சட்டங்கள் பல. அந்த சட்டங்களில் நமக்குப் பிரபலமாக நன்றாகத் தெரிந்த சட்டம் குண்டர்கள் தடைச் சட்டம். இந்தச் சட்டத்தைப்பற்றி ஏதோ கேள்விப்பட்டிருப்போமே தவிர, மற்றபடி தெரியாது. இதே குண்டர்கள் தடைச் சட்டத்தைப்பற்றி, அருணகிரிநாதரும் சொல்லி இருக்கிறார். அருணகிரிநாதர் சொல்லும் ஆச்சரியமான அந்த குண்டர்கள் தடைச் சட்டத்தைப் பார்க்கலாம். குண்டர்கள் என்று பதினாறுபேர்களைப் பட்டியல் இடுகின்றார் அவர். அந்தப் பதினாறு பேர்கள் யார்? யார்?

நன்றாகப் பழகி நட்பு கொண்டுவிட்டு அதன் பிறகு, அந்த நட்புக்குத் துரோகம் செய்து வஞ்சனையுடன் இருப்பவர்கள் குண்டர்கள். அதாவது நட்புக்குத் துரோகம் செய்பவர்கள் முதலிடம் பிடிக்கிறார்கள் .

அடுத்த குண்டர் யார்? கல்வி கற்பித்த ஆசிரியர்க்கு உபகாரம் செய்யாமல் அவரிடம் நன்றி மறந்தவர்களாக இருப்பவர்கள் இரண்டாவது குண்டர். அதாவது குரு நாதருக்கு நன்றி மறந்தவர்கள்.

மூன்றாவது குண்டர் யாரெ ன்றால், விரதங்களை அதாவது நற்செயல்களைச் செய்யாதவர்கள். அதே சமயம் சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் எனும் அருணகிரிநாதரின் வாக்குக்கு மற்றொரு பொருளும் உண்டு. யாராவது நல்லது செய்தால் சிலருக்கு அது ஆகாது. எதையாவது சொல்லி நிர்ப்பந்தித்து, அந்த நல்லவைகளை, விரதங்களை நிறுத்தும்படிச் செய்து விடுவார்கள். இப்படிப் பட்டவர்களும் குண்டர்கள் .

அடுத்து, அறிவிலும் ஞானத்திலும் பண்பாட்டிலும் சிறந்த பெரியவர்களை இகழ்ந்து பேசுகிறார்கள் அல்லவா? அவ்வாறு இகழ்ந்து பேசுபவர்கள் குண்டர்கள்.

இந்த வரிசையில் ஐந்தாவதாக வருபவர், தர்மம் செய்வதைத் தடுப்பவர்கள். 'யப்பா! தர்மம் செஞ்சு தர்மம் செஞ்சு, நீயே ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள், பிச்சக்காரனா ஆயிடுவ! தர்மமாவது ஒன்னாவது? தனக்கு மிஞ்சித்தான் தான தர்மம்', என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, அடுத்தவர் செய்யும் தர்மத்தைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள், இப்படிப்பட்டவர்கள்.

இந்த வரிசையில் அடுத்து வருபவர்கள், வாக்கு மறந்தவர்கள். அதாவது சத்தியம் செய்து விட்டு, அதை மீறியவர்கள் குண்டர்கள்.

அடுத்து, நான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும். மற்றவர்கள் எக்கேடுகெட்டால் எனக்கென்ன என்று வருந்துபவர்கள் குண்டர்கள்.

அடுத்தது, நீதியையும் தர்மங்களையும் மீறி அவற்றைக் கை விட்டவர்கள்.அழுத்தமாகச் சொல்ல வேண்டுமானால் நீதியையும் தர்மத்தையும் அழித்தவர்கள் குண்டர்கள் .

அடுத்தது, தற்பெருமை கொண்டு அகம்பாவம் பிடித்து அலைபவர்கள் குண்டர்கள்.

அடுத்தது, நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் எண்ணிச் செயல்பட்டு வருத்தத்தில் ஆழ்பவர்கள் குண்டர்கள் .

