“திருப்புகழ் படிக்குமவர் சிந்தை வலுவாலே
ஒருத்தரை மதிப்பதில்லை உந்தன் அருளாளே
பொருப்புக மிகப்பொருது வென்று மயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்ற பெருமாளே!”

அருணகிரிநாதர் திருவடிகள் வணங்கி அவர்தம் பெருமைகளைக் கூற இது ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன். அருளாளர் அவர்கள் பாடிய திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருவகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு, சேவகன் வகுப்பு, கடைக்கணியல் வகுப்பு, மயில் வகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் முதலிய பாடல்களிலே சொல்லப்படாத இக பர உலக விஷயங்களே கிடையாது. அவருடைய

ஒவ்வொரு சொல்லுக்கும் அரிய பொருள் உண்டு. அவரே “அடியேன் உரைத்த புன்சொல் அது மேல் நித்தம் உந்தன் அருளே தழைத்து இலங்கி வரவேண்டும்” என்று முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார். முருகனை முதற்பொருளாக கொண்டு அவரது திருகுடும்பமாகிய அப்பன் சிவன், அம்மா பார்வதி, விநாயகர், திருமால், திருமகளோடு அவரது அவதாரங்கள், முருகனுடைய பல்வேறு திருக்கோலங்கள், தேவி வள்ளி மற்றும் தேவசேனையின் பெருமைகள், அவர்தம் திருவடிகளின் பெருமை, அவர்தம் மாலைகளின் பெருமை, ஆபரணங்கள், படைகள், அவர்தம் திருநாமங்கள், வேலின் பெருமை, மயிலின் பெருமை, சேவலின் பெருமை, அடியார்களின் பெருமை, வீரபத்திரர், வீரபாகுதேவர், இந்திரன், சூரியன், சந்திரன், மன்மதன், எமன் இன்னும் பல தேவகணங்களின் பெருமைகளையும் பண்புகளையும் பாடியுள்ளார். தாயுமானவர், “ஐயா, அருணகிரி அப்பா, உனைப்போல மெய்யாக ஓர் சொல் விளம்பினார் யார்!” என வியந்துள்ளார், நாம் எல்லோரும் நற்கதி பெற்று வாழ மெய்நிறைந்த உபதேசத்தையும் செய்துள்ளார்.

அவரே, பல்காலம் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதிப்போர்க்கு அருள்வாயே என்று பாடி முருகனை அர்ச்சிக்க, “நாத விந்துகலாதி நமோ நம என்ற போதகம் திருகோவே நமோ நம என்ற திருப்புகழ் சரவணஜாதா நமோ நம என்ற திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி துதிக்க முருகன் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றுவான். இது உறுதி.

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தான் தொண்டர் குழாம் சாரிற் கதியின்றி வேறிலை தான் (கந்தர் அலங்காரம்) என்னும் தெளிவுரைப்படி கடைபிடித்து தொண்டர் குழாத்தில் கலந்து நற்கதிபெற்று இந்த மணி மண்டபத்தை வாழையடி வாழையாக பேணிப் பாதுகாத்து, மேலும் வளர்ந்து, உன் அடிபேணி, உருகு தொண்டருடனதாகி அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே என வேண்டுகிறேன்.

நமக்கு இத்தனை செல்வங்களையும் தேடிக் கொடுத்த அடியார்கள், வள்ளிமலை சுவாமிகள், தணிகைமணி செங்கல்வராயப்பிள்ளை அவர்கள், வடக்குப்பட்டு சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள், பாம்பன் சுவாமிகள், கிருபானந்த வாரியார் சுவாமிகள் மற்றும் பலரையும் வாழ்த்தி வணங்குவோம்.

முருகனுடைய அறுபடை வீடுகளை பாடும்போது கயிலை மலை அனைய செந்திற் பதி வாழ்வே! என்றும் “காசியின் மீறிய பழனியங்கிரி” என்றும் பதியான திருத்தணி மேவும் சிவலோக மெனப்பரிவேறுபவரோக வைத்ய நாதன் என்றும், பரமபதமாய செந்தில்முருகன் என்றும் முருகனையே முதற் பொருளாக சிந்தித்து வழிபட அருளியுள்ளார்.

மனிதனின் வாழ்வின் வெற்றிக்கும், சாதனைக்கும் சிந்தனை தான் முதற்பொருள் என்பதை சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் என்றும் கந்தரலங்காரத்தில் பாடி, கந்தன் திருவடியை சிந்தித்தால் நாளென் செயும் வினைதான் என்செயும் எனைநாடிவந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இருதாளும் நமக்கு முன்னே வந்து தோன்றும் என்றும் மற்றொரு பாடலிலும் அருளியுள்ளார்.

