திருவண்ணாமலையில் சற்குரு
அருணகிரிநாதரின் மணிமண்டப கும்பாபிஷேகச்
சிறப்பு மலருக்கு அடியாளின் எளிய கட்டுரை
சமர்ப்பணம்.
சற்குரு அருணகிரிநாதரின் பொற்பாத
கமலங்கள் போற்றி! போற்றி! அருளாளர் சற்குரு
அருணகிரிநாதருக்கு அவர் பிறந்து, வளர்ந்து, முருகன்
அருள் பெற்று, திருப்புகழ் பாடிய திருத்தலம்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகிய
திருவண்ணாமலையில் இடம் தேர்வாகி வேலை
ஆரம்பிக்க பூமி பூஜை போடுகிறார்கள் என்ற செய்தி
கேட்டவுடன் மனம் மகிழ்ந்தவர்களில் நானும்
ஒருத்தியாவேன்.

ஏன் என்றால் திருவண்ணாமலைக் கோவிலில் ஆகஸ்டு 15 நாளிலே அங்கு நடக்கும் திருப்புகழ் விழாவில் எங்கள் சபையாம் சிவகாசி ஸ்ரீ அருணகிரிநாதர் சபையினால் வருடந்தோறும் சுமார் 54 வருடங்களாக நாங்கள் வந்து பாடுகிறோம். அப்போது கோவில் சுற்றுப்பிரகாரத்தில் இருக்கும் அருணகிரிநாதரின் சமாதியில் (மண்டபம் அடியில்) அருணகிரிநாதரின் சிறிய உருவம் கால் மடக்கி, முடங்கியபடி இருப்பதைக் கண்டு மிகவும் மனம் வருந்துவேன். அங்கே அமர்ந்து சபை அன்பர்களோடு திருப்புகழ் பாடுவோம். பின் நான் அவரிடம் “ஐயா அருணகிரிநாதரே, உமக்கென்று ஒரு மணி மண்டபம் என்று அமையுமோ? அல்லது இந்த மண்டபத்தின் மேலாவது உமக்கு ஒரு சிலை அமைத்து வழிபாடு செய்ய மாட்டார்களா? அண்ணாமலையாரே உமது மனம் என்று இரங்குமோ?” என ஒவ்வொரு வருடம் வரும் போதும் எண்ணி முறையிடுவேன். அதற்கு செவிசாய்த்தார் ஈசன். எங்கள் சபை செயலாளர் A.நாகரத்தினம் குருநாதரின் மணிமண்டப வேலை தொடங்கியது. பூமிபூஜை போட்டாகிவிட்டது. மணிமண்டப காணிக்கையாக நமது சபை அன்பர்கள் சார்பாக நாமும்

நிதி கொடுக்க வேண்டும்
என்றார்கள். அப்போது
சற்குருநாதர் அடியாளிடம்
(G.மகாலட்சுமி) “இந்தப்
பொறுப்பை நீ ஏற்றுக் கொள்”
எனச் சொல்வது போல
உணர்ந்தேன். செயலரும்
அந்தப் பொறுப்பை எனக்குத்
தந்தார். பின் சபை
அன்பர்களிடம் “நாம் ஸ்ரீ அருணகிரிநாதர் பெயரில் சபை
அமைத்துள்ளோம். திருப்புகழை நமது மூச்சாகக்
கொண்டுள்ளோம்.

ஆதலால் நாம் மணிமண்டப காணிக்கையாக ஒரு பெருந்தொகை கொடுக்க வேண்டும். இது நாம் வாழும் காலத்தில் கிடைத்த பெரும் பேறு. ஆதலால் இந்தப் புண்ணிய காரியத்தில் நாம் அனைவரும் பங்குகொண்டு குருவருள் பெற வேண்டும்” எனக் கூறினேன். சபை அன்பர்கள் அனைவரும் தங்கள் உறவினர், தெரிந்தவர்கள் என்று வசூல் செய்து கொடுத்தார்கள். எல்லாம் குருநாதரின் கருணையாகும்.

இந்த விதமாக அன்பர்கள் குருநாதர் மீதுள்ள அன்பினாலும் திருப்புகழ் மீதுள்ள தீராக் காதலினாலும் தங்கள் உள்ளக் களிப்பை வெளிப்படுத்தினார்கள். இதன் மூலமாக மொத்தம் ரூ. 95,609/- அடியாள் வசூலித்த தொகையாகும். மேலும் சபை செயலாளர் A.நாகரத்தினமும் நிறைய அன்பர்களிடம் வசூல் செய்த தொகை யாவும் சேர்த்து மணிமண்டப புண்ணிய காரியத்திற்கு உதவியதில் எங்கள் சபையினர் அனைவரும் பெரும்பாக்கியம் பெற்றவர்கள் ஆகிறோம். மேலும் எங்கள் சபையாகிய ஸ்ரீ அருணகிரிநாதர் சபைக்கும் அடியாளுக்கும் வயது 76. சிறுவயது முதற்கொண்டே எனது தந்தையார் அடியாளை சபைக்கு அழைத்து ஆன்மீக வளர்ச்சி அடையச் செய்தார். அவர் சபையை ஸ்தாபிதம் செய்த நான்கு பேரில் ஒருவராவார்.

