அருணகிரியின் அருள்நெறி
பேராசிரியர் மரு.ஜெயபாலன் வள்ளியப்பன்
தலைவர், மலேசிய முருக பக்திப்பேரவை, ஈப்போ, மலேசியா
ஒரு கியூ ஆர் குறியீடு காட்டப்பட்டுள்ளது.
ஆதித்தமிழனின் ஆன்மீகம் அநாதியானது. இதை ஆரம்பித்தவரும் இல்லை. இனி இதை முடித்து வைக்கவும் யாராலும் இயலாது. இதன் ஆழமான வேரை யாராலும் அசைக்க முடியாது. தமிழ் மண்ணின் பக்தி இயக்கத்தை, பழித்தும் இழித்தும், அதை அடியோடு அழிக்கவும் சில அந்நிய சக்திகள் அவ்வப்பொழுது தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், காலங்கள்தோறும் இந்த அருள்நெறியைக் காப்பாற்ற பல அருளாளர்கள் இந்த புண்ணிய பூமியில் அவதரித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அருணகிரிநாதர்.
பதினான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி, பதினைந்தாம் நூற்றாண்டின் முதல்
பகுதி, தெலுங்கு வம்சா வழியைச் சேர்ந்த பிரபுட தேவராயன் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள குறுநிலப் பகுதியை ஆட்சி செய்த காலம். வணிகத்தை முன் வைத்து இசுலாமியர்களும், கிருஸ்துவ ஐரோப்பியர்களும் தமிழகத்தில் கால் பதித்த காலம். இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் ஆட்சி மொழியாக இல்லை. சைவமும் வைணவமும் சமய வழக்குகளில் சிக்கிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சைவ சமயச் சாத்திரங்கள் மக்களைக் கவரவில்லை. மாறாக, சிறுதெய்வ வழிபாடுகள் மேலோங்கி இருந்தன. புலால் உண்ணுதலும், மது அருந்துதலும், பொது மகளிர் உறவும் சமுதாயத்தில் சகஜமான ஒன்றாக இருந்தது. சமுதாய சீர்கேடு மிகுந்திருந்தது.
இப்படிப்பட்ட காலக்கட்டத்தில்தான் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் அவதரித்தார். அவருடைய உண்மையான பெயர் உறுதியாகத் தெரியவில்லை. பின்னாளில் முருகன் அவருக்கிட்ட பெயர்தான் அருணகிரி.
“அருணகிரி நாதனும் அப்பனே போற்றி” - (பெரியமடம் தி.பு 0831)
சமயச் சழக்குகளாலும், சமூகச் சீர்கேடுகளாலும் அல்லலுற்ற தமிழ்ச் சமுதாயத்தை அருள்நெறியில் ஈடுப்படுத்துகிறார் அருளாளர் அருணகிரிநாதர். அவர்தான் முருக வழிபாட்டை முறைப்படுத்திய முதல் முருகனடியார். கௌமார நெறியை சைவ சித்தாந்த வழியில் கொண்டு நிறுத்தியதில் அவர் பங்கு அளப்பறியது.
பக்தி நெறியில் கற்பு நெறியைப் பேணி, முருகனை முதன்மைப் படுத்தினாலும், முருகனின் பெயரால் பிற தெய்வ வழிபாட்டிற்கும் உறவுப் பாலம் இட்டவர் அருணகிரிநாதர். அவர் சன்மார்க்க நெறியை அறிமுகம் செய்து சமய நல்லிணக்கத்தை நிலை நாட்டுகின்றார். சமயத்தின் பெயரால் சண்டையிடும் சமயவாதிகளை
“கலகலெனக் கண்ட பேரொடு
சிலுக்கிடும் சமய வாதிகள்” (தி.பு.976) என்று சாடுகிறார்.
அது மட்டுமல்ல அந்த சமயவாதிகள்,
“சினமுடன், தர்க்கித்து சிலுகிக் கொண்டு அறுவறும் கைக்குத்து இட்டு, ஒருவர்க்கும் தெரிவு அருள் சத்யத்தை தெரிசித்து உன் - செயல் பாடி” (தி.பு.0493)
என்று சமயத்தின் பெயரால் அவர்கள் சர்ச்சையிட்டு தெரிவதற்கு அறிய சத்தியத்தை தெரிசிக்காததைச் சொல்லுகின்றார்.
