கோவை நகருக்கு பல சிறப்புகள் உண்டு. உயர் கல்விக் கூடங்கள் பல அமைந்த தலம் இது. தொழில் துறையில் பெரிய சாதனை படைத்துவரும் மாநகரமும் இதுவே. மற்ற மாநிலங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றோர், அமைதியை நாடி வருவது கோவை நகரமே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக மருத்தாச்சலன் குடியிருந்து அனைவரையும் அருள்பாலிக்கும் புனிதத் தலமும் கோவை ஆகும். மேலும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை கற்கவும், பாடவும், அன்பர்கள் நாடி தேடி வருவதும் கோவை மாநகரத்தையே ஆகும்.
மும்பையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி, செம்பூர் முருகனால் கவரப்பட்டு, திரு. பாலசுப்ரமணியம் அவர்களிடம் திருப்புகழ் கற்று, குருஜி ஸ்ரீ ராகவன் அவர்களின் ஆசி பெற்று தென்னகம் நோக்கி வந்த அடியேனை ஏதோ ஒரு சக்தி கோவைக்கு இழுத்தது. மருதமலை சென்று, முருகனை வணங்கி, குருஜியை மனதில் நினைத்துக்கொண்டு என் திருப்புகழ்ப் பணியை துவக்கினேன். கோவைப்புதூர் எனும் புறநகரில் ஒரு சிறு வீட்டில் தொடங்கியது திருப்புகழ் கற்பிக்கும் பணி. ஒருநாள் வீட்டிலிருந்து கந்தரநுபூதி சாதகம் பண்ணிக்கொண்டிருந்த வேளை. திடீர் என ஒரு செய்யுள் என் கவனத்தை ஈர்த்தது. “யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும், தாமே பெற, வேலவர் தந்ததனால்” என்று பாடியிருந்தார். ஸ்ரீ அருணகிரிநாதசுவாமிகள் விலை உயர்ந்த பொருளை ஒருவர் சந்தோஷமாக தன் நண்பனுக்குக் கொடுத்த பிறகு, அதை திரும்ப அவரே பெறுவது சரியா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆராய்ந்து பார்த்ததில் அதன் உட்பொருளும் விளங்கியது. தன்னிடமிருந்து பெற்ற உபதேசத்தின் உட்பொருளை உணர்ந்து, அதற்கு ஏற்ப ஒரு பக்தன் செயலாற்ற வேண்டும் என்பதே குருநாதரின் நோக்கம். குருநாதர் அருளிய ஞான வழியே சென்று, உயர்ந்த நெறிகளை கடைபிடித்து வருவதே ஒரு சீடன் தன் குருவுக்கு கொடுக்கும் சிறந்த கைமாறாக அமையும். அனைத்து உயிர்களிலும் குடிகொண்டிருக்கிறான்
குருநாதராக விளங்கும் முருகப்பெருமான். ஆதலால்,
'தாமே பெறவேண்டும்'
என்கிறபோது, தன்னை சார்ந்த
அனைத்து உயிர்களும் பெற
வேண்டும் என்பதே அவர் அவா.
