உலகத்திலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளாக பண்டைய தமிழர்கள் பகுத்தனர். தமிழ் மொழியின் 2500 ஆண்டு வரலாற்றில் பல இலக்கியங்கள் தோன்றியுள்ளன . ஆனால் அவை பெரும்பாலும் விருத்த நடையில் எழுதப் பட்ட நூல்களாகும்.இயல் தமிழ் தமிழுக்கு பல நூல்கள் வழி பெருமை சேர்த்திருந்த போதிலும் இசை தமிழுக்கும், நாடகத் தமிழுக்கு போதிய நூல்கள் இல்லாமல் இருந்தன. தமிழ் மூவர் பாடிய தேவாரம் இசைத் தமிழுக்கு முதன் முதலில் பெருமை சேர்த்தது.
பின்பு 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் மூலமாகத்தான்
இசைத் தமிழ் முழு உச்சத்தை எட்டியது என உறுதியோடு கூறலாம். சிலப்பதிகாரத்தில் தமிழ் மொழியின் மூன்று பிரிவுகளையும் ஒரு சேர காணலாம். இருந்தபோதிலும் அதனை ஒரு சிறந்த நாடக காப்பியம் ஆக தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர்.
இசைத் தமிழின் சிறப்பு
இயற்றமிழ் பண்ணோடு சேர்ந்து தாளத்தோடு பாடும் போது அது இசைத் தமிழாக உருவெடுக்கின்றது.
தமிழின் மற்ற பிரிவில் இல்லாத தனிச்சிறப்பு இசை தமிழுக்கு உண்டு. தமிழ் மொழியை தோற்றுவித்தவரான சிவபெருமான் ஒரு தமிழிசைப் பிரியர். 6 ஆம் நூற்றாண்டில் சிவபெருமான் அருளால் தோன்றிய பக்தி இலக்கியமான தேவாரம், தமிழிசையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.
சிவபெருமான் தமிழ் அமுதைப் பருகும் பொருட்டு சம்பத்தருக்கு ஞானப் பாலை வழங்கும்படி உமையை வேண்டினார். ஞானப் பாலை உண்ட சம்பந்தர் 'தோடுடைய செவியன் ‘எனத் தொடங்கி பல தே மதுர தேவார இசை பதிகங்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கினார்.
தேவாரத்தில் 23 பண்களில் திருஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடியுள்ளார்கள். பண்ணிசைத்து வழிபடும் அடியார்க்கு சிவபெருமான் மண்ணுலக இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் தருவான் என்று பொருட்பட :-
‘பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் கூட்டாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் ‘
என்று ஞானசம்பந்தர் திருப்புள்ளிருக்குவேளூர் பதிகத்தில் பாடியுள்ளார்கள்.
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்று இவருக்கு சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் புகழாரம் சூட்டுகிறது.
அப்பர் பெருமான் சூலை நோயால் துன்புற்ற போது ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்று மனமுருகிப் பாடினார்.
ஈசன் சுந்தரரை தடுத்தாட் கொள்ளும் பொழுது அவரிடம் தனக்கு அபிடேகம், அலங்காரம் செய்யும்படியோ அல்லது ஆலயம் கட்டும்படியோ கேட்கவில்லை. மாறாக அவரிடம்
‘அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ்பாடுக’
என்று வேண்டினார். அதேபோல் சிவபெருமான் தன் தமிழ் பசியை தீர்த்துக்கொள்ள மாணிக்கவாசகப் பெருமானிடம் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என இறைஞ்சினார்.
எனவே இறைவன் அருளைப் பெறுவதற்கு தமிழிசையை சிறந்த சாதனம் என்ற கொள்கை தமிழ்நாட்டில் பரவிற்று.
பக்தி இலக்கிய காலத்திற்கு பிறகு இசைத் தமிழுக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவு ஏற்பட்டது. அதிலிருந்து மீட்டு மீண்டும் தமிழிசையை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றவர் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதப் பெருமாள் ஆவார்.
சிவபெருமானின் குமாரனான முருகப்பெருமானும் ஒரு இசைப் பிரியர். அருளாளர் அவர்கள் முருகப்பெருமானை ராக வினோதன், இசைப்பிரியன் என்று அழைக்கின்றார். 'நாடித் தேடித் தொழுவார்பால்' என்று துவங்கும் திருப்புகழில் ‘பாடல் காதல் புரிவோனே ‘ என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அவர் இயற்றிய திருப்புகழில் நமக்கு 1088 சந்தங்களும் 175 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன.
பெண்களுக்கு உரிய இசை ஏழு. பழந்தமிழர் இவற்றைக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர். அருளாளர் அவர்கள் இவ்வேழிசையைப் பற்றி பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். ‘காயமாய ‘என்று தவங்கும் சிதம்பரம் திருப்புகழிலும் ‘அறிவில்லாதவர் இன்று ‘ என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழிலும் ‘ஏழிசை’ பற்றிய குறிப்புகள் உள்ளன.