இதுவரை பத்து குண்டர்களைச் சொன்ன அருணகிரிநாதர், பதினோராவதாகச் சொல்லும் குண்டர், கோவில் சொத்தைக் கொள்ளை அடிப்பவர்கள் குண்டர்கள். அதாவது தர்ம கைங்கரியத்திற்கென உள்ள செல்வங்களை, சொத்தைக் கொள்ளை அடிப்பவர்கள் குண்டர்கள்.

இவ்வாறு சொல்லப்பட்ட இந்தக் குண்டர்கள் எல்லாம், நரகப் படுகுழியில் விழுவார்கள். அவர்களை யமன் கடுமையாகத் தண்டிப்பார்.

இவ்வாறு பாடலின் முதற் பகுதியில் சொன்ன அருணகிரிநாதர் பாடலின் மறு பகுதியில், வாலி வதத்தைச் சொல்லி, கூடவே இராவண சங்காரத்தையும் சொல்லி இருக்கிறார். காரணம் என்ன ? இந்திரன் தான் வாலியாக வந்து பிறந்தான். அவன் வந்தது ராமருக்கு உதவியாக இருந்து, இராவண சங்காரத்திற்காக.ஆனால் வாலியாக வந்தவனோ,தான் வந்த காரியத்தை மறந்து இராவணனுடன் நட்பு பூண்டான். விளைவு? அறத்தின் வடிவான ஸ்ரீராமரால் தண்டிக்கப்பட்டான்.

நாம் பார்த்த இப்பாடல், வல்லக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானைத் துதித்து, அருணகிரிநாதரால் பாடப்பட்டது. வல்லக்கோட்டை முருகனைத் துதித்து, அருணகிரிநாதர் பாடிய ஏழு திருப்புகழ்ப் பாடல்களையும், என் தந்தை பாடியிருக்கிறார். அவற்றில் இருந்து ஒரு பாடலை மட்டும் எடுத்து, இங்கே எனக்குத் தெரிந்த அளவில், விளக்கம் சொல்லியிருக்கிறேன். திருப்புகழைப் பாராயணம் செய்வோம்! தீராத வினை எல்லாம் ஓடிப்போகும்! நல்லவை யாவும் தாமே வந்து சேரும்.

டி.எம்.எஸ். என்று எல்லோராலும் அழைக்கப்படும், என் தந்தை திரு. டி.எம்.சௌந்தர ராஜன், அருணகிரிநாதர் என்ற திரைப்படத்தின் வாயிலாக, அவர்தம் வேடமேற்று நடித்ததோடு, அருணகிரிநாதரின் பல பாடல்களைப்பாடி இருக்கிறார். அது மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையிலும் பற்பலத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி இருக்கிறார். அவற்றில்

★★★

அருணகிரியாரின் அவதார நோக்கமே சைவ-வைணவ ஒற்றுமை தான். கிளி வடிவத்தில் சுவாமிகள் கந்தர் அனுபூதி என்னும் மந்திர நூலைப் பாடி அருளினார். அடி மோனை எதுகை அத்தனையும் வைத்து வேறு யாரும் கையாளாத ஒன்று ஓசை. இதை யாரும் இதுவரைக்கும் கையாளவில்லை. தமிழ் தோன்றிய நாள் தொட்டு அருணகிரியாரைத் தவிர யாருமே முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லவில்லை.

— திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

இறைவன் தனக்கே சொந்தம் என்று கருதி, ஒருவன் இறைவனை அழைப்பதனால் அது இறைவனுடைய கருணையினால் விளைந்ததாகும் என்று சாரதா தேவி கூறுவார்கள். இத்தருணத்தில் அருணகிரிநாதப் பெருமான் முருகப்பெருமானை சிதம்பரம் திருப்புகழில் கனகசபை மேவும் எனது குருநாதா என்று கூறி சொந்தம் கொண்டாடியது நினைவு கூறத்தக்கது.