குருநாதராக தான் அருளிய
ஞானத்தின் மகிமையை
உணர்ந்து, பக்தர்கள் தன்னுடன்
இரண்டறக் கலந்து ஒன்றாய்
விளங்க, முருகன் தான் அருளிய
கல்வியையும் ஞானத்தையும்
திரும்ப பெறுகிறான். இதை நன்றாக உணர்ந்து, திருப்புகழ் எனும் மகா காவ்யம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டேன். சந்தச் சிறப்பு தாளங்களும் தவறாமல் எடுத்துரைக்க, குருஜி அவர்களின் ஆசியும், செந்தில் ஆண்டவனின் அருளும் கை கொடுத்து. ஆரம்பத்தில் கற்க ஆறு பேர்களே இருந்தார்கள். அதிசயம் என்றே கூறவேண்டும். கற்கும் ஆர்வத்தில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். ஆறிலிருந்து அறுபதையும் தாண்டி, தற்பொழுது நேரடியாக கற்கும் அன்பர்கள் 250க்கு மேலும், நிகழ்நிலையில் கற்கும் மாணவர்கள் 300ஐ கடந்தும் இருக்கிறார்கள். “அடலருணைத்திரு கோபுரத்தே” என்று தொடங்கி, ‘கைத்தல நிறைகனி’ என்று பாடி, விநாயகப்பெருமானின் ஆசி பெற்று பஞ்சபூதத் தலங்களில் பாடிய திருப்புகழ் இசையில் மூழ்கியிருந்து, “நாத விந்து கலாதீ” என்ற மங்கள இசை பாடிய பிறகும் என்னை மறந்தே இருந்தேன். “தகமை பெற்று உனது பொற் சரணம் எப்பொழுதும் நட்புடன் நினைத்திட அருள்வாயே” என்று வேண்டும்போது கூடியிருந்த அனைவரையும் முருகன் அருள்புரியட்டும் என்று வேண்டிக்கொள்வேன்.
அருணகிரிநாத சுவாமிகள் அருளிய
திருப்புகழின் மகிமையை திக்கெட்டும் பரவச் செய்யும்
பரிவாரத்தில் அடியேனும் ஒருவன். கடந்த கால
நிகழ்வுகளை சற்று நினைக்கும்போது மிக வியப்பாக
உள்ளது. எத்தனை இசை வழிபாடு நிகழ்ச்சிகள்.
திருச்செந்தூர், பழனி போன்ற எண்ணிலடங்காத எவ்வளவு புண்ணியத் தலங்கள், கோவில்கள் மற்றும் மேடைகள்! திருப்புகழ் முறையாக கற்று கொடுப்பதோடல்லாமல், கற்று தேர்ச்சி பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் கற்பிக்க தகுதி அடைவதை பார்த்து பெரு மகிழ்ச்சி அடைகிறோம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஒரு விளக்கிலிருந்து பல தீபங்கள் ஒளி பெற்று விளங்குவதுபோல குருநாதரிடமிருந்து கற்று அனைவரும் திருப்புகழ் பாட அது முருகன் சந்நிதானமாக மாறுகிறது. அபிராமி அந்தாதி மற்றுமொரு சிறந்த பிரார்த்தனை முறையாக விளங்குகிறது. எல்லோரும் சேர்ந்து அபிராமி அந்தாதி மற்றும் அபிராமி பதிகம் இசைக்க அது ஒரு சிறந்த சத்சங்கமாக அமைகிறது. திருப்புகழ் நவமணிகளிலிருந்து உரிய வரிகளை தேரந்தெடுத்து 'வள்ளி கல்யாணம்' என்ற மகத்தான தொகுப்பைத் தயாரித்துத் தந்திருக்கிறார் குருஜி அவர்கள். கோவை திருப்புகழ் அன்பர்கள் எல்லோரும் சேர்ந்து வள்ளி கல்யாணம் பல மேடைகளில் மிக சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஐதராபாத் மாநகரத்தில் “வள்ளி கல்யாண வைபோகம்” 31 அக்டோபர் 2022 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
