பன்னெடுங் காலமாக தமிழகத்தில் இறையருள் பெற்ற புலவர்களும், மன்னர்களும் நட்பு பாராட்டி வந்துள்ளார்கள்.
சங்க காலத்தில் வாழ்ந்தவரும் முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவருமான அவ்வையாரிடம் தகடூரை ஆண்ட மன்னன் அதியமான் அதீத நட்பு கொண்டார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், தீவிர சிவபக்தரும் சேர நாட்டு மன்னனுமான சேரமான் பெருமானிடம் நட்பு பேணினார். 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பநாட்டாழ்வாருக்கு திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் நல்ல நண்பராகத் திகழ்ந்து அவரை ஆதரித்து வந்தார்.
அதேபோல் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர் அருணகிரிநாதர் பெருமான் மற்றும் காவிரி சேவகனின் நட்பும் இப்பட்டியலில் சேர்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். பழனி அருகே உள்ள கலிசை நாட்டை ஆண்ட காவிரி சேவகன் என்ற மன்னன், அருளாளர் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் பரிபூரண அருள் பெற்றவர் என அறிந்து, அவர்கள் பழனியில் தங்கிய காலத்தில் அவரிடம் நட்பு கொண்டு உதவி புரிந்து வந்தார்.
அருளாளர் அவர்கள் திருப்புகழில் வெறும் மூன்று புண்ணிய ஆத்மாக்களின் பெயர்களைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பிரபுடதேவராயன், சோமநாதன் மற்றும் காவேரி சேவகன்.
பிரபுட தேவராயன் மற்றும் சோமநாதன் பெயர்களை குறிப்பிட்டுள்ள அருளாளர், அவர்களை ஒரு போதும் துதிக்கவில்லை. ஆனால் காவேரி சேவகனை மட்டுமே பல பாடல்களில் புகழ்ந்து பாடி உள்ளார்கள்.
ஆகவே காவேரி சேவகன் அருளாளரின் இதயத்தில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் என்று உறுதியோடு கூறலாம்.
வாரியார் சாமிகள் தான் எழுதிய‘குருநாதர் ‘ என்ற நூலில்:-
‘பழனி கலிசை நகரில் வாழும் காவேரி சேவகன் என்பார் அருணகிரிநாதர் பெருமானுக்கு இனிய நண்பராக விளங்கினார். கொடை, பதவி, அழகு, பக்தி முதலிய எல்லா நலன்களுக்கும் உறைவிடமான காவேரி சேவகனின் நற்பண்புகள் அருணகிரியாரை வெகுவாக கவர்ந்தன.
அதனால் தான் முருகனையே பாடும் நியமம் பூண்ட அவர் தமது ஞான மயமான திருப்புகழில் காவேரி சேவகனை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றார் ‘ என்று காவேரி சேவகனைப் பற்றி கூறுவார். மேலும் கலிசைச் சேவகனுக்கு வந்த சுர நோயை‘ தலைவலி மருந்தீடு‘ என்னும் திருப்புகழ் பாடி குணப்படுத்தினார் என்று வாரியார் சுவாமிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.
இனி அருளாளர் அவர்கள் காவேரி சேவகனை பற்றி பாடியுள்ள சில திருப்புகழ் பாடல்களைப் பற்றி இங்கே காண்போம்.
'தோகை மயிலே ' என்று துவங்கும் பழனித் திருப்புகழில், கார்மேகத்தை போன்று கொடைத்தன்மை உடையவனென்றும், கடல் போன்ற தன் செல்வத்தை, வாயு வீசுவது போல் விரைந்து கொடை வழங்கும் கைகளை உடைய வள்ளல் பாரிக்கு நிகரானவன் என்றும், மன்மதனை போன்று அழகு உடையவன் என்றும், மனதில் முருகப் பெருமானை நிரந்தரமாக குடிகொள்ள செய்து இருப்பவன் என்றும் காவேரி சேவகனை கீழ்கண்டவாறு புகழ்வார்:-
“மேகம் நிகர் ஆன கொடை மால் நாயக அதிபதி
வாரி கலி மாருத கர பாரி மாமதன
வேள், கலிசை வாழவரு காவேரி சேவகனது ...... உளமேவும்”
“சீயுதிர மெங்கு” என்று துவங்கும் திருபுகழில்
“வேலைவிடு கந்த காவிரி
விளங்கு
கார் கலிசை வந்த சேவகன் வணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே”
என்று மன்னனை போற்றுகின்றார்.
“இரு கனக மாமேரு” என்று துவங்கும் திருப்புகழில் காவேரி சேவகன் மீது முருகப்பெருமான் அன்பு கொண்ட செய்தியை இவ்வாறு விவரிக்கின்றார்:-
“கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு
கலிசைவரு காவேரி சேவகனொடு அன்பு ...... புரிவோனே”
“கோல மதிவதனம்” என்று துவங்கும் திருப்புகழில் காவிரி சேவகன் மனதில் முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார் என்ற செய்தியை
“வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே”
என்ற வரிகள் மூலம் எடுத்துரைக்கின்றார்.
இவ்வாறாக அருளாளரால் போற்றப்படும் காவேரி சேவகனார் முருக பக்தர்களுள் தனி இடம் பெற்று சிறப்புடன் விளங்குகின்றார் என்பது அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களின் வழி தெளிவாகத் தெரிகின்றது.
★★★
- ஆசிரியர் ஊதியத்தைக் கொடுக்காமல் விடாதே
- அலட்சியமான சொற்களைப் பேசாதே.
- அந்தணர் வாழும் ஊரை சார்ந்தவர்க்கு இடையூறு செய்யாதே.
- இரப்பவர்க்கு இயன்ற அளவு தானம் செய்யாமல் விடாதே.
- உலகத்தில் பட்சாபாதமாகப் பேசாதே.
- சிவனடியார்களையும் வைணவ அடியார்களையும் இகழ்ந்து பேசாதே.
- ஒருமித்த மனதுடன் தியானம் செய்.
- மோகம் பொருந்தும் காம மயக்க இன்பத்தில் திளைக்காதே.
- இழிகுணம் உடைய இவர் போன்றோர் ஏழு நரகங்களிலும் துன்பப்படுவர்.
— ஓது - திருப்புகழ்
நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் - திருப்புகழ் மாமணி வெ. இராமு

