ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது அவர்கள் தங்கள் மொழியையும், மதத்தையும், கலாச்சாரத்தையும், இந்திய மக்கள் மீது திணிக்க எண்ணினார்கள். அவர்களுடைய மதத்தையும், கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ளாத இந்திய மக்கள் அவர்களது ஆங்கில மொழியின் மீது மிகவும் ஆர்வம் கொண்டார்கள்.
அப்போது ஆங்கிலத்தில் கற்பதையும் பேசுவதையும் மிகவும் பெருமையாகக் கருதினார்கள். இன்னும் சிலர் சட்டப் படிப்பையும், மருத்துவ படிப்பையும் பயில்வதற்காக இங்கிலாந்துக்கு பயணித்தார்கள்.
அந்த ஆங்கில மோகம் தமிழ்நாட்டு மக்களையும் விட்டு வைக்கவில்லை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான கல்யாணசுந்தரம் (திரு.வி.க) ஏகாம்பரம், பார்த்தசாரதி மற்றும் துரைசாமி ஆகியோர் ஆங்கில மோகத்தின் காரணமாக 1901 ஆண்டு அம்மன் கோவில் தெருவில் ஒரு இளைஞர் மன்றத்தை ஆரம்பித்தார்கள். அந்த இளைஞர் மன்றம் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த உதவியது.
1902ஆம் ஆண்டு 27 வயது நிரம்பிய யாழ்பாணம் கதிர்வேல் பிள்ளை வெஸ்லி பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அவர்கள் திருக்குறளின் மேன்மையும் ஐம்பெரும்காப்பியங்களின் சிறப்பையும், பக்தி இலக்கியங்களின் பெருமையையும் நயமாக எடுத்துரைத்தார். கதிர்வேற்பிள்ளை அவர்களின் தமிழ் பயிற்றுவிக்கும் முறையை கண்டு மாணவர்கள் வியந்து தமிழ் மீது அளப்பரிய பற்று கொள்ளலானார்கள்.
கதிர்வேல் பிள்ளை அவர்கள் அந்த மாணவர்களுடைய ஆங்கில மோகத்தை மடை மாற்றம் செய்து மங்காத் தமிழ் மீது மயக்கம் கொள்ள வைத்தார். ஆங்கிலப் பிரியர்களாக இருந்த அவர்கள் தமிழ் பித்தரர்களாக மாறினார்கள்.
1903-ஆம் ஆண்டு அந்த இளைஞர் சங்கம் திரு. கதிர்வேற்பிள்ளை அவர்களின் தூண்டுதலின் பேரில் “பாலசுப்பிரமணிய பக்த ஞான சபை” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த சபை முதலில் முத்து முதலித் தெருவில் உள்ள அப்பாசாமி முதலியார் வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
பிறகு 1904-ஆம் ஆண்டு அதே தெருவில் உள்ள கந்தசாமி முதலியார் அவர்கள் இல்லத்திற்கு சபை மாற்றம் செய்யப்பட்டது. தினமும் காலை பிரார்த்தனைகளை திரு.வி.க. அவர்கள் துவங்கி வைப்பார். மாலையில் மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் கற்பித்தார். இந்த சபை சிறிது காலம் சச்சிதானந்தம் பிள்ளைஅவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. பிறகு முத்து முதலித் தெருவில் உள்ள சிவசங்கரன் முதலியார் வீட்டுக்கு மாற்றப்பட்டது. திரு.வி.க.வின் பால்ய நண்பரான சிவசங்கர முதலியாருக்கு சபைக்கு ஒரு சொந்த இடம் இல்லையே என்ற ஒரு வருத்தம் இருந்தது.
சபைக்கு சொந்த இடம் பெறும் பொருட்டு சிவசங்கர முதலியார் அவர்கள் தன்னுடைய உறவினரான பாலசுந்தர முதலியாரை அணுகி மொளபிரேஸ் சாலையில் அவருக்கு சொந்தமான மூன்று கிரவுண்டு இடத்தை தானமாகக் கேட்டார். பாலசுந்தரம் முதலியாரும் அவ்விடத்தை சபைக்கு கொடுக்க சம்மதித்தார். ஆனால் தான் வாங்கப்போகும் வங்கிக் கடனுக்கு சிவசங்கர் முதலியார் ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என்று ஒரு நிபந்தனையும் வைத்தார். சிவசங்கர முதலியார் அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டதால் பாலசுந்தரம் அவர்கள் பக்த ஜன சபைக்கு அந்த இடத்தை தானமாகக் கொடுத்தார்கள். அந்த இடத்தில் குகானந்தா நிலையம் என்ற பெயரில் ஒரு சிறிய கட்டிடம் கட்ட அவர்கள் திட்டமிட்டார்கள்.
1905ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24ஆம் தேதி கட்டிடத்திற்கான கால்கோல் விழா திரு. பாம்பன் சுவாமி அவர்களின் திருக்கரங்களால் நடந்தேறியது. கட்டிடப் பணி மெல்ல வளர்ந்தது. 1915ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி கட்டிடத்திற்கான திறப்புவிழா நடைபெற்றது. நீதிபதி சதாசிவ ஐயர் அவர்கள் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.
