விழி - மொழி - பழி - வழி
அரிமா இரா. அன்பரசு, முதல் துணை ஆளுநர், லயன் மாவட்டம் 324-I
போளூர்.
ஆம் அது ஒரு அற்புத நாளென்றே சொல்ல வேண்டும். இறையருளால் ஏற்படுத்தப்பட்ட நாள். ஒரே சிந்தனை கொண்ட இறையன்பர்கள் ஒன்று கூடிய நாள். ஐயா அமரேசன் அவர்கள் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் திருப்புகழ் வகுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கின்றார். பேராசிரியர் முனைவர் இராமு அவர்கள் அந்த வகுப்புகளை நடத்த வேண்டும் என்று முடிவாகிறது. மகான் சேஷாத்திரி அவர்களின் அருளாலயத்தில் வகுப்பு நடைபெற இடம் கிடைக்கிறது. வகுப்பு துவங்கும் நாளை வடிவமைத்து அதில் வாழ்த்துரை வழங்க அருளாளர் முத்துக்குமாரசாமி ஐயா அவர்களையும், அருளாளர் ஆகாஷ் முத்துக்கிருஷ்ணன் ஐயா அவர்களையும், அருளாளர் சின்னராசு ஐயா அவர்களையும், திரு. மணிக்குமார் அவர்களையும் மற்றும் இன்னும் பிற
முக்கிய பிரமுகர்களையும் அழைக்கிறார். முருகவேளின் திருவடிகளைத் தினந்தோறும் தொழுபவர்கள் திரளாக வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் அடியேனும் ஒருவனாக என்னை இணைத்துக்கொள்ள இறையருள் பணித்தது...
எல்லோரும் ஒரே சிந்தனையோடு ஒரே குரலில் ஒரே விஷயத்தைப் பேசினார்கள். திருவண்ணாமலையில் யார் யாருக்கோ.... சிலைகளும் மணிமண்டபங்களும் எழுப்பப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. ஆனால் திருவண்ணாமலையில் பிறந்து முருகவேளின் புகழ் பரப்பிய புண்ணியர்களின் வரிசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளாளர் அருணகிரிநாதருக்கு ஒரு சிலையோ, மணிமண்டபமோ, நினைவில்லமோ இங்கே இல்லை என்ற நீங்காத குறை எல்லோர் பேச்சிலும் வெளிப்பட்டது. உடனே மணிமண்டபம் அமைப்பதாக இருந்தால் தான் ஒரு பெருந்தொகை தருவதாக அறிவித்தார் முத்துக்குமார சுவாமி ஐயா அவர்கள். அங்கேயே விதை ஊன்றப்பட்டது. பலரும் இது வரை உதவினார்கள். சின்னராசு ஐயா அவர்களும், அமரேசன் ஐயா அவர்களும் கண்ணும் கருத்துமாக அந்த விதைக்கு ஒவ்வொரு நாளும் நீர்ப்பாய்ச்சி நெஞ்சம் மகிழ்ந்தனர். பூமியைப் பார்த்துக் கொண்டு மேலெழுந்த விதை செடியாவது கண்ட சிலர் உரமாகவும், சிலர் வரமாகவும், சிலர் காற்றாகவும், சிலர் ஒளியாகவும் அந்தச் செடி வளர அடி கோலினார்கள். விதை வளர்ந்து இன்று விருட்சமாகி விட்டது. அது கனிதரும் நாளை அடியேனைப் போன்ற சிலர் காண காத்துக்கிடக்கிறோம். நாளைய தலைமுறை அந்தக் கனியை நாளும் சுவைக்கப்போகிறது என்பதை எண்ணி பூத்துக் கிடக்கிறோம். இந்த மாபெரும் பணி தொடர்ந்து தொய்வில்லாமல் வளர உதவிய அத்தனை மனிதர்களும், அவர்களது குடும்பமும், வாரிசுகளும் அவர்களின் தொழில்களும், அறவழியில் ஈட்டிய அவர்களுடைய செல்வமும் பல்கிப் பெருகி மென்மேலும் வளர அன்றாடம் என்னுடன் நன்றாக நாவாடும் நட்சத்திரக் குன்ற முருகன் அருள்புரிவான் என்பது உண்மையைத் தவிர வேறில்லை.