திருவகுப்பில் 'துதிக்குமடியவர்க் கொருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும், எனக்கோர் துணையாகும்' என்றும் 'சொலற்கரிய திருப்புகழை உரைத்த வரை அடுத்த பகை அறுத்தெறிய உருக்கி எழும், அறத்தை நிலைகாணும்' என்றும் முருகன் திருநோக்கைக் கூறுகிறார்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை திருப்புகழில் “சூலை சொறியீளை வலிவாதமொடு நீரிழிவு சோகை களமாலை சூரமொடு பிணிதூறிருமல் சூழலுற மூல கசுமாலமென நாறி உடல் அழிவேனோ” என இராமேஸ்வர (வாலவயதாகி) திருப்புகழிலும் “வாதமொடு சூலை கண்டமாலை நோவு சந்து மாவலி வியாதி குன்மமொடு காசம் வாயுவுடனே படர்ந்த தாமரைகன்” என திருவேரகத் திருப்புகழிலும் கூறி இத்தனையும் தீர “இருமலுரோகம் முயலகன் வாதம் எரிகுணநாசி” என்ற திருதணியில் ஓதிய ஒரு திருத்தணி மந்திரத் திருப்புகழையும் அருளிய அருளாளர் அருணகிரிக்கு நிகர் தமிழ்க் கடவுள் முருகன் மட்டுமே

நினைத்ததை எல்லாம் கொடுக்கும் 'சினத்தவர் முடிக்கும்' என்ற தந்திர திருப்புகழையும் திருத்தணியில் அருளியுள்ளார். “மூவிரு முகங்கள் போற்றி! முகம்பொழி கருணை போற்றி! என்றபடி முருகனிடம் பெற்ற கருணையை வில்லிபுத்தூராரிடம் காட்டி கருணைக்கருணகிரி எனவும், வாக்கிற்கருணகிரி, வாதவூரார் கனிவில், தாக்கில் திருஞான சம்பந்தர் நோக்கில், நக்கீரத்தேவர் நயத்துக்கு சுந்தரனார் சொற்குறுதிக்கப்பர் எனச் சொல்” என்ற விருத்த தாலும் புகழ் பெற்றார்.

திருக்குமரன் எழுந்தருளிய சுமார் 206 தலங்கள்தோறும் சென்று திருப்புகழ்ப் பாமாலைகளை அவர்தம் பன்னிரு புயத்திலும் சூட்டினார். சிதம்பரம், கொடுங்குன்றம், செந்தில், தணிகை முதலிய தலங்களில் திருநடைக்கோல காட்சி பெற்றார். திருவேரகத்தில் உடன் பிறந்த ஆதியம்மையாருக்கு கந்த உலகத்தை நல்கினார். திருவருணையில் ஆணவமுற்றிருந்த சம்பத்தாண்டானை வாதில் வென்று கம்பத்திளையனாராக கந்தனை இம்மண்ணுலகத்திற்கு வருவித்து பிரபுடதேவன் முதல் அனைவருக்கும் காட்டி இன்னருள் புரிந்தார். திருப்புகழ் ஆகிய கதிரொளியை உலகில் பரப்பினார். கிளி ஓட்டிய மாது குறவள்ளி மணாளன் பக்தன் அருணகிரிநாதன் இறுதியில் கிளி வடிவம் தாங்கி முருகவேள் கரத்தில் அமர்ந்தார். அருளாளர்கள் இறைவன் திருவடிதான் சேர்வார்கள் ஆனால் நமது வள்ளல் பெருமான் முருகனின் தோளில் அமர்ந்து தண்டத்தில் காட்சி கொடுத்துக்கொண்டுள்ளார்.

“நாசிக்குள் பிராணவாயுவை ரேசித்தெட்டாத யோகிகள் நாடிற்றுக் காணொனாதன நின்ற நாதா” எனவும், “சுருதி மறைக ளிருநாலு திசையா லதிபர் முநிவோர்கள் துகளி லிருடி யெழுபேர்கள் - சுடர்மூவர் சொலவில் முடிவில் முதியாதபகுதி புருடர் நவநாதர் தொலைவி லுடுவி னுலகோர்கள் – மறையோர்கள் அரிய சமய மொருகோடி – இவர்கூடி அறிய அறிய அறியாத அடிகளறிய அடியேனும் அறிவு ளறியு மறிவூர – அருள்வாயே”

எனவும், சாதாரணமாக மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூரப்பெருமாள், நன்னெறி பேணி நடந்தால் அவரை அறியவைத்து ஞானம் தருவார் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை என கூறுகிறார்.