அவருடைய சிந்தனைகளை மக்களிடம் சேர்ப்பிக்க அவர் எடுத்துக் கொண்ட ஆயுதங்கள் தமிழும், இசையும். மக்களிடம் தன் சிந்தனைகள் சென்று சேரவேண்டும் என்று அவர்கள் அன்றைக்குப் பேசிய வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையிலும், தூயதமிழ் நடையிலும் தன்னுடைய எழுத்துக்களை வடிக்கின்றார்.
அவருக்கு முன் வந்தவர்கள் ராகத்துக்காக எழுதிய நிலையில், அருணகிரிநாதர் மட்டும் தாளத்தை முன் வைத்து, அற்புதமான பல தாளங்களில் இறைவனின் புகழை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றார்.
இறைவழிபாட்டின் முதல் படிநிலை தனிமனித ஒழுக்கம். காமமும் கள்ளுண்பதும் கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்காது. இதை நன்கு அறிந்தவர் அருணகிரிநாதர்.
அவர் காலத்தில் விலைமாதரிடம் செல்லும் பழக்கம் மிகுதியாக இருந்தது. இதன் காரணமாக பல நோய்கள் தோன்றின. சமுதாயம் சீர்கெட்டிருந்தது. இதைக் கண்டு நொந்த அருணகிரிநாதர், பல பாடல்களில் இதைச் சாடி எழுதியுள்ளார். காமத்தினால் வரும் சுகத்தைக் கூறி, அது நிலையில்லாதது, நோய்களைத் தருவது, சிறுமைகளைத் தருவது, இறைவனை அடையவிடாது என்றெல்லாம் மக்களுக்குச் சொல்கிறார். முருக பக்தியால் வரும் பெருமைகளை பட்டியலிடுகின்றார். இறைவனின் பொற்பாதம் ஒன்றே நிலையானது மற்றவையெல்லாம் நிலையில்லாதது என்ற உண்மையை மக்கள் மனதில் தைக்கும்படி எழுதுகின்றார். இவையெல்லாம் அருணகிரிநாதர் இந்த உலக மக்களுக்கு ஆற்றிய அருட்பணிகள்.
ஆனால், இன்றைக்கு ஒரு சிலர் அருணகிரிநாதரின் இளமைக் காலத்தை கொச்சைப் படுத்தி, இவர் இளமையில் காமுகராக இருந்தவர், அதனால்தான் பல இடங்களில் விலைமாதர் சுகத்தைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் எழுத முடிந்தது என்று பேசியும், எழுதியும் வருகின்றனர். இது ஆதாரப் பூர்வமானதா? இதன் உண்மைத் தன்மை என்ன என்பது ஆய்வுக்குரியது.
இளமையில் அருணகிரிநாதர் காமுகரா?
முதன் முதலில் அருணகிரிநாதரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை எம்.ஏ அவர்கள்தாம். 1947-இல் அவர் எழுதிய “அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்” என்ற நூலில்தான், அருணகிரிநாதரின் வாழ்வு ஆராயப்படுகின்றது. அவர் பிறந்து, வாழ்ந்து ஐந்நூறு வருடம் கழித்து அவரைப் பற்றிய தகவல் சேகரிக்கப்படுகின்றது என்பதை நாம் இங்கே குறிப்பிடுவது அவசியம்.
“ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ண பரம்பரையாக பல்வேறு வகையாகக் கூறப்பட்டு வருகின்றது. உண்மைச் சரித்திரம் இதுதான் என்று திடம்பெற உரைக்க இடந்தரவில்லை” என்பது தணிகைமணியின் முன்னுரை. அருணகிரிநாதர் காமுகராக இளமையில் இருந்தார் என்பதற்கு, தணிகைமணி அவர்கள் திருப்புகழ் பாடல்களையே ஆதாரமாகச் சொல்கிறார்கள். இவை அகச் சான்றுகள் மட்டுமே.
அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய புறச்சான்றுகள் மிகக்குறைவு. கல்வெட்டுகளோ, அவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களின் பதிவோ காணக் கிடைக்கவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த திருப்புகழை 120 வருடங்களுக்கு முன்பு தான் வடக்குப்பட்டு சுப்பிரமணியப்பிள்ளை அவர்களின் முயற்சியால் தொகுக்கப்பட்டது. அதற்கு அவர்களின் புதல்வர் தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை விரிவுரை எழுதினார்கள்.
