'கடலைச்சிறை வைத்து' என்கிற பழனித் திருப்புகழில் ‘சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தின் உதித்து அருள் வித்தக ருத்ர ஜன்மப் பெயர் செப்பி இட---------- மெய்ப் பலகைச் சது பத்து நவப் புலவர்க்கும் விபத்துஇல் ஞான படலத்து உறு லக்கண லக்ய தமிழ்த் த்ரயம் அத்தில் அகப் பொருள் வ்ருத்தியினைப் பழுது அற்று உணர்வித்து அருள்வித்த வித்தக சற்குருநாதா’

'போதகந்தரு கோவே' எனும் பாடலில் "சங்கமேறும் மாதமிழ் த்ரயவேளே" என்றும், 'சீரான கோலகால' என்கிற விராலிமலைப்பாடலில்

“ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர ...... குருநாதா”

எனவும் விவரிக்கிறார்

சந்தமுனியின் பாடல்கள் தொட்டனைத்தூறும் மணற்கேணியாக சமய நெறிகளையும் சாத்திரங்களையும், புராணங்களையும் நமக்கு வழங்குகிறது. எந்நாளும் மறவாமல் திருப்புகழ்ப் பாடி மாமயிலோன் கருணையைப் பெறுவோம்.

★★★

As a miraculous effect of the creative genus of Saint Arunagirinathar , the two classical languages of Tamil and Sanskrit are enchantingly wedded to each other under the spell of marvelous rythmic diction, giving birth to and inimitable Immortal versification in Tirupugazh with the marvelous rhythm of thalas, capable of attuning the sensory strings of the wonderful Veena of human body,Leading to a blissful slumber of yoga.“

M.K Thangavelu, Courtesy
“Saint Arunagirinadhar 600th birthday celebration souvenir”

வேலனும் காலனும்

திரு. இரெ.சண்முகவடிவேல் திருவாரூர்

மனிதர்களை மிகவும் வாட்டுவது மரணபயம். நோய் பயமும் வறுமை அச்சமும் துன்புறுத்துவதுதான். ஆயினும் மரணபயம் யாவர்க்குமான பொதுவான அச்சம். திருவள்ளுவர்.

“அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது”

என்று கயமையின் தன்மையைக் காட்டுகிறார்.

கீழ்மக்கள் அச்சம் காரணமாகவோ, ஆசையினாலோ நல்லவனாகக் காட்டிக்

கொள்வார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள் நரகத்தைக் காட்டி அச்சுறுத்தினார்கள். சொர்க்கத்தை விவரித்து ஆசைப்பட வைத்தார்கள். தீமை செய்யாதே நரகத்தில் இடர்ப்படுவாய் - நன்மையே புரி - சொர்க்கத்தில் சுகப்படுவாய். இவ்வாறு சொல்லிவைத்தார்கள்.

பாலில் தண்ணீர் கலந்து விற்றவனிடம் பெரியவர் ஒருவர், “ஐயா கலப்படம் செய்தால் நரகம் நிச்சயம். கொதிக்கிற எண்ணெயில் போட்டுத் துன்புறுத்துவார்கள் நகக் கண்ணில் ஊசி ஏற்றுவார்கள். கலப்படமில்லாமல் தனிப்பாலாக விற்றால் நீங்கள் சொர்க்கத்தில் இன்புறுவீர்கள். அங்கே ஊர்வசியும், ரம்பையும் உங்களை ஆடிப்பாடி மகிழவைப்பார்கள். வீதியின் இருபுறத்திலும் தேனும் பாலும் பெரியபெரிய அண்டாக்களில் இருக்கும். தங்கக் குவளை வைத்திருப்பார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துக் களிக்கலாம். நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு பால் வியாபாரி என்ன சொன்னார் தெரியுமோ?

“இது என்னங்க பெரிய விஷயம்? எங்கே நல்லா வியாபாரம் நடக்குமோ, அங்கே போக வேண்டியதுதான்” என்றார்.

