திருப்புகழ் விருப்பொடு செப்பு
திருமதி. சாரதா பழனியப்பன், ஸ்ரீ மதானி யூ டியூப் சேனல், கோவை.
'வள்ளிமண வாளன் மயிலேறும் வள்ளல்தனைத்
தெள்ளுதமி ழால் புனைந்து சீர்பெறவே - உள்ளபடி
வைப்பாம் அருணகிரி வாழ்த்தும் திருப்புகழைக்
கற்பார் கரையேறு வார்'
என்கிறது திருப்புகழ் சிறப்புப் பாயிரம்.
திருப்புகழ் - இசைத்தமிழால் திரு அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் பாடிய ஒரு அருமையான மந்திர நூல். இசை இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்லும் இனிய கருவி. இசையால் மயங்காத இறைவனும் இல்லை. 'என் அப்பன் ஈசனுக்குப் பாட பலர் இருக்கையில், சுப்பன் எனக்குப் பாட அருணகிரிநாதரே சரியானவர் என்று முருகன் நினைத்தார் போலும்!!'
முருகப்பெருமான் தானே இந்நூலுக்கு பெயரிட்டார் என்பதை 'திருப்புகழ் விருப்பமொடு செப்பு என்று நீ எனக்கு அருள் செய்த திறத்தை மறவேன்' என்று அருணகிரிநாதர் கூற்றிலிருந்து திருப்புகழின் பெருமையை நாம் அறியலாம். சைவ வைணவ பேதங்களின்றி, அறு சமய கடவுளரையும் ஒன்றாக ஒரே இடத்தில் பாடி உணரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அருமையான நூல் திருப்புகழ்.
எழுத்து, அசை, சீர், அடி என்று அனைத்து இலக்கண விதிகளையும் எடுத்துக்கொண்டு அருளாளர்கள் பல அருமையான நூல்களை நமக்கு அளித்த வேளையில், யாருமே முக்கியத்துவம் அளிக்காத ஓசை நயத்தை எடுத்துக் கொண்டு அருணகிரிநாதர் அருளிய ஒப்பற்ற நூல் திருப்புகழ். அவரது திருப்புகழ்ப் பாடல்கள் அனைத்தையும் கவனித்தால் இது புரியும். வல்லினம் எடுத்துக்கொண்டால் வல்லினத்தில் மட்டுமே அந்த முழு திருப்புகழையும் பாடியிருப்பார் (எ.கா..பத்தர் கணப்ரிய..) மெல்லினத்தை எடுத்துக் கொண்டால் பாடல் முழுவதையும் மெல்லினத்திலேயே பாடியிருப்பார் (எ.கா.. மன்றலங் கொந்துமிசை ..) அதுபோன்றே இடையினமும். இதை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தனது சொற்பொழிவுகளில் பாடிக் காண்பிப்பார். திருப்புகழை உள்ளன்போடு பாடுவதால் இகபர சௌபாக்கியங்கள் அனைத்தையும் ஆறுமுகப்பெருமான் அருள்வான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பார் வாரியார் சுவாமிகள்.
'பக்தியால் யான் உனைப் பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாடி..'
'அமிர்த கவித் தொடை பாட அடிமை தனக் கருள்வாயே ...'
'நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்..'
'பாடும் பணியே பணியாய் அருள்வாய்..'
'முருகா என ஓர் தரம் ஓத அடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே..'
இப்படி பல அருமையான வைர வரிகள்..கேட்கும் பொழுதெல்லாம் சொல்லத்தெரியாத உணர்ச்சி பரவசம் மேலோங்கிடும்!
திருப்புகழில் முன் தோன்றிய மூத்த மொழியாம் தமிழின் அழகு மேலோங்கியிருக்கும். திருப்புகழ் பாடுபவரை தன்னுள் ஈர்க்கும். அவ்வாறு அடியேன் திருப்புகழில் ஈடுபட மூலமாய் அமைந்த சில விஷயங்களை இங்கு மெய்யன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இறைவனிடம் பக்தி செய்ய அன்பு ஒன்றே போதுமானதென்று பல அருளாளர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அது என் வாழ்விலும் நடந்தது!! எங்கள் குடும்பத்தில் என் அப்பாவிற்கும் அவரின் அப்பாவிற்கும் (என் அய்யா) திருப்புகழின் மீதும் முருகன் மீதும் அதீத ஈடுபாடு. எங்கள் வீட்டில் திரு வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவும், ஸ்ரீமதி TV. சுந்தரவல்லி அம்மாவின் திருப்புகழும், T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் முருகன் பாடல்களும் ஒலிக்காத நாளே இல்லை என்று கூட சொல்லலாம். அவ்வாறே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அடியேனும் விவரம் தெரியாத இள வயதில் இப்பாடல்களை கேட்டே வளர்ந்தோம். அப்பொழுது அவ்வளவாக பாடல் புரியாது. இருந்தாலும் தமிழின் மீதிருந்த ஆர்வமோ என்னவோ. அதிலுள்ள இசை நயத்தை கேட்டு ரசிப்போம். அப்பாவும் கிடைக்கும் போதெல்லாம் சில திருப்புகழுக்கு அர்த்தம் கூறி ஏதாவது ஒரு சிறிய திருப்புகழைக் கூறி பாடக் கேட்பார். நாங்களும் செவி வழியில் கேட்டதை வைத்து தெரிந்த அளவு நன்றாகப் பாட முயற்சிப்போம். எப்படிப் பாடினாலும் 'நன்றாக'உள்ளது ' என்று கூறி உற்சாகப்படுத்துவார், 'இன்னும் நன்றாக பாடலாமே' என்பார். அப்பாவிற்காக பாட முயற்சி செய்த அடியேன் பின் சுந்தரவல்லி அம்மாவின் திருப்புகழைத் தினம் ஒரு மணி நேரமாவது பாடாமல் ஒருநாளும் இருந்ததில்லை.
'நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் திருப்புகழ் ' என்று அருணகிரிநாதர் சுவாமிகள் பாடியது மாபெரும் சத்திய வாக்கு.
'புவியதனில் பிரபுவான புகலியில் வித்தகர் போல
அமிர்த கவிதொடை பாட அடிமைத்தனக் கருள்வாயே..'
என்ற கயிலைத் திருப்புகழையும், பக்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிரு புகழ்பாடி.. ' என்ற ரத்னகிரி திருப்புகழையும் தினப்படி தவறாது பாடி விடுவேன். தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முருகன், தனக்கு மிகவும் பிடித்தமான தமிழில் பாடும்பொழுது அவன் அருளைச் சொல்லவும் வேண்டுமா?
இத்திருப்புகழ் இரண்டையும் பாட வரிகள் அழகாயிருக்கிறது என்று நினைத்தே பாட ஆரம்பித்தேன். (அப்போது என் சிற்றறிவிற்கு இந்த இரண்டு திருப்புகழும் பாட மிக அழகாகத் தோன்றியது). ஆனால் பொருள் அறியாது பாடினாலும் அதன் பலனை அளித்து விட்டான் ஆறுமுகப்பெருமான் என்றே சொல்லலாம்.
'ஆர்வத்துடனும், அன்புடனும் உள்ள நீ ஏன் தனியாக பாடிக்கொண்டு இருக்கிறாய்?' என்று கந்தவேள் நினைத்தானோ என்னவோ? 'வந்து முருகனடியார்களுடன் ஒன்றாகச் சேர்!!' என்று தோழி ஒருவர் மூலம் திருப்புகழ் அன்பர்கள் குழுவில் இணைத்து விட்டார். இத்தனைக்கும் அடியேன் எந்த முயற்சியும் செய்யவில்லை!! 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ..' என்பதை அன்று உணர்ந்தேன். பல திருப்புகழ் பஜனைகளில் கலந்துகொண்டு திருப்புகழ் அன்பர்களுடன் பாடி முருகப் பெருமானின் அருளைப்பெறும் பேரின்ப வாய்ப்பு கிட்டியது.
கொரோனா தொற்று வந்து உலகமக்கள் வீட்டிற்குள் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற சூழலில் தமிழகமெங்கும் பல ஆன்மீக குழுக்கள் உருவாயின. அதுபோன்று ஆரம்பித்த 'ஏகன் அனேகன் தவக்குழு' என்னும் குழுவில் (டெலிகிராமில்) திருப்புகழ் குருஜி திரு.ராகவன் தொடர்புடைய ஒரு செய்தியை பதிவிட்டேன். அதைப் பார்த்துவிட்டு அக்குழுவின் நிறுவனர் திரு. பெரி. முத்துராமன் அவர்கள் அடியேனைக் குழுவில் திருப்புகழ்ப் பாடி பயிற்றுவிக்க அழைத்தார். உள்ளபடி அப்பொழுது அடியேன் பாடுவேனா? என்று கூட அவருக்குத் தெரியாது. 'அண்ணன், குருஜி போன்று எல்லோராலும் பாட முடியாது .. அவர் இசைக்கடல்!! என்றேன். அதற்கு, 'பரவாயில்லை .. இங்குள்ள அனைவரும் இசை அறிந்தவர்கள் அல்ல ஆனால் பாட ஆசை உள்ளவர்கள் . நீங்கள் எளிமையாகவே பாடலாம் ' என்றார். அப்போது என் மனக்கண்ணில் ஓடியது இதுதான்.. கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்று அருமையாய் பாடும் சாரார் ஒருபுறமிருக்க, பக்தி பாவத்தை மட்டுமே கொண்டு பாடத் தெரியாத, படிக்கும் முறை கொண்ட சாரார் ஒருபுறமிருக்க, சூழ்நிலை காரணமாக இசை பயில முடியாத, ஆனாலும் சிறிதாவது இசையுடன் பாடலாம் என்று பேரவாவுடன் ஒரு சாரார் இருப்பதை பார்த்து, ‘நாம் ஏன் எளிமையாக திருப்புகழை பாடக்கூடாது?' என்ற எண்ணம் உதித்தது. அருணகிரிநாதர் 'சந்தம்' என்ற ஓசை நயத்தை எடுத்துக்கொண்டு பாடியதன் காரணமே