இப்பொழுதும் சபையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படமும், நால்வர் படமும் சபை ஆரம்பித்த நாளில் நிறுவப்பட்டன.
*ஸ்ரீபாலசுப்பிரமணிய பத்தஜன சபையிலும்
கால் நிலைபெறுத்தினோர்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
சபை நிலைநிறுத்தின
யாழ்ப்பாணம்.நா.கதிரைவேற் பிள்ளை அவர்கள்
நினைவுக்குறி
சபை.கண்ட ளு:1903 31-1-1915*
ஒவ்வொரு ஆண்டும் சபையின் ஆண்டு விழா மிகவும் விமர்சையாக
கொண்டாடப்பட்டது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திரு.வி.க. அவர்களும் அவருடைய நண்பர்களும் முன் நின்று செய்தனர். இளைஞர்களின் இந்த முயற்சியை கண்டு ராயப்பேட்டையில் வசித்த முதியவர்கள் பெருமிதம் கொண்டார்கள்.
விழா நாளின் முந்தைய இரவு ராயப்பேட்டையில் வசித்த அனைவரும் உறக்கமின்றி உற்சாகத்துடன் பணியாற்றினர். ராயப்பேட்டை வாசிகள் அனைவரும் பூரிப்பில் மிதந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் வாசலை மலர்களால் அலங்காரம் செய்து வாழை மரங்களும், தோரணங்களும் கட்டி மகிழ்ந்தனர். ராயப்பேட்டை முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கு வருகை புரிந்திருந்த அனைவருக்கும் மோர், பானகம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
அன்று காலை முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக முருகனுடைய திருவுருவம் சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சபைக்கு அழைத்து வரப்படும். அந்நேரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க ஓதுவார்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடுவார்கள்.
ஊர்வலம் அங்கங்கே நிற்கும்போது திரு. கதிரவேற்பிள்ளை அவர்கள் ஒரு சிறிய உரை நிகழ்த்துவார்கள்.
ஊர்வலம் சபையை அடைந்ததும் அங்கு மகேஸ்வர பூஜை நடைபெறும். மாலையில் கதிரவேற்பிள்ளை அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்கள். இதனை கேட்க திரளாக பக்தர்கள் கூடினார்கள்.
1907ஆம் ஆண்டு திரு. கதிர்வேல்பிள்ளை அவர்கள் இயற்கை எய்தினார்கள். அவருக்கு பிறகு வண்டிப்பாளையம் ராசப்ப முதலியார் சபையின் தலைவராக பொறுப்பேற்றார். அவரும் கதிர்வேல் பிள்ளைப் போல் ஒரு தீவிர தமிழ்ப் பற்றாளர்.
திரு.வி.க.உதவியுடன் சபையை சீரும் சிறப்புமாக நடத்தினார்கள்
1919ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ரவுலட் சட்டத்தை இயற்றினார்கள். அச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அந்த கொடூர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபை அங்கத்தினர் அனைவரும் தேசபக்தன் பத்திரிக்கை அலுவலகத்தில் கூடினார்கள். அங்கிருந்து அவர்கள்
தமிழ்: கதிர்வேல் பிள்ளை
ஊர்வலமாகப் புறப்பட்டு குகானந்த சபையை நோக்கி பயணித்தனர். ஊர்வலம் சற்று நகர்ந்ததும் திரு.வி.க. அவர்கள் மகாகவி பாரதியார் அவர்களும் ஊர்வலத்தில் வருவதை கண்டறிந்தார்.
அப்பொழுது திரு.வி.க. அவர்கள் பாரதியாரை அணுகி ஒரு பாட்டு பாடும்படி வேண்டினார்கள். திரு.வி.க.வின் வேண்டுகோளை ஏற்று பாரதியார் அவர்கள் “முருகா முருகா முருகா மயில் மீதினிலே வேலுடன் வருவாயோ” என்ற பாடலைப் பாடினார். பாரதியார் இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் முருகப்பெருமானே அந்த படத்தில் இருந்து வெளியேறி அனைவருக்கும் காட்சி கொடுத்ததுபோல் இருந்ததாக திரு.வி.க. அவர்கள் கூறுவார்கள். பாரதியாரின் பாடலைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த அனைவருடைய கண்களும் குளமாயின.
திரு.வி.க. அவர்கள் ஒரு தீவிர முருக பக்தர். அவர் சில வருடங்கள் குகானந்த நிலையத்தில் நக்கீரர் சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி மக்களிடையே திருப்புகழ் மற்றும் அருளாளரின் ஏனைய படைப்புகளின் பெருமையை எடுத்துரைத்து அவர்களிடம் தமிழ்ப்பற்றை உருவாக்கினார்.