பெரியவர் தலை குனிந்தது குனிந்ததுதான். பிறகு தலையைத் தூக்கவே இல்லை. பால் வியாபாரி போன்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எளியவர்களைத்தான் அச்சமும் ஆசையும் நல்வழிப்படுத்தும். சான்றோர்கள், நல்லவற்றை இயல்பாகவே செய்யும் தன்மை கொண்டவர்கள். சொர்க்கத்துக்கு ஆசைப்பட்டோ நரகத்துக்கு அஞ்சியோ அவர்கள் நல்லது செய்வதில்லை. நல்லது செய்வதே அறம், மனிதனாகப் பிறந்தவன்,

“நல்லதைச் செய்வது கடமை

அல்லதைப் புரிவது மடமை”

என்று எண்ணி வாழவேண்டும். எதற்காகவும் அல்ல, நான் நல்லதை மட்டும் செய்யப் பிறந்த மனிதன் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்டு நல்லதைப் புரிந்து வாழவேண்டும்.

அருளாளர் அருணகிரியார்

அருளாளர் அருணகிரியார் முருக வழிபாட்டில் முருகிய நெஞ்சினார். ஏகதெய்வ வழிபாடாக முருக வழிபாட்டைக் கடைபிடித்தவர். மரணம் ஒருநாள் உண்டு என்பதை உணர்ந்திருந்த அருணகிரியார், முருகப் பெருமானிடம் ஒருவேண்டுகோள் வைக்கிறார்.

'முருகா, நானும் ஒருநாள் மரணமடைவேன். அது பற்றி எனக்குக் கவலையில்லை. மரணப் பிரமாதம் நமக்கில்லை' என்று சொல்லி மரணத்தைப் பிரமாதம் என்கிறார்.

'மரணமடைவதற்காக வருந்தவில்லை, ஆனால் முருகா, என்னை கார்மாவாகிய எருமைக் கடாவிலே வந்து எமன் அழைத்துப் போவதை நான் விரும்பவில்லை. முருகா உன்னையே மனம், மொழி, மெய்யால் எண்ணிப்பாடி வழிபட்ட என்னை அவன் வந்து அழைத்துப் போகக் கூடாது. அவன் யார் என்னை அழைத்துச் செல்ல? நீ வா முருகா! கலாபத்து ஏர்மா வாகிய மயில் மீது ஏறிவந்து எனக்குத் திருக்காட்சித் தந்து அழைத்துப்போ. தயாராக இருக்கிறேன்' என்கிறார்.

கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து மயிலேறிய மாணிக்கத்தையே எண்ணியிருந்தால் மயில் மீதில் வந்து நம்மை அழைத்துச் செல்வான். அருணகிரியார் இக்கருத்தைப் பாடும் அழகு இருக்கிறதே அதை என்ன சொல்ல... நினைத்தாலே இனிக்கும் தேன் பாகு, கருப்பஞ்சாறு என்று எப்படியும் சொல்லலாம்.

என்ன சொல்கிறார்?

எமன் இருக்கிறானே, காலன்! அவனுக்கு எது வாகனம்? எருமைமாடு! அதுதான் கார்மா.

எருமை மாட்டில் என்னைக் கொண்டு போக அவன் வந்தால், நீ உன் வாகனமாகிய மயிலில் ஏறிவா! எருமை வேகமா? மயில் வேகமா? அவனை முந்திக்கொண்டு நீ வந்து என்னை அழைத்துச் செல். அதைவிட, உனக்கு என்ன வேலை? இப்படி உரிமை மீதூரப் பாடுகிறார் அருணகிரி அப்பா

“கார்மா மிசை காலன் வரின் கலாபத்து
ஏர்மா மிசை வந்து எதிரப் படுவாய்
தார்மார்ப! வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவேலவனே” -கந்தர் அனுபூதி

தலாரி வலாரி எனும் அசுரர்களையே நீ அழிக்கச் சென்றிருக்கிறாய். எதிரிகளுக்கே அருள்புரிந்த அண்ணலே. உன் அன்பனாகிய எனக்கு அருள்புரியமாட்டாயா? என்பதைச் சூசகமாகக் கேட்கிறார்.

முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டு, அவனருளில் திளைப்பவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. எதற்கும் ஆசைப்படுவதுமில்லை.

