இரெமுத்து என்றால் என்ன?

ஓரெழுத்து என்று கூறப்படும் பிரணவ மந்திரமாகிய ஓம் ஒரு உயிர் எழுத்தும் ஒரு மெய் எழுத்தும் சேர்ந்த எழுத்து. ஈரெழுத்து போலத் தோன்றினாலும் அது ஓரெழுத்தே. “ஓ” வுக்கு மத்தியில் “ம்” அமைத்து “?” என எழுதுவதே சரியான முறையாகும். ரிக்வேதம் ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடியும்.

இப்பிரபஞ்சத்தின் அடிப்படையே சலனம்; அதாவது அசைவ. இல்லை என்றால், பிரபஞ்சம் இருக்காது, இயங்காது. அதனால் தான் பிரபஞ்சத்தை சிவன் திருநடனமாக உருவகப்படுத்துகிறோம். பிரபஞ்சத்தில் காணப்படும் ஒவ்வொரு பொருளும் மூலமான ஓ?? ஒலியிலிருந்தே உற்பத்தியாயிற்று. உலகப் பொருள் அனைத்திலும் ஒலியும் உண்டு, ஒளியும்

உண்டு. உதாரணத்திற்கு, நெருப்பு கொழுந்து விட்டெரியும் போதும், கடலலைகள் பொங்கி எழும்போதும், எங்கெல்லாம் அசைவு இருக்கிறதோ அங்கெல்லாம் ஓசை இருக்கிறது. நாம் பார்க்கும் வஸ்துக்கள் யாவும் தோற்றத்துக்கு நிலையாக தோன்றினாலும் அந்த வஸ்துவின் ஒவ்வொரு அணுவும் ஆடிக்கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு பரம அணுவிற்குள்ளும் அணுச்சலனம், பரம் பொருளின் திருநடனம் எனும் படியாக நித்தியம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அணுக்களின் அதிர்வுகளின் காரணமாய் இந்த அண்டமும் சப்தமும் உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. இவ்வாறு பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஆடிக்கொண்டே இருப்பதால் அதனால் ஏற்படும் ஓசையும் நிரந்தரமாக எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

நாதம் படைப்பின் கீதம்

வெட்ட வெளியில் முதன் முதலாக படைப்பு வெளிப்பட்ட போது எழுந்த அதிர்வு சிவசக்தியின் ஐக்கிய ஒலி. சர்வ வியாபகமாய் அசைவின்றி இருந்த பரசிவத்தில் பராசக்தி தோன்றி, அதில் ஓசை (நாதம்) உண்டாயிற்று. அதைத் தொடர்ந்து ஒளி (விந்து) உண்டாயிற்று. இந்த நாத விந்து என்பனவற்றைச் சிவம் என்றும் சக்தி என்றும் கூறுவர். இப்படி உண்டான நாத விந்துவிலிருந்து “அ” - “உ” - “ம” என்ற மூன்று மந்திர எழுத்து உண்டாகி ஓம் என்ற பிரணவம் ஆயிற்று.

வியஷ்டி என்பது ஒரு முழுமையை பல தனித்தனி பொருட்களை உள்ளடக்கியதாக பார்ப்பது. சமஷ்டி என்பது பல தனித்தனி பொருட்களை தொகுத்து பார்ப்பது. சமஷ்டி பிரணவமாகிய “ஓம்” என்ற எழுத்தை அ-உ-ம என்ற மூன்று ஒலிகளாக வியஷ்டியாக காண்கிறோம்.

இந்த பிரணவ நாத ஒலி பிரபஞ்ச ஆக்கத்தின் பிறப்பிடம். இப்படி பிறந்த நாத விந்து தத்துவங்கள் பிரகிருதி மாயையின் கலை என்று கூறப்படும் அம்சங்களுடன் சேர்ந்து இந்த பிரபஞ்சத்தையும் அதில் காணப்படும் சராசரங்களை உருவாக்கியது. இவ்வாறாக ஓம் என்ற பிரணவம் படைப்பிற்கு ஆதாரமாய், கேளா ஒலி என்ற அநாஹத நாதமாக படைப்பிலுள்ள உயிர்களுக்குள் ஓசையின்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

"ஓம் எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே”-(திருமந்திரம் 9ஆம் தந்திரம்)

பிரபஞ்சத்தின் எல்லா ஒலிகளும் மும்மூர்த்திகளும் முத்தொழிலும் இந்த ஓம் எனும் பிரணவத்திலிருந்தே உதித்தது. பிரணவத்திலிருந்து ஆகாயம்; பிறகு ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்னியும், அக்னியிலிருந்து அப்புவும், அப்புவிலிருந்து பிருதிவியும் தோன்றின. இப்பஞ்ச பூதக் கூட்டுறவிலிருந்து அண்ட பகிரண்ட சராசரங்களும், பிருத்வியில் மற்ற உயிரினங்களும் தோன்றின.

