அருளாளர் பலர் மண்டிக் கிடந்த அருணையம்பதியில் ஆடல்வல்லானின் அருமைப் புதல்வனை அன்றி, மற்றொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாத அருளாளர் அருணகிரியார்.

கன்னல் தமிழால் கந்தனைப் பாடினார். கன்னித் தமிழால் கார்த்திகேயனைப் புகழ்ந்தார். சந்தக் கவியால் 'சண்முகனைப் போற்றினார். குன்றுதோறாடும் குமரனைக் கும்பிட்டு நின்றார். வண்ணத் தமிழால் வள்ளிமணாளனை வணங்கி மகிழ்ந்தார். தெய்வானைக் கேள்வனைத் தெய்வத் தமிழால் துதித்துப் பரவினார். திருப்புகழால் திருமால் மருகனை நாவார வாழ்த்தினார்.

முருகப் பெருமானின் அருளை முழுவதுமாகப் பெற்று, முருகப் பெருமானையே பாடிய அவரை,

கந்தர் அநுபூதி பெற்று, கந்தரநுபூதி சொன்ன
எந்தையருள் நாடியிருக்கும் நாள் எந்நாளோ?

என்று உளமுருகப் பாடுகின்றார் தாயுமானவர்.

அருணகிரிநாதாரின் நூல்கள் :

கந்தர் அந்தாதி - 102 பாடல்கள்
கந்தர் அலங்காரம் - 108 பாடல்கள்
கந்தரனுபூதி - 52 பாடல்கள்
திருப்புகழ் - 1307 பாடல்கள்
திருவகுப்பு - 25 பாடல்கள்
சேவல் விருத்தம் - 11 பாடல்கள்
மயில் விருத்தம் - 11 பாடல்கள்
வேல் விருத்தம் - 11 பாடல்கள்
திருஎழுகூற்றிருக்கை - 1 பாடல்

முதலியன அவர்தம் நூல்களாகும்.

குமரகுருபரனைச் சிந்தையில் வைத்து, அவன் புகழ் பாடுங்கால் “மாலோன் மருகன், மாவலிபால், மூவடிகேட்டன்று மூதண்டகூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்” என்று திருமாலையும், “மன்றாடி மைந்தன்”; என்று தந்தையாகிய சிவனையும்;, “திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்தி” என்று தாயாகிய உமையையும், “முருகனைக் காண நாலாயிரம் கண்கள் படைத்திலனே!” என்று பிரம்மாவையும்; “நீலச்சிகண்டியிலேறும் பிரான் எந்த நேரத்திலுங் கோலக் குறத்தியுடன் வருவான்” என்று வள்ளியையும்;, “கோழிக் கொடியோன், தாவடி யோட்டு மயில், செந்திலோன் திருக்கை வேலே!” என்று முருகனின் கொடி, ஊர்தி, வேல் ஆகியவற்றையும், குறிஞ்சி நிலத் தலைவனான சேயோனைக் “குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே!” என்று தெய்வங்களையும் இன்ன பிறவற்றையும் ஒருங்கே வைத்துப் பாடியுள்ளதை நாம் காணலாம். அருணகிரியாருக்கு முருகனே! முதலும் முடிவுமாகயிருந்தாலும் பிற தெய்வங்களை அவர் வெறுத்தார் இல்லை.

ஆவினன்குடியில் அருளாட்சி நடத்தும் வள்ளலை, தனக்கு ஜபமாலைத் தந்தருளிய கந்தனைக் காப்புப் பாடலோடு நூற்பயனையும் சேர்த்து நூற்றியெட்டுப் பாடல்களால் அருணகிரியார் அலங்காரப்படுத்திய நூலே கந்தரலங்காரம் ஆகும்.

தமது ஊரான திருவண்ணாமலையின் திருக்கோபுரத்துக்கு அருகே வடபுறத்தில் கோயில் கொண்டு, தன்னை வணங்கும் அடியார்க்கு அருள்பாலிக்கும் முருகனின் சகோதரனாகிய மூத்த பிள்ளையாருக்கு வணக்கம் தெரிவிப்பதாகத் தொடங்குகின்றது இந்நூல்.

மீண்டும் மீண்டும் இம்மண்ணில் நாம் பிறப்பதற்குக் காரணமாக அமைவன நம் வினைகள். அத்தளையிலிருந்து நம்மை விடுவித்து, நற்பயனைத் தருவது முருகனின் கையிலுள்ள கூர்மையான வேலாகும். பொறி புலன்களெல்லாம் நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, எமன் கழுத்தில் சுருக்கிட்டு நம்மை அழைத்துச் செல்லும் வேளையில் கற்க இயலுமா? இப்பொழுதே உடம்பில் வலுவிருக்கும் காலத்திலேயே அவன் புகழை ஓதுங்கள் என்று அறிவுறுத்துகின்றார்.

அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீர்எரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழ பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை வேண்டுகின்ற இப்பாடலில் எழுத்துப் பிழையறக் கற்றுக் கொள் என்கின்றார். எழுத்துக்களின் நுண்மை, மென்மை, இடைமை அறிந்து அவற்றை ஒலிக்க வேண்டும். தமிழுக்கே உரித்தான ழகரத்தை வைத்துப் பாடியுள்ளமையைக் காண்க. ழகர. லகர, றகர உச்சரிப்பினைத் திருந்திய முறையில் பயன்படுத்த இத்திருப்பாடல் பெரிதும் துணைபுரியும்.

