ஞானத் தபோதனரை வா என்று அழைக்கும் திருவண்ணாமலையிலே இற்றைக்கு சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் அருணகிரிநாதர் திரு அவதாரம் செய்தார். இளமை மீதூர இன்பத்துறையில் எளியராகி இளமைக் காலத்தை வீணே கழித்தார். இதனால் உடற்பிணி தோன்ற தன் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற நினைவுடன் வல்லாள மகாராஜா கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்த அருணகிரியாரை இரண்டுத் திருக்கரங்கள் தாங்கியது. முருகப்பெருமான் தன் திருக்கரங்களால் தாங்கி “சும்மா இரு சொல்லற” என்று உபதேசம் செய்து மறைந்தார். முருகப் பெருமானின் பரிச தீட்சை பெற்றவுடன் அருணகிரியாருடைய உடற்பிணி நீங்கி ஒளி போன்ற உடம்பைப் பெற்றார். பெருமானின் உபதேச மொழியை கேட்ட உடன் நிட்டை கூடி யோகத்தில் அமர்ந்தார். சுமார்

பன்னிரண்டு ஆண்டுகள் யோகத்தில் இருந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் தோன்றி “அருணகிரி எழுந்திரு” என்று அழைத்துத் “திருப்புகழைப் பாடு” என்ற பணித்தார். “வேதங்களுக்கும் எட்டாத நின் புகழைக் கல்வி, கேள்வி, ஞானம் சிறிதும் இல்லாத சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்று அருணகிரியார் கூற, முருகப்பெருமான் அருணகிரியாரின் நாவில் வேலின் நுனி கொண்டு பிரணவம் எழுதி, “முத்து” என்று தொடங்கிப் பாடு என்று பணித்தருளிச் சகலகலை ஞானங்களையும் வழங்கியருளினார். இவ்வண்ணம் பெருமான் அடியெடுத்துத் தர உடனே அருணகிரியார் வாக்கில் மடைதிறந்த வெள்ளம் போல் தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்தது. “முத்தைத்தரு” என்று தொடங்கும் திருப்புகழைப் பாடினார். தாம் பெற்ற இந்த அனுபவத்தை “அறிவுமறி தத்துவமும், அபரிமித வித்தைகளும் அறியென இமைப் பொழுதில் வாழ்வித்த வேதியனும் – வேடிச்சிகாவலன் வகுப்பு

“யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்

தாமே பெற வேலவர் தந்தனால்” - கந்தர் அநுபூதி.

இவைகளால் அறியக் கிடக்கிறது. மீளவும் சிவயோகத்தில் இருந்த அருணகிரியாரை “வயலூருக்குவா என அசரீரியாகக் கூறிக் கட்டளையிட்டு அருளினார் முருகப் பெருமான். வயலூரில் அருணகிரியாருக்கு தொடர்ந்து திருப்புகழைப் பாடு என்று அதற்குரிய அருளாற்றலைச் சிறப்பாக வழங்கினார். “பக்கரைவிசி சித்ரமணி - எனத் தொடங்கும் திருப்புகழில் பெருமான் எதையெல்லாம் வைத்துப்பாடு என்று கூறினார் என்று பாடியிருக்கிறார்.

“வயலி நகரியில் நன்பெற மயில்மிசை
உதவு மரிமள மதுர வெகுவித
வனச மலரடி கனவிலும் நனவிலும் மறவேனே”

என்றும் அருளிச் செய்திருக்கிறார். அருணகிரியார் இரண்டாவதாக அருள் கிடைத்த வயலூரை மறவாது பல திருப்புகழ்ப்பாடல்களில் வைத்துப் பாடும் நியமங் கொண்டார். இறைவன் விராலிமலைக்கு வா என்று அசரீரியாகக் கூறியருளினார். இங்கு அவருக்கு அட்டமா சித்தி தந்தார். பழநியிலே அருணகிரியாருக்கு செபமாலை தந்த பெருமான்.

