ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அடியார்களோடு அடிக்கடி கலந்துரையாடும் கருணைப் பெருக்கு உடையவர். கல்வி கேள்விகளைக் கடந்த சிவஞானத்தில் திளைத்தெழுந்த முழுநிலவு போல் பிரகாசித்தவர் சுவாமிகள். முருகன் ஒருவனே முழுமுதற் பொருள் என்று காட்டியும், நாட்டியும் வெற்றி மகுடம் சூட்டியவர். ஆயினும் அடியார்களோடு உரையாடுகின்றபோது எளிமையின் சிகரமாய்த் திகழ்வார்.
ஒரு சமயம் அப்படி உரையாடிக் கொண்டிருந்த பொழுது சுவாமிகள் தாம் முருகன் பேரில் அர்ப்பணித்த நூல்கள் பற்றி அவர்தம் கருத்துக்களை வினவினார். அவரவர்க்குப் பிடித்த நூல்களாக அடியார்கள் பலவற்றைக் குறிப்பிட்டனர். 'பகை கடிதல்' என்றார். ஒருவர்; 'சண்முக கவசம்' என்றார் மற்றொருவர்; 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' என்றார் வேறொருவர். புன்னகை மலர்ந்து முகத்தோடு அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த போது ஓர் அன்பர் இவ்வாறு வினவினார்.
‘தேவரீர் சுவாமிகளின் நூல்களில் சுவாமிகளுக்கு
மிகவும் இட்டமானது எதுவோ?’
எல்லோரும் சுவாமிகளின் திருமுகத்தையே
நோக்கினார்கள். சூரியன் பிரகாசிக்கும் திக்கை நோக்கித்
திரும்பும் சூரியகாந்திப் பூக்களைப் போன்றிருந்தன
அவர்தம் முகங்கள்.
சுவாமிகளின் திருவனத்தில் சிவசூரியப் பிரகாசம்
பளிச்சிட்டது. வார்த்தைகள் அவர்தம் இதழ்களினின்றும்
மந்திரமாய் வெளிப்பட்டது.
'ஐயமென்ன? தகராலய ரகசியம், தகராலய ரகசியம், தகராலய ரகசியம்' என்று மும்முறை உச்சரித்தார் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்.
வேத கோஷத்தில் எக்கடவுளுக்கும் இல்லாத சிறப்பாக
'சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண் யோம்' என்று
மும்முறை ஒலிப்பது போல் உணர்ந்தனர் அடியார்கள்.
இனி தகராலய ரகசியத்தின்
பெருமை பேசுதற்கு வேறு
சான்றுகளும் வேண்டப் படுமா?
தகரம் எனில் அதி நுட்பம்
என்று பொருள்படும். ஆலயம்
என்பதன் பொருள் யாவரும்
அறிந்ததே.
உலகினர் முருகனுக்கான
பல தலங்களை அறிவர். அங்கே சென்று தரிசித்துத்
துன்பம் நீங்கப் பெற்று இன்பமுறப் பெரிதும் முயல்வர்.
ஆயினும் அதிசூக்குமமான கோயில் முருகனுக்கு
ஒன்று உண்டு. அந்தக் கோயில் பற்றிய விபரங்கள்
இரகசியமாய் உள்ளன. ஆகையினால் அக்கோயிலை
முழுவதுமாய் அறிந்தாரும் இல்லை; முயன்று சென்று
அடைந்தாரும் இல்லை.
இந்த இரகசியத்தை வெளிப்படுத்தவும், இக்கோயிலுக்கு அடியார்களை நெறிப்படுத்தவும் முருகன் ஒருவரை இம் மண்ணுலகுக்குத் தருவிக்க எண்ணினான். அப் பெருமகனாரே ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்.
இவ்வாலயத்தைப் பற்றி விபரங்கள் கூறுவதோடு
இவ்வாலயம் சென்று தரிசிக்கும் நெறிகளையும்
சுவாமிகள் வெளிப்படுத்துகின்றார். இதுவே தகர வித்தை
எனப் பெறும்.
