அருளாளரும் அமுதத் தமிழும்
திரு. அமரேசன் பட்டுசாமி
அறக்கட்டளை செயலாளர், திருவண்ணாமலை.
உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்று, “புறப்பொருள் வெண்பாமாலை” என்னும் நூல் கூறும். இவ்வளவு பழமை வாய்ந்த தமிழ் இன்றளவும் இளமையுடனும் இனிமையுடனும் வளமாக இருப்பதற்குக் காரணம் தொன்றுதொட்டு தோன்றிய புலவர் பெருமக்கள்தான்.
அவர்கள் தமிழை உயிராக நேசித்துத் தங்களது தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் அவர்களைவிட மேலே ஒருபடி சென்று ஆழமாக நேசித்து சங்கத் தமிழில் முதன் முதலாக சந்தத்தைப் புகுத்தி, சந்தி தோறும் பரவச் செய்து,
சதிராட்டம் ஆடச் செய்தவர், சோதித் தலமான சோணகிரியில் தோன்றிய அருளாளர் அருணகிரிநாதர்தான் என்று திடமாகக் கூறலாம்.
காலந்தோறும் தோன்றிய தமிழ்ப் புலவர்கள் தமிழ்த்தாய்க்கு சிலம்பு, மெட்டி, சதங்கை மேகலை, ஆரம், தோடு, மூக்குத்தி, சூடாமணி போன்ற அணிகலன்களை அணிவித்து அழகு பார்த்தார்கள். ஆனால் அருளாளர் அவர்கள் தமிழ்த்தாய்க்கு வைர மகுடம் சூட்டி அழகு பார்த்தார் என்று சொன்னால் மிகையாகாது.
சிவபெருமான் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு “எம்மை சொற்றமிழால் பாடுக” என்று வேண்டியவாறு ஆறுமுகப்பெருமான் அருளாளர் முன் தோன்றி, “என் திருப்புகழை முத்து முத்தாகப் பாடு” என வேண்டினார்.
முத்தம்மையின் மைந்தன் மங்காத் தமிழில் மடைதிறந்த வெள்ளமென “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்று முருகனைப் புகழ்ந்து பாடினார்.
அருளாளர் அவர்கள் தமிழினத்தவர். அவர் தமிழைத் தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழியான சமஸ்கிருத்தத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். காரணம் அவர் வாழ்ந்த காலம் அத்தகையது. அவர் 14 ஆம் நூற்றாண்டில் அவதரித்தார் என்று சான்றோர் கூறுவர். அப்போது சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் சரிந்து கன்னட, ஹொய்சாளர்களும், தெலுங்கு நாட்டு விஜயநகர அரசர்களும் தமிழ்நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அவர்கள் படிப்படியாக கோவில்களிலும், கல்விச் சாலைகளிலும் சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். எனவே அருளாளர் சமஸ்கிருத அறிவைப் பெற்றிருந்தது ஆச்சரியத்திற்கு உரியது அல்ல. அவர் சமஸ்கிருதத்தைத் திருப்புகழில் ஆங்காங்கே ஒலி நயத்திற்காகப் பயன்படுத்தியுள்ளார்.
அருளாளர் தன் தாய்மொழியானது தமிழின் மீது அழுத்தமானப் பற்றும் பாசமும் கொண்டிருந்தார் அவர் தனது மொழிப்பற்றை பல்வேறு பாடல்களில் வெளிபடுத்தி இருக்கிறார்.
அருளாளரின் பல பாடல்களில் அவரது தமிழ்ப்பற்று தாண்டவமாடுகிறது. அவர்கள் இயற்றிய 16,000 பாடல்களில் நமக்கு கிடைக்கப் பெற்றவை சுமார் 1338 பாடல்கள்தான். அந்த 1338 பாடல்களில் நூற்று முப்பதிற்கும் மேற்பட்டப் பாடல்களில் தமிழ் என்னும் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்கள்.
“முந்துதமிழ் மாலை” என்று துவங்கும் பாடலில் தன் தமிழ்ப்பற்றின் உச்சத்தை வெளிப்படுத்துகின்றார். அவர்கள் உலக மொழிகளில் முதன்மையான மொழியானது தமிழ் என்றும் அந்த தமிழில் கோடி கோடி சந்தத்தால் புகழ்ந்து பாடவேண்டும் என்று வேலவனை வேண்டுகிறார்.