"முருக பக்த ரத்னா", "திருப்புகழ்த் தம்பிரான்” போன்ற பல விருதுகள் வந்தாலும், அவை அனைத்தும் திருப்புகழ் அன்பர்களுக்கே உரியதாகும். அவன் கொடுத்த குரல் வளமும் ஞானமும் அவன் புகழ் பாடுவதற்கே என்று உணர்ந்து செயல்படுகிறோம். ஆடிக் கிருத்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஸ்கந்த சஷ்டி மற்றும் அருணகிரிநாதர் ஜெயந்தி போன்ற விசேஷ நாட்களில் திருப்புகழ் இசை வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்றால் அது அவன் அருளால் மட்டுமே. திருப்புகழ் அன்பர்கள் குழு, கோவை மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மற்ற மாநிலங்களிலும் சென்று திருப்புகழ் இசை அமுதத்தை வழங்கி வருகிறோம். பல ஊர்கள் சென்றாலும் மறக்க முடியாத அனுபவம் ஒன்று உண்டு. அதுதான், திருவண்ணாமலை சென்று, அருணாச்சலரின் ஆசி பெற்று ஸ்ரீ ரமணாச்ரமத்தில் திருப்புகழ் இசை வழிபாடு செய்தது. 2001 என்று நினைக்கிறேன். ஸ்ரீ ரமணாச்ரமத்தில் பக்தர்கள் புடை சூழ திருப்புகழ் இசை வழிபாடு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. “அதல சேட னாராட” என்ற திருப்புகழ் பாடிக்கொண்டிருந்தோம். அப்பாடலில், முருகனிடம்
“மயிலும் ஆடி நீயாடி வரவேணும்” என்று கோருவதாக ஒரு வரி வருகிறது. என்ன ஆச்சர்யம்! அந்த பாடல் வரிகளை அன்பர்கள் மனம் உருகிப் பாட, மூன்று மயில்கள் ஆடி அசைந்து நடனம் புரிந்து எங்கள் அருகே வந்தது. முருகப்பெருமானே நேரில் வந்து அருள் புரிந்த அனுபவம் பெற்றோம். வருடங்கள் பல ஓடிவிட்டன. ஆனால் அந்த அனுபவம் மட்டும் மனதை விட்டு போவதில்லை. “சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி பட்டுக் ரவுஞ்ச சயில" என்று தொடங்கும் மயில் விருத்தம் பாடும் பொழுதெல்லாம் அந்த நிகழ்ச்சி நினைவில் வரும்.
திருப்புகழ் பாடுவதால், திருமணம் நடைபெற, ஒரு நல்ல வீடு அமைய, கல்வி பெற, நோய் நீங்க, இருவினை அகல போன்ற பல நன்மைகள் கைகூடும் என்று சொல்வார்கள். ஆனால், அனைத்திற்கும் மேலாக நாம் பெறுவது அவன் அருள் செல்வமே ஆகும். பொன்னோ, மணியோ, புகழோ ஒன்றும் வேண்டாம், உனது அருள் ஒன்றே போதும் என்கிறார் திரு மாணிக்கவாசகர். “அருள் ஞான இன்பமது புரிவாயே” என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள், “சிவனார் மனம் குளிர" என்று தொடங்கும் பழனித் திருப்புகழில். ஒரு மரத்தை முறித்தாலும், அதன் வேர்கள் ஆழமாக ஆணித்தரமாக இருப்பதால், மீண்டும் முளையிலே வந்து பெரிதாகத் தொடங்குகின்றன. அதுபோலவே, நமது பிறவியும் வந்து போய்க்கொண்டே இருக்கும். “இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து, உனது இனிமையான திருவடியை தந்து அருள்வாய்" என்கிறார். “மகாகேதன" என்று தொடங்கும் திருப்புகழில். பிறப்புக்கு காரணமான நல்வினை தீவினை இரண்டையும் அகற்றி பிறப்பற்ற நிலையைத் தருவது திருப்புகழ். திருப்புகழ் வழிபாடு இசைநூலில் திருப்புகழின் சிறப்பை இப்படி கூறுகிறது. "சுயநலமற்ற அன்பும், அவிரோதமும் அமையப்பெற்று, எனது யானும் வேறாகி, எவரும் யாதும் யானாகும் இதய பாவனாதீதத்தை அருள்வது திருப்புகழ்" தெள்ளு தமிழில் திருப்புகழில் முருகனைப் பாடிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அவருக்கு மணி மண்டபம் எழுப்பும் பணி சீரும் சிறப்புமாக நடந்தேற எல்லாம் வல்ல செந்தில்நாதனை பிரார்த்தனை பண்ணுகிறோம். முருகவேளின் மயிலையும், அவன் திருக்கை அயிலையும், அவன் கடைக்கண் இயலையும் நினைத்து பாடுவோம். வாழ்க சீர் அடியாரெல்லாம்.
★★★

