அருள்நிறை அண்ணாமலையான் அனல் மலையாகிப்பின் மரகதமலையாகி பொன்மலையாகி கல்மலையாகக் காட்சி தரும் திருவண்ணாமலைத் திருநகரம் கயிலாய மலையின் உயர்ந்த நிலைப் பெற்றதாக நந்திதேவர் உரைத்திருக்கிறார். பஞ்சபூத தலங்களில் தீத்தலமாக விளங்கும் இத் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஞானிகள் யோகிகளின் கருத்தாகும். இத்தகு சிறப்புமிக்க இத்தலத்தில் இறைவன் அனற் பிழம்பாக நின்றபோது அரியும் அயனும் அடிமுடி காண முயன்றும் முடியாமல் திரும்பினர். இத்தலத்தில் தான் உயிர்களுக்கெல்லாம் உற்ற துணையாக இருந்து காத்துவருகின்ற உமையம்மையாகிய பார்வதி தேவியாருக்கு இறைவனாகிய ஈசன் தன்னுடலில் பாதியைத் தந்து அர்த்தனாரீசுவரராக அருள்பாலித்த இடமாகும் இத்தலம்
“ஞானத்தபோதனரை வாவென்று” அழைக்க அவ்வாறு வந்த கௌதம முனிவர் முதல் இன்று வரை இத்திருத்தலத்திற்கு வந்த முனிவர்களும் சித்தர்களும் பலராகும். இங்கு வந்த சித்தர்களும் ஞானியரும் அண்ணாமலை ஈசனின் அருளை வேண்டி தவம் செய்து பாவங்கள் நீங்கப் பெற்று பயனடைந்துள்ளார்கள்.
இறைவன் இயற்கையில் நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய ஐம்பெரும் ஆற்றலாக இவ்வுலகை இயக்கி வருகிறான். அதுபோலவே நமது உடலும் ஐம்பொறிகளின் வழியாகவே இயங்குகிறது. இவ்வைபம் பொறிகளைக் கட்டுப்படுத்தி உலக வாழ்க்கையால் நெறிமுறைகளுடன் கூடிய ஒழுக்க முறைகள் பிறழாமல் வாழ்ந்தவர்களும் மனம்போன போக்கால் நெறிபிறழ்ந்த வாழ்வில் ஈடுபட்டுப் பின்னர், அனுபவத்தால் மனந்திருந்தி மெய்ஞ்ஞானநிலையை உணர்ந்து அவனருளால் ஞானநிலை பெற்று இறைவனை அடைந்த ஞானியரும் இவ்வுலகில் பலர் தோன்றியுள்ளனர்.
யாரையும் மாற்றத்தக்கத் திருவருள் இறைவனால் மட்டுமே முடியும் என்பதை பன்னெடுங்காலமாக நடந்து வந்துள்ள பலநிகழ்வுச் சான்றுகளால் அறிய முடிகின்றது. எல்லாவகை மாற்றத்திற்கும் முன்வினைப்பயன் (ஊழ்வினை) தான் முக்கியமாக அங்கம் வகிக்கின்றது. இதனை
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் தறும்” (குறள் 380)
என்னும் குறள்வழி திருவள்ளுவர் விளக்கியுள்ளார். அதாவது 'விதியைப் போல் வலிமையுள்ள ஒருபொருள் உலகில் வேறு இல்லை. அவ்விதி மனிதனுடைய முயற்சிகளையெல்லாம் அழித்து தான் ஒன்றே முடிவில் வெல்கிறது' என்பதே உண்மைப் பொருளாகும்.
இத்தகு இயற்கை மாற்றங்கள் இப்புவியுள் பல்வேறு காலநிலைகளில் உண்டாகி, வியப்பையும் ஏற்படுத்தி உண்மையாக்கியுள்ளது. இதேபோல,
'இயற்கை (இறைவன்) ஆற்றலால் சாதாரண மனிதராகப் பிறந்து இறையருளால் ஞானநிலையைப் பெற்று இறைநிலையைப் பெற்றவர்களும் பலராவர். அவ்வருளாளர்களுள் அருணகிரியார் முதன்மை நிலைப்பெறுகிறார். இறைவனே நெருப்பு மலையாக நின்று பக்தர்களுக்கெல்லாம் அருள்மழை பொழிந்து வரும் திருவண்ணாமலை புனிதத்தலம் அருணகிரியாரால் மேலும் பெருமையை பெறுகின்றது.
