திருவண்ணாமலை ஓர் ஆன்மீக பூமி. இங்கு பல சித்தர்கள் மகான்கள் வாழ்ந்து உள்ளனர். சிலர் இத்தலத்தில் தோன்றியும் சிலர் பல ஊர்களில் இருந்து அண்ணாமலையால் ஆட்கொள்ளப்பட்டு இங்கு நிரந்தரமாக தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து முக்தி அடைந்து உள்ளனர்.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் மூன்றாம் நூற்றாண்டில் அருணையில் வாழ்ந்து அங்கு ஜீவசமாதி அடைந்தார்கள்.

அவர்களைத் தொடர்ந்து அருணகிரிநாதப் பெருமான், குகை நமச்சிவாயர், குருநமச்சிவாயர் என பல அவதாரப் புருஷர்கள் தோன்றினார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இம்மண்ணில் வாழ்ந்த முக்கியமான மகான்கள் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி மற்றும் விசிறி சாமியார் என்று பலராலும் போற்றப்படுகின்ற யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் ஆவார்கள்.

அருணையம் பதியிலிருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு சென்று 'வேழமுண்ட விளாங்கனி' என்று பாடிய அருளாளருக்கும், உத்தரப் பிரதேசத்திலிருந்து அருணைக்கு வந்து வாழ்ந்த விசிறி சுவாமிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

‘Great men think alike‘ என்று சொல்வார்கள். அது போல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரும் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விசிறி சுவாமிகளும் ஒரே சிந்தனை உடையவர்களாக இருந்தார்கள்.

அதற்குச் சான்றாக நாம் சில தகவல்களைப் பார்க்கலாம்.

அருளாளர் திருப்புகழில் ஆறுமுகப் பெருமானுக்கு அடுத்தபடியாக அவரது அடியார்களைத் தான் போற்றுவார்கள். அடியார்களுக்கு துன்பம் என்றால் முருகப்பெருமான் ஓடோடி வந்து காப்பார் என்று புகழ்வார்கள்.

'விறல்மார னைந்து' என்று துவங்கும் செந்தூர் திருப்புகழ் 'அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே' என்றும், 'மூலம் வினை' என்றும் துவங்கும் திருப்புகழில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்கனே நின்று வாழும் மயில் வீரனே என்றும்,

'வேல் ஒத்து வென்றி' என்று துவங்கும் திருப்புகழில் 'நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே 'என்று பாடி உள்ளார்கள். இக்கருத்தினையே விசிறி சுவாமிகள் அவர்களும்,

'நீங்கள் என் தந்தையை எண்ணிக் கொண்டிருந்தால் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தலை மேல் உள்ள முடி போன்று ஆகிவிடும்.உடலுக்கு தலை முடி ஒரு பாரம் கிடையாது' என்று கூறுவார்கள்.

அவ்வண்ணமே ‘அதி மதம்’ என்று துவங்குகின்ற காஞ்சிபுரம் திருப்புகழில் துதி செய்கின்ற பரிசுத்தமான பக்தி பூண்ட அடியார்களுடைய துக்கத்தை நீக்குபவர் முருகப்பெருமான் என்று பொருள்பட இவ்வாறு பாடியுள்ளார்.

சத்திக் கைத்தல னித்தன் ...... குமரேசன்
‘துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங் களைபவன்’

விசிறி சாமியார் அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் 'யாரிடத்தில் சுயநலம் என்பது சிறிதும் இல்லையோ அவரிடத்தில் கடவுள் இறங்கி முழுவதும் ஆட்கொண்டு விடுகிறார்' என்று கூறியுள்ளார்கள்.

அருளாளர் அவர்கள் உடலின் நிலையாமையை பல பாடல்களில் வலியுறுத்திருள்ளார்கள். 'அல்லில் நேரும் மின்னதுதானும் ‘என்று துவங்கும் வள்ளியூர் திருப்புகழில் ‘அல்ல தாகிய உடல் மாயை’ என்று கூறிவார்.

விசிறி சாமி அவர்களும் இதே கருத்தை 'ஆன்மா நிலையானது அழிவில்லாதது பிறப்பும் இறப்பும் அதற்கு இல்லை அவை உடலுக்கே ‘என்று கூறுவார்.

