- 15-ஆம் நூற்றாண்டில் இப்புவி வாழ வந்துதித்த ஒப்புவமையற்ற அருளாளர் நம்
- அருணகிரிப் பெருமான். திருவண்ணாமலையையே அவதாரத் தலமாகவும்;
- தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலமாகவும்; முத்தித் தலமாகவும் கொண்டு விளங்கும்
- தகைமையாளர். தன் நாவில் கந்தப் பெருமானின் திருக்கை வேலால் 'ஓம்' என்று எழுதப்
- பெற்ற வரம்பிலா தவமுடைய பெரியர்.
- சைவ சமயத்தின் வழிநின்று முருக வழிபாட்டினை இன்னுயிரெனப் பேணியதோடு
- மட்டுமல்லாது, சைவ வைணவ ஒற்றுமைக்கு வழிவகுத்த தனிப்பெரும் குருநாதர்.
- 'அருணகிரியாரைப் போன்று முருகக் கடவுளின் பரிபூரணத் திருவருளைப் பெற்றவர்
- பிறிதொருவரில்லை' என்று தம்முடைய விரிவுரைகள் தோறும் போற்றி மகிழ்வார் நம் வாரியார் சுவாமிகள்.
- இனி இக்கட்டுரையில் அருணகிரிப் பெருமானின் அவதார நிகழ்வுகளிலிருந்து ஓரிரு அரிய குறிப்புகளைச்
- சிந்தித்துப் பின்னர் இறுதியாய்த் 'திருப்புகழ்த் தலங்களுக்கு எவ்வாறு, எவ்வித மனநிலையில் யாத்திரை
- மேற்கொள்ளுதல் வேண்டும்?' என்பது குறித்த சில நுட்பங்களையும் சிந்திப்போம்.
- திருத்துருத்தியில் வேல் மயில் முத்திரைகள் பொறிக்கப் பெற்ற அற்புத நிகழ்வு:
- நாவுக்கரசு சுவாமிகள் பெண்ணாகடம் எனும் தலத்திலுள்ள 'திருத்தூங்கானை மாடம்' எனும் சிவாலயத்தில்
- 'இடப சூல முத்திரைகளை தன் மேனியில் பொறித்தருளுமாறு' இறைவரிடம் விண்ணப்பித்துப் பாட,
- 'சிவபரம்பொருளின் திருவருளால் சிவபூத கணமொன்று அங்கு தோன்றி, அப்பர் அடிகளின் திருத்தோள்களில்
- அவ்விரு முத்திரைகளையும் பொறித்துச் சென்ற' அற்புத நிகழ்வினைப் பெரிய புராணத்தில் நம் தெய்வச் சேக்கிழார்
- விவரித்துப் போற்றியுள்ளார்.
- (அப்பர் சுவாமிகள் தேவாரம் - திருத்தூங்கானை மாடம்)
- "பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
- என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இருக்கும் கூற்றகல
- மின்னார் மூவிலைச் சூலம் என் மேல்பொறி மேவு கொண்டல்
- துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!!!"
- அம்முறையிலேயே நம் அருணகிரிப் பெருமானும் 'திருவண்ணாமலை; பொதியமலை; எட்டுக்குடி' ஆகிய
- மூன்று தலங்களில் 'தன் மேனியில் வேல் மயில் சின்னங்களைப் பொறித்தருளுமாறு' ஆறுமுகக் கடவுளிடம்
- விண்ணப்பித்துப் பாடி வர, திருத்துருத்தியில் வேலாயுத தெய்வம் அவ்வேண்டுதலை முற்றுவித்துப் பேரருள்
- புரிகின்றான். இனி இதற்கான திருப்புகழ் அகச் சான்றுகளைக் காண்போம்,
- ('சிவ மாதுடனே' என்று துவங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழ்),
- "இறையோனிடமாய் விளையாடுகவே
- இயல் வேலுடன் மா அருள்வாயே"
- ('வெடித்த வார்குழல்' என்று துவங்கும் பொதியமலைத் திருப்புகழ்), “குறித்து நீஅருகழைத்து மாதவர் கணத்தின் மேவென அளித்து வேல்மயில் கொடுத்து வேதமும் ஒருத்தனாமென .... சிந்தைகூராய்” ('மை குழலொத்தவை' என்று துவங்கும் எட்டிக்குடித் திருப்புகழ்), “தற்பொறி வைத்தருள் பாராய் தாராய் தற்சமையத்த கலா வேனாதா தத்து மயிற்பரி மீதே நீதான் ...வருவாயே”