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் இப்புண்ணியத் திருநகரில் அருணகிரியார் அவதரித்தார். இளமையிலேயே பெற்றோரை இழந்ததால் தமக்கையார் திலவகதியாரின் அரவணைப்பால் வளர்ந்தார். ஒருநாள் தன் தமக்கையாரால் மனம் மாறிய அருணகிரியார் வாழ்வில் வெறுப்புற்று இனி உலகில் உயிர்வாழ்தல் கூடாது என மனந்துணிந்தார். அண்ணாமலையார் ஆலய கோபுரத்தின் மீதேறி கீழே விழுந்து உயிர்விடத்துணிந்தார்.
அப்போதுதான் திருவள்ளுவர் கூறிய ஊழ்வினைப் பயனால் முருகப்பெருமான் அவரைத் தடுத்தாட்கொண்டார். தம் திருக்கரங்களால் அவரது நெற்றியில் தூய வெண்ணீற்றை இட்டு, தம் தாமரைமலர் போன்ற திருவடிகளை அவர்தம் தலையில் சூட்டி அருளினார். ஜபமாலை ஒன்றையும் அளித்து உலகில் துன்பம் அடையாதபடி மனம் - வாக்கு - காயம் என்பனவற்றுக்கு எட்டாது விளங்கும் மெய்ஞ் ஞானிகளாலும் உணர்தற்கரிய “சும்மா இரு சொல்லற” என்று உபதேசம் செய்தார். அதுவுமன்றி வயலூருக்கு வா என்று கூறி மறைந்தார்.
அதுமுதல் அருணகிரியார் கந்தனின் அருளாளராக மாறினார். அவரின் உள்ளம் பக்தி மணத்தால் நிறைந்தது. முருகனின் ஒளிபொருந்திய முகங்கண்டதும் அருணகிரியாரின் முகமும் அன்றலர்ந்த தாமரை மலராக ஒளிர்ந்தது. உள்ளத்துள் அன்பு வெள்ளம் பெருக்கெடுத்தது. அமைதி நிறைந்து அருளாளர் என்னும் நிலைக்கு உயர்ந்தார்.
திருமுருகனின் கட்டளையை தலைமேல் ஏற்று வயலூர் புறப்பட்ட அவர் வழிநெடுக இருந்த முருகனின் திருத்தலங்களையெல்லாம் தரிசித்துக்கொண்டே வயலூர் சென்றடைந்தார். அப்போது அங்கு இறைவர் மறுமுறையும் தம் திருவடியை அருணகிரியார்க்குச் சூடி அருளி.
“அருணகிரியே நம் ஊர்த்தியான மயிலையும், மாலையான கடம்பத்தையும், படையாகிய வேலையும், கொடியான சேவலையும், பேரின்ப நிலையாகிய திருவடியையும், பன்னிரு தோள்களையும், வயலூரையும் சிறப்பித்து திருப்புகழ் விருப்பொடு பாடுவாயாக என்று கூறி “முத்து” என்று அடியெடுத்துக் கொடுத்து அருள்பாலித்து மறைந்தார்.
முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் அதுமுதல் கந்தன் குடியிருக்கும் தலங்களைத் தேடிச்சேடிச் சென்று தரிசித்துக்கொண்டே அவனைப்பாடி பரவசமுற்றார். அவர் பாடிய பாடல்கள் இதுவரை யாரும் பாடாத, இனியும் யாராலும் பாடமுடியாத சந்தப் பாக்களால் ஆனது. அப்பாடல்களின் தொகுப்பே. “திருப்புகழ்” எனும் பெயர்பெற்றது.
கந்தனின் புகழையும், உலக வாழ்வில் உள்ள இன்பதுன்பங்களையும் பாடிய அருணகிரியார் தம் பாடல்களில் உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் கூறப்பட்டுள்ள நீதி, ஒழுக்கம், அறநெறிகளைச் சேர்த்து அனேகப்பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இருபாடல்களை மட்டுமே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திருச்செந்தூர் பாடல் - 4
விறல் வேறு சிந்தை வினையாலே
“விதிபோலு முந்த விழியாலு மிந்து
அலைவாயு கந்த பெருமானே”
இதில், “விறல் வேறு சிந்தை வினையாலே”
“பொதுமகளிரின் சிந்தனை வேறாகவும் செயல் வேறாகவும் அமையும்” என்பது. இதை மிக நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் நமக்குப் புலனாவது.