அருளாளர் அவர்கள் வேதங்களில் முழுமையான ஞானம் பெற்றவர். அவர் வேதங்களின் முக்கியத்தை பல பாடல்களில் உணர்த்தி உள்ளார்கள். மனக் கவலை ஏதுமின்றி என்று துவங்கும் திருத்தணி திருப்புகழில்

சந்தேகம் அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து வணங்கவேண்டும் என்று பொருள்படும் படி

‘மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி’ என்று பாடி உள்ளார்கள்.

அதேபோல் 'நீலங்கொள் மேகத்தின்' என்று துவங்கும் திருப்புகழில் ‘நாலந்த வேதத்தின் பொருளோனே’ என்று முருகப் பெருமானை புகழ்வார்கள். விசிறி சுவாமிகளும் வேதத்தின் பெருமையை இவ்வாறு விவரிப்பார் ‘எங்கெல்லாம் வேதம் ஒலிக்கப் படுகின்றதோ அங்கே சென்று அதனைக் கேள். உனக்குப் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை.அது உனக்கு நன்மை பயக்கும் ‘என்று கூறுவார்கள்.

அருளாளர் விதியின் மீது நம்பிக்கை உடையவர். அருளாளர் அவர்கள் விதியின் வலிமையைப் பற்றி பல பாடல்களில் சொல்லியுள்ளார்கள். ‘விதி போலும் உந்து‘ என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழிலும், ‘விதி அதாகவே ‘ எனத்துவங்கும் அருணைத் திருப்புகழிலும் விதியைப் பற்றி குறிப்பிடுகிறார். அங்கனமே கந்தர் அனுபூதியில் அருளாளர் அவர்கள் ‘மின்னே நிகர்வாழ்வை ‘ என்று துவங்கும் பாடலில் தான் இவ்வாறு இருக்க விதிதான் காரணமோ என்று பொருள்பட

‘என்னே விதியின் பயன் இங்கு இதுவோ ‘ என்று பாடுவார்.

விசிறி சாமியார் அவர்களும் பூர்வஜன்ம வினைகளைப் பற்றி இவ்வாறு கூறுவார் 'முற்பிறவியின் வினைகளைப் பொருத்தி கண்களுக்குப் புலனாகாத ஒரு சக்தி எல்லோருடைய வாழ்க்கையும் இயக்கி வருகிறது'.

இறைவனை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுவதும் தன்னை மிகத் தாழ்ந்தவராகவும் எண்ணி பாடுவதும் அடியார்களின் இயல்பு. மாணிக்கவாசகப் பெருமான் தன்னை 'நாயேன்' என்று 67 முறை திருவாசகத்தில் கூறியிருக்கின்றார்கள். அருளாளர்களும் தனது பாடல்களில் தன்னை நாயுடன் ஒப்பிட்டு 20 க்கும் மேற்பட்ட பாடல்களில் பாடி உள்ளார்கள். சரண கமலாலயத்தில் என்று துவங்கும் சுவாமிமலை திருப்புகழில் ‘சட கசட மூட மட்டி‘ என்று தன்னை தாழ்த்திக் கொள்கிறார்கள்.விசிறி சாமியார் அவர்களும் அருளாளர் அவர்களின் வழியில் தன்னை தாழ்த்திக் கொண்டு தன்னை ஒரு பிச்சைக்காரன் என்றும் அடிக்கடி கூறுவார்கள். இந்தப் பிச்சைக்காரனிடம் ஏதுமில்லை. இந்தப் பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்! என்று தன்னை நாடி வரும் பக்தர்களிடம் கூறுவார்.அருளாளர் அவர்கள் பல பாடல்களில் தனது குறைகளை பட்டியலிட்டு அதனை களைய வேண்டும் முருகனே என்று பிரார்த்தனை செய்வார் ‘அமல வாயு ஓடாத ‘ என்று துவங்கும் திருப்புகழில் ‘எனது’ என்ற மமகாரமும் ‘நான்‘ என்ற அகங்காரமும் நீங்க வேண்டும் என்ற பொருள்பட,