தேவாரமும் திருவாசகமும் சிதம்பரத்தில் இருந்து மீண்டெழுந்தது போலவே நம் திருப்புகழும் வெளிவர சிதம்பரமே காரணம். சிதம்பர நகரில் வ.த.சுப்பிரமணியப்பிள்ளை என்பவர் ஜில்லா முன்சீப் வேலையில் இருந்தார். அவரிடம் ஒரு வழக்கு வந்தது. நடராசப் பெருமானை வழிபடும் உரிமை தீட்சதர்களுக்கு இல்லை என ஒருவர் வழக்கு தொடுத்தார். தீட்சதர்கள் அந்த உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு என வாதிட்டனர். அதற்கு சாட்சியாக, “வேதநூல் முறை வழுவாமே தினம்
வேள்வியால் எழில்புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே....”
என்ற வரிகள் இருந்த ஓலையை காட்டினார்கள். இந்த ஓலையில் இருந்த வரிகளைப் படித்த வ.த.சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் மீதமுள்ள ஓலைகளையெல்லாம் கேட்டு வாங்கிப் படித்து அதனால் பெரிதும் கவரப்பட்டு இவற்றை அச்சில் கொண்டுவரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இது திருப்புகழ் ஓலை என்று அறியப்பட்டது. 1871ஆம் ஆண்டு இந்தப் பணியைத் தொடங்கி ஆர்வம் மீதூர நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று இந்த ஓலைச் சுவடி யாரிடமெல்லாம் இருக்கிறதென்று தெரிந்ததோ அங்கேயெல்லாம் சென்று தேடித் தேடி 16000 பாடல்கள் உள்ளன என்று அறிந்தார்கள். ஆனால் பெரும்பாலான ஓலைகள் செல்லரித்து செல்லரித்து முழுமையாக கிடைக்கவில்லை. 1304 பாடல்களே முழு வடிவத்தோடு கிடைத்தன. இவற்றை 1926-ஆம் ஆண்டு வரை தொகுத்து அச்சில் ஏற்றினார்கள். வ.த.சுப்ரமணியப் பிள்ளை இல்லையென்றால் திருப்புகழ் கிடைத்திருக்காது என்பது பேருண்மை. நமது அருளாளர் அருணகிரிநாதர் மண்டபத்தில் எங்காவது வ.த.சுப்ரமணியப் பிள்ளைக்கும் ஒரு சிலை வைத்தால்தான் மண்டபம் முழுமைபெறும் என்பது அடியேனின் எண்ணம்.
வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் நாட்டை ஆளத் துவங்கியதால் இந்து மதம் வலுவிழந்து மக்கள் வாழ்வில் அமைதியின்மையும் குழப்பமும் மிகுந்திருந்த காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு. அப்போது தோன்றியவர் ஆதிசங்கரர். இந்திய நாடு முழுவதும் பல்வேறு மதங்களின் ஊடுருவலால் பிரிந்தும் பிளவுபட்டும் கிடந்த காலம். இந்துமதம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான தெய்வவழிபாடுகள் - சிறு தெய்வ வழிபாடுகள் - பெரு தெய்வ வழிபாடுகள் என வேற்றுமைகள் கொட்டிக்கிடந்தன. ஆதிசங்கரர் நாடு முழுதும் சுற்றிச் சுழன்று ஆறு சமய முறைகளில் இறைவனை வணங்கலாம் என்று நிலை நாட்டினார். அதில் கௌமாரம் என்னும் முருக வழிபாடும் ஒன்று. இந்து சமய வரலாற்றில் இந்து சமய மக்களின் வாழ்வில் முருக வழிபாடு என்பது தவிர்க்கமுடியாத விஷயமாக இருந்த காரணத்தாலும் எட்டாம் நூற்றாண்டுக்கும் முந்திய பழைமையான வழிபாடாக விளங்கிய காரணத்தாலும் நாட்டின் பெரும்பகுதிகள் முருக வழிபாட்டில் திளைத்திருந்த காரணத்தினாலும்தான் ஆதி சங்கரர் தனது ஆறு மார்க்கங்களில் ஒன்றாகவே முருக வழிபாட்டை முன்னிலைப்படுத்தி இருக்கிறார் என்பது முருகபக்தர்கள் பெருமைகொள்ளவேண்டிய ஒன்று.