“மனத்தைப் பிறிதோரிடத்தில் வைத்துக்கொண்டு வந்தவரிடத்து உள்ள பொருள்கள் அனைத்தையும் பறிக்கும் நோக்கத்திலேயே, உதட்டளவில் மட்டும் உவந்து - உண்மையான அன்புள்ளவர் போல நடிக்கும் விலை மாதர்களின் உரையானது கரும்புபோல் இனிமையாய் இருப்பினும் - உள்ளம் இரும்பு போலவே கடினமாக இருக்கும்” என்று கூறுகிறார்.
இக்கருத்தினையே ஜயன் திருவள்ளுவர் அவர்களும்,
“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு” (குறள்-920)
இதன் பொருள் : இருமனப் பெண்டிர் எனப்படும் “பொதுமகளிர்” போன்ற மனத்தையுடையவரும், கள்ளும், கவறும், சூது ஆகிய “மூன்றும்” திருமகளால் நீக்கப்பட்ட உறவாகும்.
அதாவது, பொதுமகளிரின் நட்பை நாடுவோர் - பொருளிழந்து அருளிழந்து - மனத்தடுமாற்றம் கொண்டு பாழாகிறார்கள். அது அவர்களின் குற்றமன்று மனக்கட்டுப்பாடு இல்லாமல் அலைவதால் ஏற்படும் நிலைமையால் அல்லவோ? ஆதலின்
“மனத்தைக் கட்டுப்படுத்தவும் இருமனப் பெண்டிரின் நட்பை (உறவை) விலக்கியும் - அவரிடம் கொள்ளும் மயக்க நிலையை மாய்த்தும் அருள்புரிய வேண்டும்” என குமரனைக் கோருகிறார். அருணகிரியார், இதுபோலவே மற்றொரு பாடல்,
திருச்செந்தூர் பாடல் : 38
“நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென் நினைவோரை
புலத்திற் சஞ்சலாய் குலைத்திட ருன்பதம்
புணர்த்தைக் கண்டதந் தந்தருள்ளாயே
குவித்துக் கும்பிடும் பெருமானே!”
“புலத்தில் சஞ்சலம் குலைத்திட்டு”
பொருள் : ஐம்புலன்கள் வாயிலாக ஏற்படுத்தும் துன்பங்கள் அனைத்தையும் போக்கி - என்பதாகும்.
ஆசையே துன்பத்திற்குக் காரணம். அந்த ஆசை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்கள் வழியாகத்தான் வருகிறது. அதனால் பெறப்படும் சிற்றின்பங்களால் முடிவில் துன்பமே மிஞ்சும். ஆகையால், ஐம்புலன் வழியாய் வருவதைத் “துன்பம்” என்றால் இத்துன்பங்களை எல்லாம் போக்கி, ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்தவும் தங்களின் மலர்போன்ற திருவடியைச் சேர்வதற்குரிய அன்பினையும் வேண்டுகிறார்.
இப்பாடலின் வரிகளை மிகவும் நுண்மையாகச் சிந்தித்துப் பார்த்தால், இக்கருத்தினையே திருவள்ளுவரும் சுட்டிக் காட்டியுள்ளார் என்பதை உணரலாம்.
“சுவையொளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு” (குறள்-27)
“ஐம்புலன்களின் வழியாக வரும் சுவை, ஒளி, ஊறு ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்திரன் வகைகளையும் ஆராய்ந்து அறியும் வல்லமையுடையவனின் அறிவில்தான் இவ்வுலகம் உள்ளது” என்பது பொருள்.
ஆகவே, ஐம்புலன் கட்டுப்பாட்டைத் தரும்படி குமரனிடம் அருளாளர் வேண்டுகிறார்.
மேற்கூறியபடி திருப்புகழ் தொகுதியுள் ஏராளமான திருக்குறள் கருத்துகள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு பாடலையும் நுட்பமாகச் சிந்தித்துப் பார்த்தால் புதைந்துள்ள நவரத்தினக் கருத்துகள் நம் அறிவுக்குப் புலப்படும் ஓன்றி நுட்பமாக ஆய்ந்து திருப்புகழ் பாடல்களைப் படித்து பொதிந்துள்ள திருக்குறள் முத்துக்களைத் தேடி எடுக்க எம்பெருமான் முருகனருள் வேண்டுவோமாக