அதே போல் அருளாளர் அவர்கள் தமிழிசைக்கும் பாணர்களின் சிறப்பைப் பற்றி ‘கங்குலின் குரல்‘ என்றும் துவங்கும் சிதம்பரம் திருப்புகழில் ‘சந்த செந்தமிழ் பாணர் கொஞ்சியும்‘ என்றும், ‘தினமணி சார்ங்க ‘ என்ற சீர்காழி திருப்புகழில் ‘பாடல் வயிரயர் சேர்ந்து பாட‘ என்றும் ‘தோரண கனக ‘ என்ற பொது திருப்புகழில் ‘வயிரியர் தோள் வலி புகழ‘ என்றும் பாடியுள்ளார்கள்.
அருளாளர் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் பழக்க வழக்கத்தில் இருந்த இராகங்களைப் பற்றி பூத வேதாள வகுப்பில் விபரமாக விவரிக்கின்றார்.
அவை வராளி, சிகண்டிகை, சீகாமரம், விபஞ்சிகை கவுடி, பயிரவி, லளிதை, கயிசிகை, கவுளி, மலகரி பவுளி, கனவராடி, பட மஞ்சரி, தனத னாசிவி பஞ்சமி,தேசி, குறிஞ்சி .(பாடல் எண் 70,71)
அருளாளர் அவர்கள் திருப்புகழிலும் சீராகம், தேசி, இந்தளம், கவுடி, சாதாரி போன்ற ராகங்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
அருளாளர் அவர்கள் இராகங்களின் தன்மையை பற்றி விவரிப்பதில் இருந்து அவர் இசை நுணுக்கங்களை பற்றி நன்கு அறிந்தவர் என்று தெளிவாகின்றது. திருப்புகழ் பாடல்களில் சிறப்பு யாதெனில் அவை எவ்விதமான இராகத்திற்கும் பாடலாம். இராகத்திற்கு அடுத்தாற்போல் திருப்புகழுக்கு அழகு சேர்ப்பது அதன் சந்தம்தான். அருளாளர் காலத்தில் வழக்கிலிருந்த தாள வகைகள் பூத வேதாள வகுப்பில் காணலாம்.
உற்கடிதம், கச்சபுடம், சாசபுடம், சட்பிதா புத்திரிகம் சம்பத்து என்பன அவை.(பாடல் எண் 63,64,65) இந்த ஐந்து தாளங்களும் சிவ பெருமானுடைய ஐந்து முகத்தில் இருந்து
தோன்றியதாகக் கருதப்படுகின்றது. திருப்புகழ் என்னும் நூல் வடிவத்திலேயே ஒரு தாள மாளிகையை உருவாக்கியுள்ளார்கள் அருணகிரிநாதப் பெருமான் அவர்கள். அதனால் தான் அருளாளரை ‘ஓசை முனி ‘தாளச் சித்தர்‘ ‘சந்தப் பாவலர் பெருமான்' என்று தமிழ் பாவலர்கள் தோன்றுகின்றன.
அவரது தனித்துவமான கவித்திறன், அவரது உலகளாவிய கண்ணோட்டம் மற்றும் மனித உறவுகளின் சிக்கலான தன்மை பற்றிய அவரது தலைசிறந்த பகுப்பாய்வு, ஆகியவற்றின் காரணமாக அருளாளர் கவிஞர்களுள் தலைச் சிறந்தவராகப் போற்றப்படுகிறார்.
திருப்புகழின் பொருளையும், இசையையும் முழுமையாக அறிந்து கொண்டு அதை பாட வேண்டும். ஒருவரால் ராகத்தையும், தாளத்தையும் பின்பற்ற முடியாவிட்டாலும், முடிந்தவரை பாடலின் அர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். திருப்புகழ் இசைத்தல் கடவுளுடன் ஒரு மனத் தொடர்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அது பக்தனுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு புரிதல் பாலத்தை உருவாக்க வேண்டும். அவற்றின் அர்த்தத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
அருணகிரிநாதப் பெருமான் என்னும் பொக்கிஷத்தை நம் உலகத்திற்கு அளித்த முருகப்பெருமானால் மட்டுமே யார் சிறந்தவர் என்று கூற முடியும்.
அருணகிரிநாதர் என்னும் சந்தக்கவி சிறந்தவரா அல்லது அருணகிரிநாதர் என்னும் பக்தர் சிறந்தவரா என்று கணிப்பது மிகவும் கடினம்.
★★★
செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ணீர்ப்
பெய்திலேன் புலனைந்தும் ஒடுக்கி வீழ்தல்
பிறத்தலெனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
எய்திலேன் இவ்வுடல்கொண்டேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின்றேனே.
உரை: மணியே, நின்னுடைய தொண்டர்களாகிய அடியவர்களுக்கு யான் பணி செய்வதில்லை; நீ எழுந்தருளும் திருத்தணிகை மலையை அன்புடன் வலம் வந்து கண்ணீர் சொரிவதில்லை; ஐம்புலன்கள் மேல் செல்லும் ஆசையைப் போக்கி இறத்தல் பிறத்தலாகிய கடலைக் கடந்திலேன்; பெண்கள் மேல் உண்டாகின்ற ஆசையை வெறுத் தொழிக்கிலேனில்லை; பூக்கள் கொய்து மாலை தொடுத்து உனக்கு அணிவதில்லை; உன்னுடைய திருப்புகழை ஓதி நின்னை யடையவில்லை; இவ்வுடலோடு பொருந்தி ஏழையாகிய யான் ஏன் பிறந்தேனோ? மண்ணுலகுக்குச் சுமையாய் இருக்கின்றேன்.
— வள்ளலார்