எப்போதெல்லாம் சைவத்திற்கும் தமிழிற்கும் ஆபத்து வந்ததோ... அப்போதெல்லாம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
முகலாயர்களின் படையெடுப்பால் இந்தியாவில் உள்ள அனைத்து சிவாலயங்களும், இந்துக் கோவில்களும் சிதைக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு, சிவனடியார்கள் எல்லாம் சிறைபிடிக்கப்பட்ட ஒரு காலம். அங்கு முகலாய மன்னனை தனி ஆளாக சிங்கத்தின் மீதமர்ந்து சென்று சந்தித்து அவனது தீய செயல்களை நிறுத்தி, சைவம் தழைக்க அவனிடமே நிலமும் பொருளும் பெற்று திரும்பிய தீரர் குமரகுருபரர். முருகப்பெருமானின் பேரருள் பெற்றவர்.
பின்னொரு காலத்தில் சமண மதம் மேலோங்கி சைவம் அழியத் துவங்கியது. மக்கள் சைவர்கள் என்று சொல்வதற்கே அஞ்சிய காலம். அந்தக் காலத்தில் தோன்றி மன்னர்களையெல்லாம் மடைமாற்றி சமணர்களை வேரறுத்து தமிழையும் சைவத்தையும் காத்த பேரருளாளர் திருஞான சம்பந்தர். இவர் முருகனின் அவதாரமே என்பது உண்மை.
கி.பி.15 ஆம் நூற்றாண்டு - வைணவம் தழைத்தோங்கிய காலம். விஜயநகரப் பேரரசர்கள் காலம். எங்கு பார்த்தாலும் பெருமாள்கோயில்கள், விஷ்ணு கோயில்கள் பெருகி சைவமே அழிந்துவிடுமோ என்று மக்கள் அஞ்சிய காலம். அப்போது உதித்தவர்தான் அருணகிரிநாதர். முருகனையும் பெருமாளே என விளித்து முருகப் பெருமானை புகழும் போதெல்லாம் விஷ்ணுவின் மருமகனே என விளித்து வைணவமும் சைவமும் வேறல்ல என்பதை தெளிவுபடுத்தி முருகப் பெருமானுக்கும் வைணவத்திற்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தி சைவத்தையும் வைணவத்தையும் சமநிலைப்படுத்தியவர் - சைவம் அழியாமல் காத்தவர் - அருணகிரிப் பெருமான் - முருகனின் பேரருள் பெற்றவர்.
நாட்டில் நாத்திகவாதம் தழைத்து இறை மறுப்பும், கடவுள் எதிர்ப்பும் இளைஞர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்த காலம் - சைவத்தையும் தெய்வ வடிவங்களையும், தெய்வீகத் தன்மையையும் தெய்வத் தமிழாலேயே இழிவுபடுத்திக் கொண்டிருந்தவர்கள் நிறைந்த காலம். சைவ, வைணவம் சார்ந்த தெய்வ வடிவங்களை பொதுவெளியில் மிதியடியால் அடிக்கும் அளவிற்கு திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில். ஒரு தனிமனிதனாக வெளிவந்து ஊர் ஊராகச் சென்று சைவத்தின் சிறப்புகளைச் சொல்லி முருகப்பெருமானின் ஆற்றலை மக்களுக்கு உணர்த்தி நம் புராண இதிகாசங்களின் மகத்துவத்தை மக்களுக்குப் புரியவைத்து இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை விளக்கி கடவுள் மறுப்பு இயக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திக் காட்டியவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவர் முருகனின் பேரருள் பெற்றவர்.
