- அருணைச் சேவகன்.
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று சொல்வார்கள். இந்த பொன்மொழி அருணை நகருக்கும் பொருந்தும். 600 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திரு அண்ணாமலையார் திருக்கோயிலும்,அருணைமாநகரமும் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆறு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திருக்கோவிலையும், அருணை நகரையும் பற்றி இங்கு காண்போம்.
அண்ணாமலையார் ஆலயம்
உலகம் வியக்கும் கட்டிடக்கலையின் அதிசயமாகத் திகழும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலின் கட்டிடப் பணி எட்டாம் நூற்றாண்டில் துவங்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று பதினெட்டாம் நூற்றாண்டில் முழுமை பெற்றது.
24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்கோவிலில் ஒன்பது அழகிய விண்ணை முட்டும் கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும், இரண்டு தடாகங்களும் உள்ளன. ஆனால் 14-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் சற்று சிறியதாகவே இருந்தது. சுமார் ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. அக்கோவிலில் ஐந்து கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும், ஒரு தடாகமும் மட்டுமே இருந்தன. அந்த சமயத்தில் வல்லாளன் கோபுரம் என்று அழைக்கப்படுகின்ற கிழக்கு கோபுரமே கோவிலின் பிரதான கோபுரமாகத் திகழ்ந்தது. அதற்கு மேற்கே இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு தற்போது கிளி கோபுரம் என்று அழைக்கப்படுகின்ற கோபுரம் நிலைபெற்றிருந்தது.
ஐந்தாம் பிரகாரத்தில் வடக்கு தெற்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் வல்லாளனால் கட்டப்பட்ட சிறிய கட்டைக் கோபுரங்களே இருந்தன. இதுவே திருக்கோவிலின் நாற்புர எல்லைகளாகத் திகழ்ந்தன.
மூன்றாம் பிரகாரத்தில் சுவாமியின் சன்னதியின் இடது புறம் அமைந்திருக்கும் அம்மன் சன்னதியில் வெறுமனே கருவறையும் அர்த்த மண்டபமும் மட்டுமே இருந்தன. மகாமண்டபம் பிற்காலத்தில் கட்டப்பட்டவை.இப்பிரகாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயில் கோப்பெருஞ்சிங்கனால் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
நாலாம் பிரகாரத்தில் உள்ள புரவி மண்டபமும் மற்றும் பிரம்மதீர்த்தமும் அக்காலத்தில் இருந்தன. இதனை கோப்பெருஞ்சிங்கனும் அவனது மகன் வேணாவுடையாரும் கட்டினார்கள். அதே பிரகாரத்தில் உள்ள சிறிய நந்தி வல்லாள மகாராஜன் காலத்தில் கட்டப்பட்டது.
தற்பொழுது ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்திருக்கும் ஆயிரங் கால் மண்டபம், பெரிய கோபுரம், சிவகங்கைத் தீர்த்தம் ஆகியவை அப்போது இல்லை. காரணம் அவை அனைத்தும் பதினாறாம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டவை.
தற்பொழுது ஆயிரங்கால் மண்டபம் இருக்குமிடத்தில் அப்பர் சுவாமி மடம் மற்றும் செவ்வாய் மடம் என்ற பெயரில் இரண்டு பெரிய மடங்கள் இயங்கி வந்தன. இந்த மடங்களில் பக்தர்களுக்கு நித்தமும் அன்னம் ---
பாலிக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டும் பொருட்டு அவ்விரு மடங்களின் மடாதிபதிகளிடம் வேண்டி அவ்விடத்தைப் பெற்று அதற்கு ஈடாக அவர்களுக்கு சன்னதித்தெருவில் அதே அளவில் இடத்தை ஒதுக்கி மடம் கட்ட பொன்னும் பொருளும் கொடுத்துதவினார்.
வல்லாளன் கோபுரத்திற்கு கிழக்கே சற்று தூரத்தில் தற்போது வளையற்காப்பு மண்டபம் என்று அழைக்கப்படுகின்ற 12 கால் மண்டபமும் அக்காலத்தில் இருந்தது. இந்த மண்டபம் பல்லவ மரபு மன்னான கோப்பெருஞ்சிங்கனின் மகன் வேணாவுடையாரால் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் வடகிழக்குத் தூணிலிருந்துதான் முருகப்பெருமான் அருணகிரிநாதப் பெருமானுக்கும் பிரபுடதேவராயன் மன்னனுக்கும் காட்சியளித்தார். வளையற்காப்பு மண்டபத்தின் மேற்கே உள்ள பெரிய நந்தி இரண்டாம் தேவராயர் காலத்தில் கட்டப்பட்டு அப்பொழுது இருந்தது.