ஏறக்குறைய 650 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அருளாளர் திருவண்ணாமலையில் மணி மண்டபத்தில் மீண்டும் எழுந்தருளி அருள்பாலிக்கவுள்ளார். நமது பிறவிக்காலத்தில் நடந்த இந்த நிகழ்வு நாம் பாக்கியசாலிகளே என்பதை உணர்த்துகிறது. நினைக்க முக்திதரும் திருவண்ணாமலையில் அவர் பிறவி எடுத்து நடந்த சுவடு விழுந்த மண்ணில் மீண்டும் தோன்றுவது, பிரபுடராஜ மன்னனைப்போல் நமக்கும் முருகனை காட்டுவதற்கே என நான் நம்புகிறேன். எழுகடல் மணலை அளவிடில்... என்ற பாடலில் இனி உடல்விடுக முடியாது எனப்பாடியது போல பல நூற்றாண்டுகள் சிலையாக வந்து இருந்து நமக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

மிக அற்புதமாக இந்த மணிமண்டபம் ஒவ்வொரு இடமாக பார்த்துபார்த்து அமைக்கப்பட்டுள்ளது என்பது நம் திறமையல்ல அது அருணகிரிநாதரின் கைங்கர்யமே. மணியோசை போன்ற ஓசை எழும் கற்களை தேர்ந்தெடுத்து அதில் அமைக்கப்பட்டுள்ள கோவில், அருமையான சிற்பிகளைக் கொண்டு முறைப்படி சிற்பங்கள் செய்து வடிவமைக்கப்பட்டுள்ள கற்கோவில் திருக்கோபுரம் மற்றும் மண்டபம் முழுவதும் சிற்பங்கள் அமைத்து கை தேர்ந்த கலைஞர்களை அழைத்து வந்து செய்துள்ள மணி மண்டப அறக்கட்டளையினர் வாழ்க! வளர்க!! பக்கபலமாய் கைங்கர்யங்கள் செய்து முடிக்க உதவிய அத்துனை திருவாளர்களையும் உங்கள் குடும்பம் ஆல்போல தழைத்து அருகுபோல வேறூன்றி இன்னும் உங்கள் சந்ததியினரும் வாழ்க! வாழ்க!! என வாழ்த்துகிறோம்.

நெஞ்சக் கனகல் நெகிழ்ந்து உருக, ஆடும் பரிவேல் அணி சேவலென திருப்புகழ் பாடும் பணியைக் கொடுத்து குருவாய் வந்து அருள்புரியவும். நம் வாழ்க்கைக்கு சகல செல்வ யோகமுற்ற பெருவாழ்வைத்தந்து இகபர சுகம்கொடுத்து ஞான முக்தி கொடுக்கவேண்டும் என அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளையின் சார்பில் வாழ்த்துகிறோம்.

★★★

நம் முன்னோர்கள் தலப் பயணத்தைச் சமய நெறியின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளனர். சமய ஆச்சாரியர்களும் பயணம் செய்தனர். அவர்கள் தலப்பயணம் செய்ததன் நோக்கம், அன்பர் கூட்டத்துடன் திரளாகத் திருத்தலப் பயணம் செய்யும் போது அங்குள்ள மக்கள் மனக்கவர்ச்சியுற்று சமய நெறியில் ஈடுபாடு கொள்வர் என்பதாம். அன்றியும், தலப் பயணம் செய்பவருடைய உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

நல்லோர் பலர் வாழ்ந்து கண்டு கைதொழுது திருக்கோயில்களுக்குச் செல்லும் போது ஒரு ஈர்ப்புத் தன்மை உண்டாகுதல் காணலாம். ஆகவே மக்களுக்கு இறை உணர்ச்சியை ஊட்ட வேண்டியும், தபோதனர்கள் வழிபட்ட கோவில்களையும் வாழ்ந்திருந்த வளநகர்களை காணவேண்டியும் தலப்பயணத்தைத் தொடங்கினர்.

தொண்டைநாடு, நடுநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு, மலை நாடு, ஈழம், வட நாடு ஆகிய நாடுகளுக்கு எல்லாம் சென்றனர்.பழமை வாய்ந்த படைவீடுகள் அடியார்க்கு முருகன் அருள்பாலித்த இடங்கள் பழமைமிக்க முருகன் கோவில்கள் அவற்றையெல்லாம் நேரில் கண்டு வழிபடக்கருதினர். ஆதலால் அத்தகைய இடங்களை எல்லாம் அருணகிரிப்பெருமான் காண விரும்பி தலப்பயணம் மேற்கொண்டார்

— அருணை முதுபெரும் புலவர் அ.பாண்டுரங்கனார்