காலையில் சூர்யன் உதிக்கும் முன்னே, கிழக்கே செந்நிற கதிர்களோடு தோன்றுவதுதான் அருணோதயம். சூர்யனின் வருகையை முன்னமே நமக்கு அறிவிப்பது அருண கிரணங்களும் சேவலின் கூவலும் ஆகும். அருண கிரணங்கள் அச்சலமான மலை உச்சியில் ஒளியுடன் தோன்றும் புனிதத் தலம் அருணாச்சலம். 15 ஆம் நூற்றாண்டில் முத்தம்மா எனும் புனிதவதி ஞான ஒளியாக பிறந்த தன் மகனுக்கு அருணகிரி எனும் பெயர் சூட்டினாள். சில காலம் கழித்து முத்தம்மா இறைவன் அடி சேர சகோதரியின் மேற்பார்வையில் வளர்ந்தார் அருணகிரி. பெயருக்கு ஏற்றார் போல், ஞான சுடராக விளங்கிய அருணகிரி, புராணம் சாஸ்திரம் எல்லாம் படித்து பண்டிதனாக விளங்கினார்.

தனது இறை சிந்தனைக்கு உடல் ஒரு தடங்கலாக இருப்பதை உணர்ந்த அருணகிரி,

உடலில் இருந்து விடுதலை அடைய நினைத்து, கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்தார். ஆனால் அவர் உடல் தரையை தொடவில்லை. மாறாக, வலுவான இரண்டு கரங்கள் அவரைத் தாங்கி தடுத்தாட்கொண்டன. முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த திருக்கரங்களே அவைகள். இறவாமல் பிறவாமல், இறைவன் அடி சேர்ந்து முக்திக்கு வழி வகுக்கும் உபதேசம் வழங்கி, ‘அருணகிரி நாதா‘ என்றழைத்து, ‘என் மீது திருப்புகழ் பாடுக என்று அடி எடுத்து கொடுத்து, மறைந்தார் முருகப்பெருமான். திருமாலின் மருகோனே என்று பல பாடல்களில் முருகனை அழைத்து பாடினர் அருணகிரிநாத சுவாமிகள். முருகனின் தந்தையாகிய சிவனாரை போற்றும் அதே வேளையில் பெருமாளையும் அவர் எடுத்த பல அவதாரங்களையும் போற்றி பாடினர் அருணகிரிநாதர். சைவமும் வைணவமும் நாடுவது இறைவன் மலர் பாதங்களே என்று எடுத்துரைக்கிறது திருப்புகழ்.

பெருமாளை அடைய சிறந்த வழி, ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, அவர் மலர் பாதம் நாடுவதே ஆகும் என்கிறார் ஸ்ரீ ராமானுஜர். இதயத்தில் பக்தியுடன் சரணாகதி அடைந்தால் இறைவன் அடி சேரலாம் என்கிறது வைணவ சம்பிரதாயம். 'எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா' என்று அருணகிரியார் கந்தரநுபூதியில் பாடும் பொழுது அவர் சரணாகதி தத்துவத்தை தான் சொல்கிறார். உலக பந்தங்களில் இருந்து விடுவித்து உனது திருவடி நிழலில் அடைக்கலம் தருவாய் என்கிறார் பல பாடல்களில். 'ஜெய ஜெய அருணாச்சல என்று கூறி, ஒளி வீசும் திருவடியை தியானித்து, திருவடியில் உதிக்கும், சிவமந்திரம் என்னும் அமுதை பருகி மகிமகிழ்வேனோ?' என்கிறார் திருவண்ணாமலை திருப்புகழில்.

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யே ட்டிலும் பட்டதன் றேபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்டகூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே

விஷ்ணு பகவான், யாகம் செய்யும் மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் தனமாய் கேட்க மகாபலியும் இசைந்தார்; ஆனால் ஒரு அடியில் மண்ணுலகம் அளந்து, இரண்டாவது அடியில் தேவலோகமும் அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டார் உலகளந்த பெருமாள். மூன்றாவது அடியை அடியேனின் தலை மீது வைத்து அருளுங்கள்' என்று வேண்டினார் மகாபலி சக்கரவர்த்தி பெருமாள் பாதம் தன் தலை மீது வைத்தாலே அது முக்தி என்று உணர்ந்த மகாபலி சரணாகதி தத்துவத்தை மிக சிறப்பாக இந்த கந்தரலங்காரப் பாடலில் விளக்குகிறார்.