தணிகைமணிக்குப் பின்வந்த தமிழறிஞர்கள் அவர் அடியொற்றியே அருணகிரிநாதர் வரலாற்றை எழுதினர். அருணகிரிநாதர் இளமையில் தகாத வாழ்க்கை வாழ்ந்தார் என்றே அவர்களும் குறிப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு தமிழ்த் திரைப்படங்களின் பங்களிப்பு வேறு. 1937-இல் டி.எம் மாணிக்க பாகவதர் நடித்த அருணகிரிநாதர் திரைப்படம் வெளிவந்தது. 1964-இல் டி.எம்.சௌந்திரராஜன் அருணகிரிநாதராக நடித்த அருணகிரிநாதர் என்ற திரைப்படம் வெளிவந்தது. இவை இரண்டிலுமே அருணகிரிநாதர் இளமையில் ஓர் உல்லாசப் பிரியர் என்றும், பின் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தவர் என்றும் மிகவும் அழுத்தத்திருத்தமாக காட்டப்பட்டு இருந்தது. ஆக, திரைப்படங்களும் அருணகிரிநாதரை இள வயதுக் காமுகராகவே மக்கள் மனதில் பதிய வைத்தன. ஆனால், அதில் உண்மையில்லை.
கருணைக்கோர் அருணகிரி
பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நீதிமன்றங்களில் பேசுகின்ற வழக்கறிஞர்களைப் போன்றவர்கள் நம்முடைய அருளாளர்கள். மற்ற மனிதர்களின் குறைகளை தம்மேல் ஏற்றிக் கொண்டு, அந்த மனிதர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுபவர்கள் நம்முடைய ஞானிகள்.
இப்படி மற்றவர்களின் குறைகளை தம்மேல் ஏற்றி, அந்த மக்களின் சார்பாக இறைவனின் அருளை வேண்டிய அருளாளர்கள் பலருண்டு. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகப் பெருமான், கிட்டதட்ட 46 இடங்களில் தன்னை “நாயேன்” என்றும் 5 இடங்களில் தான் “வஞ்சகன்” என்றும் கூறிக்கொள்கிறார்.
“இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேன்”
என்று கண்டபத்து என்ற பதிகத்தில்தான் ஐம்புலன் வழி சென்று மயங்கியதாக மாணிக்கவாசகப் பெருமான் சொல்லுவார்.
“நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேன்”
என்று தான் தீ நெறி வழி சென்றதாக அச்சோ பதிகத்தில் குறிப்பிடுவார். இப்படிப் பல பாடல்கள் உண்டு. இவையெல்லாம், மாணிக்கவாசகர் மனித குலத்தின்மேல் உள்ள அன்பின் காரணமாக மற்ற மனிதர்களின் பாவத்தையெல்லாம் தம் மீது ஏற்றுக்கொண்டு பாடுவது. மற்ற அருளாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
திருநாவுக்கரசர் சைவத்தில் பழுத்த பழம். அவர் கூட "கழித்திலேன் காம வெந்நோய்" என்று திருவதிகை வீரட்டானப் பதிகத்தில் பாடுகின்றார்.
இளம் வயதிலேயே இறையருள் பெற்ற திருஞானசம்பந்தர் கூட,
“குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே”
என்று திருவையாற்றின் பெருமையை அங்கே வாழும் பெண்களின் அழகை வர்ணித்து, அதனுடன் சேர்த்துச் சொல்லுகின்றார்.
நம்முடைய பக்தி இலக்கியங்களில் இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அருணகிரிநாதரை மட்டும் அவர் பாடிய பாடல்களை வைத்து அவர் தன்னுடைய வாழ்க்கையைத்தான் அவர் பாடல்களில் குறிப்பிடுகின்றார் என்ற முடிவுக்கு இன்றைய தமிழறிஞர்கள் வந்துவிட்டது நாம் செய்த தவக்குறைவு என்றுதான் சொல்ல மவண்டும்.
அவர் எப்படி மற்றவர்களுடைய பாவத்தை தம்மீது ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக முருகனின் அருளை வேண்டுகிறார் என்பதைக் காட்ட ஒரு பாடலை மட்டும் மேற்கோளாகப் பார்ப்போம்.