"அபகார நிந்தை பட்டு” என்று திருப்புகழ் இந்த நிகழ்ச்சியின் சான்றாக உள்ளது. திருச்செந்தூர் பெருமானை வணங்கி திரு நடன தரிசனம் பெற்றார் என்பதை, “தண்டையணி” என்று தொடங்கும் திருப்புகழ் மூலமாக நாம் அறிகிறோம். திருவேரகத்தில் அருணகிரிநாதர் பிரணவ உபதேசம் பெற்றார் முருகப் பெருமானிடம் பிரணவ உபதேசம் பெற்றவர் மூவர். “தேவ தேவர் சிவபெருமான், முனிவர்களில் சிறந்த அகத்தியனார், மனிதரில் தலையாயவர் அருணகிரிநாதர்”

வாதத்தில் தோற்ற புலவர்களது செவிகளை அறுந்தொறுக்கும் வில்லிபுத்தூராரை சனியூரில் சந்தித்தார். இச்செயலை மாற்ற வேண்டுமெனக் கருதி. அவருடன் வாதிட்டு கந்தரந்தாதி பாடி வென்று அவரைத் திருத்தி அருள் புரிந்து “கருணைக்கு அருணகிரி” யானார். காளி உபாசகனாகிய சம்பந்தாண்டான் என்றவனுடன் வாது செய்து திருவருணையில் சிவகங்கைத் தீர்த்தத்திற்கு அருகில் உள்ள பதினாறு கால் மண்டபத்தின் ஈசானத் தூணில் இருந்து முருகனை உலகமறிய வருவித்துக் காட்சி தரச் செய்து உதவினார்.

அது பொழுது அருளிய திருப்புகழ் “அதலசேடனாராட” ஆகும்.

“சயிலம் எறி ந்தகை வேற்கொடு
மயில்மிசை வந்தெனை யாட்கொள
சகமறியும் படி காட்டிய குருநாதா” - திருப்புகழ் (அகச்சான்று)

வயிரவிவனம் முதலிய திருத்தலம் வரை சென்று பெருமானைப் பாடினார். வடக்கே காசி முதல் தெற்கே இராமேச்சுரம் வரையும், இலங்கையில் உள்ள திருகோணமலை கதிர்காமம் முதலிய தலங்களையும் கண்டு களித்துப் பாடினார். மன்னன் பிரபுடதேவராசனுடைய கண் ஒளி குன்றிய காரணத்தினால் அருணகிரிநாதர் விண்மலர் கொண்டு வரவேண்டுமென தன்னுடைய உடலை மேல கோபுரத்தில் (மேற்கு கோபுரம்) வைத்து கிளியுருவங் கொண்டு விண்ணுலகஞ் சென்று பாரிஜாத மலர் கொணார்ந்தார். அவர் அப்படிக் கிளியுருவுடன் வந்து அமர்ந்த கோபுரத்தை இன்றும் கிளிக் கோபுரம் என்று அழைக்கின்றனர். வான் பாரிசாதமலரின் மணத்தினால் மன்னன் மட்டுமின்றி, கண்ணொளி குன்றிய அனைவரும் கண்ணொளி பெற்றனர். அருணகிரிநாதர் விண்ணுலகம் சென்ற உடன் அவருடைய உடலை சம்பந்தாண்டன் சிதைத்து விட்டான் (புதைத்து விட்டான்) கிளியுருவிலே கந்தர் அநுபூதி பாடியருளினார். அருணகிரிநாதர் கிளியுருவிலே முருகப் பெருமானின் திருத்தோளில் அமர்ந்தார். பின்னர் அருணகிரிநாதர் ஒரு நாள் தன் பழைய உருவைக் காட்டி எல்லோருக்கும் அருள்புரிந்து ஆனி மாதம் பௌர்ணமி திதி கூடிய மூல நட்சத்திரத்தன்று முருகப் பெருமானின் திருவடியில் கலந்து பேரின்பப் பெருவாழ்வில் அமர்ந்தருளினார். அருணகிரிநாதர் திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அந்தாதி என படைத்த நூல்களில் கந்தர் அனுபூதியில் சித்தாந்தக் கருத்துக்கள் செறிந்து கிடக்கின்றன. அருணகிரிநாதர் உலக மாந்தர்களுக்கு பல அறிவுரைகளைத் தமது நூல்களின் மூலம் வழங்குகின்றார். நாம் அவருடைய நூல்களை எப்போது, எப்படி படனம் செய்ய வேண்டும் என்று கந்தர் அலங்காரத்தில் கூறுகிறார். “அழித்துப் பிறக்க ஒட்டா” - அலங்காரம் வெம் கூற்றன் விடும் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் முன்பாக, நம்முடைய புலன், பொறிகள் எல்லாம் நன்றாக இருக்கும் போது பாட வேண்டும், அன்புடனும், எழுத்துப்பிழை இல்லாமலும் படனம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அலையும் நம் மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனுடைய திருவடி தியானத்தில் இருக்கும்படி மடை மாற்றம் செய்தல் வேண்டும். "தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியை" - அலங்காரம். மனம் அடங்காவிடில் ஏனையவைகளால் பயன் யாதும்இல்லை.

“சினமிறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே - தாயுமானவர்”

இப்பாடலின் வாயிலாக மனத்தை தீய வழியிற் செல்லவிடாமல் தடுத்தும், கோபத்தை விடுத்தும், தானத்தைக் கொடுத்தும் சும்மா இருக்கும் நிலையை பெற்றும் இருப்போமேயானால் பலகோடி காலம் தவம் புரியினும் பெற முடியாத முருகப் பெருமான் திருவருள் தானே நம்மைத் தேடி வரும். இவ்வாறு இறையருள் முன் நிற்க நாளும் கோளும் நம்மை ஒன்றும் செய்யாது என்று பேசுகிறார் நம் குருநாதர்.

“நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும்” முருகப் பெருமாளைப் போற்றி துதிக்கும் அடியவர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது, வலி இழந்து நிற்கும். வேயுறு தோளி பங்கன் - திருஞானசம்பந்தர் முருகன் அடியவர்க்கு எம பயம் இல்லை. “அந்தகனும் எனை அடர்ந்து” என்பது திருப்புகழ்.

“கார்மாமிசை காலன் வரில் கலபத்

தேர்மாமிசை வந்து எதிரப் படுவாய்” - கந்தர் அனுபூதி.

“கணத்திலென் பயமற மயில் முதுகினில் வருவாயே”

கூற்றுவன் பாசத்தினால் பிடிக்கும்பொழுது வந்து அஞ்சல் என்பாய் - அலங்காரம்.

“தண்டாயுதமும் திரிசூலமும் வீழத் தாக்கி - அலங்காரம். நிலையாமையைப் பற்றி பல திருப்புகழில் கூறுகிறார். பொருள் நிலையாமை இன்பம் (சிற்றின்பம்) நிலையாமை பற்றியும் பேசுகிறார். தருமம் செய்ய வேண்டும். அதையும் எப்படிச் செய்யவேண்டும்” என்று கூறுகிறார்.

இயமனை எதிர்த்து வீறிட்டு முழக்கம் செய்யலாம் என்றும் பேசுகிறார் நம் குருநாதர்.

“வையிற் கதிர்வடிவேலோனை வாழ்த்தி” - அலங்காரம்.

நான் செய்கிறேன் என்ற எண்ணத்தோடு கொடுக்காமல் குமரேசனை வாழ்த்தி இப்பொருள் பெருமான் கொடுத்தது என்று நினைத்து அதை அவன் அடியார்க்குத் தருகிறேன் என்றும் எண்ணிக் கொடுத்து, தருமம் செய்வதால் வரும் புண்ணியத்தையும், குமார்ப்பணஞ் செய்ய வேண்டும். அதனால் ஆகாமியம் விளையாது. இருவினை யொப்பு மலபரி பாகம் உண்டாகும். அதனால் அறம் செய்யும் போது வேலோனை வாழ்த்துமாறு உபதேசித்தனர். நம் மனத்துன்பமும் உடல் துன்பம் நீக்குவதற்கு வழி சொல்கிறார்.

“சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்” - அலங்காரம்.

எச்செயலைச் செய்தாலும், எப்போதும் பெருமானை சிந்தையில் நிறுத்திச் செய்து, திருக்கோவிலுக்குச் சென்று பெருமானை வழிபாடு செய்யும் போது அவசரப்படாமல் நின்று நிதானமாக வழிபாடு செய்து, கழல் அணிந்த பெருமானுடைய திருவடிகளைப் புகழ்ந்து போற்றி, பெருமான் திருவீதி உலா வரும்போது அங்கு சென்று பெருமானைச் சந்தித்து, வணங்கி, பெருமானுடைய புகழ், அவனுடைய கருணை, வீரச் செயல்களைச் சொல்லி வாழ்த்தி, தோன்றி நின்று அழியக்கூடிய பொய் பொருளாகிய உலகப் பற்றை விட்டு, மெய்ப் பொருளாகிய பெருமானையே பற்றி நிற்க மனத்துன்பத்தையும், உடல் துன்பத்தையும் நீக்கிக் கொள்ளலாம் என்று அருளிச் செய்கிறார் நம் குருநாதர்.