இறுதியாய்த் திருத்துருத்தித் தலத்தில் அருணகிரியாரின் கனவில் தோன்றும் அறுமுகக் கடவுள், 'அன்பனே, உன்னை நம் அடைக்கலப் பொருளாகக் கொண்டோம். இதோ வேல்; மயில் முத்திரைகளை இட்டு உன் விருப்பத்தினையும் முற்றுவித்தோம். முத்தி தரவல்ல அனுபூதியையும்; அருள் மயமான நம் திருப்புகழையும் ஓதுவதையே பணியெனக் கொள்வாய்' என்று பேரருள் புரிந்து மறைகின்றான்,
- ('மலைக் கனத்தென' என்று துவங்கும் திருத்துருத்தித் திருப்புகழ்)
- “அடைக்கலப் பொருளாமென நாயெனை
- அழைத்து முத்தியதாம் அநுபூதியென்
- அருள் திருப்புகழ் ஓதுக வேல்மயில் ...அருள்வோனே”
அருணகிரிநாதர் ஆறு தலங்களில் பெற்ற நடனக்கோல தரிசனம்:
அருணகிரியார் திருச்செந்தூரில் பெற்ற நடனக்கோல தரிசன நிகழ்வினை முதற்கண் நினைவு கூர்ந்து
பின்னர் பிற தலங்களுக்கான பாடல்களையும் காண்போம்,
(1) திருச்செந்தூர்:
அன்று செந்தில் நகரில் பிரமோத்சவ ஏழாம் நாள் உற்சவம், பிரதான உற்சவ மூர்த்தியான சண்முகரின்
புறப்பாடு துவங்கியிருந்த சமயம். எண்ணிறந்த அணிகலன்களுடன் எழுந்தருளி வரும் செந்திலாண்டவனைக்
கண்களாரத் தரிசித்துப் பணியும் அருணகிரியார் 'ஐயனே, உன்னுடைய நடனக் கோல தரிசனத்தினை
அளித்தருள்வாய்' என்று விண்ணப்பிக்கின்றார்.
செந்தில் இறைவனும் 'பின்புறமாய் வந்து நமது நடனக் கோலம் காண்பாய்' என்று அருள, அருணகிரியார்
அவ்வண்ணமே செல்கின்றார். திருப்புகழ் வேந்தரின் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு செந்திலாண்டவன் பால
வடிவில் தோன்றுகின்றான். செம்பொன்னால் வார்த்தெடுத்தது போன்ற திருமேனிப் பொலிவு, திருமேனியெங்கும்
அணிகலன்கள், நெற்றியில் துலங்கும் திருநீறு, சிவஞானக் குழவியான செந்திற் கடவுள் பிஞ்சுப் பொற்பாதங்களை
அசைத்துத் தன் திருநடனத்தினைத் துவங்குகின்றான்.
அருணகிரியார் அகம் குழைந்து கண்ணீர் பெருக்கி 'தண்டையணி வெண்டையம்' எனும்
திருப்பாடலொன்றினை எடுக்க, அதன் சந்தத்திற்கு ஏற்றாற்போல் குமர நாயகன் திருநடமிடுகின்றான். 'கொண்ட
நடனம்பதம் செந்திலிலும் எந்தன்முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே' என்று அருணகிரியார் நெகிழ்ந்து
போற்றுகின்றார்.
'செந்திலிலும்' என்று பன்மையில் குறித்திருப்பதால், 'பிற தலங்களிலும் குமாரக் கடவுள் தன் நடனக்கோல
தரிசனத்தினை அளித்தருள் புரிந்துள்ளான்' என்பது புலனாகின்றது. இனி அதற்கான திருப்புகழ் அகச்
சான்றுகளையும் அறிந்து மகிழ்வோம்,
(2) திருவெண்ணெய்நல்லூர் : ('பலபல தத்துவ' என்று துவங்கும் திருப்புகழ்)
"மகிழ் பெணையில்கரை பொழில்முகில் சுற்றிய 1. திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின் மிசைகொடு திருநடமிட்டுறை ...பெருமாளே"
(3) கொடுங்குன்றம் - (பிரான் மலை: 'எதிர்பொருது கவிகடின' என்று துவங்கும் திருப்புகழ்)
“பொழுதினிலும் அருள்முருக சுத்தக் கொடுங்கிரியில்
நிர்த்தச் சரண்களை மறந்திடேனே”
(4) சிதம்பரம்: ('மகரமொடுறு குழை' என்று துவங்கும் திருப்புகழ்)
“அரிதுயில் சயன வியாள மூர்த்தனும்
அணிதிகழ் மிகுபுலியூர் வியாக்ரனும்
அரிதென முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே"
குறிப்பு: மேற்குறித்துள்ள திருப்பாடலில், பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் 'இது அரிது அரிது' என்று
வியந்து போற்றும் தன்மையில் தில்லையுறைக் குமாரக் கடவுள் தனக்கு ஆடல் தரிசனம் அளித்தருளியதாகப் பதிவு
செய்கின்றார் நம் அருணகிரிப் பெருமானார்.