இப்படி தமிழுக்கும் சைவத்திற்கும் பேராபத்து நேரும் போதெல்லாம் முருகன் அருள் பெற்ற அடியார்கள் முன்வந்து அந்தச் சூழலை எதிர்கொண்டு சைவத்தைக் காத்தனர் என்பது வரலாறு. இதில் அருளாளர் அருணகிரிநாதருக்கும் பெரும் பங்குண்டு என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று.
அருணகிரிப் பெருமானின் பாடல்களில் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கும். மேலோட்டமாகப் படித்தால் புரியாத புதிராக இருக்கும். சில பாடல்களில் உட்கருத்து புரியும்போது மிக ஆச்சரியமாக இருக்கும். மிக நீண்ட காலம் எனக்கு பொருள் படாத ஒரு பாடல் இருந்தது. யாரைக் கேட்டாலும் பொருள் சொல்ல மாட்டார்கள்.
“விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத் துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!” என்பது அப் பாடல்.
விழிக்குப் போய் எப்படி முருகனின் பாதங்கள் துணையாகும்? மொழிக்குப் போய் எப்படி முருகனின் நாமங்கள் துணையாகும்? என்று எனக்குள் பல காலம் பகுத்தறிவுக் கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் ஒரு அடியவரின் பதிவு மூலம் அதற்கு விடை கிடைத்ததும் வியந்து போனேன்.
மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதில் முதலாவதாக இருப்பது கண். தன்னைவிட பணம், புகழ் செல்வாக்கோடு இருப்பவர்களை கண்டு பொறாமை கொள்ளச்செய்வது கண். அவர்களை விட முன்னேற வேண்டும் என்ற பேராசையும் வெறியும் கொண்டு தீய வழிச் செல்ல தூண்டுவது கண். எனவே கண்களை நல்வழிப்படுத்தி நல்லவற்றை மட்டுமே காணச் செய்து மனதை தூய்மைப்படுத்தி நன்னெறிக்கு அழைத்துச் செல்ல இறைவனை துணைக்கு அழைக்கும் செயலே விழிக்குத் துணை திருமென்மலர்ப்பாதங்கள்.
சகமனிதனின் மனதை துன்புறுத்தி காயப்படுத்தி அதில் இன்பம் காண்பதும் ஒருவனை தீயவன் என்று அடையாளப் படுத்துவதும் ஒருவனின் வாய்மொழிகளே. அவற்றிலிருந்து வெளிவந்து தனக்கும் பிறருக்கும் இன்பம் தரும் சொற்களையே பேசவேண்டும் என்று வேண்டும் செயலே மொழிக்குத் துணை முருகாவெனும் நாமங்கள்.
மனித வாழ்வைப் புரட்டிப்போட்டுத் துன்பமளிப்பதில் அவனது முன் செய்த தீவினைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அத்தீவினைகளின் துன்பத்திலிருந்து மீள துணை நிற்பது முருகனின் பேரருள் மட்டுமே. எனவே பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும். மனித வாழ்வில் ஒருவனின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக இருப்பது அச்சமும் பயமும். இவற்றின் பயமுறுத்தலில் அச்சம் கொண்ட எவனும் வாழ்வில் முன்னேறவே முடியாது. முருகனருள் பெற்றவர்கள் அச்சம் மறந்து வாழ்வில் முன்னேற்றம் கொள்வர் என்பதைச் சொல்வதே பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே... முருகா சரணம்...
★★★