ஆன்மாவும் பெருமானும் ஒன்று படும் (ஐக்கியநிலை) நிலையை பல திருப்புகழில் சொல்கிறார். “இருநோய் மத்தை சிவவொளியால்” - பொது திருப்புகழ் என்னுடைய நல்வினை, தீவினை (பிறப்பு, இறப்பு என்றும் பெரிய பவரோகத்தையும், ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களையும் சிவஞானத்தால் வெருட்டி ஓட்டி என்னை இனிமையாக அழைத்து என்னுடைய சிரசின் மேல் உனது இரண்டு திருவடிகளையும் சூட்டி, உன்னுடைய மயில் வாகனத்தின் மீது என்னையும் இருக்கச் செய்து, வேலாயுதத்தையும் என் கையில் தந்து, நான் மகிழும்படியாக நாம் இருவோரும் ஒன்று படுவோம் என்று கேட்கும் பாவனையில் பரமுத்தி நிலையை நமக்கு காட்டுகிறார்.

இதே கருத்து அமைந்த பாடல் 'நாவேறு பாமனத்த' - திருவேரகம் திருப்புகழ்.

“நீவேறெனாதிருக்க நான்வே றெனாதிருக்க

நேராக வாழ்வதற்கு னருள் கூற”

குருநாதர் நம்மீது கொண்ட கருணையினால் நமக்காகப் பெருமானிடம் வேண்டுவதாக அமைந்த பாடல் அறுகு நுனி எனத் தொடங்கும் திருவிடை மருதூர் திருப்புகழ். ஒரு ஆன்மாவானது எப்படிக் கருவில் நுழைந்து பூமியில் பிறந்து பல துன்பங்களையும், இன்பங்களையும் அனுபவித்து இறுதியில் அந்த ஆன்மா படும் துன்பங்களை எல்லாம் சொல்லி,

“இடுகு பறை சிறுபறைகள் திமிலை யொடுதவி லறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனிடும் வாவ்வே”

என்று சொல்லி,

ஏ! பெருமானே உன்னுடைய திருவடிகளைப் போற்றி செய்யும் உன் அடியார்கள் பெறுவதுவும் இல்வாழ்க்கை என்றால் ஏசமாட்டார்களோ, பாசத்தை நாசம் செய்பவனே நீயல்லவா தீவினையும், நல்வினையும், மும்மலமும் அற இறப்போடு பிறப்பு என்பதும் நீங்கவும் ஒரே இன்ப நிலையில் நீயும் நானுமாய் இறுகும் வகை பரமசுகம் அதனை அருள் என்று திருவிடை மருதூர் பெருமானிடம் வேண்டுகிறார். நாமும் சற்குரு நாதரின் பனுவல்களை தினமும் படனம் செய்து உய்வோமாக.

உங்கள் எல்லோரையும் எங்கள் சபையில் அருளாட்சி புரியும் குருநாதரின் கருணா விலாசத்தையும், அவருடைய திருவடியையும் கண்டு அருள்பெறவும் அழைக்கின்றேன். வருக... வருக...

“சற்குரு அருணகிரிப் பெருமான்

திருவடிகள் போற்றி போற்றி”

  • நா.புஷ்பா, ஸ்ரீஅருணகிரி நாதர் சபை, சிவகாசி.

★★★

Thirupugazh is designed to bring about a tranquil and peaceful atmosphere, Which serves as a soothing Balm to the tormented souls. This is particularly noticeable when these songs are rendered in melodious Ragas in chorus by an assembly of devotees in perfect harmony and chandam with single minded devotion. The ecstasy experienced by devotees in such congregations bridges the gap between them and the divinity. Simultaneously the negative traits like egoism, Pride, enmity, anger and jealousy vanish from their Minds. Absolute strangers get bound by the sacred bond of Thirupugazh. Gradually , the circle of such people widens and they begin to realise that they are leading a harmonious life characterized by love happiness and peace - the Noble way of living shown by Arunagirinathar enjoying all the good things in life one should reasonably aspire. The true personal experiences of many a Thirupugazh devotee bear testimony to this fact.verily Thirupugazh is an ideal and easy means to secure the Infinite grace of muruga, the ever merciful Lord.

— S.R.S Ayyar