ஸ்ரீ உண்ணாமலை உடனுறை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கொண்டு வானளாவிய கோபுரங்களுடன் விளங்கும் திவ்வியத் திருத்தலம் திருவண்ணாமலை ஆகும்.

இத்திருத்தலத்தில் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் 'முத்தம்மை' என்னும் அம்மையாரின் கருவில் உருவாகி திருவாகி தோன்றியவர். "அருளாளர் அருணகிரிநாத சுவாமிகள்! அவர் முருகன் ஒருவனையே முழுமுதற்பரம்" என்ற திடங்கொண்டு வாழ்ந்தவர்.

திருமுருகன் அருளால் அருணகிரிநாதர் பாடிய பாடல்கள் பதினாறாயிரம் ஆகும். ஆனால் தெய்வத்திருவருளால் பல திருப்புகழ் அன்பர்களின் மூலமாக நமக்குக்

கிடைக்கப்பெற்ற பாடல்கள் 1331 மட்டுமே. இதில் 206 திவ்வியத்தலங்களுக்குரிய பாடல் 1029 மற்ற 302 பாடல்கள் பொதுவானவை ஆகும். இந்த 1331 பாடல்கள் அனைத்தும் சந்தப்பாடல்கள் ஆகும். இத்தகு சந்தங்களை இதுவரையிலும் யாரும் பாடியது இல்லை. இப்பாடல்களில் 1008 வகையான சந்தங்கள் அமைந்திருப்பதாக இசை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஞானம் அனுபவ ஞானம் ஆகும். அனுபவ ஞானம் பெற்றவர் நன்மை தீமைகளை நன்குணர்ந்து தீவினைகளிலிருந்து விலகிக் கொள்ளும் திறம் பெற்றுவிடுவதால் இந்த அனுபவ ஞானம் பிறப்பறுக்கும் தன்மை உடையதாகும். எனவே அனுபவ ஞானத்தின் பெட்டகமாகத் திகழ்வது அருணகிரிப்பெருமானின் வாக்கு. அதனால் தான் அவரை “வாக்கிற்கு அருணகிரி” என ஆன்றோர்கள் பாராட்டி போற்றுகின்றனர். அவர் பாடியருளிய “திருப்புகழ்” இன்று தமிழ் விளங்கும் இடமெல்லாம் பரவி மக்கள் உள்ளத்தை உருக்கி இன்பம் அளித்து சாகா நிலையை அளிக்கிறது.

அருளாளர் அருணகிரிப் பெருமான் முருக வழிபாட்டிற்கு ஏற்றமிகுதந்து ஆறுபடை வீடுகளைப் புகழ்ந்தும் முருகன் அருளைப் போற்றியும் பாடியுள்ள 1331 பாடல்களும் ஒவ்வொரு சந்தத்துடன் அமைந்திருப்பதால் அவற்றை பக்தி பரவசத்துடன் நாம் பாடியும் பிறர் பாடக் கேட்டும் இன்புறலாம். சந்தப் பாடலாகப் பாடும் முறைமையை வழிகாட்டிய பெருமானார் அருணகிரிநாதரே ஆவார். பிற்காலக் கவிஞர்களுக்கும் அருளாளரே வழிகாட்டி முன் மாதிரியாக அருள்புரிந்துள்ளார்.

அருணகிரிநாதரின் இத்திருப்புகழ்ப் பாடல்கள் வாழையடி வாழையாக வந்த இம்மரபில் ஒரு புதிய தாரகையாய் உதித்தது என்றே கூறலாம். இப்பாடல்களில் காணப்படும் இலக்கிய நயம் பக்தி நெறியின் உச்ச நிறைவு, வேதாகமங்களின் யோக இரகசியங்களும் மிகவும் போற்றத்தக்கனவாயுள்ளன. அருள்மிகு அண்ணாமலையார் ஆலயத்தின் உள் வளாகத்தில் உள்ள பதினாறு கால் மண்டபத்தின் ஈசான மூலையில் உள்ள ஒரு தூணில் அருளாளர் பாடிய ஒரு பாடலுக்கு பிரபுடதேவராயன் கண்டுகளிக்கும்படி முருகவேள் வெளிப்பட்டுத் தோன்றி அருட்காட்சி தந்து அருள்புரிந்தார்.

அப்பாடல், “அதல சேடனாராட அகில மேரு மீதாட....
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜன்
உளமு மாட வாழ்தேவர் பெருமாளே”

என்பதாகும்.

கந்தனின் அருள் பெற்று கந்தனை வணங்கிப் போற்றிப்பாட வந்தவர், வாழ்வியல் நெறிகளையும் இணைத்துப்பாடி மனிதகுலம் உய்ந்திடும், உயர்நிலை வழியையும் காட்டியுள்ளார். தமிழாகவே உள்ள முருகபெருமானைப் “பழநித் திருப்புகழில்” பாட வந்த அருளாளர் தமிழின் ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள பொருளை விளக்கமாகவும் தெளிவாகவும் பாடியுள்ளார். அப்பாடல்கள் அமுதம் சொட்டும் சொற்சுவையாக உள்ளன.

“அதல விதலமுத லந்தத் தலங்களென
அவனியென அமரர் அண்டத் தகண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென அங்கிப்பானு”

என்னும் பாடல் மூலம், “இந்த வாழ்க்கைப் பொய்யானது. நான் தெளிவாகத் தொண்டு செய்ய வேண்டும். எனக்குத் தெளிவான நற்றமிழைத் தா” என கந்தனிடம் வேண்டுகிறார்.

“சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் தணிதாய
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் பெறுவேனா”

என்று வேண்டிய அவர், கந்தவேளை எந்த வேளையும் காணலாம். எங்கு நினைத்தாலும் அங்கே வந்து என் முன் தோன்றி அருள்புரிவான் என்ற கருத்துடன்

“செங்கேழ் அடுத்த சினவடிவேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந்து நிற்பனே”

என்று பாடிப் பரவுகின்றார். இப்படி பத்திச்சுவை சொட்டச் சொட்ட வாழ்க்கை நெறிக்குரிய திருப்புகழ்ப் பாடல்கள் அனைத்தும் தேன்கலந்த சர்க்கரைத் திரளாகவும், கலப்பிலா மதுரம் கலந்த கோற்றேனாகவும், பதம்பெறக் காய்ச்சிய பசுவின் பாலின் தெள்ளமுதப் பெட்டகமாகவும் செங்கரும்பின் சாறும் செவ்விளநீரும் கலந்து அத்துடன் தேனு கதலியும் சேர்ந்த சுவை போலவும் இனிக்கின்றன.

இப்பாடல்களை 1954ஆம் ஆண்டு திருப்புகழ் அன்பர்கள், டில்லி திரு. இராகவன் அவர்களின் சீடர்கள், டாக்டர் மணி டாக்டர். கிருஷ்ணசாமி குழுவினர்கள் தமிழ்நாட்டிலுள்ள முருகன் ஆலயங்களுக்கெல்லாம் சென்று இசையுடன் ஓதிக்கொண்டே திருவண்ணாமலை நகருக்கு வந்தார்கள். வந்த அக்குழுவினர் அண்ணாமலையாரை வணங்கி வல்லாள மகராசர் கோபுரத்தின் கீழ்உள்ள “தடுத்தார் கொண்ட கோபுர முருகன்” சன்னதியின் இடப்புறம் நின்று திருப்புகழ்ப் பாடல்களை மனமுருகிப் பாடும் போது, மூன்று ஆண்டுகளாக மழை பொய்த்து வறண்டு இருந்த திருவண்ணாமலை நகரிலும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும், பல மணி நேரம் மழை பெய்து வளமாக்கி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. இது வரலாற்று உண்மையாகும்.

அவ்வாறு மழை பெய்தநாள் சுதந்திரத் திருநாளான ஆகஸ்ட் 15 ஆகும். வளமையைத் தந்த அந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத் திருநாளை மையமாகவைத்து மூன்று நாட்கள் (ஆகஸ்ட் 14, 15, 16) அருளாளர் அரணகிரிநாதரின் விழாவாக திருக்கோயில் உள் வளாகத்தில் கொண்டாடிக் கொண்டுவருகிறோம்.

திருமுருகன் திருவருளாலும், அருணகிரிநாதர் குருவருளாலும் அருளாளர் அவதரித்த, முருகப்பெருமானின் திருவருள்பெற்ற இத்திருவண்ணாமலைத் திருத்தலத்தில் அருணகிரிநாதருக்கு ஒரு மணிமண்டபம் எழுப்புவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த திருப்புகழ் அன்பர்களின் நிதி உதவியோடும், ஒத்துழைப்போடும் தெய்வீகப்பணியான இம் மணிமண்டபம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாபெரும் தெய்வீகப் பணிக்கு நிதி உதவி செய்தும் மற்றும் பல விதங்களிலும் உறுதுணையாக இருந்த திருப்புகழ் அன்பர்களுக்கு திருமுருகன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான நல்லுடலையும், வற்றாத வளத்தையும் நல்கிடவேண்டி மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அருளாளர் அருணகிரிநாதர் அருளிய அற்புதத் திருப்புகழ் அமுதமான பாடல்களைக் காலையிலும், மாலையிலும் ஓதிவர நம் வாழ்வு செம்மையடைந்து என்றென்றும் இறவாநெறியில் இருந்திடக் கந்தனருள் எந்த நேரமும் துணையாகிக்காத்து நிற்கும் என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை. எனவே அருளாளர் அருணகிரிநாதரின் தேனினும் இனிக்கும் திருப்புகழ்ப்பாடல்களை ஓதி நலம்பல பெறுவோமாக

★★★

தெரியே னுனது திருப்புகழைத்
தேவே யுன்றன் சேவடிக்கே
பரியேன் பணியேன் கூத்தாடேன்
பாடேன் புகழைப் பரவசமாய்த்
தரியேன் தணிகை தனைக்காணேன்
சாகேன் நோகேன் கும்பிக்கே
யுரியே னந்தோ வெதுகொண்டிங்
குய்கேன் யாது செய்கேனே.

உரை : தேவ தேவனே, உனது திருப்புகழ் நலத்தை அறியேன்; உன்னுடைய சிவந்த திருவடிகட்கு அன்பு செய்யேன்; பணிவதும் மகிழ்வால் கூத்தாடுவதும் இல்லேன்; உன் திருப்புகழைப் பாடுவதில்லேன்; பரவசப்பட்டு உன் திருவடியைத் தலையில் சூடிக் கொள்வதில்லை; உனது தணிகை மலையையும் காண்பதில்லேன்; சாவதும் மனம் நோவதுமின்றி வயிற்றுக்கே யுரியனாய் உறைகின்றேன்; யான் எதனைத் துணைக்கொண்டு உய்குவேன்; எதனைத் தான் செய்குவேன்; ஐயோ, என் நிலை இரங்கத் தக்கது, காண்.

— வள்ளலார்