திருமூலர் திருமந்திரத்தில் கனகச்சிதமாக பிரணவ மந்திரத்தை பற்றி கூறுகிறார்:

“ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே”

'ஓம்சூ என்று ஓரெழுத்தான சமட்டிப் பிரணவத்தின் பொருளாகிய பரம்பொருள் அருவ நிலையில் உலகெங்கும் வரம்பின்றி நிறைந்து நின்றது. பின் 'அ, உ' என்று இரண்டெழுத்தான சூக்கும வியட்டிப் பிரணவ எழுத்துக்களின் பொருளாகிய சிவமும், சக்தியும் அருவுருவ மூர்த்தியாய் உலகத்தை ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து, பின் மேற்கூறிய இரண்டெழுத்துடன் மகாரத்தையும் கூட்டி சூஅ, உ, ம்சூ என மூன்றெழுத்தாகச் சொல்லப் படுகின்ற தூல வியட்டிப் பிரணவ எழுத்துக்களின் பொருளாகிய சூஅயன், அரி, அரன்கூ என்னும் மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களில் தலைப்பட்டு நிற்கின்ற சிவனை அவனது திருவைந்தெழுத்தில் மகாரத்தின் பொருளாகிய மலத்தின் மறைப்பினால் அறியமாட்டாது உலகம் திகைக்கின்றது'.

பிரபஞ்ச படைப்புக்கு அதிபனான சிவனையும் அவரது பிரதிபலிப்பான முருகனையும் -- இருவரும் ஒன்றே என்று பல இடங்களில் ஸ்தாபிக்கும் அருணகிரிநாதர்

“அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகிவருவோனே”

என்றும்

“நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம”

என்றும் கூறி மகிழ்கிறார்.

பரமனுடைய ஸ்ருஷ்டி நடனமான ஆனந்த தாண்டவத்தை அருணகிரியார் 'சாங்கரி பாடியிட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர்' அதாவது 'சங்கரியாகிய பார்வதி தேவி பாடித் தாளம் இட, மேம்பட்ட ஞான ஆனந்தத் தாண்டவம் ஆடிய சிவபிரான்' என்று சிறப்பிக்கிறார்.

முருகன் ஓங்கார சொரூபன், அவன் வாகனமாகிய மயிலும் ஓங்கார சொரூபமே.

“ஆன தனிமந்தர ரூப நிலை கொண்ட தாடுமயில்” (வாதிளை அடர்ந்த - திருப்புகழ்)

என்று போற்றுகிறார். அதாவது ஓம் எனும் குடிலையின் சொரூபமாக மயில் ஆடுகின்றது. அவ்வோங்காரத்தின் நடுவே ஆண்டவன் அருட்சோதியாக வீற்றிருக்கிறான்.

மற்றொரு பாடலில் ‘பிரணவத்தின் உட்பொருளாகிய நமசிவாய மந்திரமும் அவனே என்று அருணகிரிநாதர் போற்றுகிறார்.

“நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே” (புமியதனில் - திருப்புகழ்)

அதைத் தன் வாகனமாகக் கொண்டு நடத்துபவனும் அவனே' என்கிறார்.

“உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும்” (தலைவலி - திருப்புகழ்)

பிரணவ மந்திர தியானம்

நாம் ஓம் என்னும் உருவத்துடன் தான் கருவில் பயணிக்கத் தொடங்கினோம். நமது உடலில் உள்ள கேட்கும் திறன் கொண்ட காது கூட ஓம் என்னும் உருவத்தோடு பொருந்தியிருக்கிறது. வாயைத் திறந்து ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் போது நமது நாக்கு மேல் வாயைத் தீண்டாமல் தொண்டையின் மூலமாய் பிறக்கும். இந்த ஓசையானது நாம் பேசும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது. “ஓம்” போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை மிகுந்த அன்புடன் தியானித்து, ஓவியம் போல் அசைவற்று தியானித்து இருக்கும் தன்மையே நீ அருளல் வேண்டும் என்று மனமுருக பிரார்த்திக்கிறார் அருணகிரிநாதர்.

