மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி...
திரு. தி.மா. இராமலிங்கம், திருவண்ணாமலை
ஒரு கியூ ஆர் குறியீடு.
LDதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
என்று அருளாளர் அருணகிரிநாதர் பெருமான் கருவூர் திருப்புகழில் பாடுவார்.
மதியால் வித்தகனாகவும், மனதால் உத்தமனாகவும் மானிடரால் மண்ணுலகில் வாழ்வது சாத்தியமா? மதி நுட்பமும் உத்தம குணமும் ஒரு சேர ஒருவருக்கு அமைவது அரிது. உதாரணத்திற்கு மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால் கர்ணன் மதியால் தலைசிறந்து விளங்கினான். ஆனால் மனத்தூய்மை அவரிடம் இல்லாமல் இருந்தது. செஞ்சோற்றுக் கடனுக்காக தீயவனான துரியோதனனின் மாபாதகச் செயல்களுக்கு துணை நின்றான்.
அதேபோல் மனத்தூய்மை கொண்டு அறவழியில் செயல்பட்ட தர்மன் மதியால்
வித்தகனாக செயல்படவில்லை. அவன் துரியோதனாதிகளின் வலையில் விழுந்து தனது அரசையும், அகமுடையாளையும் இழந்தான்.
ஆனால் மதியால் வித்தகன் ஆகவும் மனதால் உத்தமனாகவும் அருளாளர் திகழ்ந்தார்கள். முருகப்பெருமான் அருளால் முத்தமிழில் முத்து முத்தாகத் திருப்புகழ் பாடிய அருளாளர், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது படைப்பை நாற்றிசை மக்களும் அற்புதம் அற்புதம் என்று பாராட்டினார்கள்.
வில்லிப்புத்தூராருக்கும் அருளாளருக்கும் நடந்த வாதில் வில்லியார் பாடிய அனைத்து பாடல்களையும் குற்றமற அருளாளர் விளக்கினார். ஆனால் அருளாளர் அவர்கள் கந்தரந்தாதி 54வது பாடலைப் பாடியபோது வில்லிப்புத்தூரார் விளக்கம் கூற முடியாமல் தவித்தார். அப்பொழுது அருளாளர் அவர்கள் போட்டியின் விதிப்படி அவரின் காதை அறுக்காமல் மன்னித்தருளி 'கருணைக்கு அருணகிரி' என்ற நற்பெயரையும் பெற்றார். சரி அக்காலத்தில் வாழ்ந்த சிலரால் நல்லவராகவும், வல்லவராகவும் இருக்க முடிந்தது. இக்காலத்திற்கு அது பொருந்துமா?அப்படி யாராவது இக்காலத்தில் வாழ்ந்திட இயலுமா?
இதற்கு நாம் ஆம் என்று உறுதியோடு கூறலாம். இருபதாம் நூற்றாண்டில் இவ்வையகத்தில் வாழ்ந்த வாரியார் சுவாமிகள் அதற்கு தகுந்த உதாரணம். அருளாளர் அவர்களை தனது குருவாக கொண்ட வாரியார் சுவாமிகள் அவருடைய குருநாதரைப் போல் மதியால் வித்தகராகவும் மனதால் உத்தமராகவும் இருந்து வாழ்ந்து காட்டினார்.
சுவாமிகளின் மதிநுட்பம்
1906 ஆம் ஆண்டு மல்லையதாச பாகவதர் கனகவல்லி தம்பதியர் ஈன்ற 11 பிள்ளைகளில் நான்காவது மகவாக வாரியார் சுவாமிகள் அவதரித்தார். அவர் பள்ளி சென்று பாடம் கற்கவில்லை. அவர் தந்தை ஓர் பேரறிஞர். அவர் தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றவர். சொற்பொழிவு செய்வதையே தனது தொழிலாகச் செய்து வந்தார். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சுவாமிகள் இளம் வயதிலிருந்தே தம் தந்தையாரிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.
'ஓரெட்டில் பயிலாத பழக்கமும், ஈரெட்டில் படிக்காத படிப்பும் 'என்ற முதுமொழிக்கு ஏற்ப தனது எட்டாவது வயதிலேயே வெண்பா எழுதும் ஆற்றலைப் பெற்றார்.தனது பத்தாவது வயதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை மனனம் செய்தார். நீதி நூல்களான திருக்குறள்,ஆத்திசூடி நாலடியார் போன்ற நூல்களை மிக நுணுக்கமாகப் படித்திருந்தார். ஐம்பெரும் காப்பியங்களை கசடறக் கற்றிருந்தார்.தேவாரத்தில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார்.