அவர் தமிழ் மொழிக்கு, “முத்தமிழ், வண்டமிழ், தண்டமிழ், கொஞ்சு தமிழ், சங்கத் தமிழ், செந்தமிழ், முந்து தமிழ், நற்றமிழ், அரிய தமிழ், ஏரிய தமிழ், ஏழிசைத் தமிழ், தெரி தமிழ், தெள்ளு தமிழ், ஜெயசித்ர முத்தமிழ், பல்கு தமிழ், மெய்த் தமிழ், சிறந்த தமிழ், ஞானத்தமிழ், சந்தத் தமிழ், சித்திரைத் தமிழ், மூதமிழ், அமுது தமிழ்” என்று எண்ணிலடங்கா அடைமொழிகளைத் தந்து புகழ்ந்துள்ளார்.
அதே போல் அவர் பயணித்தத் திருத்தலங்களுக்கெல்லாம் தமிழ்ப் பெயர் சூட்டினார்கள்.
அருணகிரிநாதர் சீர்காழியை “தமிழ்க் காழி” என்றும் மதுரையை ‘தமிழ்க்கூடல்’, ‘தமிழ் மதுரை’, ‘முத்தமிழ்க் கூடல்’ என்றும், சிதம்பரத்தை ‘தமிழ்ப் புலியூர்’ என்றும், திருக்கழுக்குன்றத்தை ‘தமிழ் வேத வெற்பு’ என்றும், விருதாச்சலத்தை ‘தமிழ் முதுகிரி’ என்றும் போற்றி பெருமைப்படுத்தி உள்ளார்கள். நாம் இப்பொழுது தமிழர் வாழும் பகுதியை தமிழ்நாடு என்று அழைக்கின்றோம். ஆனால் அருளாளர் அவர்கள் அன்றே “காலன் வேல் கணை” எனத் துவங்கும் பாடலில் தமிழகத்தை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அருளாளர் இயற்றிய 'திருப்புகழ்' முருகனின் புகழ் பாடும் புராணமாகும். அருணகிரிநாதப் பெருமான் முருகனைப் புகழும் தருணத்தில் எல்லாம் தமிழைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றார். அவர் தன் குருநாதராகிய முருகப்பெருமானை முத்தமிழோனே, முத்தமிழாகரனே, தமிழ் வீரனே, முத்தமிழ்ப் பெருமாளே, முத்தமிழில் புலமை வாய்ந்த வினோதனே, தமிழ் செய்மாறனே, சங்கப்பலகை அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, ஞான முத்தமிழ்த் தேனே, குடமணி கற்க அன்று தமிழ் வாது வெற்றி கொளும் வேலனே, நக்கீரர் ஓதிய தமிழை கேட்க மறைந்து காத்திருந்தவனே, செந்தமிழ் தெளிவு கொண்டு அடியாருக்கு விளம்பிய பெருமாளே, முத்தமிழ்ப் புலவர்களின் பெருவாழ்வே, சம்பந்தன் என தமிழ்த்தேங்கிய பெருமாளே, தெள்ளு தமிழ் பாடத் தெளிவோனே, தமிழ் தனை கரைகண்ட திறவோனே, குறு முனி புகழும் தமிழோனே, முத்தமிழ் விரகனே, அரிய தமிழ் அளித்த மயில் வீரனே, செந்தமிழ்ப் பாவின் மாலைக் காரனே, தமிழ்ப் பாடல் மீது காதல் புரிவோனே என்றெல்லாம் புகழ்ந்து தன் பக்தியைத் தமிழ் கொண்டு வெளிப்படுத்துகின்றார்.
தமிழ் போற்றும் புலவர்களே பாராட்டும்படியாக அருளாளரின் தமிழ்மொழி எங்ஙனம் மேலோங்கி நிற்கின்றது என்பதை மேற்கூறிய தகவல்களிலிருந்து நாம் அறிவோம். இருப்பினும் இக்கூற்றுக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பல இலக்கிய மற்றும் சரித்தரச் சான்றுகளை இத்தருணத்தில் கூறுவது மிகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
முருகப் பெருமான் மகேசனுக்கு உபதேச மந்திரம் செவிகளில் வழங்கிய செய்தியைப் பல நூல்களில் நாம் காண்கின்றோம். அருளாளரின் காலத்திற்கு முற்பட்டவரும் 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கந்தபுராண ஆசிரியருமான கச்சியப்பர் இந்த நிகழ்வை:
“என்றலும் நகைத்து” என்று துவங்கும் கந்தபுராண 1262 ஆம் பாடலில்
“தன் திருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை என்னும், என்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன் உரைத்தல் கேளா, நன்று அருள் புரிந்தான் என்ப ஞான நாயகனாம் அண்ணல்”
என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் இதே செய்தியை “அம்பொத்த” என்று தொடங்கும் திருப்புகழில் பதிவு செய்யும் அருளாளர் அவர்கள்,
“கொன்றைச் சடையார் ஒன்றைத் தெரியக், கொஞ்சித் தமிழைப்ப கர்வோனே”
என்று பாடி முருகப்பெருமான் தன் கொஞ்சும் தமிழால் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என்று கச்சியப்பர் சொல்ல மறந்ததைச் செப்பி தமிழுக்கு அழியாப் புகழைச் சேர்த்துள்ளார்கள்.
