அருணகிரிநாதர் அருளிய பனுவல்கள் ஒன்பது; இவற்றை நவரத்தினங்கள் என்பார் தவத்திரு சாதுராம் சுவாமிகள். 'திருப்புகழ்' “மாணிக்கம்” என்றும் (ஓசைமுனி பேசா அநுபூதி பெற்ற ஒப்பற்ற நூலான) ‘கந்தர் அநுபூதி’ ரத்தினங்களில் உயர்வான “முத்து” என்றும் கூறுவார். இந்நூலை அருணகிரிநாதர் தமிழில் அருளிய “மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்” என்று கூறலாம். ‘அகாரதி க்ஷகாராந்தம்’ எனப்படும் 51 எழுத்துக்கள் மேலும் ‘த்ர’, ‘க்ஞ’ எனும் இரண்டு, இவை சேர்ந்த 53 எழுத்துக்களுள் ‘லூ’ நீங்கலாக மீதி 52ம், காப்பு உட்பட அநுபூதி 52 பாக்களுள் வரிசை மாறி விரவி வருவதைக் காணலாம். கந்தர் அநுபூதி அளவால் சிறிய நூலாயினும், ஆழ்ந்த பொருள் வளம் உடையது. நித்திய பாராயணத்திற்குரியது. கந்தர் அநுபூதிக்கு பல அறிஞர்கள், சான்றோர்கள் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதியுள்ளனர்.

முத்தாம் கந்தர் அநுபூதியில் சில முத்துக்களைக் காண்போம்.

  1. காப்புப் பாடல் வருமாறு:

  2. “நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருக

  3. தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

  4. செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே

  5. பஞ்சக் கரஆ னைபதம்ப ணிவாம்”

  6. விநாயக வணக்கமாகிய இந்தப்பாட்டில், கந்தர் அநுபூதிக்குப் பிறகு பயன் நெஞ்சமாகிய கல் உருகுவது

  7. என்பதும், முருகன் தஞ்சமென்று தன் சரணத்தை அடைந்தவருக்கு அருள்புரிபவன் என்பதும் அவனுக்கு அணியும்

  8. சொல்மாலை ஐந்து இலக்கணமும் பொருந்தியதென்பதும், அது நன்கு நிறைவேறும்படி செய்ய ஐந்துகரத்தனாகிய

  9. விநாயகரைத் தொழுதார் அருணகிரிநாதர் என்பதும் தெளிவாகின்றன. இந்தப்பாடலின் ஈற்றடியை மிக நுணுக்கமாக

  10. ஆராய்ந்து பொருள் தேட முற்பட்டால் ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதக் கோட்பாடு எனும் அறுவகைச் சமய நெறிகளை

  11. இந்த அடி தன்னுள் பொதிந்துள்ளது.

  12. பஞ்ச + கர + ஆனை = ஐந்து திருக்கரங்களை உடைய ஆனைமுத்தைக் கொண்டவர்

  13. (காணாபத்யம்)

  14. பஞ்ச + அக்கரவான் + ஐ = ஐந்து அட்சரப் பொருளின் தலைவனான சிவன் (சைவம்)

  15. பம் + சக்கரவானை = அழகிய சுதர்சன சக்கரத்தை ஏந்திய மஹாவிஷ்ணு (வைணவம்)

  16. பம் + சக்கரவான் + ஐ = அழகிய ஸ்ரீ சக்கரத்திற்குத் தலைவியாகிய உமாதேசி (சாக்தம்)

  17. பஞ்ச + கரவான் + ஐ = பஞ்சபூதங்க்ளிலும் மறைந்தும் தனித்தும் ஒளிர்கின்ற முருகன்

  18. (கௌமாரம்)

  19. பம் + சக்கர + வான் + ஐ = அழகிய சக்கர வடிவாக வானத்தில் உள்ள தலைவன் சூரியன்

  20. (சௌரம்)

  21. 25ஆம் பாடல்வருமாறு:

மெய்யே எனவெவ் வினைவாழ் வையுகந்(து)
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலே றியசே வகனே.