அருணகிரிநாதர் காஞ்சி குமரகோட்டம் போகின்றார். அங்குள்ள முருகவேளைத் தரிசிக்கின்றார். அங்குள்ள மக்கள், கந்தசேயைப் பாடாமல், கண்டவர்கள் காசுக்காக பாடுவதைக் காண்கின்றார். அவர்கள் சம்பாதித்த காசு பணத்தை வேசிகளிடம் கொண்டு சேர்க்கும் அவலத்தை கண்டு மனம் நோகின்றார். இதை தம்மேல் ஏற்றிக்கொண்டு, அவர்களுக்காக முருகனின் அருளை மன்றாடிக் கேட்கின்றார்.
“அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச் சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான் திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து தெளியவமாட் சத்தை யென்று ...... அருள்வாயே” (காஞ்சிபுரம் தி.பு.352)
இப்படித்தான் பல திருப்புகழ் பாடல்களில் உலக மாந்தரின் குறைகளை தம்மேல் ஏற்றிக் கொண்டு அவர் பாடுகிறார். இதனால்தான் அவரை “கருணைக்கோர் அருணகிரி” என்று தாயுமான சுவாமிகள் அழைத்தார். அருணகிரியின் கரிசனம் அளப்பரியது. அவர் தனக்கு மட்டும் அருள் தருமாறு முருகப் பெருமானைக் கேட்கவில்லை. மாறாக, இந்த உலக மக்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கும் அருள்வாய் என்றே இறைவனிடம் இறைஞ்சுகிறார்.
திருப்புகழ் பொதுவானது. அதை அருணகிரிநாதர் தனக்காகப் பாடவில்லை. தாங்கள் செய்த பாவங்களை உணர்ந்து, முருகனின் புகழைப் பாடி இந்த மண்ணுலக மக்களெல்லாம் உய்ய வேண்டும் என்றுதான் அருணகிரிநாதர் முருகனின் உத்தரவின்படி திருப்புகழை நமக்காக அருளினார். இதையும் அவரே திருப்புகழில் சொல்லி வைத்தார்.
“ஏனோரும் ஓதும் மாறு தீதற
நான் ஆசு பாடி ஆடி நாடொறு
ஈடேறு மாறு ஞான போதக ...... மான்புறாதோ” (தி.பு.1126)
என்பது அருணகிரிநாதர் வாக்கு.
சிற்றின்பம் - பேரின்பம்
அருணகிரிநாதர் பல இடங்களில் பேரின்பத்தின் பெருமையைச் சொல்வதற்கு சிற்றின்பத்தை உதாரணமாகக் காட்டுகிறார். சிற்றின்பம் புலன்களுக்கு இன்பம் தருவது. ஆனால் நிலையில்லாதது. இறைவனிடம் நமை சேர விடாது. பேரின்பம் என்பது சிற்றின்பத்தைப் போன்றது. ஆனால், நிலையானது. இந்த ஆன்மாவை ஈடேற்றக்கூடியது.
சிற்றின்பம் என்பது மனிதனுக்குத் தெரிந்த ஒன்று. அவன் அனுபவித்த இன்பம். பேரின்பம் அவன் அனுபவிக்காதது. அதனால், மனிதனுக்குத் தெரிந்த சிற்றின்பத்தைச் சொல்லி, அவன் உணராத பேரின்பத்தை பல இடங்களில் விளக்குகிறார் அருணகிரிநாதர்.
“ஓலம் இட்ட சுரும்பு தனா தனாவென” என்று துவங்கும் திருக்கழுக்குன்றத் திருப்புகழில், முதல் பாதிப் பாடல் முழுவதும் காமலீலைகளால் வரும் உடல் இன்பத்தைச் சொல்கிறது. அந்தப் பாடலின் அடுத்த பகுதியில் இந்த அற்ப சாகரத்தில் மனம் அழுந்தக் கூடாது, சதாசர்வ காலமும் நான் ஆறெழுத்தையே நினைத்து குகா குகா வென்றிருக்கும் தன்மை எனக்கு வரவேண்டும் என்று அதில் வேண்டுகிறார்.
