எங்கள் காலத்திற்கு பின்பும் இப்பாடல்கள் வருங்கால தலைமுறை அன்பர்களுக்கும் எளிமையாக பாட பயனுள்ளதாக இருக்கும் என்ற வகையில், என் தம்பி சரவணன் நாச்சியப்பன் அவர்களின் உதவியுடன் தொடங்கப் பெற்றது தான் எங்கள் 'யூடியூப் சேனல் ஸ்ரீ மதாணி'. மதாணி என்பதற்கு நவரத்தினங்கள் பதித்த பதக்கம் என்று பொருள். அருணகிரிநாதரின் படைப்புகள் ஆகிய நவரத்தினங்கள் அனைத்தையும் கொண்ட பதக்கமாக எங்கள் ஸ்ரீ மதாணி யூட்யூப் சேனலில் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் மிக எளிமையான முறையில் பாடி பதிவேற்ற முயன்று கொண்டு இருக்கிறோம். உலக அளவில் இதற்கு நல்ல வரவேற்பும் கிட்டியுள்ளது.
'கலியுகக்கடவுள் கந்தன்!!' 'கந்தக்கடவுள் நம் சொந்தக் கடவுள்' என்பார்கள் போல நம் சொந்தமாகிய முருகன் தன் புகழ்பாடி உலக மக்கள் உய்ய தன்னுடைய மிகச்சிறந்த அடியாராகிய 'சந்தக்கவி' அருணகிரிநாதரின் பெருமையை உலகிற்கு தெரியப்படுத்த இப்பொழுது முயற்சி எடுத்தது போல் தோன்றுகிறது.
இம்முயற்சியில் பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல நாங்களும் ஒரு சிறு கருவியாக இருக்கிறோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எல்லாம் அவன் செயல்!! 'நம்மையும் ஓர் பொருளாக்கி நாய்ச்சிவிகை ஏற்றிவைத்த அப்பன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே!!' என்ற திருவாசக வரிகளைப் போல இன்று அடியேனையும் ஒரு பொருளாக்கி அற்புதமாக அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டத் தொடங்கி இருக்கும் வேளையிலே, அதன் மணிவிழா புத்தகத்தில் அடியேனுடைய சிற்றுரையையும் சமர்ப்பிக்க அருள்புரிந்த ஆறுமுகக் கடவுளின் அருளை என்னென்று சொல்வது!
'முருகா என்று ஓர் தரம் ஓதி, திருப்புகழ் விருப்பமுடன் பாடும் அடியவர் முடிமேல் இணை தாள் அருளி விட்டான் !! என்றே தோன்றுகிறது.
திருப்புகழைப் பாடி மகிழ்வோம்!!
ஆறுமுகன் அருளைப் பெறுவோம்!!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
★★★
உள்ளத்தை உருக வைக்கக் கூடியதே பக்தியின் மேன்மையாகும். ஞான மார்க்கத்திலும்,யோக மார்க்கத்திலும்,பக்தி அனுபூதி ரூபமாக ஒளிந்திருக்கிறது. அருணகிரிநாத சுவாமிகள் பாடல்களில் யோகமும், ஞானமும், பக்தியும் உண்டு. பக்தி ரசத்தில் பொதிந்த யோகமும்,ஞானமும் அருணகிரிநாத சுவாமிகள் பாடல்களில் இருந்து நமக்கு காணக் கிடைக்கிறது. யோகம்,ஞானம்,பக்தி போன்ற அனைத்து பாதைகளும் ஆணவமற்ற ஒரு நிலையை நோக்கியே செல்கின்றன .ஆணவ மலம் அழிய ,இறைவனுடன் இணைந்து ஒன்றாய் விளங்குகிறான் பக்தன். இக்கருத்தை மிக அழகாக கந்தர் அனுபூதியில் கூறுகிறார் அருணகிரியார். ‘யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே' என்றவாறு.
- ரமண சரண தீர்த்தர் நொச்சூர் வெங்கட்ராமன்.
திருப்புகழில் திருவிளையாடற்புராணம்
திரு. தி.சு.பஞ்சாபகேசன், பெங்களூரு.