“ஓமெழுத்தி லன்பு மிகவூறி

ஓவியத்தி லந்த மருள்வாயே” (காமியத்து அழுந்தி - திருப்புகழ்)

ஓம்காரத்தை தியானிப்பதும், பிரம்மத்தை தியானிப்பதும் ஒன்றே. கமண்டலத்தில் ஜலம் இருப்பது போல ஓம்காரத்தினுள் பிரும்மம் அடங்கி இருக்கிறது.

ஓம் எழுத்தில் ஆறெழுத்தான அ, உ, ம, நாதம், விந்து, கலை என்பன அடங்கியிருக்கின்றன. அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும் சூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். அகரம் அகங்காரத்தைச் செலுத்தும்; உகரம் புத்தியைச் செலுத்தும்; மகரம் மனத்தைச் செலுத்தும்; விந்து சித்தத்தைச் செலுத்தும்; நாதம் புருட தத்துவத்தைச் செலுத்தும். ஓங்காரத்தின் கூறுகளாய்ப் பொருந்திய விந்து, நாதங்களுக்கு அதி தெய்வங்கள் முறையே மகேசுரனும் சதாசிவனும் ஆவர்; அகர, உகர, மகரங்களுக்கு உரிய அதிதெய்வங்கள் முறையே பிரமன், மால், உருத்திரன் ஆவர்.

பிரணவ மந்திரத்தோடு பஞ்சாட்சரமாகிய 'நமசிவாய' என்று சேர்ந்து 'ஓம் நமசிவ' எனும் ஆறெழுத்தாகிறது. முருகனுக்கு உரிய சடாக்ஷர மந்திரமும் பிரணவத்தின் விரிவே. சரவணபவ என்னும் ஆறெழுத்தாகவும் அதுவே இருக்கிறது

"ஆகாச முட்ட வீசி விட்ட காலர் பத்தி யிமையோரை ஓது வித்த நாதர் கற்க வோது வித்த முநிநாண ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த பெருமாளே” (வேத வெற்பிலே - திருப்புகழ்)

“அன்பின் மிக்க தேவர்கள் முதலியோர்களுக்கு வேதாகமங்களைக் கற்பித்த சிவபெருமான் கற்றுக் கொள்ளுமாறும், பிரணவ மந்திரார்த்தத்தைச் சொல்வதற்கு முயன்ற பிரமதேவன் வெட்குமாறும், ஓர் எழுத்தாகிய பிரணவமந்திரத்தில் ஆறெழுத்துக்களையும் அடக்கி உபதேசித்த பெருமாளே!”

பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது. நாம் வாயைத் திறந்து அடி வயிற்றில் இருந்து காற்றை உள்ளே இழுக்கும் போது அது “அ” எனும் ஒலியை உருவாக்கும். அப்படியே நெஞ்சுப்பகுதிவரை இழுக்கும்போது அது “உ” எனும் ஒலியை எழுப்பும். உள்ளே இழுத்த சுவாசத்தினை சிறிது நேரம் உள் நிறுத்தும் போது அது “ஹம்” எனும் ஒலியை உருவாக்கும். இது மனிதப்புலன்களுக்கு எட்டாத கேளா ஒலியாய் உள்ளிருந்து உணரப்படுவதனால் ஊமை எழுத்து எனப்படும். செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம் ஆதலால் இதை அசபை மந்திரம் என்றும் கூறுவார்கள். இம்மந்திரத்தை எல்லா உயிர்களும் செபிக்கின்றன.

அதிர்வுகள் மூலம் உணரக்கூடிய ஒலியை சில வடிவங்களாகக் காணவும் செய்யலாம் என்பதற்கு உரிய விஞ்ஞான விளக்கம் அண்மைக்காலத்திய ஆராய்ச்சிகளில் கிடைத்தது. நம் உலகில் மனித எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் ஒலியைப் போல ஒரு அலை என்பது விஞ்ஞான கூற்று. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மானிய இயற்பியலாளரும் இசை வல்லுனருமான எர்ன்ஸ்ட் க்ளாட்னி (Ernst Chladni) அதிரக்கூடிய உலோகத் தட்டின் மேல் மணல் போன்ற சில பொருட்களைப் பரப்பி, அந்தத் தட்டில் வயலின் வில்லால் அதிர்வுகளை ஏற்படுத்திய போது, அந்தப் பொருட்கள் எடுக்கும் பலவிதமான வடிவங்களை - ‘க்ளாட்னி வடிவங்களை’ (Chladni Patterns) - ஆராய்ந்து ஆவணப்படுத்தினார்.