அடுத்ததாக ஆளுடை பிள்ளைக்கு அன்னை பராசக்தி ஞானப்பால் அருளிய செய்தியைப் பார்ப்போம். 12 ஆம் நூற்றாண்டில் தோன்றி 'உலகெலாம்' என்று பாடி உலகப் புகழ்பெற்ற சேக்கிழார் பெருமான் இச்சம்பவத்தை பெரியபுராணத்தில் இவ்வாறு பதிவு செய்கின்றார்.
“எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த் தங்கணனார் அருள்புரிந்தார்”
அதாவது அம்மையார் சிவஞானத்தைப் பாலுடன் குழைத்து அருளி கண்ணீரைத் துடைத்து பால் அமுதத்தை உண்ணச் செய்தார் என்று குறிக்கப்படுகிறார்.
இதே சம்பவத்தை அருளாளர் “கலவியிலிச்சி” என்று துவங்கும் திருப்புகழில்,
“பணை முலை மெத்தப் பொதிந்து பண்பு ஊறுகின்ற பாலை, பல திசை மெச்சத் தெரிந்த செந்தமிழ், பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்”
எனப் பாடி பார்வதிதேவி பல திசைகளில் உள்ளவர்களும் மெச்சப் புகழுமாறு செவ்விய தமிழ்ப் பாடல்களைப் பாடு என்று கூறி ஞானப் பாலைக் கொடுத்ததாக கூறி சேக்கிழார் பெருமானுடன் வேறுபட்டு நின்று தனது அளப்பரிய தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துகிறார்.
நிமலனின் அருள் பெற்ற நாயன்மார்களைப் புகழ்ந்து பாடியது போல் அரிக்கு சேவை செய்த ஆழ்வார்களையும் அருளாளர் துதிக்கத் தவறியதில்லை திருப்புகழில் அருளாளர் அவர்கள் திருமழிசை ஆழ்வாரைப் பற்றி குறிக்கிறார். ஆழ்வாரின் சீடனான கணிகண்ணன் அந்நாட்டு மன்னனின் வேண்டுகோளை செவிசாய்க்காததால் அவரை ஊரை விட்டு வெளியேற்றுகிறார். அதனை அறிந்த ஆழ்வார் தாமும் கணிகண்ணனோடு செல்வோம் வீற்றிருக்கும் பெருமாளையும் அழைத்துச் செல்வோமெனக்கூறி,
“கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும்முன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்று பாடினார்.
பெருமாளும் திருமழிசை ஆழ்வார் சொல்லிற்கிணங்கி ஊரை விட்டு சென்றார். இந்த நிகழ்வினை அருளார்கள் 'சருவம்படி' என்னும் துவங்கும் திருப்புகழில் 'வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்' என்று திருமால் ஊரைவிட்டு ஆழ்வாரின் பின் சென்ற செய்தியைக் குறிப்படுகின்றார். ஆனால் இரு புலவர் பெருமக்கள் கூறுவதில் வேறுபாடு உள்ளது. ஆழ்வார் அவர் பாடலில் திருமாலின் தமிழ்ப்பற்றை பதிவு செய்யவில்லை. ஆனால் அருளாளர் அவர்கள் திருமாலும் தனது மருமகனைப் போல் தமிழ்ப் பிரியர் என்பதை தெளிவாக உரைக்கின்றார்.
இந்நிகழ்வை 'பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசுங்கொண்டலே' என்று தமிழ்விடுதூது என்ற நூலும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு திருப்புகழ் முழுவதிலும் அருளாளரின் தெய்வப் பற்றும் தேன் தமிழ்ப்பற்றும் மிகுதியாக இருப்பதைக் காணலாம். ஆனால் இவ்விரண்டையும் ஒப்பிடுங்கால் தமிழ்ப்பற்றே மேலோங்கி நிற்கின்றது. இரண்டையும் தராசில் நிறுத்துங்கால் தமிழ் தாங்கும் தட்டே சற்று தாழ்ந்து நிற்கும் என்று ஐயத்திற்கு இடமின்றி உறுதியோடு கூறலாம்.
வாழ்க தமிழ்! ஓங்குக அருளாளர் அருணகிரிநாதரின் புகழ்.
★★★