திருவாசகம் என்னும் தேனில் மூழ்கித் திளைத்தார். திருமந்திரத்தில் மயங்கி மதியினைப் பறிகொடுத்தார். கரும்புச் சாரினும் இனிய கம்பராமாயணத்தையும், பார்க்கடல் அமுதினும் சுவைமிக்க திருப்புகழையும் அவர் விரும்பி மிகுதியாய்ப் பருகினார். தமிழின் அனைத்து இலக்கியங்களையும் கற்றிருந்த போதிலும் அவர்களுக்கு திருப்புகழ் மீது அதிக நாட்டம் இருந்தது. வாரியார் சுவாமிகள் தனது முதல் பிரசங்கத்தை 19வது வயதில் துவக்கினார். தந்தை உடல்நலம் இன்றி இருந்ததால் தந்தைக்கு பதிலாக அவர் சொற்பொழிவு ஆற்றச் சென்றார். தனது கன்னி உரையை அன்றுதான் முதன்முதலில் துவக்கினார். அவர் ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாகக் கூறி நகைச்சுவையுடன் பேசி அனைவரையும் கவர்ந்தார்.
பிறகு அவர் தமிழகம் எங்கும் சென்று சொற்பொழிவு நடத்தினார். அவரது பிரசங்கத்தை பிள்ளைகள், பெண்டிர்கள், பாமரர்கள், பண்டிதர்கள் என அனைவரும் ரசித்தனர். சுவாமிகளின் சொற்பொழிவில் சிறுவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு முன் வரிசையில் அமர்வர். அவர்களிடம் கேள்வி கேட்டு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு புத்தகம் பரிசாகக் கொடுத்து அனைவரின் முன் பாராட்டுவார்கள். அதேபோல் மகளிரிடம் நல்ல அறிவுரைகளைக் கூறுவார். கணவனை மதிக்கவேண்டும்,அவரிடம் அன்பு காட்டி அனுசரணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அதேபோல் ஆடவர்களும் பெண்களை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கண்கலங்கினால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் அறிவுரை கூறுவார்.
சுவாமிகளிடம் சமயோஜித புத்தி (Presence of mind) மிகுதியாக இருந்தது. ஒரு பிரசங்கத்தின் போது சுவாமிகள் கூட்டத்தில் அமர்ந்திருந்த சிறுவர்களிடம் முருகனின் தந்தை பெயர் என்னவென்று கேட்டார். திருவிளையாடல் திரைப்படம் வெளிவந்த நேரமது. ஒரு சிறுவன் உடனே எழுந்து 'சிவாஜி' என்று பதில் கூறினான். அப்போது கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். சுவாமிகள் கூட்டத்தைப் பார்த்து, 'ஏன் சிரிக்கிறீர்கள்? சிறுவன் சொன்ன பதில் சரிதானே? நம் நாட்டில் காந்திஜி, நேருஜி, ராஜாஜி, போன்ற தலைவர்களை ஜி போட்டு தானே அழைக்கின்றோம். அதேபோல் அந்த சிறுவன் சிவனை ஜி போட்டு சொல்லியிருக்கின்றான்' என்று சொன்னதும் அனைவரும் வாரியாரின் மதித் திறமை கண்டு வியந்தனர்.
ஒருமுறை சுவாமிகள் திருப்பரங்குன்றம் சென்றிருந்தார்கள். அப்போது இஸ்லாமியர்கள் அவ்வூருக்கு சிக்கந்தர் மலை என்று பெயர் வைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி சுவாமிகளிடம் கேட்டபோது அவர் 'சிக்கந்தர் மலை என்று அழைப்பதில் தவறில்லையே' என்று கூறியபோது அனைவரும் ஆச்சரியத்துக்கு உள்ளானர்கள். அப்பொழுது சுவாமிகள் முருகப் பெருமானை நாம் கந்தன் என்று ‘ன்’ போட்டு அழைப்பது மரியாதையாக இருக்காது. அதனால் கந்தர் என்று அழைப்பது உண்டு. முருகன் தந்தை சிவபெருமான். அப்படியென்றால் முருகனின் இன்சியல் 'சி'. கந்தர் முன்னால் 'சி' போட்டால் சி -கந்தர். ஆகையால் சிக்கந்தர் குடிகொண்டிருக்கும் மலை என்று பொருள் கொள்ளலாம் என்று கூறியபோது இப்படியெல்லாம் கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என்று அனைவரும் வியந்து பாராட்டினர்.
ஒருமுறை சுவாமிகளின் கூட்டம் நடைபெற இருந்த இடத்தின் அருகே 'திருநீறு இட்டார் கெட்டார், இடாதார் வாழ்ந்தார்' என்று சில விஷமிகள் எழுதியிருந்தனர். இதனை சுவாமிகள் கவனத்திற்கு கொண்டு வந்த போது அவர்கள் சரியாகத்தான் எழுதி இருக்கிறார்கள் என்று கூறினார். அனைவரும் ஒன்றும் புரியாமல் தவித்தனர். அதற்கு சுவாமிகள் அந்த வாக்கியத்தை பதம் பிரித்து 'திருநீறு இட்டு யார் கெட்டார், திருநீறு இடாது யார் வாழ்ந்தார்' என்று சொன்னதும் அனைவரும் வாயடைத்துப் போனார்கள்.