(5). திருத்தணி: ('குருவி எனப்பல' என்று துவங்கும் திருப்புகழ்)
‘விணமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடழகு திருத்தணி மலையில் நடித்தருள்
...பெருமாளே'
(குறிப்பு: இத்திருப்பாடலில் இருதேவியரும் உடனிருக்க, நிருத்த தரிசனத்தினை அளித்ததாகப் பதிவு
செய்கின்றார்)
(6). திருவண்ணாமலை ('விந்துப் புளகித' என்று துவங்கும் திருப்புகழ்)
..அடியென் இடைஞ்சல் பொடிபட முன்புற்றருள் அயில்
தொடுத்தும் இளநகை பரப்பி மயில்மிசை
நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...பெருமாளே.
'திருப்புகழ்த் தலங்களுக்கு எவ்வாறு; எவ்வித மனநிலையில் யாத்திரை மேற்கொள்ளுதல் வேண்டும்?
முதற்கண், தொண்டைநாடு; நடு நாடு; சோழ நாடு; பாண்டிய நாடு; கொங்கு நாடு; துளுவ நாடு; மலை நாடு; வட நாடு; ஈழ நாடு உள்ளிட்ட நிலப்பரப்புகள் தோறும் தன் பாதங்கள் தோயுமாறு பலகாலும் நடந்தே சென்று ஆறுமுகக் கடவுளை அற்புத அற்புதப் பாமாலைகளால் போற்றிப் பரவியுள்ள, மேரு மலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமானை நன்றியோடு நினைவு கூர்ந்து பணிதல் வேண்டும். அருணை மாமுனிவரின் திருவடிகளில் கொண்டொழுகும் பக்தி மற்றும் ஈடுபாட்டினால் மட்டுமே 'திருப்புகழ் தல யாத்திரை' எனும் ஞானவேள்வி நமக்குச் சித்தியாகும்.
'திருப்புகழ் தலமென்று முதற்கண் அறிந்து கொண்டு பின்னர் அத்தல யாத்திரைக்கென பிரயத்தனம் மேற்கொண்டு தரிசிக்கும் தலங்களை' மட்டுமே 'நாம் இதுவரையில் தரிசித்துள்ள திருப்புகழ்த் தலங்கள்' எனும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். திருப்புகழ் தலங்களென்று அறியாமலேயே நாம் முன்னர் தரிசித்து வந்துள்ள திருத்தலங்களைத் திருப்புகழ் தல யாத்திரையின் ஒரு பகுதியாகக் கொள்வது பொதுவில் நியமமாகாது.
'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் யாத்திரை நூலே, தற்பொழுதுள்ள திருப்புகழ் திருத்தலங்களுக்கான ஒரே பிரமாண நூலாக விளங்குகின்றது. சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களும், அவர்தம் தமையனார் பேராசிரியர் இராமசேஷன் அவர்களும் இதன் நூலாசிரியர்கள் ஆவர். இவ்வரிய நூலுக்கு தெய்வத்திரு வாரியார் சுவாமிகளும், வாகீச கலாநிதி திரு.கி.வ. ஜகந்நாதன் அவர்களும் அணிந்துரை எழுதி அருளியுள்ளார்கள்.
முருகப் பெருமானின் திருமுன்பு அந்தந்த தலத்திற்கான திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து வணங்குதலே, திருப்புகழ் தலயாத்திரையின் முக்கிய அங்கமாகும். 'திருப்பாடல்களை இசையோடு மட்டுமே பாட வேண்டும்' என்று கருதும் அன்பர்கள் பலர், தங்களுக்கு இசைப்பயிற்சி இல்லாத காரணத்தால், பாராயணம் புரிவதை முழுவதுமாய்த் தவிர்த்து விடுகின்றனர். இது தவறான புரிதல், ஒவ்வொரு திருப்புகழ் திருப்பாடலுக்கும் சந்த (அல்லது தாள) நயம் உண்டு, அதன்வழி நின்று பாராயணம் புரிந்து வருதலே போதுமானது.