பொய்யானதும் வெம்மையானதுமான இந்த உலக வாழ்வை, இது மெய்யானது தான் என்று மனமகிழ்ந்து, மேற்கொண்டு அடியேன் பிறவி பிறவியாக அலைவது தகுதியா? ஐயோ! கை மட்டுமா? வேல் மட்டுமா? கழல் மட்டுமா? திருமேனி முழுதும் சிவந்த நிறமுடைய பெருமானே! மயில்மேல் ஊர்ந்து வரும் பெருவீரனே

'பிறவி அலை ஆற்றில்' உழன்று அலைவது தகுமோ என்கிறார் அருணகிரியார். செவ்வேளாகிய முருகனை ஏறெடுத்து நோக்குங்கால் ஆண்டவன் திருக்கரத்தில் வடிவேல் ஒளிர்கிறது. அதுவும் சிறப்பாக ஒளிர்கிறது. திருக்கரத்தின் செம்மை படிந்து அது சிவப்பாயிற்றா? அசுரர்களின் உடலிலே புகுந்து அவ்வுடலங்களின் குருதி படிந்து சிவப்பாயிற்றா? அல்லது மாணிக்கம் பதித்ததனால் செஞ்சுடர் வீசுகின்றதா? எல்லாக் காரணங்களும் இங்கே பொருந்துகின்றன. அந்த செஞ்சுடர் வேலைத் தலை முதல் அடிவரையில் பார்க்கிறார். ஒரே சிவப்பு! வினை வாழ்வினால் உண்டாகும் அச்சத்தைப் போக்க அஞ்சல் எனக் காட்டும் கரமுடைய ஆண்டவன், அந்த வினையை நீக்கும் கருவியைத் தன் திருக்கரத்தில் வைத்திருக்கிறாள். அது புறத்தோற்றத்துக்கு வேலாகவும், அகத்தோற்றத்துக்கு ஞானமாகவும் இலங்குகிறது. அசுரர்களை மாய்த்து நலம் செய்த அந்த வேல் அசுர சம்பத்துக்களாகிய தீயகுணங்களை அழித்துவிடும். புற இருளும் அக இருளும் நீங்கச் செம்மை ஒளி பாரிக்கும் வடிவேல் அது; ஞானசக்தி அது. ஆண்டவன் செய்யன்; குங்குமத்தை ஒத்த திருமேனியை உடையவன். செக்கச் சிவந்த பிள்ளை “இவன் கை சிவப்பு, வேல் சிவப்பு, கழல் சிவப்பு” என்றல்லவா சொன்னோம். ‘இவன் திருமேனி முழுவதும் சிவப்பாக இருக்கிறதே!’ என அருணகிரியார் வியந்தார். அவர் பார்வை முருகனைச் சார்ந்து நிற்கும் பச்சை மயில் மேல் படர்ந்தது. கண்ணை குளிர்விக்கும் பச்சை வண்ணமுடையது அது – அதைத் தனியே பார்த்து முருகனோடு சேர்த்தும் பார்த்தார். ஆ! இப்போது முருகன் அழகு இன்னும் எவ்வளவு சிறப்பாக விளங்குகிறது! மயில் ஏறிய பெருவீரனாக, மயிலேறிய சேவகனாக தரிசித்த போது அவன் அழகு மிகமிகக் கண்ணையும் கருத்தையும் கவ்வுவதாக இருப்பதை உணர்ந்தார். இந்த சேவகன் – வீரன் வினைகளை அழித்து, வாழ்வை நிறைவுறுத்துவான் என்ற நம்பிக்கை பிறந்தது. வினையோடவிடும் செங்கதிர் வேலவன் துணை நின்றால் எது தான் கிடைக்காது?

  1. இனி 43ஆம் பாடல்:
"தூசா மணியும் துகிரும் புனைவாள்
நேசா, முருகா, நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளா யினபின்
பேசா அநுபூ திபிறந் ததுவே”

முத்தையும் பவளத்தையும் ஆடையாக அணியும் வள்ளி நாயகியின் காதலனே! முருகா! எளியேன்பால் வைத்த நினது அன்பினால் ஆசை என்னும் விலங்கு தூளாகப் போன பிறகு, நின் அருளால் இன்னவாறு இருந்தோனன்று மொழிகளால் சொல்ல இயலாத அநுபூதி என்னிடம் உண்டாயிற்று.