அதி மதுர சித்ர கவி பாடும் அருணகிரிநாதன் விரித்த தமிழ் மாலையாம் நவமணி மாலைகளில் திருப்புகழ் ஒரு வற்றாத அமுதசுரபி. வடக்குப்பட்டு சுப்பிரமணியப் பிள்ளை எனும் பெருந்தகையினால் நமக்குக் கிட்டிய 1340 பாடல்கள் யாவுமே ஞானத்தேன் தமிழ்ப் பாடல்கள்.நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய தெய்வத்திருமுறைகள், வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், எல்லாவற்றிலும் உள்ள அற நெறிகளையும்,சமயக் கோட்பாடுகளையும் விளக்கி நமக்கு வழிகாட்டும் நூல் திருப்புகழ்.
வேண்டும் அடியவர்க்கு வெறாது உதவும் அந்த சோமசுந்தரக்கடவுள் மதுரை ஆலவாயம்பதியில் நிகழ்த்திய விளையாடல்களின் தொகுப்பே திருவிளையாடற் புராணம்.
வடமொழியில் ஹாலாஸ்ய புராணம் என்ற நூலைத் தமிழில் எழுதும்படி,உமையம்மை பரஞ்சோதி முனிவர் கனவில் தோன்றி ஆணையிட பரஞ்சோதிமுனிவர் தமிழில் திருவிளையாடற்புராணம் செய்தார். அதில் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் உள்ளன.
நமக்குக் கிடைத்த 1340 திருப்புகழ் பாடல்களில் 20 திருவிளையாடல்கள் கிடைக்கின்றன. வாதவூரருக்கு உபதேசித்தப் படலம், நரிகளைப் பரியாக்கியது,பரிகளை நரியாக்கியது,சம்பந்தர் சமணரைக் கழுவேற்றியது, பாண்டியன் சுரம் தீர்த்தது, உக்கிர பாண்டியன் செண்டு,வளை வேல் பெற்றது,வேல் கொண்டு கடலை சுவறச் செய்தது, வளை கொண்டு இந்திரனை வணங்க வைத்தது,மேருவைச் செண்டாலடித்தது போன்ற விளையாடல்கள் யாவரும் அறிந்ததே.மேற்கண்ட விளையாடல்கள் நிறைய திருப்புகழ்ப் பாடல்களில் காணக் கிடக்கின்றன.அரிதான சில விளையாடல்களை இக்கட்டுரையில் காண்போம்,
வெள்ளியம்பலத்தில் ஆடிய படலம் (திருவிளையாடல் 6)
பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் தில்லையம்பலத்தில் அம்பலவாணனின் ஆனந்தக்கூத்தை தரிசிக்க தவமியற்றியவர்கள். தினமும் தில்லயாடியின் திருநடனம் கண்ட பின்னரே உணவருந்துவர்..மதுரையில் மீனாட்சியம்மன் திருமணத்திற்கு சென்றவர்கள் உணவருந்துமுன் ஈசனின் திருநடனம் காண வேண்டினர்.பாண்டிய மன்னன் வெள்ளிசபை அமைத்துக் கொடுக்க ஈசன் ஆடிய நடனம் 'சுகதாண்டவம்', 'சந்த்யா தாண்டவம்' எனப்படும் இதை அருணகிரியார்,முத்து நவரத்னமணி என்கிற மதுரைத் திருப்புகழில் சாங்கரி பாடிடவோங்கிய எனும் பொதுப்பாடலில் சுக தாண்டவத்தைக்குறிப்பிட்டு
பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகு
தெய்த்ததென தெய்த்ததென ...... தென்னான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்
அத்தனுடன” எனவும்
‘சாங்கரி பாடிடவோங்கிய’ எனும் பொதுப்பாடலில் மதுரையில் வெள்ளியம்பலத்தில் ஆடும் சுக தாண்டவத்தைக்குறிப்பிட்டு, “சாங்கரி பாடிடவோங்கியஞான சுக தாண்டவமாடியவர்”
என்றும் பாடுகிறார்.
கால் மாறி ஆடிய படலம் : (24 வது திருவிளையாடல்)
பாண்டிய மன்னன் ஆயக் கலைகள் 64-ம் கற்றுத்தேர்ந்து,பரதக் கலையை பயிலுங்கால் கல்பகோடி காலமாக இறைவன் இடது பாதம் தூக்கி ஆடுகிறானே என்று விசனமுற்ற அம் மன்னனுக்காக ஈசன் கால் மாற்றி, வலது பதம் தூக்கி ஆடினான். இத்திருவிளையாடல் கால் மாறி ஆடிய படலம் எனப்படும்.
