புவியில் புகழார் தலமாம் திருவண்ணாமலை
பஞ்சபூதத் தலங்களில் தேயுத் தலமாகும். நினைக்க
முக்தியளிக்கும் நிர்மலத்தலம். இத்தலமே
அருணகிரிநாதரின் ஜனனபூமி. இங்கே இவர்
வழிவழியடிமை ஆதலின் முருகபிரானால்
தடுத்தாட்கொள்ளப்பட்டு பல்வேறு பெறற்கரிய
பேறுகளைப் பெற்றார். இதனை,
“அருணை நகர்மிசை கருணையொ டருளிய
மவுன வசனமும் இருபெரு சரணமு மறவேனே”
(திருப். 515)
“மயிலினில் வந்தெனை ஆட்கொளல்
சகமறியும்படி
காட்டிய குருநாதர்” (திருப். 331)
என்பதாலும் அறியலாம்.
முருகனின் திருவருளில் ஈடுபட்டு மிகப்பெரிய
திருப்புகழ் என்னும் பாக்கடலை வழங்கியர்
அருணகிரிநாத சுவாமிகள். இவர் பாடிய
அருட்பாடல்களுக்குத் 'திருப்புகழ்' என்ற பெயர்
சூட்டியவர் வயலூர் பொய்யாக் கணபதி என்பதை
அருணகிரிநாதரின் வாக்காகிய,
“செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ்
விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே”
என்பதிலிருந்து அறியலாம். இறைவனிடம் வாக்கு வரம்
பெற்ற அருணகிரிநாதரும் தாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம் என உலகமக்கட்குத் திருப்புகழாம்
அமுதத்தை வாக்கின் வன்மை பல்வகைத் திறனும்
விளங்கப் பாடியருளியுள்ளார்.
திருப்புகழ்ப் பாடல்களை அணுகுவதில்
வேண்டுகோள் நோக்கமும், உலகுக்கு உபதேசிக்கும்
நோக்கமுமே பெருமளவில் காணப்படுகின்றன.
உலகத்தார் நன்னெறியைக் கடைப்பிடித்து ஈடேற
வேண்டும் என்ற நல்ல நோக்கில் உலகத்து உள்ளீர்!
ஈதல் எனும் அறத்தைக் கரவாது செய்யுங்கள்.
அப்பொழுது உண்மைப் பொருள் தானே விளங்கும்
என்கிறார்.
திருப்புகழ்ப் பாடல்களில் சொற்சுவை, பொருட்சுவை, பத்திச்சுவை இவை மூன்றும் தலைசிறந்து விளங்குவன இந்நூலின் அருமைக்குக் காரணம் அதன் நடுநிலை நோக்கு. அருணகிரியார் தம்மை ஆண்டருளிய முருகபிரானை நடுநாயகமான குறிக்கோள் தெய்வமாகக் கொண்டு கணபதி, சிவபெருமான், பார்வதி, திருமால் ஆகிய பெருங்கடவுளரையும் ஒப்பிலா வகையில் உயர்த்திப்பாடி இன்ன கடவுளுக்கு இளையோனே, குருநாதனே, குமரனே, மருகோனே எனப்பாடித் துதித்துள்ளார். இந்த சமரச நிலையே திருப்புகழை யாவரும் விரும்பிப் பாடுவதற்கு ஒரு முக்கிய காரணமாயிருக்கின்றது. திருப்புகழ்ப் பாடல்கள் தமிழகத்தில் மட்டுமன்றி மற்ற அயல்நாடுகளிலும் பாடப்படுவதைக் கேட்கும் பொழுது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அத்தகு சிறந்த திருப்புகழ் அமுதை உலகுக்கு வழங்கிய அருளாளர் அருணகிரிநாதருக்கு அவர் வாழ்ந்து நற்பேற்றினைப் பெற்ற தலமாகிய திருவண்ணாமலையில் பெருமளவில் அரிய பெரிய மணிமண்டபம் அமைக்கப்படுவது காலத்தால் என்றென்றும் அவரின் பெருமைக்குச் சான்றாகத் திகழ்ந்து விளங்கும். இத்தகு சிறந்த முயற்சியில் ஈடுபட்ட அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபத்தின் அறங்காவலர் அவர்கட்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் அருணகிரிநாதர் பாடியருளிய பாடல்கள் கணக்கற்றவை என்றாலும் தன்னால் இயன்றவரை அருணகிரியாரின் பாடல்களைக் கண்டறிந்து பதிப்பித்து வெளியிட்ட என் பாட்டனார் அமரர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் சார்பாகவும், சிவபெருமானுக்கு பன்னிரு சைவத் திருமுறைகள் உள்ளது போல முருகப்பிரானுக்கும் இருக்க வேண்டும் என்ற அவாவினால் அருணகிரிநாதரின் பாடல்களை முருகவேள் பன்னிருத்திருமுறை என்ற பெயரில் வகுத்து அவற்றிற்குச் சிறந்த எளிய விளக்கவுரையும்
எழுதி நமக்களித்த என் தந்தை தணிகைமணி வ.சு. செங்ல்வராய பிள்ளை அவர்கள் சார்பாகவும், மற்ற என் குடும்பத்தினர் சார்பாகவும் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அருளாளர் அருணகிரிநாதரின் மணிமண்டப குடமுழுக்கு விழா சிறப்புற நடைபெற திருத்தணிகேசர் அருள்புரிவாராக. வேலும் மயிலும் துணை.
★★★
வாழ்ந்தும் பயின்றவன்
செவ்விய தமிழினிற் சிந்து பயின்றவன்
ஒவ்வொரு சொல்லையும் உருக்கிப் படைத்தவன்
கவ்வி இழுத்திடும் கவிதையில் வல்லவன்
எவ்விதம் அன்னவன் ஏற்றம் இயம்புவேன்?
திருப்புகழ் நூலினில் தனிப்புகழ் கொண்டவன்
பரப்பொருள் தம்மையும் பக்தியில் வென்றவன்
அறப்பொருள் சொல்வதில் அன்னையின் மேலவன்
இருப்பது பொய்யென அறிந்தே இருந்தவன்
சொல்வளம் கொள்வதில் தோன்றாத் துணையவன்
பல்வளம் பெருகிடும் பாடல் வகுத்தவன்
நல்மனம் யாவையும் நாடும் திறத்தவன்
வல்வினை வென்றவன்; வாழ்ந்தும் பயின்றவன்
அருண கிரிஎனும் அடியவன் திருப்பெயர்
உரைக்கும் மனங்களில் உள்ளொளி பாயுமே!
இருளும் ஒளிஎன ஏற்றம் படைக்குமே!
மருளும் மனங்களின் மயக்கம் துடைக்குமே
அன்னவன் பெருமையை அறிந்த ஒருசிலர் முன்னவன் பணிசெய முனைந்து நின்றனர், என்னிவர் பெற்றதோர் இன்பப் பேறுகள்! பன்னெடும் நாளவர் பக்தியில் வாழ்கவே
— கவிஞர் கண்ணதாசன்
நன்றி: அருளாளர் அருணகிரிநாதர் சுவாமிகளின் அறுநூறாவது நூற்றாண்டு விழா மலர், புது தில்லி. (வெளியீடு 1975)

