உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் உலகிற்கு அளித்த அழகன் முருகன். அவனைப்பாடி புகழ்ந்தவர் பலர். அந்த வரிசையில் சிறப்பிடம் பெற்று நமக்கு வழி காட்டுவதற்காக அவதரித்தவர் அருணகிரிநாதர்.அவர் இவ்வுலகில் உய்ய அருளிய திருப்புகழ்,கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்ற தமிழ் என்னும் அமுதம் மூலம் நமக்களித்துள்ள துதிப் பாடல்கள் பக்திச் சுவை மிக்கவை. அவை மாந்தரின் உள்ளத்தில் அமைதி, ஆனந்தம், உறுதி, நம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் தன்மை படைத்தவை. அவர் ஏறுமயில் ஏறி விளையாடும் குகன், ஈசனுடன் ஞான மொழி பேசும் குமரன், கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் வேலன், குன்றுருவ வேல்வாங்கிய தீரன், மாறுபடு சூரரை
வதைத்த வீரன், வள்ளியை மணம் புரிந்த அழகன், என அந்த ஆறுமுகனின் பெருமையை அழகு கொஞ்சும் தமிழில் பாடிப் புகழ்கின்றார். அருணகிரிநாதர் பாடி அருளிய திருப்புகழ்ப் பாடலுக்கு முதலடி எடுத்து அருளிய அந்த ஆறுமுகனே ‘முத்தைத்தரு‘ என அடியெடுத்துக் கொடுத்து ஆரம்பித்து வைக்கின்றான். அன்னைக்கு நாம் அளிக்க வேண்டிய சிறப்பையும் இது நமக்கு உணர்த்துகின்றது.
தற்கால வாழ்க்கையில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணிலடங்கா.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்”
என்ற வள்ளுவர் வாக்கிற்படி பிறவியாகிய பெருங்கடலை கடக்க இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டு அவனை அடைய முயற்சி செய்யவேண்டும். இறைவனை அடைய பக்தி, தொண்டு, தியானம், கானம் ஞானம் என பல வழிகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர்.சரி இந்த வழியை இயந்திர வாழ்க்கை வாழும் மனிதன் இன்றைய அவசர உலகத்தில் கடைப்பிடிக்க இயலுமா? இதற்கு இயலாது என்று உறுதிபட கூறலாம்.
ஆனால் நம் அருளாளர் அவர்கள் இறைவனின் திருவடியை அடைய எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடிய ஓர் எளிய வழியை திருப்புகழில் உணர்த்தியுள்ளார்கள். 'சரணகமலாலயத்தை' என்று துவங்கும் சுவாமிமலைத் திருப்புகழ் இறைவனின் திருவடியை அரை நிமிஷ நேரமாவது தியானிக்க வேண்டும் என்று பாடி உள்ளார்கள். ஒரு நிமிடம் என்பது அறுபது வினாடிகள் என்று 19வது நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலைபெற்று இப்போதும் வழக்கத்தில் இருக்கின்றது. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் நிமிடம் என்ற சொல் கண் இமைக்கும் நேரத்தையே குறிப்பிட்டது. அருளாளர்கள் அரை நிமிட நேரம் மட்டுமே திருவடிகளைத் தியானிக்க வேண்டுகிறார். அப்படி என்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாதி தான். இந்த சிறிது நேரத்திலாவது நாம் இறைவனின் திருவடிகளைத் தியானம் செய்தால் அவனது அருள் கிட்டும் என்பது அருளாளரின் தெய்வ வாக்கு.
இன்னல்கள் மிகுந்த இவ்வாழ்க்கையில் நீ அஞ்சாதே என அபயம் அளிப்பது அருணகிரிநாதரின் சொல்லாழமும், பொருளாழமும் மிக்க திருப்புகழ் போன்ற அவரது தெய்வீக அழகு மிளிரும் பாடல்களே.
இறைவன் நமக்கு அளித்துள்ள மானுடப் பிறவியை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக மிக அருமையான எளிமையான வழியை அருணகிரிநாதர் போன்ற அடியார்கள் நமக்கு அளித்துள்ள கருத்துக்கள் நிரம்பியுள்ள துதிப்பாடல்களை தினமும் பாடி இறைவனை பணிதல் வேண்டும்.
ரத்னகிரி திருப்புகழில் 'பத்தியால் யானுனைப் பல காலம் பற்றியே மா திருபுகழ்பாடி' என கூறியுள்ளார். அவ்வாறு பாடுவது நமக்கு முக்தி சேர்வதற்கான வழியை காட்டும். 'அருண தள பாத பத்மம் அனு தினமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில்வீரா' என பழனிமலை குடிகொண்டுள்ள பாலதண்டாயுதபாணியைப் பாடுகின்றார். தமிழ் என்றால் முருகன்; முருகன் என்றால் தமிழ். முருகனைப் பாடவே தமிழை அவன் நமக்குக் கொடுத்தான்.
அழகும் கருத்தும் நிரம்பிய சொல்லோவியங்களால் முருகனைப் பாடிப் பரவ அருணகிரியார் நமக்கு திருப்புகழ்,கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்ற துதிப் பாடல்களை அருளியுள்ளார்.'சேந்தனைக் கந்தனை‘ எனத்தொடங்கும் கந்தர் அலங்காரப் பாடலில் அருணகிரிநாதர் முருகனை 'செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக் காந்தனை' என பாடித் துதிக்கின்றார்.
அருளாளர் அவர்களின் கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும். அவர் முக்காலத்தையும் உணர்ந்த தீர்க்கதரிசி. தற்பொழுது இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்னும் பெருந்தோற்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நம் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் கடல் சூழ்ந்த உலகில் வாழும் அனைத்து நாட்டு மக்களும் பெரும் இன்னல்களையும், அவதிகளையும் சந்தித்து வருகின்றனர். இந்த பெருந்தொற்றைக் குறிக்கும் வகையில் ‘சரவணபவ நதி’ என துவங்கும் திருவேங்கடத் திருப்புகழில்,
'கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே'
என்று அன்றே பாடியுள்ளார்கள்.
எனவே அவசரமான உலகியல் போராட்டங்களால் துவண்டு போயுள்ள நாம், தமிழ்க்கடவுள் முருகன் அருளால் அருணகிரிநாதர் மூலம் நமக்கு கிடைத்துள்ள திருப்புகழ்,கந்தரலங்காரம் கந்தரனுபூதி முதலிய அமுதம் போன்ற துதிப்பாடல்களைப் பெரும் செல்வமாக கருதுவோம்.தினமும் அவனருள் வேண்டி ஒரு திருப்புகழையாவது நாம் பாட வேண்டும். பாட முடியாதவர்கள் திருப்புகழைக் கேட்டு மகிழலாம்.
அப்படி பாடுவதைக் கேட்பதனால் சோதனைகளைத் தாங்கும் சக்தியும், பூரண மன அமைதியும் கிட்டும் என்பது திண்ணம்.
ஆதி அருணாசலம் அமர்ந்த மயில் ஏறி விளையாடும் அந்த முருகனைப் பாடி வாழ்க்கை என்ற விளையாட்டில் வெற்றி பெறுவோம்.
வாழ்க அருணகிரிநாதர் நாமம்! வாழ்க சந்தத் தமிழ்!