அக்காலத்தில் ஆலயத்தில் தீபத் திருவிழா, பங்குனித் திருவிழா மற்றும் தைத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
தீபத் திருவிழா பற்றிய செய்தியினை ‘பழிப்பர் வாழ்த்துவர்’( பாடல் 959) எனத் துவங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அருளாளர் அவர்களும் தனது திருப்புகழில் கோவிலின் அழகை பல பாடல்களில் வர்ணித்துள்ளார். ‘கனைகடல்'(387) என்று துவங்கும் அருணைத் திருப்புகழில் செம்பொன் மேருவுக்கு ஒப்பான பெருமை கொண்ட அருணைக் கோபுரத்தில் உறைபவனே என்ற பொருள்பட
‘செம்பொன்மேரு
அனையன கனவித சண்ட கோபுர
அருணையி லுறையும ருந்து ணாமுலை‘
எனப் பாடி சிறப்பித்துள்ளார்.
அவர்கள் பல பாடல்களில் ஏழு நிலை கோபுரத்தையும், ஒன்பது நிலைக் கோபுரத்தையும்,வடக்கு கோபுரத்தையும், வடக்கு மதிலையும், பெரிய கோபுரத்தையும் புகழ்ந்து பாடியுள்ளார். மொத்தத்தில் அக்காலத்தில் திருக்கோவிலில் ஈதலும், ஓதலும், கோலால பூஜைகளும், ஆடம்பரமான திருவிழாக்களும் நடைபெற்று தெய்வீகப் பொலிவுடன் திகழ்ந்தது எனக் கூறலாம்.
அருணாபுரிநகரம்
இன்றைய காலகட்டத்தில் சுமார் 2 லட்சம் மக்கட்தொகை கொண்ட அருணை மாநகரம் கடந்த 70 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது.1930 வரை நகரத்தின் ஜனத்தொகை சுமார் 30,000மாகத் தான் இருந்தது.
அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து திருவண்ணாமலையை ஆண்ட ஹொய்சால மன்னன் வல்லாளன் திருவண்ணாமலையைத் தனது தலைநகரமாக்கி ஊரின் வளர்ச்சிக்கும், கோவிலின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தான். சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணம் நூலுக்கு உரை எழுதிய மூதறிஞர் வித்துவான் பாண்டுரங்கனார் அப்புராணத்தில் வல்லாளன் ஆட்சி காலத்தில் அருணகிரி நகரைக் குறித்து தனது உரையில் இவ்வாறு விவரிக்கிறார்
'பரம்பொருளாகிய அண்ணாமலையார் திருவருளைப்பெறும் பொருட்டு அருணை நகர் முழுவதும் வீதிகள் தோறும் வரிசை வரிசையாக மகரத் தோரணங்களும், மாவிலைத் தோரணங்களும், இடபத் துவசங்களும் தூக்கி எங்கும் மலர்களால் அலங்காரம் செய்வர். வீதிகளில் மங்கை நல்லார் நறுமண நீர்தெளித்து அழகுக் கோலங்களை இடுவார்கள்.அருணை வாழும் மக்கள் பசி என்று வருபவர்களுக்கு அறுசுவையோடு கூடிய உணவை அளித்து உபசரிப்பர்'.
மேற்குறிப்பிலிருந்து அருணை நகரம் எவ்வளவு செழிப்பாகவும் சிறப்பாகவும் இருந்தது என்பதை அறியலாம்.
அருணை மாநகரம் அக்காலத்தில் சிறிய நகரமாகத் தான் இருந்தது. ஊரின் வடக்கு எல்லையாக வட வீதி சுப்பிரமணியர் கோவிலும், துர்க்கை அம்மன் ஆலயமும் இருந்தன.அதன் கிழக்கு எல்லையாகத் தொண்டரீஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோயில் வல்லாளன் காலத்தில் அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் திருப்பணியில் ஈடுபட்டு வந்த தொண்டர்கள் தங்கினர் என்று கூறுவர். திருவண்ணாமலையின் தெற்கு எல்லையாக குமரக் கோயிலும் மேற்கு எல்லையாக அடர்ந்த காடு சூழ்ந்த மலையும் திகழ்ந்தது.