‘சீரான கோல கால’ என்ற விராலிமலைத் திருப்புகழில்
“ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர் எனவும்
'திரை வஞ்ச இருவினைகள்' பாடலில்
நடனம் கொடொரு வழுதி---- மதுரை நடராஜன்”
எனவும் விவரிக்கின்றார்.
கீரனுக்கு இலக்கணம் உரைத்தப் படலம் (திருவிளையாடல் 54)
தருமிக்கு பொற்கிழி கொடுப்பதைத் தடுத்து இறையனார் பாடலில் பொருட்குற்றம் கண்ட நக்கீரனைக் கரையேற்றி கீரனுக்கு முறையாக இலக்கணம் ஓதுவிக்க திருவுளம் கொண்டான் சொக்கநாதன் .அதுகால் உமையம்மை,”நம் திருமணம் திருக்கையிலையில் நடந்தபோது நிலச் சாய்வை சமன் செய்ய அகத்தியரை அனுப்பியபோது அவருக்கு தமிழும் இலக்கணமும் தாங்களே ஓதுவித்தீர்களே அந்த அகத்தியனைக் கொண்டு கீரனுக்கு இலக்கணம் கற்பிக்கவும் என்றாள்.ஈசனும் அவ்வாறே கீரனுக்கு இலக்கணம் கற்பித்ததை கடிமா மலர்க்கு எனும் சுவாமிமலைத் திருப்புகழில்
“வளவாய்மை சொற்பர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி”
என படம் பிடித்துக் காட்டுகிறார் .
பழியஞ்சிய படலம் (திருவிளையாடல்25)
அந்தணன் ஒருவன் காட்டில் மனைவியுடன் செல்கையில், நீரருந்துவதற்காக மனைவியைத் தனியே விட்டுச் செல்கிறான். திரும்பி வந்து பார்க்கையில் மனைவி அம்பு தைத்து மாண்டிருப்பதைப் பார்க்கிறான். அருகே ஒரு வேடன் வில்லுடன் இருப்பதைப் பார்த்து அவனே கொலை செய்தான் என அரசனிடம் அழைத்துச் செல்கிறான், வேடனோ தான் அந்த அம்பை எய்யவில்லை என்று உறுதியாகக் கூறுகிறான். செய்வதறியாது திகைத்த அரசனின் கனவில் சொக்கநாதர் கூறுகிறார் “இன்று ஒரு திருமணம் நடக்கிறது. நீ அங்கே சென்றால் உண்மை விளங்கும்”
அரசன் அந்தணனுடன் திருமணத்திற்குச் செல்ல அங்கே இரு கால தூதர்களின் உரையாடலை கேட்கிறான்.
கால தூதன் 1: இந்த மணமகன் உயிரைப் பறிப்பது எப்படி ?
காலதூதன்2 : நேற்று காட்டில் அந்த அந்தணன் மனைவி உயிரை மரத்திலிருந்த அம்பை காற்றில் கீழே விழச்செய்து பறித்தாற் போல், இங்கே காளையைக் கட்டவிழ்த்து மணமகன் உயிரை வாங்கி விடலாம்.
அரசன் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே காளைஒன்று ஓடி வந்து மணமகன் உயிரை வாங்கியது. அரசனும் வேடன் நிரபராதி என உணர்ந்து வேடனைச் சிறை விடுத்தான். குற்றமற்றவனை தண்டிக்கும் பழியிலிருந்து விடுபட்ட அரசன் சொக்க நாதருக்கு நன்றி தெரிவித்தான். இந்த பழியஞ்சிய படலத்தை திரை வஞ்ச என்ற பாடலில் : “மதுரை நடராஜன் பழியஞ்சி எனதருகிலுறை”
என்ற வரிகளில் காணலாம்.