உலகியலோடு பொருந்தி வாழ்பவர்கள் பெறுகின்ற கல்வி கேள்விகளால் விளைவது சிற்றறிவு. அருணகிரியார் பெற்ற கல்வியும் அறிவும் முருகப் பெருமானின் பரிபூரண அருளால் விளைந்தவை. தாம் பெற்ற அருளின்ப ஆனந்தத்தை அறிவுக்கண் கொண்டு விளக்கவில்லை. முருகனின் அருள் எனும் ஆனந்தத் தேனைத் தம் அநுபவத்தால் அன்பினைக் குழைத்து நமக்குத் தந்த திருப்பாடல் ஒன்றினைக் காண்போம்.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்ததொர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா!முகம் ஆறுடைத் தேசிகனே

ஆறுமுக குருவே! அருளொளியில் விளைந்த உயரமான ஞானமாகிய மலையுச்சியில் உனது மேலான கருணையால் விளைந்த ஒப்பற்ற ஆனந்தம் என்னும் தேனை, கால எல்லைக் கடந்தும், உடல், உயிர் உணர்வுகளுக்கு எட்டாத பாழைப் பெற்றதோர் தனி அனுபவ நிலையை அடியேன் அறிந்து இன்புறுமாறு உணர்த்திய உன் கருணையை எவ்வாறு எடுத்தியம்புவேன்?

என்றும் ஓரே தன்மையுடையதாய், அகவிருளை நீக்கி, ஞான வெளிச்சம் தருவதாய், உலகியல் இன்பத்தில் ஆழ்ந்து, அவனை நினையாதார் உள்ளத்துக்குக் காண்பரிதாய், பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குப் பேரொளியாய் ஞானமாகிய மலையின் உச்சியில் நிற்கும் ஒளிப்பிழம்பு முருகன்.

படத்திலுள்ள மலர் அலங்காரப் பட்டையின் மையத்தில் "143" என்ற எண் உள்ளது. மூலமும் நடுவும் ஈறும் இல்லா அநாதி அப்பெருமான். மனம், வாக்கு, காயம் இவற்றிற்கு அப்பாற்பட்டு நிற்பவன். அவனைக் குறித்துப் பேசவும் எழுதவும் இயலாத தனிப்பெருந் தெய்வம்.

அவ்வருள் விளைந்த இடம் எது? வெளி என்பதற்கு ஆகாசம் என்று பொருள். நிலம், நீர், காற்று, கனல் ஆகிய நான்கு பூதங்களும் ஆகாசத்திற்குள் அடங்கியிருக்கின்றன. அந்த ஆகாசத்திற்கு மேலே அல்லவா முருகனெனும் ஆனந்தம் இருக்கிறது. எனவே, வெளியில் விளைந்த வெறும் பாழ் என்றார். ஒன்றுமற்ற இடமே பாழ் ஆனால் இங்கு வெறும் பாழ் எனக் காரணம் இந்தப் பாழுக்கு அப்பால் எதுவுமே இல்லை என்பதனை உணர்த்துவதற்காக அப்படிக் கூறினார்.

இட எல்லையைக் கடந்தும், கால எல்லையைக் கடந்தும் நிற்பவன் முருகன் என்று உணர்த்துகின்றார். மேலும் மலை, உச்சி, ஒளி, தேன் என்று நாமறிந்த பொருட்களையெல்லாம் கூறி, நம்மைப் பக்குவப்படுத்தி, காணவியலாத உணர்ந்து அறியக் கூடிய அவனருளாலே தாமறிந்த அவ் வெறுந்தனிவெளி நாயகனாம் முருகனை, நமக்குக் காட்டுகின்றார்.

தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைந்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்பு உள்;நெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்று மணிவாசகர் முன்பே பாடியுள்ளது நம் நினைவுக்கு வருகின்றது.

கவியரசர் கண்ணதாசன், “பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்” என்று பாடுகின்றார்.

வாடா பாமாலையால் கந்தனுக்கு அலங்காரம் பாடிய அருணகிரியாரின் கந்தரலங்காரத்தை வாடி நிற்பவர்கள் நாளும் மனமுருகிப் பாடினால் வாட்டும் வல்வினைகள் நம்மைச் சாராது விலகாதோ?

★★★

உ. வே. சா. உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது செங்கல்வராயப் பிள்ளை அவரை சந்திக்கச் சென்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது செங்கல்ராய பிள்ளையின் கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டாராம் உ வே சா.

செங்கல்வராயப்பிள்ளை பதறிப்போய் “என்ன காரியம் செய்தீர்கள் ஐயா?” என்றார். அதற்கு உ. வே. சர. ஐயர் சொன்னார்.

“திருப்புகழையும் முருகனுடைய பெருமைகளையும் ஆராய்ந்த கைகள் ஆயிற்றே, அதனால் தான் கண்களில் ஒற்றிக்கொண்டேன்” என்று.

செங்கல்ராயப்பிள்ளை பதிலுக்கு உ.வே.சா. அவர்களின் கால்களில் விழுந்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

இம்முறை பதறியது உ. வே. சா. “நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள் ஐயா?”

"சங்ககால இலக்கியங்களைத் தேடி தேடி அலைந்த கால்கள் ஆயிற்றே” என்றாராம் செங்கல்வராயபிள்ளை கண் கலங்கியபடி. இதிலிருந்து தெரியும் செங்கல்ராயப் பிள்ளையின் பெருமையும் பணிவும்.