அனைத்து பாதைகளும், இறைவனை உணர்ந்து, அவனுடன் ஒன்று சேர்ந்து, அத்வைத நிலை அடையக்கூடிய லட்சியத்தை நோக்கி செல்கின்றன. ஞான மார்க்கத்தில் சென்று, ஆத்ம விசாரம் பண்ணி, சமாதி நிலை அடைந்து, தான் பரம்பொருளான அதுவே என்று உணர்வது ஒரு மார்க்கம். அனைவராலும் இந்த மார்க்கத்தில் செல்ல இயலாததால், 'சரணாகதி' என்ற எளிதான மார்க்கத்தை சான்றோர்கள் உபதேசித்தனர். ‘எனக்கு எந்த சக்தியும் கிடையாது, நான் ஒரு கருவியே. கடவுளே சர்வ சக்திமான்' என்று உணர்ந்து அவரிடம் அடைக்கலம் அடைவதே சரணாகதி. 'நீயே சகலமும், உன் திரு உள்ளம் படியே எல்லாம் நடக்கும்" என்று எண்ணும் நிலை அடையும் போது சரணாகதி முழுமை ( பூரணத்துவம் ) அடைகிறது. “என்னைத் தவிர வேறு எதனையும் எண்ணாமல், என்னையே சார்ந்து வாழ்கிறவனுக்குத் தேவைப்படுகின்ற அனைத்தையும் நான் அளிக்கிறேன்' என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.(கீதை 9-22)" 'வேறொரு நினைவும் இன்றி, இறைவன் மலர் பாதம் ஒன்றே கதி' என்று செயல்படுவதே சிறந்த சரணாகதி மார்க்கம். ராமாயணத்தில் சரணாகதி தத்துவத்தை பரவலாக பார்க்கலாம். விபீஷண சரணாகதிக்குத் தனி சிறப்புண்டு. ஆஞ்சநேயரும் சரணாகதிக்கு இலக்கணமாக விளங்குபவர்.

அருணகிரிநாதரின் முதல் பாடலிலேயே, ‘முருகா, உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல் எல்லாம் என் இதயத்தில் நீங்காமல் நிலைத்திருக்க, விநாயகப் பெருமானுக்கு அப்பம், பால், தேன் எல்லாம் வைத்து வணங்குகிறேன்‘ என்கிறார். ‘மயில் மீது ஏறும் பொழுதும் தேவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பொழுதும் உறுதுணையாய் இருந்த உனது பாதம் அடியேனின் ஏட்டிலும் பட்டதால், திருப்புகழ் சிறந்து விளங்குகிறது‘ என்கிறார் ஸ்ரீ அருணகிரிநாதர். ’சிற்றடி அடைவதே அருணாச்சல முனிவரின் ஒரே இலட்சியம்’ என்று அவரது பல பாடல்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம். சீர்பாத வகுப்பில் முருகனின் பாத கமலத்தை சுவாமிகள் மிக அழகாக வர்ணிக்கிறார். ‘ஞான உலகத்திற்க்குச் செல்லும் வாயிலாக விளங்குவதும், தேவர்களின் மகுடம் தரித்த தலைகள் அடிபணிவதும், அடியேன் சரணாகதி அடைவதும், நினது சீரடியே‘ என்கிறார். திருவடியும் தண்டையுமாக வந்து என் உள்ளம் குளிர் கொண்டவா‘ என்கிறார் கந்தரலங்கார பிற்பகுதியில் ‘உலக வாழ்க்கையில் மூழ்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நான். எப்பொழுது உன் பாத கமலத்தை அடைவேனோ ‘ என்று திருத்தணியில் பாடுகிறார் (பொற்பாதத்தினை). ‘முருகா, என்னை இகழ்ந்து சிரிப்பவர்கள் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்‘ என்கிறார் ‘ஏது புத்தி ஐயா என்று தொடங்கும் பாடலில். நக்கீரரின் திருமுருகாற்றுப்படை முருகனின் தண்டை காலை இப்படி வர்ணிக்கிறது. ‘முருகனே, செந்தில் முதல்வனே, மாயோன் மருகனே ஈசன் மகனே, ஒருகை முகன் தம்பியே, நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே தொழுவேன் நான்’.

இறைவனின் சீர்பாதங்களே முக்திக்கு வித்தாகும் என்கிறார் ஸ்ரீ மாணிக்கவாசகர். அவன் அருளாலே அவன் தாள் வணங்கிட முடியும் என்று கூறுகி??ர் அவர். 'முருகனின் பாதம்தனது தலையில் படும் நாள் எந்நாளோ ?' என்று ஏங்குவோர் பலருண்டு. ஆனால் வேறொருவரின் பாதத்தை தன் தலைமீது வைத்து ஆனந்தமடைந்தார் முருகப் பெருமான். அந்த நபர்தான் வள்ளியம்மை. "வேடுவச்சி வள்ளியின் பாதத் தாமரைமீது, வெட்சி மாலை அணிந்த உன்திருமுடி படும் படியாக காதலித்து, உன்னுடன் இணைத்துக் கொண்டாய்' என்கிறார் சுவாமிகள் 'வேத வெற்பிலே புனத்தில்' என்று தொடங்கும் திருக்கழுக்குன்றம் திருப்புகழில்.

நம்பிக்கையோடு நாமும் இறைவனின் திருவடியை மட்டுமே பற்றுவோம்.

★★★