கருணைப் பெருங்கடலான கந்தப் பெருமான் நம்மிடம் எதிர்பார்ப்பது இசைத் திறமையையோ புலமையையோ அல்ல, அருணகிரியார்பால் நாம் கொண்டுள்ள ஈடுபாட்டையும்; திருப்புகழ் திருப்பாடல்கள் மீது நாம் கொண்டுள்ள ஆர்வத்தையும் மட்டுமே. அறுபடை வீட்டுத் திருத்தலங்கள்; திருவண்ணாமலை; சிதம்பரம் முதலிய திருத்தலங்களுக்கு எண்ணிறந்த திருப்பாடல்களையும் (சுமார் 50 முதல் 100 வரை), மீதமுள்ள திருத்தலங்களுக்கு ஒன்றிரண்டு முதல் 20 வரையிலான பாமாலைகளையும் அருணகிரியார் அருளிச் செய்துள்ளார். திருப்புகழ் தல யாத்திரையில் அந்தந்த தலத்திற்கான திருப்பாடல்கள் முழுமையையும், பொறுமையாய் நேரம் அமைத்துக் கொண்டு பாராயணம் புரிந்து வழிபடுவது உன்னதமான ஆன்மீக அனுபவத்தினையும் நல்க வல்லது.
முருகப் பெருமானின் திருமேனியை அருகாமையில் நின்றவாறு உற்றுநோக்கி தரிசித்தல் வேண்டும். நின்ற அல்லது மயில் மீதமர்ந்த திருக்கோலமா? தனித்தா அல்லது தேவியருடன் கூடிய திருக்கோலமா? திருமுகங்கள்; திருக்கரங்கள் அவற்றிலுள்ள ஆயுதங்கள்; திருவடிகள்; வேல்; மயில்; சேவற்கொடி என்று ஒவ்வொன்றாக அணுஅணுவாய்த் தரிசித்து குமரப் பெருமானின் வடிவழகில் ஈடுபட்டு மகிழ்தல் வேண்டும்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்; திருவண்ணாமலை; சிதம்பரம் உள்ளிட்ட பிரதானமான திருக்கோயில் வளாகங்களில், நான்கு கோபுர வாயில்கள்; மதிற்சுவர்கள்; உட்பிரகார வெளிப்பிரகாரச் சுற்றுகள் ஆகியவற்றில், ஒன்றிற்கும் மேற்பட்ட பல்வேறு திருக்கோலங்களில் நம் அறுமுகக் கடவுள் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். ஆதலின் அவசியம் நேரம் அமைத்துக் கொண்டு கந்தவேளின் இத்திருமேனிகள் ஒவ்வொன்றையும் கண்களாரத் தரிசித்துப் பணிதல் வேண்டும்.
அருணகிரிநாதரின் திருவடிகளை வாழ்த்தி வணங்கி, மேற்குறித்துள்ள வகையில் திருப்புகழ்த் தலங்களைத் தரிசித்து வர, சிவசுவரூபியான அப்பன்னிரு கைப்பரமன் மெதுமெதுவே தன்னை வெளிப்படுத்தி நமக்குப் பேரருள் புரிவான்.
(சிவத்திரு தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் அருளியுள்ள
அருணகிரிநாதர் பாராயணத் துதி)
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்றுரைத்தும்
நந்தா வகுப்பலங்காரம் அவற்கே நனிபுனைந்தும்
முந்தாதரவில் அவன்புகழ் பூதியும் முற்றும் சொன்ன
எந்தாய் அருணகிரிநாத என்னை நீ ஏன்றருளே!
★★★
2006 ஆம் ஆண்டு கேரளா பல்கலைக் கழகத்தில் உள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள 3000 தமிழ்ச் சுவடிகளில் 14 திருப்புகழ்ச் சுவடிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் திரு. வலையபேட்டை ரா. கிருஷ்ணன். அச்சில்வராத புதிய மூன்று திருப்புகழ் பாடல்கள் கிடைத்தன. அவைகளில் இரண்டு பாடல்கள் உள்ள ஏடு மிகவும் சிதலமடைந்திருந்தன. ஒரு பாடல் மட்டும் முழுமையாகக் கிடைத்தது. 'வம்பும் கோபமும் மேவு அசு ராதிகள் வந்து' என்று துவங்கும் அப்பாடல் செங்குன்றபுரம் என்ற தலத்திற்கு உரியது. இத்தலம் விருதுநகர் அருகில் உள்ளது.

