தில்லைத் திருப்புகழ்
முனைவர் R.அன்பழகன், தாளாளர், பாரதி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, புவனகிரி.
சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் ஐந்து திருத்தலங்கள் சிறப்பு வாய்ந்த திருத்தலங்களாகக் கொள்ளப்பெறுகின்றன. அவை, காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் என்பனவாகும்.
இவை, ஐம்பூதத் தலங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
ஐம்பூதத் திருத்தலங்களில், சிதம்பரம் வான் தலம் என்றும், காஞ்சிபுரம் நிலத் தலம் என்றும், திருவானைக்காவல் நீர்த் தலம் என்றும் திருவண்ணாமலை நெருப்புத் தலம் என்றும், திருக்காளத்தி காற்றுத் தலம் என்றும் சொல்லப் பெறுகின்றன.
இந்த ஐம்பூதத் தலங்களில் தலைமையானத் தலமாக விளங்குவது சிதம்பரம். இது
தரிசிக்க முத்தி அளிக்கும் தலம் என்றும் சிறப்பிக்கப்பெறுகின்றது. தில்லை, பெரும்பெற்றப்புலியூர், புலீச்சுரம், திருச்சிற்றம்பலம் என்னும் பெயர்களாலும் இத்திருத்தலம் அழைக்கப் பெறுகின்றது.
திருக்குற்றாலத்தில் சித்திர சபையிலும், திருநெல்வேலியில் தாமிர சபையிலும், மதுரையில் இரஜித (வெள்ளி) சபையிலும், திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும் சிதம்பரத்தில் கனக (பொன்) சபையிலும் காட்சி தருகின்றார்.
அருணகிரிநாதர், சிதம்பரம் திருத்தலத்தில் 67 அரிய திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். இந்த 67 பாடல்களுமே அற்புதமான பாடல்கள்தாம்.
எனினும், இப்பாடல்களில், 'கனக சபை மேவு எனது குருநாத....', 'மச்சமெச்சு சூத்திரம்...', 'கட்டி முண்டகர பாலி அங்கிதனை...’, ‘ஆரத்தோடணி...’, 'தாதுமாமலர் முடியாலே...', 'மதியமண்குணம்...', 'எழுகடல் மணலை அளவிடின் அதிகம்...', 'சுடரனைய...', 'காவி உடுத்தும் தாழ்சடை வைத்தும்...' எனத் தொடங்கும் பாடல்கள் புகழ் பெற்றவை ஆகும்.
சிதம்பரத் தலத்தில் பாடப்பெற்ற 67 திருப்புகழ்ப் பாக்களில் 'தாதுமாமலர் முடியாலே...' எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடல் மிகுந்த சிறப்பிற்கு உரியது ஆகும். இப்பாடல் தான் இன்று 1328 திருப்புகழ்ப் பாடல்களையும் கண்டு அறிவதற்கும் நாம் படித்துப் பயன் பெறுவதற்கும் காரணமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி, அருள்மொழி அரசு வாரியார் சுவாமிகள் தம்முடைய திருப்புகழ் விரிவுரையில் குறிப்பிட்டுள்ள செய்தி காணத்தக்கது.
'திருப்புகழ் ஏடுகளை வாழ்நாள் முழுவதும் ஓடி நாடி தேடிச் சேகரித்துச் சோதித்து அச்சிட்டு அடியார்க்கு வழங்கியவர், சிறந்த முருகனடியார் திரு வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை அவர்கள். இவர் இல்லாயானால் திருப்புகழ் இல்லை....