இடைக்காடர் பிணக்கு தீர்த்த படலம் (திருவிளையாடல் 56)
‘விலைக்கு மேனி’ என்ற திருப்புகழில்
“அகத்திய மாமுனி இடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருட்கோலமாய்”
என்ற வரிகளில் இடைக்காடர் எனும் புலவர் பற்றி கூறுகிறார் .பொதுவாக இடைக்காடர் என்றால் ஒரு சித்தர் என்பர். ஆனால் இங்கே கீரன், அகத்தியர் போன்ற பெரும் புலவர் இடைக்காடர் ஆவர்.
அவர் ஒருமுறை அரசனிடம் சென்றபோது அரசன் அவரை மதியாது இருந்ததால் மனவருத்தமுற்று சோமசுந்தரக்கடவுளிடம் வேண்ட இரவில் இறைவன் ஆலயத்திலிருந்து வெளியேறி வைகையின் தென்கரையில் ஓர் மண்டபம் அமைத்து அதில் குடியேறினார். காலையில் ஆலயத்தில் இலிங்கத்தைக் காணாது தவித்தனர் பூசனை புரிவோர், அரசனிடம் முறையிட்டு தென்கரையில் புது ஆலயம் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தனர். அரசன் ஓடோடி வந்து, தன் தவறையுணர்ந்து இடைக்காடரிடம் மன்னிப்புக் கோரினான். அருணகிரியார் இடைக்காடர் பிணக்குத் தீர்த்தப் படலத்தை “வகுத்த பாவினில் பொருட்கோலமாய் வருபவன்” என்ற வரிகளில் நம் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறார்.
வளையல் செட்டியாக வளையல் விற்ற படலம் (32),சங்கப்புலவர் கலகம் தீர்த்தது(55) ஆகிய திருவிளையாடல்களை பல திருப்புகழ்ப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்
வளையல் விற்ற படலம்(திருவிளையாடல் 32)
தாருகாவனம் முன்பொரு காலத்தில் மதுரையம்பதியின் ஒரு பகுதியாகவே இருந்தது. தாருகாவனத்திலிருந்த தவ முனிவர்களின் செருக்கை அடக்க அம்பலத்தாடும் ஈசன் பிட்சாடனராக வந்தான்,அந்த பிட்சாடனரின் அழகில் முனிபத்தினிகள் தன்வயமிழந்து அவர்தம் வளையல்களும் மேகலையும் நெகிழ்ந்து பிட்சாடனாரின் திருவோட்டில் விழுந்தன. பிட்சாடனாரின் தோற்றத்தில் ஈர்க்கப்பட்ட முனிபத்தினிகள் அவர் பின் ஏக, முனிவர்கள் தம் பத்தினிகளை மண்ணில் வணிகக் குலத்தில் பிறக்குமாறு சபித்தனர். முனிவர்களின் மனைவியர் தங்கள் நிலையுணர்ந்து மன்னிக்குமாறு வேண்ட இறைவன் அவர்களை மதுரையில் சோமசுந்தரக்கடவுளாக வந்து ஆட்கொள்ளுவதாக அருளினார். மதுரையில் வணிகக்குலத்தில் தோன்றிய பெண்களிடம் வளையல் செட்டியாக வந்து அவர் கரம் பிடித்து வளையணிவித்து அவர்களுக்கு சாப விமோசனமளித்தார். இந்த வளையல் விற்ற படலத்தை அருணகிரியார் மருவுகடல் முகிலனைய என்கிற பழனித் திருப்புகழில்
“திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவிஇயல் கொடு செட்டிக்குச் சுகம் உற்றத் தத்துவ சித்தில் சிற்பதம் வைத்தக் கற்புறு திரையில் அமுது என மொழி செய் கவுரியின், என்று முறையாக வளையல் விற்ற செட்டி சொக்க நாதனுக்கு சுகம் உற்ற கௌரி” எனவும்,
‘கட்டிமுண்டகரபாலி யங்கி யென’ என்ற பாடலில்.
“செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட”
எனவும் குறிப்பிடுகிறார். சிவகாமியம்மை அங்கயற்கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில் வளைச் செட்டியாய் வடிவமெடுத்து வளையல்களை விலை கூறி கூவியழைத்து அந்த பெண்களின் கைகள் சிவக்க வளை அடுக்கிய எந்தை என்கிற இந்த பாடல் வரிகள் நமக்கு சுந்தரேசர் வளைச்செட்டியாய் கூவி அழைப்பது கண் முன்னே விரிகிறது.