1960ல் சுவிஸ் விஞ்ஞானியான ஹான்ஸ் ஜென்னி (Hans Jenny) காது கேளாத மாணவர்களுக்கான பள்ளியில் 'டோனோஸ்கோப்' என்ற இயந்திரத்தை கொண்டு, அந்த மாணவர்களுக்கு வாய் மூலம் எழுப்பும் ஓசைகளின் வேறுபாடுகளை கற்பித்து வந்தார். இந்த அறிவியல் பிரிவுக்கு ஸைமாட்டிக்ஸ் என்ற பெயரையும் சூட்டினார். அதிர்வுகளின் அதிர்வெண்ணின் ஸ்தாயி அல்லது சுருதி மிகவும் அதிக அளவில் இருந்தால் ஜியாமட்ரி வடிவங்கள் சிக்கலானதாக உள்ளன என்று கண்டறிந்தார். ஒலி அலைகள் உருவாக்கும் வடிவங்களை படச்சுருள்களில் பதிவு செய்தயார். “ஓம்” என்பதை உச்சரிக்கச் செய்தார். ‘ஓ’ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ‘ம்' என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது. 43 முக்கோணங்களையுடையதும். 64 கோடி தேவதைகள் வசிக்கும் இச்சக்கரம் மந்திரசக்தி மிகுந்த யந்திரமென்பர்.

யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. ஒவ்வொரு யந்திரத்திற்கும் ஒரு வடிவ ஆற்றல் உள்ளது. ஒவ்வொரு வடிவமும் ஒரு சக்தியை உமிழ்கிறது. ஒலியின் அடிப்படையில் நமது பண்டைய ரிஷிகள் யாக சாலை குண்டங்களும் குறிப்பிட்ட அளவிலும் வடிவிலும் அமைத்தனர். முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத்தப்படுகிறது.

“நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே” (நாவேறு பாமணத்த - திருப்புகழ்)

ஆறு என்ற எண்ணின் விசேஷம்

சிவபெருமான் சதாசிவ மூர்த்தியின் உருவத்தில் ஈசானம், தற்புருடம், வாமதேவம், அகோரம், சத்யோ சோதம், ஆகிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். ஆனால் ஆறாவது முகமான அதோமுகம் சூட்சும முகமாக கூறப்படுகிறது. இம்முகம் வெளியே தெரிவதில்லை என்றும் அக முகமாகவே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக ஐந்து முகங்களைக் கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் சனகாதி நான்கு முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.

மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களே ஆண்டவனுக்கு ஆறுமுகங்கள். அகர உகர மகர நாத விந்து கலை என்ற ஆறுமே ஆறுமுகங்கள்.

ஆறு என்ற எண்ணிற்கும் படைப்பிற்கும் விஞ்ஞான முறையில் சம்பந்தம் உண்டு.

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது. இந்தப் பூதப் பொருள்களைப் பகுத்துக் கொண்டே போனால் பகுக்க முடியாத நுண்ணிய நிலையில் இருக்கும் அணுவினுள் அசையாது நிலைத்து நிற்கும் புரோட்டானை சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன. பூமியில் உள்ள வாழ்க்கை கார்பனை அடிப்படையாகக் கொண்டது. கரியில் (carbon) ஒரு புரோட்டானும் ஆறு எலக்ட்ரானும் இருக்கின்றன. கார்பன் அணுவின் இந்த தனித்துவம் வாய்ந்த கட்டமைப்பால் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரோஜன் போன்ற மற்ற அணுக்களுடன் பிணைய முடிகிறது. இந்த குணத்தால் தான் உயிர்களை நிலை நிறுத்துவதற்கு தேவையான புரதங்கள் மற்றும் டிஎன்ஏ (DNA) போன்ற இரசாயன பிணைப்புகளின் நீண்ட சங்கிலிகளை உருவாக்க முடிகிறது. இந்த எலக்ட்ரான் எண்ணிக்கையில் ஆறுக்கு அதிமாகப் போய்விட்டாலும், குறைவாய்ப் போய்விட்டாலும் உயிர்த் தத்துவத்தை ஊட்டும் சக்தியை கார்பன் இழந்துவிடும். உயிர்த் தத்துவத்தை வளர்க்கும் முறையை விளக்கவே முருகனை ஆறுமுகம் கொண்டவனாக உருவகப் படுத்தியிருக்கின்றனர் போலும்.