வட வீதி சுப்பிரமணியர் கோவிலில் 'கெஜநடை மடவார்' என்ற திருப்புகழையும் குமரக்கோவிலில் ‘கருநி றஞ்சிறந் தகவல்வன’என்ற திருப்புகழையும் அருளாளர் அருணகிரிநாதர் பாடி உள்ளார்கள்.
கோவிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஒத்தவாடைத் தெருக்கள் இருந்தன தென் ஒத்தவாடைத் தெருவுக்கு இணையாக உள்ள ஆனைக்கட்டுத் தெருவில் அக்காலத்தில் மன்னனின் யானைகள் வசிக்கும் இடமாக இருந்தது. வடஒத்தவாடைத் தெருவிற்கு இணையாக உள்ள ஆவாரங்காட்டு தெரு வனப்பகுதியாக இருந்தது . இங்கு கோவிலின் நந்தவனம் அமைந்திருந்தது. தேரடி வீதி, திருவூடல் வீதி அப்பொழுது வேறு பெயரில் அழைக்கப்பட்டன.
தற்பொழுது சின்னக்கடை தெரு மற்றும் பெரிய கடைத்தெரு என்று அழைக்கப்படும் தெருக்களில் அங்காடிகள் அதிகமாக காணப்பட்டு ஊரின் வணிக மையங்களாக செயல்பட்டன.
தற்போது காமாட்சி அம்மன் கோவில் தெரு என்று அழைக்கப்படும் கம்மாளர் வீதியில் விஸ்வகர்மாக்கள் வாழ்ந்தனர். இவர்கள் தங்களை பல்வேறு ஆலய கட்டுமானப் பணிகளிலும் மன்னரின் படைக்கு ஆயுதம் செய்யும் வேலைகளிலும் ஈடுபடுத்திக்கொண்டனர். கன்னிக் கோவில் தெரு என்று அழைக்கப்படுகின்ற சேணியர் தெருவில் நெசவாளர்கள் வாழ்ந்தனர். குமரக் கோவில் தெரு என்று அழைக்கப்படுகின்ற காராளர் வீதியில் வேளாண் தொழிலை செய்பவர்கள் வாழ்ந்தனர்.
அருணை நகரில் அப்பொழுது கீழைத் தெரு மற்றும் மேலைத் தெருக்களில் கோவில்களில் ஆடல் பாடல் புரியும் கணிகையர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தாளத்தோடு பாடல் இசைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தனர். அவர்கள் தீவிர சிவ பக்தர்களாக இருந்து கோவிலுக்கு பல கொடைகளை வழங்கி உள்ளார்கள். கீழை வீதி என்பது நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் உள்ளது. இத்தெருவில் உள்ள விநாயகர் கோவிலை அருளாளரின் தாய் முத்தம்மை கட்டியதாக ஊர்மக்கள் நம்புகின்றனர்.
அக்கோவிலுக்கு சற்று வடக்கே உள்ள வீட்டை அருளாளரின் வீடு என்று சொல்வார்கள். அப்பொழுது அருணை நகரில் தாமரைக் குளமும் ஐயங் குளமும் இருந்தன. அதேபோல் நகரின் வடக்கு பகுதியில் திருநதி என்ற நதியும் தெற்கு திசையில் சோணம் என்ற நதியும் ஓடியது. தற்பொழுது கீழ்நாத்தூர் என்று அழைக்கப்படுகின்ற கீழ் அருணை என்ற சிற்றூரும் நகருக்கு அருகில் இருந்தது.
திருவண்ணாமலை மலையைச் சுற்றி வரும் கிரிவலப்பாதை 13 ஆம் நூற்றாண்டில் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.மலை சுற்றும் பாதை விக்கிரமபாண்டியன் வீதி என்று அப்போது அழைக்கப்பட்டது. வேணா உடையான் மலை சுற்றும் பாதையில் பல தோப்புகளையும் பல கல்மண்டபங்களையும் அமைத்தான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
சமீப காலம்வரை மலை சுற்றும் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு ராஜ் பன்னீர்செல்வம் அவர்களால் 13ஆம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று அக்னி லிங்கக் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அருளாளர் காலத்தில் அஷ்டலிங்க கோவில்களும் இருந்தன என உறுதிபடக் கூறலாம்.