அப்பர் அடிகளை மன்னன் கைது செய்து அழைத்துவர, அமைச்சர்களை அனுப்பியபோது, அவர்களிடம் அப்பரடிகள் சொல்கிறார்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். நரகத்தில் இடர்ப்படோம் நடலை அல்லோம் என்று. பெருமானின் அருள்தரும் அஞ்சாமைதான் இது. அந்த அஞ்சாமைதான் அருணகிரியாருக்கும் வந்தது. அப்பர் அடிகளின் துணிவு அருணகிரியார்க்கு வாய்த்தது. நம் காலத்தில் வாழ்ந்த மகாகவி பாரதியாருக்கு மட்டும் இருக்காதா?

“அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே”

என்று பாடியவனல்லவா? மேலும் அந்த முறுக்கு மீசைக்காரர் பாடுகிறார்,

“காலா உனைநான் சிறுபுல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா சற்றேஉனை மிதிக்கிறேன் - அட
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்”

இவ்வாறு, காலனை காலால் மிதிக்கும் அளவுக்கு மனத்தில் அஞ்சாமையைத் தருகிறது முருகப் பெருமானின் அருள். முருகப்பெருமானின் திருவருள் வாய்க்கப் பெற்றால் மனம் முழுநிறைவு பெறும். முருகன் திருவருளால் நிறைந்திருக்கும் உள்ளத்துக்கு வேறு எதுவும் தேவையில்லைதானே! அறுசுவை உண்டியை வயிறார உண்டவன், வேறு எந்த உணவையாவது விரும்புவானா? முருகன் அருளைப் பெறுவதற்கு அவனை நினைத்தாலே போதும். இன்னும் அருணகிரியார் சொல்வது போலச் சொல்ல வேண்டுமானால், அவனை அமுதத் தமிழால் வைதாலும் அவனை வாழவைப்பவன் பெருமான்.

தமிழ்க் கடவுள் அல்லவா முருகன்! அவனைத் தமிழால் வழிபாடு செய்வோம் என்கிறார் அருணகிரிநாதர்.

“மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்

என்கிறது கந்தர் அலங்காரம்.

வைதாரையும் அங்கு வாழ வைப்போன்”

தமிழைக் கேட்க ஆசைப்படுகிறான் வேலவன். ஆகவே, தமிழால் அவனைத் திட்டினாலும் அருள்புரிவானாம். நீ திட்டுவாயோ வைவாயோ வாழ்த்துவாயோ, எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையில்லை, நீ பேசுவது தமிழா இந்தா திருவருள்! என்று வழங்கும் வள்ளல் அந்தப் பெருமான் என்கிறார் அருணகிரிநாதர்.

ஆகவே தமிழ்வேறு; முருகன் வேறு என்பதில்லை. தமிழ் என்றால் முருகன், முருகன் என்றால் தமிழ். தமிழால் கொஞ்சுகிறது அருணகிரியாரின் திருப்புகழ். அதனைக் கற்பதும் மனத்தில் நிறுத்துவதும் வாய் மணக்கச் சொல்லி சொல்லி முருகப் பெருமானைக் கவர்ந்திழுத்து அவன் அருளைப் பெறுவதும் வாழ்வைப் பயனுடையதாக்கும்.

★★★

அருணகிரிநாதர் பற்றிய திரைப்படங்கள்

  1. அருணகிரிநாதர் - 1937 இயக்கம் - ராஜா யக்னிக்
  2. நடிப்பு : TMK மாணிக்க பாகவதர்
  3. பக்த அருணகிரி - 1937 இயக்கம் - S.D.S. யோகி
  4. நடிப்பு : சி.ஜம்பு லிங்கம்
  5. இசை : கே.வி. கோபாலசாமி ஐயங்கார்
  6. அருணகிரிநாதர் - 1964 இயக்கம் - ராமண்ணா
  7. நடிப்பு : டி.எம்.சௌந்தராஜன், இசை : ஜி.ராமநாதன்.
குறும்படங்கள் - Documentary
'மறவேனே - அருணகிரிநாதர் அருள் அநுபவம்
தயாரிப்பு : வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்
தகவல்: திருப்புகழ்ச் செல்வம் நூல் - வலையபேட்டைரா. கிருஷ்ணன்