ஜபயோகம்

உலகப் பொருள்களின் அனைத்து அணுக்களின் அசைவுகளினால் ஏற்படும் சூட்சுமமான ஓசைகளையும் யோகியர்களும் தவசீலர்களும் மந்திரங்களாகக் கண்டு உணர்ந்து அவற்றின் இலக்கணங்களை அறிந்து அதைப் பிரதிபலிக்கும் வண்ணமாக 51 எழுத்துக்களை வரிவடிவில் புகுத்தினர்.

ஒலி அலைகளால் உருவாக்கப்பட்ட நம்முடைய உடலின் ஒவ்வொரு திசுவும் அங்கமும் வெவ்வேறு அதிர்வெண்களுக்குத் தக்கபடி ஒவ்வொரு ஸ்வரத்தைக் கொண்டுள்ளது. மந்திர ஒலிகள் உடலிலிருக்கும் அதிர்வுப் பொருளை ஒழுங்கமைத்து குழப்பத்திலிருந்து ஒழுங்கை உருவாக்குகின்றன. மனனம் செய்பவனை ரட்சித்து மனதை அமைதியாக உணரவும், ஒருமுகப்படுத்தவும் மந்திரங்கள் உதவுகின்றன. பக்தியுடன் செய்யும் மந்திர உச்சாடனம் மனதை தூய்மை படுத்துவதுடன் லயப் படுத்தி அதை ஆன்யமாகவும் சொல்லற்றதாகவும் மாற்றுகிறது.

ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு தெய்வத்தின் சொரூபம் ஆகும். ஒவ்வொரு மந்திரத்திலும் உயிர்ச் சக்தி உறங்கிக் கிடக்கின்றது. அவை விதைகளைப் போன்றவை. அந்த மூல ஒலியை நுண் ஒலியை பீஜ மந்திரம் என்பார்கள். இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓர் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வார்கள். மந்திர உச்சாடனத்தின் போது மந்திரத்திற்கு உரிய தெய்வத்தின் உருவத்தை தியானிக்க வேண்டும். ஓம் மந்திரத்தை சொல்பவனும் கேட்பவனும் விரும்பிய அனைத்தையும் பெறுவான் என்று கதோபநிடதம் கூறுகிறது.

இடைவிடாது ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு உள்ளக்கண்ணால் அகத்துள் பார்வை செலுத்தி மந்திரத்தை ஜபம் செய்வதால் மனம் தூய்மை அடைந்து வீண் எண்ணங்களிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் விடுபடுகிறது. முதலில் சப்தங்களாகவும் சொற்களாகவும் இருந்த மந்திரங்கள் பொருள்களாகவும் அதிர்வுகளாகவும் மாறி, மேலும் ஜபிக்கும் பொழுது மனமும் வாக்கும் அற்று, சிந்தை மாய்ந்து, பின் எல்லாவற்றையும் கடந்த மௌனமாகவும் மௌனத்தில் விளையும் ஆத்மபோத ஞானமாகவும் திகழும்.

“ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்” (ஏறுமயில் - திருப்புகழ்)

“வண்டுபோற் சாரத் தருள்தேடி
மந்திபோற் காலப் பிணிசாடிச்
செண்டுபோற் பாசத் துடனாடிச்
சிந்தைமாய்த் தேசித் தருள்வாயே” (வண்டுபோற் - திருப்பகழ்)

“வண்டு எவ்வாறு மலர்களின் தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக் களிக்குமாறும், குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும், செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும், அலைந்து திரியும் என் மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக.”

★★★

இராமாயணத்தைப் பற்றிய நூல்கள் ஏறத்தாழ 120 நூல்கள் உள்ளன. அவற்றுள் சிறு சிறு வித்தியாசங்களும் உள்ளன. அவற்றில் வால்மீகியோ, கம்பரோ, தியாகராஜ ஸ்வாமிகளோ, காளிதாசரோ மற்றைய இராமாயண ஆசிரியர்களோ சொல்லாத பல தகவல்களை அருணகிரிநாதர் கூறி இருக்கிறார். அவருடைய முதல் திருப்புகழான 'முத்தைத்தரு' என்ற பாடலிலே 'பத்துத் தலை தத்தைக் கணை தொடு' என்று இராம அவதாரத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். இராமாயணத்தைப் பற்றிய பல அற்புதமான தகவல்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிட்டு இருக்கிறார்.

— சொல்லின் செல்வர் பி.என். பரசுராமன்