“முருகன் அருள்பெற்ற மெய்யடியாராகிய அருணகிரியார் எல்லாவிடத்தும் முருகைக் கண்டு குழைந்து குழைந்துருகி உள்ளத்தில் பெருக்கெடுத்தோடும் இன்ப வெள்ளத்திற் றோய்ந்து பாடிய திருப்புகழை என்னென்பேன்? திருப்புகழ் சந்த அலைவீசும் செந்தமிழ் கடல் அன்றோ? சிவபெருமானை வழிபட்டு நால்வர் தமிழ்வேதம் ஓதினர். முருகனை வழிபட்டு அருணிகிரிநாதர் தமிழ்வேதம் அருளினார் அருணகிரியாரின் திருப்புகழும், ஏனைய பாடல்களும் தமிழ் மறையே ஆகும். செம்மொழியில் சிறந்த அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஓதும்போதும் பிறர் ஓதக் கேட்கும்போதும், முருகக்கடவுளின் நுண்ணிய வடிவம் அகத்தில் புலனாவது போன்ற ஒரு தோற்றமும், ஒரு வித அன்பும், இன்ப எழுச்சி மேலீடும் நிகழ்வதைப் பெறலாம்” என்று திரு.வி.க. அவர்கள் சபையில் திருப்புகழின் சிறப்பைக் கூறுவார். பின்னாளில் இதே கருத்தை “முருகன் அல்லது அழகு” என்று அவர் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
1920ஆம் ஆண்டு திரு.வி.க. சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு.வி.க.வின் அழைப்பின்பேரில் தமிழ்த் தாத்தா திரு.உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் இரண்டு வருடங்கள் ஆண்டு விழாவிற்கு தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். இப்படி பல சாதனைகளை செய்து வந்த சபை திடீரென்று சோதனையை சந்தித்தது. சபை உறுப்பினர்களிடையே ஒற்றுமையின்மை காரணமாக 1939ஆம் ஆண்டு சபையின் செயல்பாடுகள் குன்றியது. சபையின் மூத்த உறுப்பினர்கள் திரு.வி.க. அவர்களின் உதவியை நாடி சபையை மீண்டும் எழுச்சி பெற உதவ வேண்டும் என்று வேண்டினார்கள்.
திரு.வி.க. அவர்களுக்கு சபை உறுப்பினர்கள் முழு அதிகாரத்தையும் கொடுத்தார்கள். சபையின் கண்ணியத்தை காக்க திரு.வி.க. அவர்கள் பல முனைப்புடன் செயல்பட்டார்கள். திரு.வி.க. அவர்கள் தேர்தல் வைத்து சங்கத்து உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் முறை சங்கத்தை சீர்குலைத்து விட்டது என்று கருதி தானே தலை சிறந்த வல்லுனர்களை சபை உறுப்பினராக நியமித்தார்கள். தான் நியமித்த சபை உறுப்பினர்களிடையே வெறுப்புணர்ச்சி நிலவுவதை உணர்ந்து திரு.வி.க. அவர்கள் ஞானியார் சுவாமிகளின் உதவியை நாடினார். ஞானியார் சுவாமிகள் 40 நாட்களுக்கு தினமும் சபையில் திருமுருகாற்றுப்படையும், கந்தர் அனுபூதியும் ஓத வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஞானியார் சுவாமிகள் பரிந்துரையை சிரமேல் ஏற்று திரு.வி.க. அவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் சபையில் கந்தரனுபூதி மற்றும் திருமுருகாற்றுப்படை ஓதச்செய்தார். பிறகு மாலையில் அவர் இரண்டு இலக்கியங்களுக்கும் விளக்கமான விரிவுரை நடத்தினார்கள். திரு.வி.க. அவர்களின் கந்தரனுபூதி உரையைக் கேட்க அலைகடலென மக்கள் திரண்டனர்.
திரு.வி.க. அவர்கள் கந்தர் அனுபூதி ஓத ஓத சபையினுடைய செயல்பாடுகள் மீண்டும் சீரடைந்து பழைய நிலைக்கு வருவதை உணர்ந்தார். சபை புத்துணர்வு பெற்று முன்பைவிட அதிக உத்வேகத்துடன் செயல்பட்டது.
பல சொற்பொழிவுகளில் அவர் இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து கந்தர் அனுபூதியின் பெருமையை எடுத்துரைப்பார்கள்.
இப்படியாக பீடு நடைபோட்டு வந்த சபை 1953ஆம் ஆண்டு தனது பொன்விழாவைக் கொண்டாடியது. “அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல்..... களைவானே” என்ற விறல் மாறன் பாடலிலும்,
“இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடும்”
என்று இருப்பவல் திருப்புகழ் என்று தொடங்கும் பாடலிலும் அருளாளர் அவர்கள் கூறுவார்கள். அவர்களது கூற்று எவ்வளவு உண்மையானது என்பதற்கு இச்சம்பவம் சான்றாக விளங்குகின்றது.
வாழ்க அருணகிரிநாதர் நாமம் ! ஓங்குக அவர் புகழ்!
★★★