சுவாமிகள் பல தமிழ் இலக்கியங்களை படித்து இருந்தாலும் திருப்புகழ் மீது அளப்பரிய பற்று இருந்தது. அவர் எந்தத் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினாலும் அதில் எப்படியாவது திருப்புகழை மேற்கோள் காட்டுவார். அதேபோல் திருப்புகழ்ப் பாக்களை மின்னல் வேகத்தில் மூச்சுவிடாமல் பாடுவார். ஒரு முறை வாஷிங்டன் சென்றிருந்தபோது அங்கு நடந்த சொற்பொழிவில் பூத வேதாள வகுப்பில் வரும் 'அருண கணபண புயக' என்ற பாடலைத் தொடர்ந்து வேகமாக நான்கு நிமிடத்தில் பாடி நிறுத்தினார். அனைவரும் பலத்த கரகோஷம் செய்தனர். அப்போது சுவாமிகள் நான் பாதி பாடல் தான் பாடி முடித்தேன் என்று கூறி இன்னும் மூன்று நிமிடங்கள் தொடர்ந்து பாடி அனைவரையும் வியக்க வைத்தார்.
சுவாமிகளின் பக்தன் ஒரு முறை எப்படி சாமி நீங்கள் எந்த குறிப்பும் இல்லாமல் எந்த தலைப்பிலும் உடனுக்குடன் பேசுகிறீர்கள் என்று கேட்டபோது 'மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை நிரப்பினால் எங்கு குழாயைத் திறந்தாலும் தண்ணீர் வரும்' என்று கூறி தனது ஆழ்ந்த வாசிப்பை வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் நிகரற்ற வித்தகனாகத் திகழ்ந்தார்.
சுவாமிகளின் உத்தம குணம்
மதியால் வித்தகனாக இருந்த சுவாமிகள் மனதால் உத்தமனாகவும் திகழ்ந்தார்கள்.
'ஈதல் இசைப்பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'
என்ற திருக்குறளுக்கு ஏற்ப சுவாமிகள் தனக்கு கிடைத்த அனைத்து வருமானத்தையும் தானதர்மம் செய்து வாழ்ந்தார் .சிறு வயதிலிருந்தே அவர் ஆன்மிகத்தின் மீதும் தமிழ் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார்கள். தன் தந்தையார் காங்கேயநல்லூர் கோபுரத் திருப்பணி செய்த போது உடனிருந்து அவருக்கு உதவி செய்தார். சுவாமிகள் 19வது வயதில் இருந்தே பிரசங்கம் செய்து செல்வம் ஈட்டினார். அவருக்கு கிடைத்த வருவாயில் சுவாமிகள் பல கொடைகளை செய்துள்ளார்கள் .திருச்சி அருகே உள்ள ராமகிருஷ்ண அனாதை ஆசிரமத்திற்கு மாதாமாதம் பணம் கொடையாக அளித்துள்ளார்.
அதேபோல் தன்னை நாடி வரும் வறிய மாணவர்களின் படிப்புச் செலவை முழுவதும் ஏற்றார். நோயுற்றவர்களுக்கு மருத்துவ உதவியும், விதவைகளுக்கு மாத வருவாயும் கிடைக்கும் வகையில் அவர் பல உதவிகள் செய்தார்.
காங்கேய நல்லூரில் உள்ள பள்ளிக்கும் பல உதவிகளைச் செய்துள்ளார்கள். காங்கேயநல்லூர் கோவிலில் நித்திய அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்தார். தன் குருநாதர் மதுரை திருப்புகழ் ஸ்வாமிகள் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பச் செலவை ஏற்றுக்கொண்டு அவரது இரு மகள்களுக்கும் சுவாமிகளே திருமணம் செய்து வைத்தார்கள். தனது 27-வது வயதில் வயலூர் திருப்பணியை முருகன் அருளால் துவக்கி ராஜகோபுரம் கட்டி குடமுழுக்கை திறம்பட 1936ல் முடித்தார். எல்லா பத்திரிகைகளிலும் சுவாமிகள் செய்த வயலூர் திருப்பணி பற்றி பாராட்டி எழுதி இருந்தார்கள். ஆனால் இந்து பத்திரிகையில் வயலூருக்கு பதிலாக தவறுதலாக வாரியார் வடலூர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினார்கள் என்று அச்சிட்டிருந்தனர். இதனை பிழையாகக் கருதாமல் கந்தனின் கட்டளையாகவே கருதிய சுவாமிகள் வடலூர் திருப்பணி செய்ய முற்பட்டார்.