இன்பமாகிய அநுபூதியை நாம் பெறமுடியாமல் இருப்பதற்குத் தடையாக, இறைவனைச் சேராமல் நம்மைத் தடுப்பது ஆசையாகிய விலங்கு. மடிநிறைய பாலைத் தாங்கிக் கொண்டிருக்கும் தாய்ப் பசுவைத் தொழுவத்தில் கட்டி பால் குடிக்க வேண்டும் என்று ஆசையுள்ள கன்றுக்கட்டியைச் சற்றுத் தள்ளிக் கட்டியிருப்பதால் கன்றுக்குட்டிக்குப் தாய்ப்பசுவின் பால் கிடைப்பதில்லை. கன்றைக் கட்டிய கயிறை அவிழ்த்துவிட்டால் தடையின்றி அதற்கு பால் கிடைக்கிறது. அதுபோல ஆண்டவனை அடைவதற்கு தடையாக ஆசை என்னும் தளை இருக்கிறது. முருகனே வலிய வந்து அருளினாலும் ஆசை இருக்கும் வரையில் இன்பம் பெற முடியாது. ஆசை அழிந்த அந்தக் கணத்தில் முருகன் அருள் சித்திக்கும். நாமாக முயன்றும் தவம் செய்து ஆசை விலங்கை அறுக்க வேண்டும். அப்போது முருகன் அநுபூதி இன்பம் தருவான்.

இருப்பினும் முருகன் தனது ‘அன்பால் ஆசாநிகளம் துகளாகிய பின், அருளால் பேசா அநுபூதி பிறந்தது’ எனலாம். தன் குழந்தைக்குத் தாய், அது கேட்கா விட்டாலும் தானே ஆடை உடுத்துச் சோறும் ஊட்டுகிறாள். முருகன் அத்தகைய அன்பைக் காட்டி ஆசா நிகளம் (விலங்கு) துகளாகும்படி செய்தானாம். பிறகு? பேசா அநுபூதி தான். பேசாமல் மௌனமாக உள்ள அநுபூதி என்று பொருள் கொள்வதைவிட, இன்னதென்று சொல்ல இயலாத அநுபூதி என்று கொள்வது சிறப்பு. ‘அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே' என்று சொன்ன நிலை அது. “சொல்லொணாதிந்த ஆனந்தமே” என்றும், “சொல்லுகைக் கில்லையென்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லை” என்று கந்தர் அலங்காரத்தில் கூறும் அநுபூதி இதுதான்.

முருகா சரணம்.

நன்றி:

  1. அநுபூதி விளக்கம்: 'வாகீச கலாநிதி' கி.வா.ஜகந்நாதன்.
  2. திருப்புகழ்ச்சாமி திருமுருக தா.பா.வேங்கட சுப்ரமணியம்
  3. அருணகிரிதாசன் முனைவர் ம.ராமகிருஷ்ணன்
  4. தவத்திரு சாதுராம் சுவாமிகள்

★★★

திருப்புகழ் பதிப்பாசிரியர் வ.த.சுப்ரமணியப் பிள்ளையவர்கள் பதிப்பித்துள்ள நூல் ஒன்றில் 1304 பாடல்களுக்கான சந்தக் குழிப்புகளை அழகாக தொகுத்துள்ளார்.

அதாவது ஒரே மாதிரி சந்தம் அமைந்துள்ள பாடல்கள் எத்தனை என்ற முறையில் 24 வகை
அடிப்படை சந்தங்களுக்கான பாடல் தொகையைக் கணக்கிட்டுள்ளார். இவ்வமைப்பில் ஒரு பாடலில்
ஒரே வகை சந்தம் அமைந்ததும் உண்டு. சில பாடல்களில் சந்தம் ஒருவரியில் ஒரு பாகம் அதே
அமைப்பிலும் மற்றபாகம் வேறு விதமான சந்தத்திலும் அமைந்ததாகவும் காணப்படுகின்றன.
1. தத்த ........................................ 93 13. தனந்த ........................................ 26
2. தத்தா ........................................ 8 14. தனதன ........................................ 120
3. தந்த ........................................ 94 15. தனதனா ........................................ 8
4. தந்தா ........................................ 9 16. தனாதன ........................................ 11
5. தய்ய ........................................ 15 17. தனதய்ய ........................................ 8
6. தய்யா ........................................ 3 18. தனதனன ........................................ 74
7. தன்ன........................................ 6 19. தரத்த........................................... 12
8. தன்னா........................................ 4 20. தரத்தா........................................... 8
9. தனன (தனத) ................................ 141 21. தாந்த ........................................... 12
10. தனனா (தனதா) .......................... 142 22. தாந்தர ....................................... 7
11. தனத்த........................................ 75 23. தான............................................ 182
12. தனத்தா..................................... 10 24. தானா............................................. 42
திருப்புகழ் மூலபராராயணம் செய்யும்போது அதனில் அமைந்துள்ள சந்தக்குழிப்பு அமைப்பைப் போலவே
படித்தால் கடினமாக இருக்காது. தகவல்: திருப்புகழ்ச் செல்வம் நூல் - வலையபேட்டைரா. கிருஷ்ண