சினம்) காத்துத் தானடங்காதவன் பேதை (அறிவிலி) என்கின்றார்.
அடுத்து, தானம் செய்தல் வேண்டும் என்பதை, வான்புகழ் வள்ளுவனார்,
“தானம் தவமிரண்டும் தங்கா” (குறள் 19)
“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தர் பொருட்டு” (குறள் 212)
(வேளாண்மை - பிறர்க்கு உபகாரம் (தானம்) செய்தல்)
இதற்குப் பரிமேலழகர் தம் உரையில்,
தானமாவது அறநெறியான் வந்த பொருளைத் தக்கார்க்கு (தகுந்தவர்க்கு) உவகையோடும் (மனநிறைவாக - மகிழ்ச்சியாக) கொடுத்தல் என்கிறார்.
தவமாவது - மனம் பொறி (மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகள்) வழி போகாது, நிற்றல் பொருட்டு விரதங்களான உண்டி சுருக்கம் முதலாயின. (உண்டி – உணவு) அதில் விரதம் என்பது தத்தம் ஆற்றலுக்கு ஏற்றவாற்றான் வரைந்து கொள்வது (வகுத்துக் கொள்வது) என்கிறார்.
இதையெல்லாம் கற்றுணர்ந்து தெளிந்து உள் வாங்கிய திருப்புகழ் நாதர் (வாக்கிற்கோர் அருணகிரியார்) தாமியற்றிய 'கந்தரலங்காரம்' எனும் நூலில்,
- 17-ஆம் பாடலில், திருவள்ளுவர் மேற்கூறியவாறு அவர்தம் நெறியில் நின்று பின் வரும் பாடலைப்
- பாடுகிறார்.
- “தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
- இடுங்கோள், இருந்தபடி யிருங்கோள், எழு பாரும்உ ய்யக்
- கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் துளைக்க வைவேல்
- விடுங்கோன் அருள்வந்து, தானே உமக்கு வெளிப்படுமே”
- இப்பாடலில் அருணகிரியார்தம் முன்னோர் திருவள்ளுவர் நெறியில்,
- (1) மனதைத் தடுக்க வேண்டும். (மனம் மொழி வழிகளில் போகாமல் நிற்றல் என்றும் உரைத்ததை
- அருணகிரியார் தடுங்கோள் மனத்தை என்கிறார்.
- (2) வெகுளியை (கோபம் - சினம்) விட வேண்டும் (கதம் காத்து - குறள் எண். 130 - மனம் புறத்துப்
- போகாது (பராவது) அறத்தின் கண் நிற்றல் - வெகுளி இல்லாதிருத்தலே அறம் (திருவள்ளுவர்). இவர் நெறியின்
- வழியே ‘விடுங்கோள் வெகுளியை’ என்கிறார் அருணகிரியார்.
- (3) ‘தானம் – தவம் தங்கா வியனுலகம்' (குறள் எண். 19) பரிமேலழகர் உரைத்த பொருளில் திருவள்ளுவர்
- நெறி நின்று 'தானம் என்றும் இடுங்கோள்' என்கிறார் அருணகிரிநாதர்.
மேற்கண்ட கந்தலரங்காரப் பாடலில், திருப்புகழ் நாதர் மனத்தைத் தடுக்க வேண்டும்; வெகுளியை விடவேண்டும்; தானம் என்றும் இட வேண்டும் என்பவனும், அப்பாடலில் கூறும் பிறவும் பின்பற்றினால் 'திருமுருகன்' அருளாளனாய் நம்முன் எதிர்ப்படுவார் என்கிறார். இதுவே, அருளாளன் திருமுருகன் நம்முன் எதிர்ப்பட உதவும் உபாயமாகும் என்கிறார்.
மேலும் திருத்தணி - திருப்புகழில்
“சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்குந் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் யாம்”
“அடக்கும் சினத்தையும், உடற் சங்கரித்த மலை முற்றும்
சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா”
என்றும் திருப்புகழ் நாதர் (அருணகிரியார்) திருவள்ளுவர் நெறி நின்று பாடியுள்ளமையை நன்கறியலாம்.
மேற்கூறிய இருவரின் கருத்தினைப் பின்பற்றியே (அடியொற்றியே) பின் வந்த தருமையாதீனத்தின் ஆதிகுருமுதல்வர், ஸ்ரீ குருஞானசம்பந்தர் அவர்கள், தாமியற்றிய 'சிவபோக சாரம்' எனும் சைவ சித்தாந்த நன்னூலில்.
“ஆசையறாய், பாசம்விடாய், ஆனசிவபூசை பண்ணாய், நேகழுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் - சீச்சீ சினமே தவிராய், திருமுறைகள் ஓதாய் மனமே உனக்கென்ன வாய்”
என்றும் கண்டித்துக் கூறியுள்ள திறம் நாம் பின்பற்ற வேண்டிய செயலாகும் என்பதில் ஐயமில்லை எனலாம்.
இறைவன் நம்முன்னே எதிர்ப்படவே தகுந்த வழிகாட்டுதல்களாக, பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும், திருப்புகழும் தோத்திர, சாத்திர நூல்களாக நமக்கு அமைந்துள்ளமை எண்ணி மகிழ்வோமாக
மேலும், மேற்கண்டோர் நெறிகளை நாம் அனைவரும் பின்பற்றினால் நமக்கு இறைவன் (சிவமுருகன்) அருள்வந்து தானே வெளிப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை எனலாம்.
மேலும் அருணையின் அருளாளர் அருணகிரிநாதர் காட்டிய அருள்நெறியில் செல்ல முற்படுவோமாக
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
★★★
Chengalvaraya Pillai started writing not only the word by word meanings of the difficult Tamil words in Arunagirinathar’s compositions, but also the import of each song in easy Tamil with the greatest possible fidelity to the original,
With commentaries added, giving parallel reference within his works and also to other well-known works in Tamil. His monumental work was first published in the year 1951 and 1952 in six volumes by Shri R. Kalyanasundaram lyer the author of “vallimalai vallal”. It will be no exaggeration to say that this magnum opus of Shri Pillai stands unmatched till today for the great erudition in Tamil that it displays, for the meticulous accuracy in details and its freedom from obscurity of meanings throughout the entire commentaries. It is not merely a great scholarly work, but one emitting the fragrance of devotion.
— Swami Anvananda in his book Saint Arunagirinatha