சுவாமிகள் வடலூர் திருப்பணியை 1941 ஆம் ஆண்டு துவக்கினார்கள். வயலூர் திருப்பணி போல் சீக்கிரம் முடித்து விடலாம் என்று எண்ணினார். ஆனால் அவர்களுக்கு பல தடைகள் ஏற்பட்டன. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அந்த கோயில் இருந்தது.அந்த துறை அதிகாரி ஒருவருக்கும் சிற்பிக்கும் மன வேறுபாடு உண்டாகி திருப்பணிக் குழுவை கலைத்துவிட்டனர்.திருப்பணி நின்றுவிட்டது. சுவாமிகள் பலபெரிய மனிதர்கள் உதவியுடன் அப்போதைய அறநிலைத் துறை ஆணையராக இருந்த சின்னசாமி பிள்ளையிடம் முறையிட்டார். ஆணையர் அவர்கள் வாரியார் சுவாமிகளின் திருப்பணிச் செலவுகளை ஆய்வு செய்யும் பொருட்டு கணக்குகளை ஒப்படைக்குமாறு வேண்டினார். கணக்கை பூதக்கண்ணாடி வைத்து ஆறுமாதம் தணிக்கை செய்து ஒரு குற்றம் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுவாமிகள் தனது பயணச் செலவு கூட எழுதவில்லை என்பதை அறிந்தார்.
ஆணையர் தனது தவற்றை உணர்ந்து மீண்டும் திருப்பணியை செய்யுமாறு சுவாமிகளை வேண்டினார்.வடலூர் குடமுழுக்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1950இல் பல தடைகளைக் கடந்து இனிதே நடந்தேறியது. பண்பாளர்கள் பசியையும் பிணியையும் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு பொழுதும் பழியைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். குடமுழுக்கு முடிந்த பிறகு சுவாமிகள் வரவு செலவு கணக்குகளை 400 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சிட்டு விநியோகம் செய்தார்கள்.
இத் திருப்பணியைக் குறித்து ஆணையர் சின்னசாமி 'வாரியார் வடலூர் திருப்பணியை நேர்மையாக நடத்தி முடித்தார். வரவு செலவு கணக்கை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதைப்பற்றி குற்றம் குறை எவரும் கூறவில்லை. ஒவ்வொரு தமிழனும் இவ்வாறு செய்ய வேண்டும்' என்றார்.
சுவாமிகள் அதனைத்தொடர்ந்து மோகனூர் காஞ்சிபுரம் சமயபுரம் நெல்லையப்பர் கோயில் என பல திருப்பணிகள் செய்தார்.அவர் வாழ்நாளில் மொத்தம் 27 கோவில்களுக்கு திருப்பணி செய்து திருப்பணிச் சக்கரவர்த்தி என்ற பட்டமும் பெற்றார்.
பூஜை புனஸ்காரம் செய்வது,பைந்தமிழ் நூல்களைப் படிப்பது, பிரசங்கம் செய்வது, பக்தி நூல்களை எழுதுவது,பழுதடைந்த ஆலயங்களுக்கு திருப்பணி செய்வது ஆகியவையே தனது கடமையாக கொண்டு வாழ்ந்தார்கள்.
ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய சுந்தரர் சிவபெருமான் அருளால் திருத்தொண்டத்தொகை எழுதி 60 நாயன்மார்களை உலகிற்கு அறிமுகம் செய்தார்கள். பின்னாளில் 13 ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் பெருமான் மேலும் சுந்தரர் மற்றும் அவரது தாய் தந்தையரை அப்பட்டியலில் சேர்த்து நாயன்மார்கள் எண்ணிக்கையை 63 ஆக உயர்த்தினார். அதற்குப்பின் 700 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பட்டியலில் எவரும் விரிவுபடுத்த எண்ணவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய வாரியார் சுவாமிகளை பக்தகோடிகள் ஏகோபித்து அவரை 64 வது நாயன்மாராக போற்றி மகிழ்கின்றனர்.
'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்'
என்ற வள்ளுவனின் வாக்கிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
மதியால் வித்தகனாகவும் மனதால் உத்தமனாகவும் வாழ்ந்ததால்தான் அவர் தெய்வத்தன்மையை அடைந்தார் என்று உலகம் கூறுகின்றது.
வாழ்க வாரியார் சுவாமிகள்! ஓங்குக அவர் புகழ்
★★★
*இறந்திட்டுப் பெறவே கதி யாயினும், இருந்திட்டுப் பெறவே மதி யாயினும், இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே! -அருளாளர் அருணகிரிநாதர் குசேலர் கண்ணனுக்கு அளித்தது நெல் அவல், அருளாளர் அருணகிரிநாதர் நமக்கு அளித்தது சொல் அவல்.
- வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன். 307*