திரு வடக்குப்பட்டு சுப்பிரமணியப் பிள்ளை முதன் முதலாக ('தாதுமாமலர் டியாலே') இத்திருப்புகழை 1871இல் சிதம்பரம் தீட்சிதர் ஒருவர் தர, இதன் இனிமையைப் பருகி உள்ளம் உருகி ஏடு தேடிச் செப்பம் செய்து அச்சிட்டு உதவினார்.... எனவே, திருப்புகழ் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தது இத்(தில்லைத்) திருப்புகழ் என உணர்க' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (அருள்மொழி அரசு வாரியார் சுவாமிகள் எழுதிய திருப்புகழ் விரிவுரை, சிதம்பரத் தலம். ப.199)
'தாதுமலர் முடியாலே...' எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில் உள்ள வேதநூன்முறை வழுவாமே தினம், வேள்வியால் எழில் புனை மூவாயிர மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே என்னும் வரிகள் குறிப்பிடத்தக்கன. இவ்வரிகளில் தில்லையில் வாழ்ந்த தீட்சிதர்களுடைய பெருமை சொல்லப்படுகிறது. சிதம்பரம் தீட்சிதர்கள் ஒரு விவாதத்தில் தங்கள் பெருமையை நிலைநாட்டுவதற்காக இத்திருப்புகழை எடுத்துக் காட்டினார்.
இப்பாடலைப் படித்த வடக்குப்பட்டு த.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் திருப்புகழின் மேன்மையை உணர்ந்தார். இப்பாடல்களில் ஆயிரம் பாடல்களையாவது தேடித் தொகுத்து அச்சிட வேண்டும் என்ற முடிவு செய்து, அரிதின் முயன்று தேடித் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டார். (வ.சு. செங்கல்வராய பிள்ளை, அருணகிரிநாதர் நூலாராய்ச்சி, பக்.28-29)
சிதம்பரத் தலம் அளவிடற்கு அரிய சிறப்புக்கள் பல உடையது. சித்+அம்பரம் = சிதம்பரம் ஆயிற்று என்பர். சித் என்னும் சொல்லிற்கு ஞானம் என்பது பொருள்.
'சித் பர தத்துவன் தாள் அடைந்தேன்' என்னும் பிரபந்த வரி காண்க. அம்பரம் என்னும் சொல்லிற்கு வான் என்பது திவாகர நிகண்டு தரும் பொருள். எனவே, சிதம்பரம் என்னும் சொல்லிற்கு ஞான வான் (ஆகாயம்) என்று பொருள். சிதாகாயம் எனவும் கூறுதல் தகும்.
தவத்தால் சிறந்த புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் ஆடல்வல்லான் தன் ஆடல் காட்சியை அருளிய சிறப்பிற்குரிய தலம், சிதம்பரம் ஆகும்.
‘இனியமுது புலிபாதன் உடன் அரவு சதகோடி
இருடியர் ஞான பெருமாளே’
என்னும் திருப்புகழ் வரி இச் செய்தியைக் கூறுதல் காணலாம். அருணகிரிநாதர் சிவபெருமானை முருகப் பெருமானாகவும் முருகப் பெருமானைச் சிவபெருமானாகவும் கண்டு பாடிய திருத்தலம், சிதம்பரம்.
‘ஆடும்பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்', (கந்தரனுபூதி, பா. 1)
என்பது அருணகிரிநாதர் கூற்று.
இதிலிருந்து, முருகப் பெருமானின் புகழ், வேல், மயில், சேவல் ஆகியவற்றின் பெருமை பாடுவதையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர், அருணகிரிநாதர் என்பது தெளிவாகின்றது. இது, முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு இட்ட ஆணை எனவும் அவரே கூறுவார்.
'பாத பங்கயம் உற்றிட உட் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடும் என்பது செய்யப்பதியில் தந்தவன் நீயே' (திருப்புகழ், 109)
என வரும் திருப்புகழ் பாடல் வரிகள் இதற்குச் சான்று.
அருணகிரிநாதர் முருகப் பெருமானின் பெருமை பேசுபவர்தாம். எனினும், அவர் முருகப் பெருமானைச் சிவபெருமானின் வேறான கடவுளாகக் கண்டவர் அல்லர். முருகப் பெருமானைச் சைவ சித்தாந்தத்தை அடிப்படை மெய்ப் பொருளாகக் கொண்ட சித்தாந்த சைவ சமயத்தின் முழுமுதல் பரம் பொருளாகவே கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, ஐம்முகப் பரமனும் அறுமுகப் பரமனும் ஒருவரே என்னும் கருத்தை வலியுறுத்துவதை உணர்தல் வேண்டும். இதற்குத் திருப்புகழ்ப் பாடல்களில் இருந்து சில சான்றுகளைக் காட்டுதல் இயலும்.
