“இருள்நகர எரிமலையின் எழும்உருவின் ஈசனவன்
கருணைகிரி எனமுருகன் கடவுள்வர கருதுபவர்
பொருள்நுகர புதுவகையின் மொழிபனுவல் புரிந்துபாடி
அருணகிரி திருப்புகழை அளித்தபுரம் ஆகிய”
இருள் விலக எரிமலையிலிருந்து எழுகின்ற ஒளி பொருந்திய சிவபெருமானின் மகனாகிய கருணையும் முருகன் எனும் கடவுள் வர கருதுபவருக்கு அவர்கள் பொருள் புரிந்து கொள்ளும் வகையில் புதுவகையான சந்தப் பாடல்களைப் பாடி திருப்புகழ் அளித்த அருணகிரிநாதரெனும் பரம்பொருள் நீ வாழி.
அக்னித் தலமாகத் திகழும் அருள்மிகு அண்ணாமலையார் ஆலயம் அமைந்த தலமும் ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் மாலும் அயனும் அகந்தைமிக ஈசனின் அடியும், முடியும் காணப்படாமல் தோல்வியால் தளர்ந்த நேரத்தில் அவ்விருவருக்கும் எட்டாத சோதி மலையாய்த் திகழ்ந்த இத்தலத்தில்....
அப்பர் - சம்பந்தர் - சுந்தரர் ஆகிய தேவார மூவரும் போற்றிய திருவண்ணாமலை குருநமச்சிவாயர், சிவப்பிரகாச சுவாமிகள் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமணர், யோகிராம்சுரத்குமார், போன்ற அருளாளர்கள் இறைவனை துதித்து புனிதம் பெற்ற இம்மண்ணில்.
கோபுரத்து இளையனராகிய முருகப்பெருமான் அருணகிரிநாதர் முன் தோன்றி தன் கையால் அவரைத் தாங்கிப் பிடித்து குரு வடிவில் அருள்புரிந்து “நற்றமிழ்” பாடுக என்று கூறாமல் “திருப்புகழ் பாடுக” என்று அருளிச்செய்து பல்லாயிரக்கணக்கானப் பாடல்களை இயற்றிய சந்தக்கவி சக்கரவர்த்திக்கு அருணகிரிநாதப் பெருமானுக்கு பல நூறு ஆண்டுகள் கழித்து அவர் வாழ்ந்த ஊரில் அவருக்காக ஆலயம் அமைத்து மணிமண்டபம் உருவாக்கி திருக்குடமுழுக்கு நடத்துவது மிகப்பெரிய சாதனை. ஆன்மீக அன்பர்களுக்கு இந்த மணிமண்டபம் ஒரு வரப்பிரசாதமாகும். இனி எந்நாளும் எந்நேரமும் அருணகிரிநாதரின் மணிமண்டபத்தில் திருப்புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
"ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாய் ஒரு சொல் விளிம்பினர் யார்?" என்று தாயுமானவர் வியந்து பாராட்டிய அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலையில் ஒரு மணிமண்டபம் அருமை... அருமை...
"சந்தப் பாவல பெருமான்” என்று சிறப்பிக்கப்பெறும் அருணகிரிநாதருக்கு கருங்கற்களால் கருவறை அமைக்கப்பட்டு மிகப்பெரிய மண்டபத்தோடு எழில்மிகு மணிமண்டபம் அமைவது அற்புதம்... அற்புதம்...
திருப்புகழ் அல்லாது திருவகுப்பு, கந்தரனுபூதி, கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், ஆகிய நூல்களை எழுதிய சந்தகவிக்கு அவரது சொந்த மண்ணிலே மணிமண்டபம் அமைவது ஆனந்தம்... ஆனந்தம்...
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கனவு பலித்து நெடுங்காலமாக நினைத்திருந்த ஆசை நிறைவேறியது என்பதே உண்மை.
“சளைத்தவரும் வாழ்வியலில் சலித்தவரும்
தளர்ந்து உடற்சுமையைத் தயங்கி
களைத்தவரும் கவன்று உணர்வே கலைந்தவரு
கடிதே உழைத்து கடுகாய்த் தேய்ந்தே
இளைத்தவரும் வருந்தாதீர்; இழந்ததெலாம்
எதிரில் வரும் மணிமண்டபத்தே
திளைத்தவராய் திருப்புகழைச் செவிமடுத்தும்
சிந்தைமிகு மகிழ்வீராவீர்!”
அருள் வழங்கும் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் அருளாளர் அருணகிரிநாதப் பெருமானுக்கு மணிமண்டபம் எழுப்பிய அறக்கட்டளையினர் அனைவருக்கும் உடன் உழைத்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களைக் காணிக்கையாக்குகின்றேன்.
மேலும் இம் மணிமண்டப திருக்குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
★★★
'சும்மா இரு சொல்லற' என முருகன் ஆணை இட்டதாக கூறுகிறார் பெருமான். சொல் என்பது வாயினால் பேசப் பெறும் சொல்லை மட்டும் இங்கு குறிக்கவில்லை. மனத்தில் எண்ண ஓட்டம் நடைபெறுகிறது. எவ்வாறு எண்ணுகிறோம்? சொற்களின் உதவி கொண்டு தானே எண்ணம் நடைபெறுகிறது? சொல்லற என்றமையின் வாய் பேசாமல் இருப்பது மட்டுமல்ல; மனதில் எண்ணம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதையே குறித்தார். மயக்க நிலையிலும், கனவு நிலையிலும் கூட
எண்ணம் உண்டு.புற மனம் வேலை செய்யாவிடினும் அகமனம் பணிபுரிந்து கொண்டு தான் இருக்கும். அதுவும் அடங்க வேண்டும் என்று 'சொல்லற சும்மா இரு' என்றார்.இந்த நிலையை எய்தினால் மூன்றாவது நிலையில் உண்டாகும் காட்சியும் இல்லாமல் போய்விடும். சூன்யமான அந்த நான்காவது நிலையைத்தான் 'அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே' என்று பேசுகிறார். அந்த நிலை அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் அற்ற நிலையாகும். சொல்லற சும்மா இருப்பவர்கள் பெறும் நான்காவது நிலையாகிய இதுவே அனுபூதி எனப்பெறும் போலும்.
முனைவர் அ. ச. ஞானசம்பந்தம்