“ஆசை யிற்கை கலந்து சுமா சமாபவ சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம் ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ” (தி.பு.543)
என்பது அருணகிரிநாதரின் திருவாக்கு. ஆக சிற்றின்பத்தைச் சொல்லி,பல இடங்களில் பேரின்பத்தின் அவசியத்தைச் சொல்கிறார்.
அருணகிரிநாதர் சிற்றின்பப் பிரியர் அல்ல. சித்தாந்தம், வேதாந்தம், யோகம், சித்தர்நெறி, திருமுறைகள், இதிகாசங்கள், புராணங்கள் என்று சகல ஞான நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர். இத்தனை அருட்செல்வங்களையும் பிழையறக் கற்றதால்தான், அவரால் தன்னுடைய இலக்கியங்களில் அவற்றின் சாரத்தைச் சொல்ல முடிந்தது.
இள வயதில் அவர் சிற்றின்பப் பிரியராக இருந்திருந்தால், இவற்றையெல்லாம் படிப்பதற்கு நேரம் இருந்திருக்குமா? இல்லை, அவர் மனம்தான் இந்த அருட் பனுவல்களில் ஈடுபட்டிருக்குமா? சிந்திக்க வேண்டிய ஒன்று. பகுத்தறிந்து பார்த்தால், இவ்வளவு படித்த அருணகிரிநாதர், அருள் நெறியில் மட்டுமே இளவயதில் சென்றிருக்க வேண்டும். அந்த அருள்நெறிதான் முருகனின் புகழ் பாட அவருக்கு வழி வகுத்திருக்கும்.
நிறைவுரை
அருணகிரிநாதர் என்ற அருளாளர், பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவண்ணாமலையில் அவதரித்தவர். முருக வழிபாட்டின் மறுமலர்ச்சி அவரால் வந்தது. அவர் சமய நல்லிணக்கம் பேணும் சன்மார்க்க ஞானியாகத் திகழ்ந்தார். சமயச் சழக்குகளை அவர் வெறுத்தார். அவரால் தமிழும், தமிழ் இசையும் மேம்பட்டன. அவருக்குப் பின் வந்த முருகனடியார்கள் அவரின் வழித்தடத்தையே பின்பற்றினர் என்ற கூற்றுக்கள் மட்டுமே உண்மை.
அவருடைய இளவயது வாழ்க்கை வரலாறு ஆதாரமற்றது. இளவயதில் அவர் சிற்றின்பப் பிரியராக இருந்தார் என்ற கூற்றும் ஆதாரமற்றது. இந்தக் கருத்துக்களை அறிஞர் பெருமக்கள் மக்களுக்கு உணர்த்த வேண்டும். அருணகிரிநாதரென்ற அப்பழுக்கில்லாத அவதாரப் புருஷரை குருவாகக் கொண்டு முருக வழிபாடு உலகமெல்லாம் பரவ வேண்டும்.
அருணகிரியின் அருள்நெறியை அகிலம் உணரவேண்டும். அந்த நெறியை உணர்ந்த மக்களெல்லாம் பேரானந்தத்தில் திளைக்க வேண்டும்.
“அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும் மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்தில் வைப்பாம்!”
★★★
-பாம்பன் சுவாமிகள்.
ஸ்ரீ அருணகிரிநாதப் பெருமான் திருவடிகள் போற்றி!
நன்னெறி சார்ந்த அமுத மொழிகள்
- உன்னை நீ இழந்து நிற்கும் மேலாய வீடு பேற்று நிலையை அடைய ஆறுமுகனை வேண்டு.
- உள் பொருளாக இருப்பது விண்ணோ, காற்றோ, நெருப்போ, நீரோ, மண்ணோ மெய்பொருள் தோன்றுவதற்கு நிலைக்கலமாக விளங்கும் இடமோ, சொல்லப்படும் நான்கு வேதங்களோ, யானோ, மனமோ, நம்மை ஆட்கொண்ட இடம் தானோ? இவற்றுள் யாதென்று விளங்க ஆறுமுகன் அருள் நாடு. (கந்தனே மெய்ப்பொருள்) - (வானோ) கந்தரனுபூதி.
- வன்மை பொருந்திய மனம் என்னும் கல் மீது கந்தனது திருவடியாகிய தர்மரை மலர் அரும்ப அவனை நாடு.
— (திணியான) கந்தரனுபூதி
நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் - திருப்புகழ் மரமணி வெ. இராமு