ஒரு வித்தையைக் கற்றுத் தருவதற்கு உலகத்தார் எளிதில் உடன் படுவாரா? உலக நன்மை தருகின்ற வித்தைக்கே இத்தனைக் கெடுபிடி எனில், சிவானந்த நிரந்தர நன்மை தருகின்ற வித்தையைக் கற்றுத் தருதற்கு, அதுவும் இவர் அவர் என்று இன்றி எவரும் பெறுதற்கு சுவாமிகள் முன்வந்தார் எனில் அவர்தம் கருணைப் பெருக்கை எப்படிக் கூறுவது?
சரி! அதிசூக்குமத் திருக்கோயில் எனும் தகராலயம்
எங்குள்ளதாம்? என்ன உண்மை எனில், இது
அவரவர்க்குரிய தனிக் கோயிலாம்! அவரவரே தரிசிக்க
வேண்டிய திருக்கோயிலாம்
ஒருவர் தரிசித்து மற்றவர்க்கு அதைக் காட்ட முடியாது.
தரிசித்தவர்க்கே உரிய கோவிலில் மற்றவர் தரிசிக்க
இயலாது. அவர்க்கென அமைந்த அந்த அற்புதக்
கோயிலில் மட்டுமே அவர் தரிசிக்க இயலும்.
இனி இக்கோயிலின் மற்றொரு இரகசியமும் உண்டு.
அவரவர்க்குரிய தனிக் கோயிலாக விளங்கும்
இக்கோயில் இனி யாவர்க்கும் பொதுவான
பெருங்கோயிலாகவும் விளங்கும். பொதுக் கோயிலைத்
தரிசிப்பதற்கு உரிய தகுதியானவர் தனிக் கோவில்
தரிசித்தவர் மட்டுமே.
தனிக்கோவில் அவரவர் தேக நடுவிலும், பொதுக் கோவில் பிரபஞ்ச நிறைவிலும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. முன்னதைப் பிண்டத் தகராலயம் என்றும், பின்னதை அண்டத் தகராலயம் என்றும் வழங்குவர். பிண்டத் தகராலய மூலவரோ குகேசன். அண்டத் தகராலய மூலவரோ நடேசன். இதயக் குகையில் குகேசனாகத் தரிசிக்கப் பெற்றவனே பிரபஞ்ச வியாகத்தில் நடேசனாகத் தரிசிக்கப் பெறுவான். எனவே இருவரும் வேறு வேறு என மயங்குதல் வேண்டாம்.
குகேசனை அறியாதார்; நடேசனை அறியார்.
இந்தக் குகேசனையே, திருஞானசம்பந்தர் 'என் உள்ளங் கவர் கள்வனென்றும்', தேவாரப் பாடலைத் தொடங்கும்போது. தோ = த்+ஓ எனத் துவங்கி, தகராலய நுட்பமான ‘த்' என்றும், இயக்க ஆற்றலான குழலையாம் ‘ஓ’ என்றும் குறித்து நுட்பம் உணர்வோம். சுவாமிகள் தம் நூலில் இவ்விரு ஆலயங்கள் பற்றிக் குறிக்கும் போது.
“பிண்ட மாமுரு விற்கு நாநிலை
பேச உள்ள உள் இதயமாம்
புண்ட ரீக மலர்க்கு ளேஅருள்
புரிபரைப் பொருளாய் இறா
அண்டருந் தெரிவரிய சூக்கும
மாய கண்ட வியோமம் ஒன்று
உண்டு அதைச் சிவம் பிரமம் என்றுறழ்
உடைய பாவலர் அறைவரே”
என்று பிண்ட தகராலயத்தையும்,
"பிரமம் பரிபூரணம் ஆதலினாற்
பெரிது என்றறை அண்டம தற்குளுமே
கரஅம்பரமாய சிதம்பரவான
கரையின்று உளதாகலின் முன்சொன செம்
புரமன்றுள பேர்களம் இங்ஙனமே
புகலண்ட மதற்குளவே நல்விராட்
புருடன் தனது ஆகம தாம் அதிலே
புருடன் பதி நள் இதயச் சுமமே”
என்று அண்ட தகராலயத்தையும் சுவாமிகள்
குறிப்பிடுகின்றார்.