திரிபுரம் எரிசெய்த கோவே நமோ நம
செய செய அரகர தேவா சுராதிபர் தம்பிரானே (திருப்புகழ்-638)
என்னும் திருப்புகழ்ப் பாடல் வரிகளில் சிவபெருமானுடைய திரிபுரம் எரித்த திருவிளையாடலை முருகப் பெருமானுடைய திருவிளையாடலாகக் கூறுகின்றார்.
“புவியதனில் பிரபுவான
புகலியில் வித்தகர் போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக்கு அருள்வாயே
சமரில் எதிர்த்து அசுரர் மாள
தனிஅயில் விட்டு எறிவோனே
நமசிவயப் பொருளோனே
இரதகிரிப் பெருமாளே” - திருப்புகழ், 241
சிவபெருமானுடைய மந்திரமாகிய நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பொருளாக முருகப் பெருமான் விளங்குகின்றான் என்கிறார்.
“செருவெங்களத்தில் வந்த அவுணன் தெளித்து மங்க
சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே” (திருப்புகழ் 633)
“கனகசபை மேவும் எனது குருநாத
கருணை முருகேசப் பெருமாள் காண்
விதிமுனிவர் தேவர் அருணகிரிநாதர்
விமலசர சோதிப் பெருமாள் காண்” (திருப்புகழ், 617)
என்னும் வரிகளில் தில்லை ஆடல் வல்லானையும் திருவண்ணாமலை அண்ணாமலையானையும் முருகவேளாகக் கண்டு, கொண்டு அருணகிரிநாதர் பாடக்காண்கிறோம்.
சிவகங்கை
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவை சைவத்தில் ஒரு தலத்தின் மூன்று சிறப்புகளாகக் கருதப்படுகின்றன. “மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கோர் வார்த்தை சொலச் சற்குரு வாய்க்கும் பராபரமே” (தாயுமானவர் பாடல்கள், 791)
என்று தாயுமானவர் பாடுகின்றார்.
ஒரு திருத்தலம், அத்திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சிவலிங்க வடிவம், அத்திருத்தலத்தில் உள்ள திருக்குளம் ஆகிய மூன்றையும் முறையாக வழிபடுபவர்களுக்கு இறைவனே சற்குருவாக வந்து திருவைந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லி அருள்வான் என்பது இதன் பொருள். இதன்படி சிதம்பரத்தில் பொலிவும் புனிதமும் விளங்கும் சிவகங்கை தீர்த்தத்தின் பெருமையை அருணகிரிநாதர் சிதம்பரம் திருப்புகழ் ஒன்றில் பாடுகின்றார்.
“செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ
கங்கை அளாவும் மகா சிதம்பரம்
திண்சபை மனா சௌந்திர தம்பிரானே” (திருப்புகழ், 636)
என்பன அத்திருப்புகழ் வரிகள். இவ்வரிகளில் சிவகங்கையை செந்தமிழ் ஞானத் தடாகம் என்று அருணகிரிநாதர் சிறப்பிக்கின்றார். சிதம்பரத் தலத்தில் விளங்கும் சிவகங்கைத் தடாகத்தில் நீராடுவோர்க்கு செந்தமிழ் ஞானம் சித்திக்கும் என சிவகங்கையின் பெருமையைப் பாடுவதைக் காண்கிறோம்.
சிதம்பரத்தில் வழிபட்டுப் பேறு பெற்றவர்கள்
வியாக்கிர பாதர், பதஞ்சலி முனிவர், இரணியவர்மன் ஆகியோர் சிதம்பரத்தில் வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்பை அருணகிரிநாதர் தருகின்றார்.
“மவுலியில் அழகிய பாதாள லோகனும் மரகத முழுகிய காகோத ராசனும் மனுநெறி உடன் வளர் சோணாடர் கோனுடன் உம்பர் சேரும்” (திருப்புகழ், 638)