1945ஆம் வருடம் சபை ஸ்தாபிதம். அந்நால்வர்கள் முதலில் ஸ்தாபகர் ரத்தினசாமி நாடார் மற்றும் சங்கரலிங்க நாடார். A.A. நடராஜநாடார், வைகுண்டராம நாடார் ஆவார்கள். இவர்களில் A.A.நடராஜ நாடார் என்பவர் எனது தந்தை. இவர் 25 வருடங்கள் செயலாளராக இருந்து தொண்டுகள் பல செய்தவர். அவர் வழியில் வந்த அடியாளும் இன்று வரை தொண்டு செய்துவருகிறேன்.

எனது தந்தை 1968ஆம் ஆண்டு திருவண்ணாமலை விழாக் கமிட்டியார் (அப்போது இருந்தவர்கள்) அவர்களிடம் சிவகாசி அருணகிரிநாதர் சபையினர் ஒவ்வொரு ஆண்டும் வந்து விழா மேடையில் திருப்புகழ் பாடுவதற்கு அவர்கள் கொடுத்த கையேட்டில் பதிவு செய்த ஏட்டினைக் கையில் வைத்தபடி ஆனந்த விகடன் புத்தகத்தின் நடுப்பக்கத்தில் புகைப்படம் போட்டுக் கௌரவித்தனர். அதிலிருந்து தவறாமல் ஒவ்வொரு

வருடமும் வந்து திருப்புகழ் பாடும் புண்ணியத்தை
அண்ணாமலையாரும், விழாக் கமிட்டியினரும்
தந்திருக்கின்றீர்கள். நன்றியைக் காணிக்கை
ஆக்குகின்றோம்.

சற்குரு ஸ்ரீ அருணகிரிநாதர் பக்கரை விசித்ரமணி என்ற திருப்புகழில் “உயர் திருப்புகழை விருப்பமொடு செப்பு” என முருகனே தனக்கு ஆணையிட்டுள்ளதாக உறுதிபடக் கூறியது போல் நாமும் திருப்புகழை விருப்பமுடன் பலமுடன் ஓதுவோம். அதனால் நாம் குருநாதரின் வாக்குப் போல் “சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு பெற்று வாழ்வோம்” எனக் கூறி முடிக்கின்றேன். நன்றி! வணக்கம் பல.

என்றும், அனைவர்க்கும்
வேலும் மயிலும் துணை.

★★★

ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் பரவிய திருப்புகழ்த் தலங்கள் (தொகை அட்டவணை) திருப்புகழ் - 1331 திருப்பரங்குன்றம் (14) திருச்செந்தூர் (84) திருவாவினன்குடி (13) பழநி (87) சுவாமிமலை (40) குன்றுதோறாடல் (5) குன்ற மலைத்தலங்கள் (207) பழமுதிர்சோலை (16) பழமுதிர்சோலை பிற தலங்கள் (346) பொது (302) க்ஷேத்ரக் கோவை (1) ஆறு திருப்பதி பொது (2) காஞ்சிபுரம் (45) திருவானைக்கா (14) திருவண்ணாமலை (79) திருக்காளத்தி (3) சிதம்பரம் (67) விநாயகர் துதி - 5 நூல் தொடக்கம் - 1

தணிகைமணியவர்களின் முருகவேள் பன்னிரு திருமுறை 5 தொகுதிகளில் உள்ள மொத்த பாடல்கள் - 1325. திருமுருகக் கிருபானந்தவாரியார் சுவாமிகள் பதிப்பில் உள்ள மொத்த பாடல்கள் - 1324. சைவ சித்தாந்த மகா சமாஜப் பதிப்பின்படி மொத்த பாடல்கள் - 1361. “நாலிலங்கதின்” (ஆவின்குடி), “மனமே உனக்” (சிதம்பரம்), “காதலுடை” (திருமறைக்காடு), “குருபரசரவண” (பொது) ஆகிய 4 பாடல்கள் தணிகைமணியவர்கள் பதிப்பில் மட்டுமே உள்ளன. “சிவணிதாவிய” (பழநி), “உரையும் சென்றது” (திருப்புனவாயில்), “கருவெனுமாயை” (பொது) ஆகிய 3 பாடல்கள் வாரியார் சுவாமிகள் பதிப்பில் மட்டுமே உள்ளன. சேலம் குஹானந்தா திருப்புகழ் சபை பதிப்பின்படி மொத்த பாடல்கள் 1331. இதில் செங்குன்றாபுரம் என்ற தலத்திற்குரிய ஒரு திருப்புகழ் புதியதாக கிடைத்து சேர்க்கப்பட்டுள்ளது. தகவல் : அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் திருப்புகழ்த் தலபயணம் நூல்.