பிண்ட தகராலயம் நம் உடம்பிற்குள் நாம் குறிப்பிடுகின்ற இதயத்தில் இருப்பதாக எண்ணக்கூடாது. தூலமான உடலில் தூலமான உறுப்புகளே இருக்கும். நுட்பமான கருவிகள் நுட்பமான ஒன்றாக விளங்கும். நுட்பமான கருவிகள் உள்ள தேகம், சூக்கும தேகம் என்றும் புரியட்ட காயம் என்றும் சொல்லப்பெறும். இனி அதி சூக்குமமான ஆலயமோ நம் அதிசூக்கும உடல் எனப் பெறும் காரண தேக நடுவிலேயே இந்த ஆலயம் விளங்குகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ் ஆலயமே சிதம்பரம் என்றும் பிரமபுரம் என்றும் சொல்லப்பெறுகிறது.
இங்கே நம் உள்ளே குகேசனாகப் புரிகின்ற கூத்து, உயிர்க் கூத்து, அங்கே பிரபஞ்சத்தில் நடேசனாகப் புரிகின்ற கூத்து பிரபஞ்சக் கூத்து.
காரண தேகக் குகையில் விளங்கி உயிர்க்குயிராக
இருந்து உயிர்க்கு ஐந்தொழில் சங்கல்பத்தால் நிகழ்த்தும்
காரணத்தாலன்றோ முருகன் 'குகன்' எனப் பெற்றான்.
வேறு எக்கடவுளுக்கும் இப்பெயர் பொருந்துமோ?
உயிர் உடலோடு இயங்க உயிர்க் கூத்தும், பிரபஞ்சம்
இயங்க பிரபஞ்சக் கூத்தும் அவன் செய்கின்றான்.
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்றருள்வாய்
என்றார் ஸ்ரீமத் அருணகிரிநாதரும்
உணர்வது என்று இப்பாடலில் குறிப்பிடுவது, 'இவனே உயிரின் உள்ளக் குகையில் பொருந்தி அதனைச் செலத்துவதை' என்ற உண்மையையே, அவ்வாறு உள்ளிருந்து கடவுகின்ற குகேசனே கடவுள் என்ற பெயர்க்கும் உரியவன்.
உயிர்கள் உள்ளக் குகைதொறும்
பொருந்துமாற்றால்
செக்கர்வேட் சோதி குகன் என்றொரு
நாமும் பெற்றான்
என்றார் சுவாமிகளும் செக்கர்வேள் செம்மாப்பில்.
இதனைச் சுவாமிகள் தகராலய ரகசியத்தில்,
இதய பங்கய குகரமே குகை
என்பது ஆரிய பாடையில்
அதனுளாய சிதம்பரத் துளி
அமல ஞானவிண் மெய்யனாச்
சததமுஞ்சுக நடனமே புரி
தம்பிரானையொர் குகன் எனக்
கதற மாமறை யவனை அற்றொரு
கடவுள் நாம் அறியோம் அரோ
என்று குறிப்பிடுவார்.
எனவே நம் உடல் இயங்க உயிர்க் கூத்தும், உலகம் இயங்கப் பிரபஞ்சக் கூத்தும் நிகழ்த்தப் பெறுகின்றன. இவ்விரண்டும் இயங்கினாலே தான் இங்கே உயிர்க் கூட்டம் வினைபுரிந்து அனுபவம் பெற்று ஆணவமலம் எனும் அறியாமை நீங்கப் பெற்று சிவாத்துவிதமாகி, சிவானுபவம் எனும் சிவானந்தத்தில் தோய்ந்து நிலைக்கிறது. இந்த உயிர்க் கூத்து தரிசனம் எவ்வாறு கிட்டும்?