‘எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும்’ என்று பாடுவார்

விசிறி சாமியார் அவர்களும் நான் என்ற சொல் முற்றிலும் நம்மிலிருந்து அகல வேண்டும் என்று இவ்வாறு கூறுவார். 'நான் இந்த உடல் எண்ணுவதை விட்டு விட வேண்டும். இதில் வெற்றி பெறுவாயானால் ஆன்மா விடுதலை பெறும்.இது எங்கும் நிறைந்ததுமாய் சக்தி வாய்ந்ததுமாய் ஆகும்' அருளாளர் அவர்கள் 'பூவிக்கு உன் பாதம்' என்று தொடங்கும் திருப்புகழில் ‘எமை பணி விதிக்கும் சாமி‘ என்று பாடுவார் . அதாவது தாம் செய்யவேண்டிய தொண்டு என்னவென்று முருகப்பெருமான் தான் நிர்ணயம் செய்வார் என்று கூறுவார்.

விசிறி சுவாமி அவர்களும் அவ்வழியில் 'தந்தை இந்த உலகில் தம் பணிக்காக இந்த வகை பிச்சைக்காரனையும் விரும்புகிறார் ‘ என்று கூறுவார் .

அருளாளர் அவர்கள் குருவின் முக்கியத்துவத்தை தனது பாடல்களில் உணர்த்தியுள்ளார்கள் ‘கடலை சிறைவைத்து மலர்‘ என்று துவங்கும் திருப்புகழிலும் ‘பரிமள களபசு ‘என்று துவங்கும் திருப்புகழிலும் ‘சத்குரு நாதா‘ என்று முருகப் பெருமானை அன்புடன் அழைப்பார்.

கனகசபை மேவும்‘ எனத்துவங்கும் தில்லைத் திருப்புகழில் எனது குருநாதா என்று முருகனை தனது குருநாதர் என்று சொந்தம் கொண்டாடுவார். இறுதியாக அவர் கிளி உருவம் பெற்று பாடிய பாடல் கந்தர் அனுபூதி . அனுபூதியில் வரும் கடைசி பாடலில் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே எனப் பாடி தனது பாடும் பணியை நிறைவு செய்வார்.விசிறி சாமி அவர்களும் குருவின் முக்கியத்துவத்தை இவ்வாறு கூறுவார் .

'ஒரு குரு வேண்டும் ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற நினைப்பு வருவதே ஆண்டவன் அருளால், குரு கிடைப்பது என்பது மிகவும் கடினம் குரு கிடைக்கப் பெற சில சமயங்களில் பல பிறவிகள் எடுக்க வேண்டும்.'

இரு மகான்களும் அறிவுறுத்தும் மிகப்பெரிய செயல் நாம ஜெபம் தான்.

அருளாளர் அவர்கள் கந்தர் அனுபூதியில் முருகன் நாமங்களை ஜெபித்து உள்ளம் உருகும் பணியை தந்தருளி அதன் வாயிலாக ஞானத்தை வழங்கி அருள்வாயாக என்று பொருள்பட

‘முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாயே’ என்று பாடுவார்.

இதே கருத்தை விசிறி சாமிகளும் நாம ஜபத்தின் பயனை இவ்வாறு விவரித்துள்ளார்கள். 'இறைவனை மறப்பதால் துன்பங்கள் நேர்கின்றன. இறைவனை மறவாமல் இருப்பதற்கு சுலபமான வழி எப்போதும் இறை நாமத்தைசொல்லிக் கொண்டிருப்பதுதான்.

இவ்வாறாக இரு அருளாளர்களும் காலத்தால் வேறுபட்டிருந்தாலும் ஆன்மீகக் கருத்துக்களாலும், சிந்தனைகளாலும் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள் என்று உறுதியோடு கூறலாம்.

வாழ்க அருளாளர் அருணகிரிநாதர்

வாழ்க யோகிராம்சுரத்குமார் சுவாமிகள்!

★★★

The words of Thiruppugazh have a power of their own. We should remember what Seshadri Swamigal said about Thiruppugazh. ""Thiruppugazh is a Maha Mantra. Just by uttering, it creates a power within". We may not understand the meaning but let us listen to the songs, chant them, recite them and keep repeating them. What is essential is not necessarily knowledge but Bhakti.

— V.S Krishnan