அதேபோல் கோவில் சுற்றில் திருவண்ணாமலை உடையார் தெரு வீதி என்ற வீதியும், ஊர் வெளிப்புறத்தில் 'திருக்கோவிலூர் பெருவழி' 'மலையான்பாடிக்கு போன வழி ' ஆகிய சாலைகள் இருந்ததாக கல்வெட்டுகள் செப்புகின்றன.
கல்வெட்டுச் செய்திகளுக்கு இணையாகத் திருப்புகழிலும் அருணை நகரைப் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன. அருணை நகரம் பசுமையான வயல்களும், தாழைத் தோட்டங்களும், பூஞ்சோலைகளும், நறுமணம் வீசும் தடாகங்களும், தாமரை பூத்துக்குலுங்கும் அகழிகளும்,அழகிய அகன்ற தெய்வீகப் பொலிவுடைய வீதிகளும் அடங்கிய நகரமாக விளங்கியது என்று திருப்புகழ் பாடல்கள் மூலம் அறியலாம்.
மேலும் அழகிய செம்பொன் மேரு மலையை ஒத்த கோபுரமும்,பெரிய மதிலும்,வேதங்கள் முழங்கும் வீதியும், யானை செல்லும் தெருவும் அருணையில் இருந்ததை அருளாளர் திருப்புகழில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
‘அணி பொன் மேருமேரு உயர் கோபுரம் மாமதில் அதிரும்,
ஆரணம் வாரண வீதியுள்‘ (திருப்புகழ் 385)
மொத்தத்தில் சோணகிரி சொர்க்கபுரியைப் போல் 15 ஆம் நூற்றாண்டில் காட்சியளித்தது எனக் கூறுவது மிகையன்று. அருணகிரியார் வாழ்ந்த காலத்தில் அருணாபுரியில் 6000 மக்களும், மன்னன் பிரிபுட தேவராயனின படையைச் சேர்ந்த 3000 போர் வீரர்களும் ஆக மொத்தம் 9000 பேர் வாழ்ந்தனர் எனக் கருதலாம்.
பார்வை நூல்கள் :
- அருணாசல புராணம் தொகுப்பு - புலவர் அ.பாண்டுரங்கனார்
- அருள் நிறை அண்ணாமலை - புலவர் அ.பாண்டுரங்கனார்.
- அருணாசலா போற்றி! போற்றி! - பா. பழனிராஜ் பி.ஏ., பி.எல்.,
★★★
இயற்கைவழி முருகனைக் கண்டு இன்பத்தில் தோய்ந்து அழியா வாழ்வு பெற்ற அருளாளர் எதற்கும் எவர்க்கும் அஞ்சாத வீரர் ஆவார். முருகன் அருள்பெற்ற அருணகிரியார் திருப்புகழ்ப் பாடல்களை பயின்றால், அன்பும் மகிழ்வும் அஞ்சாமையும் வீரமும் பொங்கி வழிவதைக் காணலாம். அவர் அருளிய திருப்புகழ் பாடும்போதும், பிறர் பாடக் கேட்கும் போதும் எழும் உணர்வின் மிடுக்கை எழுத்தால் எழுதுதல் முடியவில்லை . மயிர் தோல் குருதி நிணம் நரம்பு எலும்பு முதலிய
எல்லாம் குலுங்கிக் குலுங்கி புத்துயிர் பெறுகின்றன. அன்பு ஊற்றெடுத்து ஓடுகிறது; மகிழ்ச்சி பொங்குகிறது ; அச்சம் பறக்கிறது ; வீரம் வீறிட்டெழுகிறது. அவ்வேளை கிளம்பும் அஞ்சாமைக்கு ஓரளவுமுண்டோ? ' எமக்கார் நிகர்' என்னும் எண்ணமும் எழுகிறது. 'திருப்புகழ் படிக்கும் அவர் சிந்தை வலுவாலே, ஒருத்தரை மதிப்பதில்லை உன்றனருளாலே‘ என்னும் வீர மொழியும் நோக்கற்பாலது. மணமும்- இளமையும் -கடவுள் தன்மையும் அழகுஞ் செறிந்து. பாட்டாயமைத்துள்ள முருகல்லவோ திருப்புகழ், அலங்காரம், அனுபூதி முதலியன.
— தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார்