பூ உதகம் ஆரல் உயிர் புட்கரவியோமம்
ஓவலின் மகத்துவம் அகந்தை எனும் ஓரேழ்
ஆவரண மெய்ந்நடு வலங்குறழ்வு மன்றிற்
கூவியனன் மாநடை குகேசன் இடுவானால்
ஏழு திரைகளை அகற்றி அனுபவிக்க வேண்டிய, உண்ண வேண்டிய திருக்கூத்து.
- தன்னில் வேறாகக் குகேசன் தரிசனம் நிகழாமல், தன்னின் உயிராக உணரும் தரிசனம் நிகழும்.
நிலம் முதலான ஐந்து பூதங்கள், குறைவிலாத
சுத்தவித்தை, அகங்காரம் என்னும் ஏழு திரைகள்.
அதாவது 36 தத்துவங்களைக் கடந்து நின்று உணரப்
படவேண்டிய திருக்கூத்து. அது நிகழும் இடமோ பரவெளி;
சுத்தவெளி அங்கே ஆன்மாவைத் தனது
திருமேனியாகக் கொண்டு குகேசன் விளங்குவான்.
அதனால் தான்
- இனி உயிர் சங்கல்பிக்க உடல் இயங்குமாறு, குகச்
சிவம் சங்கல்பிக்க உயிர் இயங்கும். தான் இயங்குவது
என்பது இல்லாது உயிர் இயக்கமே கூத்து
எனப்படுகின்றதே அன்றி ஈசனுக்கு ஆட்டமோ கூத்தோ
கற்பித்தல் ஆகாது.
இனியாரொருவர் குகேசன் திருக்கூத்தைப்
பிண்டத்தகராலயத்தில் உணர்கின்றார்களோ அவர்களே
அப்பெருமானை அண்டத் தகராலயத்தில் நடேசனாகக்
கண்டு உணர்ந்து மகிழ்வோர். இதனை
சிதமாகிய அண்ட நன்மன்றமதைத்
தெளிவால் நனி கண்ணுற எம்பெருமான்
இதமாகிய பேரருளால் உடலாம்
இதயாம்பர நோக்கம் தாமுகுரம்
அதையே பெற வேண்டும் எனுந் துணிபே
அறையுந் திருஆரண ஆகமமாய்த்
துதியா நிலை வேறிலை வேறிலை என்று
ஒளியாது மொழிந்தது மன்னணமே
என்ற பாடலில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
தெளிவுபடுத்துகிறார்.
இவ்வாறாக உணரப்படவேண்டிய உள்ளமர்
கோயிலில் விளங்கும் குகப் பெருமானை,
இதயத் தாமரையாம் சிதம்பரத்தினிடத்தே
நின்மலமாகிய சிதாகாசச் சொரூபனாக நின்று
எக்காலமும் பேரின்ப நடனஞ் செய்யும் தம்பிரானை, தரிசிப்பதே உண்மையான ஆலய தரிசனம் என்று அற்புதமாக எடுத்துக்காட்டி, இதனால் பரஆகாசமாக புறத்தேவிரிந்து அண்டகோடிகளை எல்லாம் இயக்கிக் கூத்து நிகழ்த்தும் நடேசன் தரிசனம் நிகழ்வதையும் உணர்த்தி நிற்கும் ஒப்பற்ற நூல் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தகராலய ரகசியம். இதுவரை இரகசியமாய் இருந்ததை யாவரும் அறிய வெட்ட வெளிச்சமாக்கியது சுவாமிகளின் பெருங்கருணை! நூலை இச்சிறிய கட்டுரையில் காட்டியது ஓர் அறிமுகமே! நூல் முழுமையும் ஓதி உணர்வோருக்கு சுவாமிகளின் குருவருளும் முருகப் பெருமானின் திருவருளும் கிட்டுவது திண்ணம்
அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவசித்தாந்த
ஞானபாநு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்
திருவடிகள் போற்றி! போற்றி
★★★

